இளைஞர் உலகம்
பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே: 9486795506, 9443608003 04652-261588
அசட்டை முகத்தினரின் பலவீனங்கள் பற்றிப் பார்த்து வருகிறோம். இதுவரை 7 பலவீனங்கள் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் 8ஆவது பலவீனத்தைப் பற்றிப் பார்ப்போம்.
கூருணர்வு கொண்டவர் (Sensitive)
கூருணர்வு கொள்வது பற்றி நேர்மறையான கருத்துகளும் எதிர்மறையான கருத்துகளும் உள்ளன. அசட்டை முகத்தினர் அழுமுகத்தினரின் பண்புகளைக் கொண்டவர்கள் என்ற வகையில் இவர்களது கூருணர்வு எதிர்மறைத் தாக்கத்தின் வெளிப்பாடேயாகும். மனஅழுத்தம், மனக்காயம், இழப்புகள் போன்றவற்றின் பாதிப்பால் இவர்கள் கூருணர்வு உருவாக்கப்பட்டிருக்கலாம். அதிலும் குழந்தைப் பருவ அதிர்ச்சிகள் அல்லது குழந்தைப் பருவ பாதிப்புகள் இவர்களை இந்த கூருணர்வு கொண்டு எளிதில் உணர்ச்சி வசப்படுபவராக, காயப்படுபவராக மாற்றியிருக்கலாம். மாற்றுத் திறனாளிகளிடம் இந்த உணர்வு மேலோங்கி நிற்க வாய்ப்புகள் அதிகம்.
நிகழ்ச்சி
1977-ஆம் ஆண்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சில நாங்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் மறியல் செய்த மற்ற ஆசிரியர்களோடு இருக்க நேர்ந்தது. அங்கு எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு.
ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கைதி இரவு தூங்கச் செல்லுமுன் ஒரு சோகப் பாடல் பாடிவிட்டுத்தான் தூங்குவான். எங்கும் நிசப்தமாக இருக்கும் வேளையில் இவன் உரத்த குரலில்,
‘‘கண்களிரண்டும் இன்று உன்னை இங்கு தேடுதே காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கூட்டிச் சேர்க்குமோ?’’ எனப் பாடுவான். பாடல் முடிவில், அவன் கதறி, கதறி அழுவதை நாங்கள் கேட்போம். இது ஒரு ஆழ்மனத் துயரத்தின் வெளிப்பாடாகும்.
அசட்டை மனத்தினரின் கடந்தகால சோக அனுபவங்கள் அவர்களை இப்படி உணர்ச்சிவசப்பட வைக்கலாம். கூருணர்வு கொண்டவர்களாக மாற்றியிருக்கலாம். எனவே இத்தகைய மனப்பாங்கு கொண்டவர்கள் கூருணர்வின் தாக்கத்திலிருந்து விடுபட சில முயற்சிகள், பயிற்சிகள் செய்யலாம்.
1. உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல் எளிதான காரியம் அல்ல. உண்மையில் நமது உணர்ச்சிகள் நமது கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் நாம் நமது உணர்ச்சிகள், சிந்தனைகள், நடத்தை யாவற்றையும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். இந்த திறமை நாம் துயருறும் போது நமக்கு துணை நிற்கும். மேலும் இதனால் நம் வாழ்வில் உணர்ச்சிகளுக்கு உரிய இடத்திலேயே அதை வைக்க முடியும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மற்றொரு முறை அந்த நிகழ்ச்சிகளை வேறொரு கோணத்திலிருந்து பார்ப்பது. அந்த உணர்ச்சியின் புதிய பார்வையில் அதைச் செயல்படுத்த முயற்சிக்கலாம். ‘‘பார்வை மாறினால் பாதை மாறும்’’ என்பதை நினைவில் கொள்ளலாம்.
அதுபோல ஒருவர் உங்களைப் பற்றி ஏதாவது விமர்சனம் செய்தால், உடனே நாம் மன நிம்மதியை இழக்கத் தேவையில்லை. உண்மையில் அவர்கள் உங்கள் கரத்தை உயர்த்த கடவுள் அனுமதிக்கும் நபராகக் கூட இருக்கலாம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைத் தேர்ந்து தெளிய ஆரம்பித்தால் உணர்ச்சிகள் மேல் வெற்றி பெறலாம்.
2. ஆழ்நிலை தியானம் செய்தலும் நமது உடலையும் மனதையும் அமைதிப்படுத்த உதவும். இது நம்மை நமக்குள் பயணம் செய்ய உதவும். இதனால் ‘நாம் யார்’ என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வை நாம் கொண்டிருக்க இந்த தியானம் நமக்கு உதவும். கௌதம புத்தர் தன்னுணர்வு பெற்று, ‘‘ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் ஆணிவேர்’’ என ஞானம் பெற்றதற்கு, இவர் போதி மரத்தின் அடியில் செய்த தியானம் தான் காரணம். இங்கு மூச்சுப் பயிற்சி நமது உணர்ச்சிகளை நெறிப்படுத்த உதவுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மூச்சை நாம் நாசி வழியாக நன்கு உள்ளே இழுத்து நாசி வழியாகவே வெளியே விட்டால் அது மன அமைதிக்கு வழிவகுக்கும். பதட்டத்தைத் தணிக்க, உணர்ச்சிகளை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும்.
3. நமது உணர்்ச்சிகளை எழுத்து வடிவில் வெளி உலகத்திற்குக் காட்டலாம். இதனால் நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
பாமா என்ற நாவலாசிரியர் தனது நாவல் ‘கருக்கு’வை எழுதியதனால் தனது காயப்பட்ட உணர்ச்சிகளிலிருந்து எப்படி விடுபட முடிந்தது எனக் கூறுகிறார்.
பாமா ஒரு தலித் எழுத்தாளர். அவர் இந்த நாவலில் தனது கடந்தகால கசப்பு அனுபவங்களைப் பற்றி பேசுகிறார். அவர் எழுதுகிறார், ‘‘நான் முதலில் எனது கசப்பு அனுபவங்களை எழுத்து வடிவாக்கிய போது, புண்ணை மீண்டும் குத்தி திறந்து, காயத்தை, வலியை கிளறுவதுபோல இருந்தது; ஆனால் அந்தக் காயங்கள் பற்றி திரும்பத் திரும்ப எழுதிய போது, அதனால் எனது மனக் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காய்வதை, மறைவதை என்னால் உணர முடிந்தது’’ என்கிறார். எனவே, நமது உணர்ச்சிகளை மீண்டும், மீண்டும் எழுதி அதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
4. நடக்கும் நிகழ்வுகளை, குறிப்பாக தவறுகளையெல்லாம் சொந்தம் கொண்டாடுவதை விட்டுவிட வேண்டும். சிலருக்கு நடக்கும் தவறுகள், குற்றங்கள் எல்லாம் தன்னால்தான் நடக்கின்றன என்ற தவறான குணம் உள்ளது. இதனால் இவர்கள் தேவையற்ற குற்ற உணர்வால் குத்தப்பட்டவர்களாய் உணர்ச்சி வசப்பட்டு நிம்மதி இழந்து தவிக்கின்றனர். உண்மையாகவே நாம் தவறு செய்தால் அதற்கு பொறுப்பேற்கலாம். மாறாக, கண்டவரெல்லாம் சொல்லும் வார்த்தைகளை உள்வாங்காது விட்டுவிட்டால் இந்த கூருணர்வுக்குத் தப்பலாம்.
5. சுய ஏற்பு அவசியம் : கூருணர்வு உள்ளவர்கள் தங்களைத் தாங்களே கண்டனம் செய்பவர்களாக இருப்பார்கள். இதனை மேற்கொள்ள தன்னை தனது நிலையிலேயே – வலிவு, நலிவுகளோடு ஏற்றுக்கொண்டால் இந்த உணர்ச்சிச் சிக்கல்களிலிருந்து விடுபட முடியும்.