இளைஞர் உலகம்
உறவு

பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

முந்தைய இதழ்களில் அசட்டை முகத்தினரின் பொதுவான மற்றும் வலுவான குணநலன்கள் பற்றித் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் அவர்களின் பலவீனங்கள் பற்றிக் காண்போம்.

எளிதில் உணர்ச்சிவசப்படுவர்

மனிதர் யாரும் மரக்கட்டைகள் அல்ல; உணர்ச்சிகளும் உந்துதல்களும் உடையவர்கள்தான். ஐம்புலன்களின் தூண்டுதல்களால் மனிதன் பல்வேறு உணர்ச்சிகளால் குறிப்பாக எதிர்மறை உணர்ச்சிகளான கோபம், இச்சை, பயம், குற்றப்பழி உணர்வு போன்றவைகளால் அலைக்கழிக்கப்படுவது இயல்பான, இயற்கையானது தான். எடுத்துக்காட்டாக இயேசு கிறிஸ்துவே ஜெருசலேம் ஆலயம் வியாபார ஸ்தலமாக இருப்பதைக் கண்டு கொதித்தெழுந்து, கடுங்கோபமுற்று அங்கிருந்த வியாபாரிகளை கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி ஆலயத்திலிருந்து துரத்தியதாகப் பைபிள் கூறுகிறது. ஏனென்றால், “குணமென்னும் குன்றேறி நின்றார், கணமேனும் சினம் காத்தல் அரிது” என்பார்கள். என்றாலும் இயேசுவைப் போன்ற குணசாலிகளிடம் அவர்களது உணர்ச்சிகள் அவர்களது கட்டுப்பாட்டில் தான் இருந்தது. நமது கட்டுப்பாட்டுக்குள் உணர்ச்சிகள் இருக்கும்வரை அவை நமக்கு அதிகமாக தீங்கிழைக்க முடியாது. ஆனால் அவற்றைப் பற்றி விழிப்பாயிருக்க வேண்டும். காரணம் எப்போது அவை நமது கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் என யூகிக்க முடியாது.

பிராய்டும் உணர்ச்சிகளும்

உணர்ச்சிகளை, எதிர்மறை உணர்ச்சிகளை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆழ்மன உளவியலார் சிக்மண்ட் பிராய்டு ஓர் உபாயத்தைக் கையாளச் சொல்கிறார் அதை sublimation அதாவது ‘உயர்தளப்படுத்தல்’ என்கிறார். அதாவது கோபம், இச்சை போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் நம்மில் கிளர்ந்தெழும்போது அதனை அதைவிட உயர்ந்த ஓர் எண்ணத்தால், செயலால் மாற்றியமைத்து அதன்மேல் வெற்றி கொள்வதைத்தான், அந்த எதிர்மறை உணர்ச்சியை நேர்மறையாக மாற்றுவதைத்தான் அவர் ‘உயர்தளப்படுத்தல்’ என்கிறார். இதனை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒருவர் நம்மைத் திட்டினால் நாம் எதிர்ச்செயல் செய்யாமல், அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என வரும் சமுதாயத்திற்கு பாதகமான செயலைச் செய்யாமல், சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படும், அல்லது அங்கீகரிக்கப்படும் செயல் ஒன்றை செய்வது. எடுத்துக்காட்டாக ஓர் இளைஞன் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் தீராத மோகத்தால், இச்சையால் தூண்டப்பட்டால், அவன் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம் ஓடினால் அது இவனது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமாக மாறும். உணர்ச்சி வேகம் குறையும்.

அடுத்து ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலரை மேலதிகாரி திட்டிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவன் அதிகாரியை பதிலுக்குத் திட்டினால் அவனது வேலையை இழக்க நேரிடலாம். அதற்கு மாறாக, அவன் அன்று வழக்கம் போல் இரயிலில் வீட்டிற்குச் செல்லாமல் சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து சென்றான் என்றால்  அவனது ஆத்திரம் அடங்கிவிடும். B.P.யும் சரியாகும். அது உடலுக்கும் அவனது அலுவலக வேலைக்கும் நல்லதாகும். அதுபோல் கணவன், மனைவியை திட்டினால், அல்லது மனைவி கணவனை கடுமையாக விமர்சித்தால், அவர்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்று தோட்ட வேலைகளில் தங்களது அவமான உணர்வைக் கொட்டலாம். கொஞ்சம் ஆணிகளை எடுத்து மரக்கட்டையில் அடித்து உள்மனக் காயத்தை ஆற்றிவிடலாம். இதனை தற்காப்புப் பொறி (Defence Mechanism) என்பர்.

இந்த உயர்தளப்படுத்துதல் எவ்வாறு நமது மனதில் நடைபெறுகிறது எனப் பிராய்டு விவரிக்கிறார்.

மனித மனதை உளவியலார் பிராய்டு மூன்று கூறுகளாகப் பிரிக்கிறார். இட் (Id), ஈகோ (Ego), சூப்பர் ஈகோ (Super Ego) என்பவை அவையாகும். இந்த ‘இட்’ நமது அடிப்படை இயல்பூக்கங்களோடு (Instinct), அதாவது நமது இச்சை, வன்முறை உணர்ச்சிகள் போன்ற இயல்புகளைக் கொண்டது. ஈகோவை நமது அறிவு அதாவது உணர்ச்சிகளைத் தாண்டிய ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நமது சூப்பர் ஈகோ நமது மனச்சான்று எனலாம். இது சில மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாகும். மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு அந்த மத நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியதாக இருக்கும். இப்போது ஒருவர் நம்மீது வசைபாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நமது அறிவு பதிலுக்கு நாம் திட்டவேண்டும் என்றுதான் நம்மைத் தூண்டும். இதற்கு செவிசாய்த்தால் ரணகளம் தான். ஆனால் நமது மனச்சான்றின் குரலுக்கு நமது அறிவு காது கொடுத்தால், இவனது பேச்சுக்கு பதில் கொடுத்தால் நாம்தான் அதற்காக வருந்த வேண்டிவரும் என எண்ணி அதை அலட்சியப்படுத்துவது மட்டுமல்லாமல், வீட்டிற்குள் சென்று தட்டுமுட்டு வேலைகளில் கவனத்தைத் திருப்பி, அந்த வசைமொழி நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வதாகும். வாலிபனாக இருந்தால் இந்த ‘வசைபுயல்’ ஓய்ந்த பிறகு ஒரு குத்துச்சண்டை கிளப்பில் சேர்ந்து, பொங்கிவரும் கோபத்தை அந்த குத்துச்சண்டை பயிற்சிக்கான உபகரணத்தில் செலுத்தி அதை வெளியேற்றிவிடுவதாகும். இவ்வாறு உயர்தளப்படுத்தல்வழி உணர்ச்சிப் பிரச்சினைகளுக்கு விடைகாண முடியும் என்கிறார் பிராய்டு.

நிகழ்ச்சி

ஒரு நாள் ஒருவர் ஒழுங்காக சாலையின் இடது பக்கத்தில் தனது காரை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒருவர் வலது பக்கம் தனது வாகனத்தை ஓட்டி இவரது காரை உரசிக் கொண்டு சட்டென பிரேக் போடுகிறார். தனது தவறை மறைக்க ஒழுங்காக காரை ஓட்டியவரிடம் வந்து கத்துகிறார். இந்த காரோட்டியோ பதிலே பேசாமலிருக்கிறார். இந்த அநியாயத்தைக் கண்ட இவரது காரிலிருந்த நண்பர், “அவன் உங்களை இவ்வளவு பேசியும் உங்கள் பக்கம் நியாயம் இருந்தும் நீங்கள் ஏன் மவுனம் காத்தீர்கள்” என வினவிய போது, இவர் “அவன் மனதில் நிறைய குப்பை இருந்துள்ளது. அதை யார் மேல் கொண்டு கொட்டலாம் என காலையிலே தேடிக் கொண்டிருந்தவன், என் ேமலே கொட்டியிருக்கிறான். நான் குப்பைத் தொட்டியாக என்னை நினைத்து அந்த குப்பையை வாங்கிக் கொண்டேன். அவன்மேல் நான் பரிதாபப்படுகிறேன்” என்று கூறி பயணத்தைத் தொடர்ந்தாராம்.

அசட்டை முகத்தினர் தங்கள் எதிர்மறை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது, உயர்தளப்படுத்துவது மிகவும் அவசியம்.