வாழ்வியல் திறன்கள் 105

முனைவர். திருக்குறள் பா.தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்

லகில் இன்று பொறுமையாக எதிரில் பேசுபவரைக் கூர்ந்து கேட்டல் வேண்டும் என்ற பண்பாடு குறைந்து வருகிறது. கூர்ந்து கேட்பது என்பது, எதிரில் உள்ளவர் பேச்சோடு நில்லாது அவரின் உடல்மொழியையும் நுட்பமுடன் கவனிப்பதாகும். ஆனால் இன்று எதிரில் இருப்பவர் சொல்லுவதை, தனக்கு உகந்ததாக இருப்பின் கொள்ளதக்கதாகவும், எதிராக இருப்பின் தள்ளத்தக்கதாகவும் கருதுவது வருந்ததக்கதாகவுள்ளது.

“மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள்.423) என்ற குறட்தொடர் சொல்லுபவரை ஊன்றி நோக்கி பொருளறிய வேண்டியதன் கடப்பாட்டை கட்டமைக்கின்றது. ஏன் பேசுபவரை ஊன்றிக் கேட்கவேண்டும்,

  1. முன்னே இருப்பவரை எவ்விதப் பாகுபாட்டிற்கும் உட்படுத்தாதவழி கேட்டல்நிலையானது தொடங்கப்படல் வேண்டும்
  2. சொல்லி முடிக்கும்வரை எந்தவிதமான முடிவிற்கும் வராது இருத்தல் வேண்டும்
  3. இடைமறிக்காது அவரைப் பேச விடல் வேண்டும்
  4. நம்மீது குறைசாட்டும் ஒன்றாக அமைந்திடினும், சொற்பொறுக்க வேண்டும்
  5. பேசுபவரை ஊக்கப்படுத்தும் வகையில் உடல்மொழிகள் அல்லது மறுமொழிகளை தந்திடல் வேண்டும்
  6. கேட்பவர் பொறுமையாக அனைத்தினையும் செவிமடுத்தார் என்ற உணர்வினை, பேசியவருக்கு ஏற்படுத்த வேண்டும்
  7. ஓர் நல்ல இணக்கம் உருவாகும் என்ற நம்பிக்கையை கேட்பவர், பேசியவர் இருவரும் ஒருசேரப் பெறுதல் வேண்டும்.

மேற்குறித்த கூறுகளைப் பின்பற்றும் போது, மனித உறவுகளுக்குள் நல்ல பிணைப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் வளமாகும். ஆனால் அவசரமான உலகினில், இல்லங்களிலும், அலுவலகங்களிலும் இன்று ஆழ்ந்து செவிமடுக்காத காரணங்களினால் தப்பிதமாகப் பொருள்கொள்ளப்படும் நிலைகள் ஏதுவாகின்றன.

“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்
 இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்’ (குறள்.417)

என்ற குறளானது, நுட்பமாக கேட்கும் திறனாளர் ஒருகால் மாற்றாகப் பொருளுணர்ந்திடும்போதும், அறிவகன்ற வார்த்தை அவரிடமிருந்து எழாது என்று கூர்ந்து கேட்கும்வழி ஒருவர் பெறக்கூடிய பெருமிதநிலையை உறுதிபடுத்துகின்றது.

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்” (குறள்.411)

என்ற குறட்தொடர்

தலைமையான இடத்தைக் கேட்கும் திறனிற்கு நல்கியிருப்பதை அறிந்துகொள்ளமுடிகின்றது.

உலகின் தலைசிறந்த இடத்தைப் பிடித்தவர்கள் அனைவரும் நன்கு பொறுமையுடன் கேட்கும் ஆற்றலைப் பெற்றிருந்தனர் என்பது தெள்ளென விளங்கும். அன்றைய காவியங்கள் முதல் இன்றைய மேலாண்மைச் சிந்தனைகள் வரை வலியுறுத்தப்பெறுவன யாதெனின், அடுத்தவர் பேசுவதை எவ்வித வடிகட்டிகளும் (Listening people without any filters) இல்லாது முதலில் கேட்கப் பழக வேண்டும் என்பதாகும். இவ்வகையான கூர்ந்து செவிமடுக்கும் பக்குவம் இல்லாமையினால்,

  1. அறைகுறையாகப் புரிந்து கொண்டு அனைத்தும் புரிந்தது போன்று செயல்படுதல்
  2. தப்பிதமாக உணர்ந்து அதன்வழி பூசல்களுக்கு வித்திடுதல்
  3. தனக்குப் புரிந்தவண்ணம் சொல்பவரின் எதிர்பார்ப்பிற்கு முரணாகச் செய்தல்
  4. குறைவாகப் புரிந்து கொண்டதால் குன்றிய வகையில் செயலாற்றுதல்
  5. தன்னிடம் பேசுபவர் பொருளின்றிப் பேசுகின்றார் என்று பழுதாகக் கணித்தல்
  6. சீரற்ற கேட்கும் திறனால் உறவுகளையும் இழந்துவிடும் நிலைக்குத்தள்ளப்படுதல்
  7. திடமற்ற மனப்போக்கினால் முழுமையாகப் பொறுமையின்றி முடிவெடுத்தல்

என்றாக அரைகுறையாகக் கேட்பதால், பல இன்னல்களுக்கு உள்ளாக வேண்டியதாகும் அவலம் ஏற்படக்கூடும். மேலும் நல்ல நட்புகள், உறவுகள், அலுவலகப் பணிகளில் அனைவருடனும் பொருந்தியிருந்து நேர்த்தியாகச் செயல்படுதல் எனப் பல உயர்திறன்களை இழக்கக்கூடிய நிலைகளும் வாய்க்கக்கூடும். எல்லாவற்றிருக்கும் மேலாக, நல்ல சொல்வன்மைக்கு அடிப்படையான கேட்கும் ஆற்றலை இழப்பதால் அவர்தம் எண்ணங்களை செயலாக்கக்கூடிய சொல்லாக்கச் செறிவுகளும் சேதமுறும். இத்தன்மையின் திருவள்ளுவர்,

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது (குறள்.419)

நுணுக்கமாகவும், தெளிவாகவும் கேட்கும் திறன் உள்ளவர்களால் மட்டுமே இணக்கமாகவும், வணக்கமாகவும் பேச முடியும் என்று வரையறை செய்கின்றார். எனவே பொறுமையுடன் கூர்ந்து கேட்கும் பண்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டியது மக்களாகப் பிறந்த அனைவருக்கும் அருங்கடமையாகும். இவ்வாறாக ஆழ்ந்த உணர்வுடன் ( Conscious Listening alone would lead to ultimate success in all endeavours) கேட்கும் பேறுபெற்றவர்கள் மட்டுமே நிறைவான வெற்றியை எய்திட முடியும். மேலும் அவர்கள்,

  1. இனிய புரிதல்வழி மக்களைக் கையாளும் திறன்
  2. அனைவரையும் ஒத்திசைவுடன் நடத்தும் சமனியம்
  3. பேசுபவர் அனைத்திற்கும் கேட்பவர்வழி தனக்குத் தீர்வுகிட்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் உன்னதம்
  4. வாழ்க்கையின் அனைத்துத் தடங்களிலும் பதறாது செயல்களை ஆற்றக்கூடிய வல்லாண்மை

என்றாக அனைத்து நல்லாக்கப் பதிவுகளை ஊன்றிக் கேட்பவரால் பேசுபவர் மனத்தினில் விதைத்திட முடியும்.

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்” (குறள்.420)

என்ற குறளானது, கேட்கும் திறனற்றவற்றவர்களை விலங்குகள் எனப் பழிப்பதையும் உணரமுடிகின்றது. எனவே அனைவரும் கேட்கும் அரிய கலையை படிப்படியே வளர்த்துக்கொள்ளும் வழி. நல்ல இல்லச்சூழல், நல்ல நண்பர்கள், மெச்சத்தக்கப் பணித்திறன்கள், சமூகத்தில் எழுச்சி என அனைத்து உயரிய ஆக்கங்களைப் பெறுவது உறுதி. =