உறவு 63

பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
Phone : 9486795506, 9443608003 04652-261588

வோட் (SWOT) முறையில் அசட்டை முகத்தினரின் பலம், பலவீனம், பொதுவான பண்புகள் பற்றி பார்த்து வருகிறோம். அசட்டை முகத்தினரின் பலவீனங்களில் ஒன்றான, ‘தான் கொடுமைப்படுத்தப்படுவதாக நினைத்தல்’ பற்றி சென்ற ஆளுமைச் சிற்பி இதழில் பார்த்தோம். இந்த இதழில் இந்த உளப்பாங்கு உடையோரின் மற்றொரு பலவீனமான காயத்தை/வலியை உணர்தல் (Hurt Feeings) பற்றிப் பார்ப்போம்.

காயப்பட்ட உணர்வு எப்போது/எப்படி வருகிறது?

யாராவது ஒருவரின் வார்த்தை அல்லது செயல்பாடுகள் நமக்கு கவலையை அல்லது ேசாகத்தை உருவாக்கும்போது நாம் காயப்பட்ட உணர்வில் இருக்கிறோம். நம்பிக்கை இழந்த நிலை, உதவியற்ற உணர்வு, மனவெழுச்சி, காரணமின்றி குற்றப்பழி உணர்வைக் கொண்டிருப்பது, அளவு கடந்து கவலை கொள்வது ஆகியவை காயப்பட்ட/புண்பட்ட உணர்வின் அடையாளங்களாகும். காயப்பட்ட உணர்வை மேற்கொள்ளாவிட்டால் அது நம்மில் பல்வேறு வியாதிகளைக் கொண்டு வரலாம். மிருகங்களுக்குள் காயப்பட்ட மிருகம்தான் மிகவும் கொடிய மிருகமாகும். வடநாட்டில் பூலான்தேவி வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதால் சம்பல் பகுதியில் கொள்ளைக்காரியாக மாறி பழிவாங்கினாள் என அறிகிறோம். எனவே மிருகங்கள் மட்டுமல்ல, மனிதர்களும் காயப்பட்டால் அதைப் பிறருக்குக் கொடுத்து நிறைவு, இன்பம் காண்பதை அறியலாம்.

காயங்களை ஆற்றுவது எவ்வாறு?

காயப்பட்ட உணர்வுகளைக் கையாளும் சில குறிப்புகளை அறிந்துகொள்வோம்.

  1. தனக்கென்று ஒரு தாரக மந்திரத்தை உருவாக்கிக் கொள்வது. இது நம்மை காயப்பட்ட உணர்விலிருந்து வெளிக்கொணரும். எடுத்துக்காட்டாக ‘‘எனக்கு நன்மை பயக்கும் புதிய பாதையை வாழ்வில் கண்டுகொண்டேன்’’ எனச் சொல்லி, ‘‘ஐயோ எனக்கு இப்படி நடந்துவிட்டதே’’ என்று ஆதங்கத்தை சரிசெய்யலாம்.
  2. ‘‘நான் வேறு, என் காயம் வேறு’’ என்று கூறி காயத்தோடு நம்மை அடையாளப்படுத்தாமல் (Dis
    identification) அதை நம்மோடு சம்பந்தப் படுத்தாமல் உதறிவிட்டுவிடலாம்.

குறிப்பிட்ட சமூகத்தினரிடையே ஒரு வழக்கம் உள்ளது. முறை மாப்பிள்ளையை (மாமன் மகளை / மகனை) ஒருவர் திருமணம் செய்ய மறுத்தால் அவர் ஊர் பஞ்சாயத்தை கூட்டி, அவர்கள் முன்னிலையில் ஒரு வெற்றிலையை எடுத்து எல்லோர் முன்னிலையில் அந்த வெற்றிலையைக் கிழித்து இனி இரண்டு பேருக்குமிடையே ஒட்டு, உறவு எதுவுமே இல்லை என பகிரங்கமாக சொல்ல வேண்டும். அதன்பிறகு இவர் தான்விரும்பியவரை மணம் செய்து கொள்ளலாம். இதை ‘பந்தம் கிழித்தல்’ என்பர்.

  1. கவனத்தை திசை திருப்புதல். நாம் எதன்மீது அதிக கவனம் செலுத்துகிறோமோ அது நம்மை அடிமைப்படுத்திவிடும். நம் மீது ஆதிக்கம் செலுத்தும். காயத்தையே கருத்தில் கொண்டால், கண்முன் காயப்பட்ட நிகழ்வு, காயப்படுத்திய நபர் ஆகியவைதான் தெரியும். இத்தகைய நேரங்களில் கடந்ததைப் பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். நிகழ்காலத்தில் வாழ பழகிக் கொள்ள வேண்டும். பாருங்கள் காரின் முன்பகுதியிலுள்ள கண்ணாடி மிக அகலமானதாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் பக்கவாட்டில் இருக்கும் பின்பக்கத்தைப் பார்க்கும் கண்ணாடி (near mirror) மிகச்சிறியதாகவே இருக்கிறது. முன்னோக்கிப் பார்க்காமல் ஓட்டினால் விபத்துதான்; வாழ்க்கையிலும் இது நடக்கலாம். காயப்பட்ட நிகழ்வுகளைப் பற்றியே சிந்திப்பதை விட்டுவிட்டு நமக்கு நடந்த நல்ல காரியங்களுக்காக நன்றி கூறி வாழலாம்; நன்றியுணர்வு கொள்ளலாம்.
  2. மேற்கூறியதுபோல நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நேற்று என்பது பெய்து நின்று போன மழை. நாளை என்பது கார்மேகம் போன்றது. அது மழையாக வரலாம் அல்லது கலைந்து போகலாம். இன்று என்பது இப்போது பெய்யும் மழை போன்றது (இதை எழுதும் போது வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது). நாம் விரும்பினால் இந்த மழையில் ஆசைதீர நனைந்து களித்து மகிழலாம். அதனால்தான் அறிஞர் இங்கர்சால் மகிழ்ச்சியின் இரகசியத்தைப் பற்றிக் கூறும்போது நாம் மகிழவேண்டிய நேரம் இந்த நேரம்தான்; நாம் மகிழ வேண்டிய இடம் இருக்கும் இடம்தான் எனக் கூறுகிறார். இப்படி நிகழ்காலத்தில் வாழ்ந்து கடந்தகால காயங்களை மறக்க முடியும்.
  3. நம்மை நாம் பரிவோடு, அன்போடு பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். உளவியலாளர் கருத்துப்படி காயப்பட்டவர்கள் தங்களை ஒரு நல்ல நண்பனாக கருதவேண்டுமாம். நண்பனோடு எப்படி அன்புடன் உறவாடுவாயோ, அப்படி உனக்கு உன்னோடு உள்ள உறவு இருந்தால் நீ காயங்களிலிருந்து, காயப்பட்ட உணர்வுகளிலிருந்து வெளிவர முடியும். காயப்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த தருணத்தில் நாம் நம்மை அன்பு செய்யப்படுபவராகப் பார்த்தால் அந்தப் பேரன்பு காயங்களை ஆற்றும் என்கிறார் பிரபல உளவியலார் ஒலிவேரா. அதுபோல நம்ைமப் பிறரோடு ஒப்பிடக்கூடாது. காரணம் அவரது வாழ்க்கைப் பயணமும் நமது வாழ்க்கைப் பயணமும் ஒன்றல்ல.
  4. உணர்வின் உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்யாமல் பேசுவது/எழுதுவது இதனைப் பற்றி உளவியலார் பிராய்டு விரிவாகப் பேசுகிறார். இதை ஆங்கிலத்தில் “Free Association” என்பார்கள். நம்முடைய உள்கிடக்கைகளை சுதந்தரமாகப் பேசினாலே அடிமனதின் சிக்கல்கள் மறைந்துவிடும் என பிராய்டு கூறுகிறார். இதனால் ஆழ்ந்த உணர்ச்சி தூய்மை (Catharsis) ஏற்பட்டு காயங்கள் ஆறிவிடும் என்கிறார்கள். இவற்றோடு போராடினால் பிரச்சினைதான் ஏற்படும்.
  5. அடுத்தவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்பார்க்காதிருத்தல்; நமக்கு எதிராக அடுத்தவர் சொன்ன வார்த்தைக்காக, செய்த செயலுக்காக அடுத்தவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென எதிர்பார்த்தால், நமது மனப்புண்களிலிருந்து விடுதலைப் பெறுவது தாமதமாகிவிடும். அவர் சொன்ன வார்த்தையை உடம்பிலிருந்து தூசியை தட்டிவிடுவது போன்று தட்டிவிட்டுவிட்டு (Let go, Let go) வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.
  6. தன்னைப் பேணுதல் – நம்மைக் காயப்படுத்திய நினைவுகளை நமது தேவைகளைப் பற்றி சிந்திப்பதன் வழியாக மேற்கோள்ள முடியும். நமக்கு மகிழ்ச்சி தருபவை பற்றி சிந்திக்கும்போது நாம் சக்திப்படுத்தப்பட்டு காயப்பட்ட உணர்விலிருந்து விடுபடலாம்.
  7. தனியாகப் பிரச்சினையை அணுகாமல், நமது நண்பர்கள், சொந்த பந்தங்களோடு சேர்ந்து அணுகினால் தனிமையுணர்வு மாறும், காயப்பட்ட உணர்வுகள் மேல் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மலரும்.
  8. அதை பிறரோடு பகிர்ந்து கொள்ளலாம். அவர்களிடம் அமைதி பற்றி பேசலாம். ஒரு வேளை இப்படி பேசுவது நமக்கு வெட்கக் கேடாகத் தோன்றினால், ஓர் உளவியலாரிடம் பேசினால் அவர் ெசவி கொடுப்பார்.
  9. நீ மன்னித்துவிடு. அடுத்தவர் மன்னிக்க வேண்டும் எனக் காத்திருப்பதை விட்டுவிட்டு நீ மன்னிக்கப் பழகிக்கொள். மன்னிப்பு, நம்ைம கோபம், குற்றப்பழி உணர்வு, வெட்கம், சோகம், கவலை அனைத்திலிருந்தும் விடுவிக்கும். நமது வாழ்வைத் தொடர்ந்து முன்னெடுத்துப் போக உதவும்.
  10. இந்தக் குறிப்புகளை நடைமுறைப்படுத்த முடியாத பட்சத்தில் உளவியலார் ஒருவரின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் நாடு.=