சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 01

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

குளிர்சாதன வசதியில்லாத, எப்போதும் சுட்டெரிக்கும் வெப்பம் நிறைந்த ஒரு கட்டடத்தில், படகுகள் கட்டும் வேலையில் இருந்தார் பர்க் ெஹட்ஜஸ். புளோரிடா மாநிலத்திலிருந்த அந்தப் படகு கட்டும் நிலையத்தில், ஒவ்வொரு நாளும் தகிக்கும் அடுப்புக்கு அருகில் வேலை செய்வதைப் போல, வேலை செய்வதை உணர்ந்தார்.

கைகளில் மின்சாரத்தினால் இயங்கும் சாணை பிடிக்கும் கருவிகளைப் பிடித்துக் கொண்டு, படகின் வெளிப்பகுதியை ஒட்டி, முழங்காலிட்டு, அதன் கரடுமுரடான கண்ணாடி இழைகளை மிருதுவாகும் வரை இழைப்பதே ெஹட்ஜஸின் வேலை. சாணை பிடிக்கும் கருவியும், படகினை மெருகூட்டும் போது வெளிப்படும் வெப்பமும் தினம் தினம் நரக வேதனையை அவருக்குத் தந்தது.

வீட்டை அடைந்ததும் கரங்களை கழுவுவதற்கு என்றே ஒரு பிரஷ்ஷைக் கொண்டிருந்தார் பர்க் ஹெட்ஜஸ். நீண்டதொரு குளியல் போட்டால் மட்டுமே ஹெட்ஜஸின் வெப்பம் தணியும். அவருடன் பணிசெய்த பலரில் பாப் என்பவர் பர்க் ஹெட்ஜஸ் மீது அன்பு கொண்டவர். இருவரும் நண்பர்கள். சில நேரங்களில் வெப்பத்தைத் தணிக்க வேண்டும் என்ற ஆவலில் நண்பர் பாப்புடன் சென்று குளிர்ச்சியான பீர் சாப்பிடுவது பழக்கம்.

இந்த நெருப்போடு விளையாடும் வாழ்க்கை பர்க் ஹெட்ஜஸ் மனதிற்குப் பிடிக்கவில்லை. என்ன செய்வது? வாழ்க்கையைக் கொண்டு செல்ல ஏதாவது ஒரு வேலையைச் செய்து பிழைக்க வேண்டுமே என்ற ஒரு சாதாரண மனிதராகவே அவர் சென்று கொண்டு இருந்தார்.

அச்சமயத்தில் ஒரு நாள் அவரது கையில் ‘‘உலகிலேயே மிகச் சிறந்த விற்பனையாளர்’’ (The Greatest Salesman in the World) என்ற ஓக் மாண்டினோ எழுதிய நூல் கிடைத்தது. மிகுந்த ஆவலோடு அந்தப் புத்தகம் முழுவதையும் படித்த பர்க் ஹெட்ஜஸ், ஒரு மாதத்துக்குள் தன் வேலையை ராஜினாமா செய்தார்.

ஓக் மாண்டினோவின் புத்தகத்தில் வாசித்த பின்வரும் வரிகள் பர்க் ஹெட்ஜஸ் வாழ்க்கையை வெகுவாக மாற்றியது. ‘‘நான், இந்த உலகில் ஒரு நோக்கத்திற்காக இருக்கிறேன். அந்த நோக்கம் ஒரு மலைபோல உயர வேண்டுமேயல்லாமல், மணல் துகள்களாக நொறுங்கிப் போகக் கூடாது. இனிமேல் எல்லாவற்றிலும், மிக உயர்ந்த மலையாக மாறுவதற்கான எனது எல்லா முயற்சிகளையும் நான் பயன்படுத்துவேன். அது கருணையுடன் என்னிடம் ஓய்வெடு என்று மன்றாடும் வரை நான் எனது திறமைகளைக் கஷ்டப்படுத்துவேன்-’’

மேற்கண்ட வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்த போது, இந்த வார்த்தைகள் தன்னில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதையும், உத்வேகத்தை ஊட்டுவதையும் பர்க் ஹெட்ஜஸ் கண்டுகொண்டார்.

சிந்தனை மாற்றம்

‘உலகின் மிகச் சிறந்த விற்பனையாளன்’ என்ற நூல் தந்த ஊக்கத்தால், கடினமான படகு கட்டும் வேலையை விட்டு வெளியேறிய பர்க், ஒரு செல்போன் விற்கும் நிறுவனத்தில் ேசர்ந்தார். முதல் மாதமே அந்த நிறுவனத்தின் விற்பனைச் சாதனையை முறியடித்தார். நிறுவனம் வழங்கிய ஒவ்வொரு விருதையும் வென்றார்.

ஒரு மில்லியன் டாலர்கள் சம்பாதித்த பர்க் ஹெட்ஜஸ், தானே ஒரு செல்போன் தொழிலைத் தொடங்கினார். ஆரம்பத்தில் தடுமாற்றங்கள் இருந்தாலும், விடாமுயற்சியுடன் தனது முப்பது வயதுக்குள் ஐந்து நிறுவனங்களைத் தொடங்கிய தொழிலதிபர் ஆகிவிட்டார் பர்க் ஹெட்ஜஸ். இரண்டு புத்தகங்களையும் எழுதிவிட்டார்.

பர்க் ஹெட்ஜஸ் எழுதிய முதல் புத்தகம் ‘அமெரிக்காவின் கனவைத் திருடியது யார்?’ என்ற ‘‘Who stole the American Dream?’’ என்ற புத்தகமாகும். சர்வதேச அளவில் மிக அதிகமாக இந்தப் புத்தகம் விற்பனையானது. தொடர்ந்து எழுதிய ‘இன்றைக்கு வேகமாக முன்னேறுங்கள்’ (Fast Forward Today) என்ற நூலும் நாற்பது இலட்சம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையானது. இப்படி ஏழு புத்தகங்கள் உலக நூல்கள் விற்பனையில் கொடிகட்டிப் பறக்க, ஏழு கோடி டாலர்கள் கொண்ட நிறுவனத்தை உருவாக்கினார் பர்க் ஹெட்ஜஸ்.

படகு கட்டும் தொழிலை விட்டு விலகி, ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு அதாவது செல்போன் விற்பனையில் சிகரம் தொட்டு, உலகளவில் புகழ்பெற்ற நூலை எழுதிய பின்பு ஒருநாள் தன் பழைய நண்பர் ‘பாப்’ என்பவரைச் சந்திக்கச் சென்றார் பர்க் ஹெட்ஜஸ். தனது பழைய படகு கட்டும் நிறுவனத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை முதலில் கண்டார். அங்கே அதே வெப்பமூட்டும் சூழல், தனது நண்பர் பாப், அதே சாணை பிடிக்கும் இயந்திரத்தைப் பிடித்துக் கொண்டு, கஷ்டப்பட்டு படகுக்கு மெருகூட்டுவதைக் கண்டார் பர்க் ஹெட்ஜஸ்.

‘பாப்’ வுடன் பேசியபோது, தான் செல்போன் தொழிலில் வெற்றி பெற்றதோடு, புத்தகத்தையும் எழுதியுள்ளதைக் கூறினார் பர்க். அப்போது மிக அதிக சத்தமுடன் சிரித்த நண்பர் பாப், ‘நீ புத்தகம் வேறு எழுதிவிட்டாயா?’ என்று ஆச்சர்யமாகக் கத்தியது, அங்கே இயங்கிய இயந்திரங்களின் சத்தத்தைவிட அதிகமாகக் கேட்டது. சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

நண்பர் தான் புத்தகம் எழுதியதை நம்பவில்லை போலும், என்று எண்ணிய பர்க் ஹெட்ஜஸ், ‘‘நான் என் காருக்குச் சென்று அதை எடுத்து வந்து உன்னிடம் காட்டுகிறேன்’’ என்று கூறிய போது, அந்த நண்பர் பாப் ‘‘எனக்குப் புத்தகம் வேண்டாம், ஒரு பீர் பாட்டில் வாங்கித் தா’’ என்று கூறினார். பர்க் ஹெட்ஜஸ் சிரித்துக் கொண்டே தன் காருக்குத் திரும்பினார்.

காரை அடைந்து தன் அலுவலகம் திரும்பிய போது பர்க் ஹெட்ஜஸ் இவ்வாறு சிந்திக்கின்றார். ‘பாப்’ என்ற அவரது நண்பரும், பர்க்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் தான் பணிசெய்தார்கள். இன்று பர்க் பல நிறுவனங்களின் தலைவர், அவரது நண்பர் பாப் நின்ற இடத்திலே நிற்கும் ஒரு நபர். பாப் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை; தனது நண்பர் ‘பாப்’ போல மனிதர்களில் பலரும் வாழ்க்கையில் எவ்வித மாற்றமுமின்றி, நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கின்றார்கள். அதேசமயம், சில மனிதர்கள் சாதனை புரிந்து கொண்டு, வாழ்க்கையை மாற்றுப் பாதையில் செலுத்தி சிகரம் தொடுகின்றார்கள் என்பதை எண்ணிக் கொண்டே நகர்ந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

வாசிப்பே உயர்த்தியது

பர்க் ஹெட்ஜஸ் எழுதிய நூல்களில் மிகச் சிறப்பான ஒரு புத்தகம் “Read and Grow Rich” என்பதாகும். தமிழிலும் இந்த நூல் அழகாக மொழிபெயர்க்கப்பட்டு ‘மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்’ மூலம் ‘வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. கட்டாயம் எல்லோருமே வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்கள் இவை.

இந்த நூல் முழுவதும் வாசிப்பின் அருமையையும், பல இடங்களில் வாசிப்புப் பழக்கத்தை அறிமுகம் செய்ததன் மூலம் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதையும், ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் தருகின்றார் பர்க் ெஹட்ஜஸ். சிறைச்சாலைகளில் கைதியாக உள்ள பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் வாசிப்புப் பழக்கம் தரப்பட்டு பலரும் மனமாற்றம் அடைந்துள்ளார்கள்.

சிறார் சீர்திருத்தப் பள்ளிகளில் வாசிப்புப் பழக்கம் அறிமுகம் செய்யப்பட்டு பல இளைஞர்கள், தண்டனைக் குற்றவாளிகளான குழந்தைகள் வாழ்க்கையில் மாற்றம் அடைந்துள்ளார்கள். நமது அரசுகள் மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கமூட்ட சரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் ஆகும். வாசிப்பு இயக்கம் பள்ளிகளில் வளர பல நூல்களை தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்குவது பாராட்டுக்கு உரியது.

முன்னூறு மாணவர்களுக்கு மேல் இருக்கும் பள்ளிகளில் கட்டாயமான ஒரு நூலகர் இருக்க வேண்டும். சிறந்த நூலகம் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வாரம் இரண்டு பாடவேளைகள் கட்டாயம் நூலகப் பாடவேளையாக இருக்க வேண்டும். அப்போது தான் வாசிப்பின் அருமையையும், எதனை வாசிக்க வேண்டும் என்ற தெளிவையும் மாணவர்கள் ெபறுவார்கள். தங்கள் மனதில் எழக்கூடிய பல கேள்விகளுக்கான பதில்களைத் தரும் மனநல ஆலோசகர்களாக நூல்கள் திகழ்வதை அவர்கள் பெறுவார்கள். புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் மனிதர்கள் பெறும் நன்மைகளைப் பின்வரும் பெரியோர்களின் சிந்தனைகள் நமக்குப் பறைசாற்றும்.

“ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்று மகாத்மா காந்தியிடம் ஒரு சமயம் கேட்டபோது “ஒரு நூலகம் கட்டுவேன்”   என்று கூறினார் மகாத்மா காந்தி.

‘‘தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று பண்டித ஜவஹர்லால் நேருவிடம் கேட்ட போது “புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’’  என்றார்.

“ஒரு குழந்தைக்கு நீங்கள் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு நல்ல புத்தகம் தான்” என்று மொழிந்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.

“மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது?” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் வினவிய போது சற்றும் யோசிக்காமல் அடுத்த வினாடியே “புத்தகம்”   என்று சொன்னார்

இப்படி அறிஞர்களும், தலைவர்களும் போற்றியது புத்தகங்களைத் தான். 

புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும், கனவுகள் வாழ்க்கையின் சாதனைகளைத் தீர்மானிக்கும்.

 – டாக்டர். ஆ. பெ. ஜெ. அப்துல் கலாம்.

வாசிப்பதன் மூலம், நமது உலகத்தை, நமது வரலாற்றை மற்றும் நம்ைமயே நாம் கண்டறிகிறோம்.

– டேனியல் ெஜ. பூர்ஸ்டின்

வாசித்தல் என்பது மற்றொரு நபரின் மனதுடன் சிந்திக்கும் ஒரு வழிவகை ஆகும். அது உங்கள் சுயத்தை விரிவுபடுத்த உங்களை நிர்பந்திக்கிறது.

– சார்லஸ் ஸ்க்ரிப்னர், ஜுனியர்

புத்தகங்கள் என்பவை சொத்துக்கள். அவை தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றி ஒப்படைக்கப்பட வேண்டியவை.

– ேஜாசப் அடிசன்

வாசிக்கும் பழக்கம் மனதிற்கு அறிவுடைய பொருட்களை வழங்கி சிறப்பாக்குகிறது; அது நம்மை நாமே வாசித்து அறிந்து கொள்ளச் செய்யும் சிந்தனையாக இருக்கிறது.

– ஜான் லோக்கே

இரண்டு விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் இல்லை என்றால், நீங்கள் இன்று இருப்பது போலவே, எந்த மாற்றமும் இன்றி ஐந்து ஆண்டுகள் கழித்தும் இருப்பீர்கள் – ஒன்று, நீங்கள் சந்திக்கும் மக்கள், மற்றொன்று – நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள்.

– சார்லஸ் இ.டி. ஜோன்ஸ்

இப்படி வாசிப்பின் பலன்களைப் பற்றிப் பல நூறு பொன்மொழிகளை வாசிப்பால் உயர்ந்த மாமனிதர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். ஆண்டுக்கு ஐந்து புத்தகங்களை வாசிக்கச் செய்யும் பழக்கத்தைப் பள்ளிகளும், கல்லூரிகளும் கொண்டு வரலாம். ஊக்கம் தந்து பரிசு வழங்கலாம். பள்ளிகளில், கல்லூரிகளில் புத்தகக் காட்சிகளை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி மாணவர்களிடம், பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம் புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தை, வாசிக்கும் பழக்கத்தை அறிமுகம் ெசய்யலாம்.

வாசிப்பு மனதுக்கு நல்ல அமைதியைத் தருகின்றது. ஒவ்வொரு நாளும், அரைமணிநேரம் நல்ல நூல்களை வாசிப்பது என்பது ஒரு தியானம் என்றே கூறலாம். இந்த வாசிப்பு தியானம் இதயத்துக்கு அமைதியைத் தருகின்றது. ஆபிரகாம் லிங்கன் வாசித்த ‘ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்’ அவரை ஜனாதிபதியாக உயர்த்தியது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, அப்துல் கலாம், சிதம்பரனார், பாரதியார், அறிஞர் அண்ணா என்று நம் நாட்டுத் தலைவர்கள் பலரும் வாசிப்பை நேசித்து வாழ்க்கையில் வளம் கண்டவர்கள்.

ஆண்டுதோறும் ஆடைகளுக்கும், ஆபரணங்களுக்கும் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் நாம் நல்ல நூல்களை, நல்ல மாத இதழ்களை, நல்ல செய்திகளைத் தரும் நாளிதழ்களை நம் அன்புக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வோம். வீடுகளில் புத்தகங்கள் நிறைந்து அறிவும், அறமும் செழிக்கட்டும். நல்ல சிந்தனைகளை நாள்தோறும் பெறுகின்ற குழந்தைகள் நாளைய தேசத்தின் நம்பிக்கை நாயகர்களாக நிலை நிற்பார்கள். வாசிப்பு வாழ்க்கையை மாற்றும், வாழ்க்கைப் பாதையை நேர்த்தியாக்கும், மலைகள் போன்ற சாதனைகளைச் செய்திட மாபெரும் வழிகாட்டியாக இருக்கும். எனவே, வாசிப்பை நேசிப்போம், வாழ்க்கையாய் அதைச் சுவாசிப்போம். =