சாதனையாளர் பக்கம்

மதுரை ஆர். கணேசன்

குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிற நல்லொழுக்கங்களும், நற்சிந்தனைகளும் அவர்களுக்குள் விதையாகி தழைத்து விருட்சமாகும் போது சமுதாயத்தில் நல்ல மனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள். 

ஒரு திரைப்படப்பாடலில் “…எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே…” என்று இடம் பெரும் வரிகளுக்கு அர்த்தம் சொல்லும்படி மதுரை மேலூர் அருகே உறங்கான்பட்டியைச் சேர்ந்த ஆ.சிவராமலிங்கம், சி.நிர்மலா தம்பதி தங்களுடைய இரண்டு மகள்களுக்கும் குழந்தைப் பருவம் முதல் கல்வியுடன் அறம், ஆன்மிகம், திருக்குறள், நல்வழி போன்ற நல்ல போதனைகளையும் சேர்த்து வளர்த்திருக்கிறார்கள்.

உறங்கான்பட்டியில் குடியிருக்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பலர் இவர்களின் குழந்தைகளைப் பார்த்து “..திருக்குறள் சகோதரிகள்..” என்று பெருமிதத்துடன் அழைப்பதோடு மட்டுமில்லாமல் தங்களது குழந்தைகளுக்கும் தீவிரமாக “..திருக்குறள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்..” என்பது கவனிக் கத்தக்கது..!

அப்பேர்ப்பட்ட குழந்தைகள் சிவ.அன்பரசி 13, எட்டாம் வகுப்பும், சிவ. அஞ்சலிதேவி 11, ஆறாம் வகுப்பும் உறங்கான்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மற்றும் மற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள் அன்பரசி, அஞ்சலிதேவி சகோதரிகளுக்கு ஒவ்வொரு காலத்திலேயும் பல்வேறு பரிசுகள் வழங்கி தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் பாராட்டுக்குரியது.  

அறிமுகத்திற்காக சகோதரிகளைப் பற்றி சொல்ல வேண்டும் அருணகிரிநாதர் அருளிய “..முத்தைத்தரு பத்தித்திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண முத்திக்கொரு வித்துக்குருபர எனவோதும்..” எனத்தொடங்கும் முழு பாடலையும் சின்னப்பொண்ணு அஞ்சலிதேவி மனனமாக உச்சரிப்பு பிசகாமல் பாடுகிறார்.

அதேபோல பெரிய பொண்ணு அன்பரசி வீட்டில் உள்ள கரும்பலகையில் “.. ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ் கூட்டும்படி அன்றி கூடாவாம்..” எனத்தொடங்கும் ஒளவையாரின் நல்வழி வெண்பா அதற்கு பொருளுரையுடன் எழுதி அதனை வாட்ஸ்சாப்பில் பதிவிடுகிறார். இப்படி திருக்குறள் மற்றும் நயம்படப் பூக்கும் கருத்துக்களை கடந்த சில மாதங்களாக எழுதி வருகிறார். 

“..உலகிற்கே பொதுமறை 1330 திருக்குறள் முழுவதையும் மனனம் செய்து  தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை நடத்திய, 2023ஆம் ஆண்டு திருக்குறள் முற்றோதலில் இரண்டு சகோதரிகளும் பங்கேற்று வெற்றி பெற்று அரசின் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்..”

ஆன்மிகம் மற்றும் தமிழ் இலக்கியங்களை பற்றிக்கொண்டு படிக்கிறார்கள், அதனை தினமும் மனனம் செய்வது மட்டுமில்லாமல் சொற்பொழிவு ஆற்றுவதற்கும் ஆயத்தமாகி வருகிறார்கள், இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளுடன் சான்றிதழ்களும், பாராட்டுக்களும் தொடர்கின்றன.       

பெற்றோர் – சிவராமலிங்கம் நிர்மலா…,

“…நாங்கள் இலங்கை ஜெயராஜ் ஐயாவின் திருக்குறள் ஊழ் அதிகாரம் உரையை யூடியூப் வழியாக கேட்க நேர்ந்தது. அவரது பேச்சு எங்களை ஈர்த்தது. அன்றிலிருந்து ஐயாவின் பேச்சைத் தினந்தோறும் கேட்க ஆரம்பித்தோம்.

அதன் விளைவாக ஆன்மீகமும், அறமும் இல்லாத கல்வியால் செல்வம் சேருமே தவிர, நிறைவான வாழ்க்கை அமையாது என்பதைப் புரிந்து கொண்டோம்.

எந்தவொரு படிப்பும், திரும்ப திரும்ப படிக்கும் போது மனனம் ஆகிவிடும் என்று ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அன்று முதல் எங்களுடைய இரண்டு மகள்களுக்கும் கல்வியுடன் ஆன்மிக நூல்கள் மற்றும் அறம் சார்ந்த நூல்களைப் படிக்க வைத்து மனனப்பயிற்சியும் கொடுக்கின்றோம்.  

அவர்களை மட்டும் தனியாகப் பயிற்சி செய்யச் சொல்லாமல் ஒரு அப்பாவாக, அம்மாவாக,  நாங்களும் அவர்களோடு சேர்ந்து படிக்க ஆரம்பித்தோம். அதன் மூலம் அவர்கள் சிரமப்படும் இடங்களைக் கண்டறிந்து அதை எளிமையாகச் சொல்லிக் கொடுத்தோம்.

எங்களால் முடிந்த வரை ஒவ்வொரு காலத்திலேயும், ஒவ்வொன்றாக எங்க பொண்ணுகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம் அவர்களும் புரிந்து கொண்டு நல்ல முறையில் கற்றுக்கொள்கிறார்கள்…”

சிவ. அன்பரசி மற்றும் சிவ.அஞ்சலிதேவி சகோதரிகள் இணைந்து நம்மிடையே பகிர்ந்து கொண்டதிலிருந்து..,

“…முதலில் அப்பா அம்மா சொல்லித் தந்தாங்க. அப்புறம் நாங்க விரும்பி படிக்க ஆரம்பிச்சோம் தஞ்சை திருக்குறள் முற்றோதல் பயிற்றகம், திருச்சி திருமூலநாதன் அறக்கட்டளை போன்ற அரசுசாரா திருக்குறள் முற்றோதலிலும் பங்கு பெற்றோம்.

கற்க கசடற உயர் வள்ளுவம் யூடியூப் சேனல், திருக்குறள் வகுப்பை தொடர்ந்து கேட்டு வந்ததால் இலங்கை ஜெயராஜ் ஐயாவின் கூற்றுப்படி திருக்குறளை மனனம் செய்தோம். அடுத்து தஞ்சை திருக்குறள் பயிற்சியகம் கோபிசிங் ஐயா மூலமாக திருக்குறளை மனனம் செய்வதில் உள்ள பல நுணுக்கங்களையும் சிறந்த பயிற்சியும் பெற்றோம்.

திருக்குறள் தவிர, திருப்பாவை 30பாடல்கள், திருவெம்பாவை 20 பாடல்கள், திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள், அக்சர மணமாலை 108 பாடல்கள், கந்தர் அனுபூதி 52 பாடல்கள் அனைத்தும் முழுமையாக மனப்பாடமாகச் சொல்லுவோம்.

அபிராமி அந்தாதி 102 பாடல்கள், விநாயகர் அகவல் 72 வரிகள் முழுவதும், சில கம்பராமாயண பாடல்கள், சில ஒளவையார் பாடல்களும் ஒப்புவிகிறோம்.

முதன் முதலாக காஞ்சிப் பெரியவர் திருப்பாவை, திருவெம்பாவை வீடுதோறும் பாராயணம் செய்ய சொன்னதாக கேள்வியுற்று திருப்பாவை, திருவெம் பாவை, திருப்பள்ளியெழுச்சி மனனம் செய்தோம் அதற்கு மற்றொரு காரணமும் இருந்தது?!

அந்த நேரம் தமிழக அரசு சார்பாக கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றோம். அது எங்களைப் பெரிதும் ஊக்கமடையச் செய்தது. அதன் பிறகு தான் ரமண பகவானின் அக்சர மணமாலை பாராயணம் செய்தோம்.

அதனால் ஆன்மீக பாராயணப் பாடல்களை மனனம் செய்வதில் அதிக விருப்பம் வந்தது. கந்தர் அனுபூதி, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி, வாரணம் ஆயிரம், என மனப்பாடம் செய்தோம்.

முதலில் கால் மணி நேரம், அரைமணி நேரம் மட்டுமே பயிற்சி செய்தோம். அது பிறகு 2 மணி 3 மணி நேரம் தொடர்ந்து பயிற்சி செய்ய உதவியது. நாங்கள் கற்றது அனைத்தும் பெரும்பாலும் இலங்கை ஜெயராஜ் ஐயாவின் பேச்சின் மூலம் தான்..!

ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து விட்டு “..சாமி அறையில் விநாயகர் அகவலை தோப்புக் கரணம் போட்டவாறே சொல்லு வோம்..” அதற்கு பிறகு பள்ளிப் பாடங்களை படித்து விட்டு பள்ளிக்குச் செல்கின்றோம்…” 

பெற்றோரின் ஆக்கபூர்வமான முயற்சியுடன் கூடிய அறமும், அழகுத் தமிழும் கூடிய இலக்கியத் திறமைகளால் ஜொலிக்கும் “…திருக்குறள் சகோதரிகள் மற்றும் இலக்கிய சகோதரிகள்..” என்ற பேர் பெற்றிருக்கிறவர்கள் மற்ற குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் தன்னம்பிக்கையூட்டும் விதமாக விளங்கும் சகோதரிகள் தமிழால் உலகையும் வலம் வருவார்கள் என்று “..ஆளுமைச் சிற்பி..” மனதார வாழ்த்திப் பாராட்டுகிறது..! =.