வாழ்வியல் திறன்கள் 106
முனைவர். திருக்குறள் பா.தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்
உலகில் அறிவின் திறன்கள் ஒருபக்கம் பெருகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம், மக்களோடு மக்களாகப் பழகும் கலை என்பது அருகிக் கொண்டே வருகின்றது. அறிவியல் வளர்ச்சிகள் பிரமாண்டமாக உலகைச் சுருக்கியுள்ளது. ஆனால், மனிதர்கள் ஒருவரையொருவர் நல்லவண்ணம் புரிந்து கொண்டு வாழ்வது என்பது அரிதாகவுள்ளது. கூர்தீட்டப்பெற்ற அறிவில் செயற்கைவழி சிறந்துள்ளது. ஆனால் வாழ்க்கையின் இயல்புகளான, அன்பு, பரிவு, பாசம். விட்டுக்கொடுத்து வாழுதல், பொறுத்தல் போன்ற குணநலன்கள் மழுங்கி வருகின்றது. நம்முடைய ஏட்டுக்கல்வி மனிதர்களை ஓரளவு பணிக்கு உகந்தவர்களாக உருவாக்கம் செய்துள்ளதேயன்றி, மக்களோடு கலந்து பழகும் இயல்புநிலைக்கு நெறிபடுத்தவில்லை என்றே உணரமுடிகின்றது.
“நன்றின்பால் உய்ப்பது அறிவு” (குறள்.422) என்ற குறட்தொடரானது, அறம்நோக்கி ஒருவரை செலுத்தக்கூடிய மனத்தின் பண்பட்ட திறத்தையே அறிவு என்று வரையறை செய்வதை அறியமுடிகின்றது. இதனையே இன்றைய மேலாண்மை இயலானது மக்களோடு கலந்து பழகும் கலையென்று வரையறுக்கின்றது.
“we must learn to live together as brothers or perish together as fools” என்ற மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வாசகம் பழகும் கலையின் முக்கியத்துவத்தை சுட்டுவதாக உள்ளது. ‘‘உறவுகளாகவே ஒன்றிணைந்து வாழப் பழகுவோம், இன்றேல் அறிவற்றவர்களாக அழிந்து போவோம்’’ என்ற அவ்வறிஞரின் கருத்தாக்கம் வாழும் கலையின் நுட்பம் எனலாம். எனவே மக்களோடு கலந்து பழுகும் கலையை மக்கள் திறன்கள் (People skills)சமூகத்திறன்கள் (social skills) சமூக அறிவுத்திறன்கள் (social intelligence)என்றாக பகுத்துப் பார்க்கின்றார்கள். இப்பழகுநிலைக்கலையில் சிறப்பதற்கு,
- கூர்ந்து கேட்டல் (Active Listening): ஒருவர் வெளிப்படுத்தும் செய்தியை, உடல்மொழி, உதிர்க்கும் சொல், சைகைகள் என அனைத்து வகைகளிலும் குறிப்பறிந்து தெளிவாக உணர்ந்து கொள்ளுதல்
“ஈண்டிய கேள்வியவர்” (குறள். 417) என்ற குறட்பதமானது நுணுக்கமான கேட்கும் ஆற்றலே பிழையின்றி பேசுவதற்கும் அதன்வழி செயல்படுவதற்கும் ஏதுவாக அமையும் என்று வலியுறுத்துவதை அறியமுடிகின்றது.
- குழுவாகச் செயல்படுதல் (Team work): தனிப்பட்டத்திறன் போற்றற்குரியது என்றபோதும் ஒட்டுமொத்த மக்களின் திறன்களை இயைத்து (synergy) செயல்படுத்தும் போது உலகத்தில் மகத்தான சாதனைகள் விளைவதைக் காணமுடிகின்றது.
- பொறுப்படைவு (Responsiblity):
செயலாற்றுபவர்கள் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் இயங்கும்போது, ஒருவரையொருவர் குறைகூறும் அவலங்கள் எழாது, மாறாக, அவரவர் தத்தமது பொறுப்பு என்றுணர்ந்து செயலாற்றும் கடமைக்கூறு இயல்பாகும்.
“கடன்என்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு” (குறள்.981)
என்ற பொறுப்படைவுத்திறனானது குறள்வழி ஆக்கமுற்று மேற்பார்வையின்றி பணிகள் சிறப்புறுவதை அறியலாம்.
- நம்பகத்தன்மை (Dependability): பழகுநிலையில் எப்போதும் உண்மையாக சொல்லியவழி செயலாற்றும் தன்மையைப் போற்றுதல்.
“அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான கட்டே தெளிவு” (குறள்.513)
என்ற குறள்வழி, மாறாத அன்பு, நலம்காணும் அறிவு, தெளிவாகத் தெளியும் திறன், சுயநலமற்ற போக்குகள் எனற தன்மைகளுடன் செயல்படுபவரையே நம்பற்குரியர் எனலாம்.
- தலைமைத்தகைமை. (Leadership): தலைமைக்குணம் என்பது, தன்னளவில் சிறந்து நிற்பது என்பதைவிட, சிறந்த திறனாளர்களையெல்லாம் ஒன்றிணைத்துச் செயல்படுவது. இவ்வழி சிறந்த தலைமைக் குணத்தவர்கள் ஒட்டுமொத்த ஆற்றலாளர்களையும் ஊக்கப்படுத்தி செயலாற்றும் பெருந்திறனாளர்கள் எனலாம்.
ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு (குறள்.740)
என்ற குறளானது, சிறந்த தன்மைகளைக் கொண்டுள்ள போதும் அவற்றையெல்லாம் திறன்படக் கையாளக்கூடிய தலைமையில்லாது போனால் அந்நாடு எவ்வித ஆக்கமும் பெறுதல் அரிது என்பதனை உறுதிபடுத்துவதை அறிய முடிகின்றது.
- தன்னூக்கம் (Motivation): மக்களைத் தன்னூக்கம் பெறச்செய்தாலன்றி சிறந்த திறன்கள் வெளிப்படாது. உள்ளார்ந்த நிலையில் அவரவர் திறன்களை தன்னளவில் உணரச்செய்யும் வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
“உடையர் எனப்படுவது ஊக்கம்” (குறள்.591)
என்ற குறட்தொடர் மனிதத் தன்மையின் இருப்பையே ஊக்கத்தின் தன்மை கொண்டு நிறுவுவதை அறிய முடிகின்றது. தன்னூக்கம் உள்ளவர்கள் எவர்மீதும் வெறுப்பு கொண்டு செயல்படமாட்டார்கள் மாறாக விருப்புற்று செயல்படுபவர்களாக இலங்குவார்கள்
- நெகிழ்நிலை செயல்பாடு (Flexibility): உலகத்தின் போக்குகளை அறிந்து செயல்படுதல் மிக இன்றியமையாதது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உரிய மாற்றங்களை அறிந்து கொண்டு செயலாற்றும்போது புதுமைகள் அனைத்துலகத்திற்கும் ஆக்கங்களைச் சேர்ப்பது உறுதி.
“செயற்கை அறிந்த கடைத்து உலகத்து
இயற்கை அறிந்து செயல்” (குறள். 637)
என்ற குறளானது, அனைத்து திறன்களை படித்தறிந்தபோதும். உலகின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்தும் போதுமட்டும்தான் உலகிற்கு நலன்கள் கூடும் என்று அறுதியிடுகின்றது. எனவே தேவையான மாற்றங்களை வளைந்துகொடுத்து செயலாக்கும் பண்புநலன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- பொறுமை (Patience): அனைவரிடம் உறுதியாக நிலைபெற வேண்டிய பண்பானது பொறுமையாகும். பொறுமையென்பது. செயலின்கண் உறங்குவதன்று, மாறாக தக்க நேரத்தில் உச்சகட்ட விழிப்புணர்வுடன் செயலாற்றி செய்து முடிப்பது.
“எய்தற்கு அரியது இயைந்தக்கால்” (குறள்.489)
என்ற குறட்தொடர் உற்ற நேரத்தில் தாமதியாது ஆற்றும் அருமையையே பொறுமை என்று வரையறுக்கின்றது. எனவே மக்களோடு கலந்து பழகும் நிலைமட்டுமே, ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும், நிர்வாக வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், மனிதகுல மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். ஒருவரை ஒருவர் மதித்து, பொறுத்து. சகித்து. உணர்ந்து, தன்னைப்போல பாவித்து பழகும் போதுதான் வேற்றுமைகள் எழாது. மாறாக மனிதநேய மாண்புகள் வலுப்பெறும். இன்றும் தனக்காக மட்டுமே அனைத்து உலக ஆக்கங்களும என்று எண்ணக்கூடிய புல்லறிவினர் இருக்கின்ற காரணத்தாலேயே, குடும்பப்பூசல்களும், சமுதாய சிதைவுகளும், போர்களும், வன்முறைகளும் எழுகின்றன. எனவே,
“இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய் (குறள்.851)
என்ற குறளானது, மாறுபாடு குணங்களே உயிர்களிடையே பண்பற்றத் தன்மையை வளர்க்கின்ற தீயசக்தி எனத் தெளிவாக்குகின்றது. அதனைப் போக்கிட
“பண்புடைமை என்னும் வழக்கு” (குறள்.991)
என்ற பண்புநலனான கலந்து பழகும் கலையை வாழ்வியலாக்கும் போது இவ்வுலகம் அனைத்து மக்களும் வாழ்வதற்கு உற்ற இடமாகச் சிறக்கின்றது.