வாழ்வியல் திறன்கள் 106

முனைவர். திருக்குறள் பா.தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்

உலகில் தன்மதிப்புடன் வாழவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வாழமுடியவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பவர்கள் ஏராளம் எனலாம். தன்மதிப்பு என்பது தன்னளவிலிருந்து எழுச்சிப்பெற வேண்டியதொன்று என்பதனை அறிந்தவர் சிலராக உள்ளனர். அறியாதவர்களோ புலம்பலில் புதையுண்டு போகிறார்கள் எனலாம்.

எவரும் என்னை மதிப்பதில்லை.

எல்லோரும் என்னை அலட்சியப்படுத்து கின்றனர்.

என் உருவம் திடகாத்திரமாக இல்லை,

பெற்றோர் உட்பட அனைவரும் என்னிடம் அன்பு காட்டுவதில்லை.

அலுவலகத்தில் எனக்கே கடினமான பணிகளைத் தருகின்றனர் எவருமே என்னிடம் விசுவாசமாக இருப்பதில்லை.

இந்த உலகினில் தவறானவர்களே முதன்மை பெறுகின்றனர்.

மேற்குறித்த அனைத்து எதிர்மறை வாக்கியங்களும், தன்மதிப்பு குறைந்த மனிதர்களின் வெளிப்பாடுகளாக இருப்பதை அறியலாம். இவர்களின் பார்வையில் எந்த மனிதரும் நல்லவராக இருப்பது கடினமாகும். அனைவரிடமும் ஏதேனும் குற்றத்தைக் கண்டுபிடித்து அவர்களைத் தரம் குறைத்துக் காண்பதையே இத்தன்மையினர் பழக்காமாகக் கொண்டிருப்பர். மாறாக, இவர்களின் எண்ணக் கோர்வைகள் உடன்மறையாக அமைந்திருந்தால் வாழ்க்கைப் போக்குகள் அவர்களுக்கும், சார்ந்த சமுதாயத்திற்கும் ஆக்கத்தைத் தந்திருக்கும்.

“ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்” (குறள்.190) வழி இவர்கள் தன்னைப் பற்றிய சுயஆய்வினை மேற்கொள்ளாது, பிறரின் குறைகளைக் காண்பதிலேயே, தங்களிடமுள்ள ஆக்கப்பூர்வ சக்தியினை முழுமையாக இழந்துவிடுகின்றனர் எனலாம். தன்மதிப்பு என்பது, ஒவ்வொரு மனிதரும் தன்னிடமுள்ள தனித்துவத்தை தன்னளவிலேயே உய்த்துணர்ந்து, உலகினில் தனக்கென்று ஒரு பாதையை சமைத்துக்கொள்ளும் ஒரு இரசவாதம் எனலாம்.

என்னிடம் அன்புகாட்ட எவருமில்லை என்று புலம்புவதைவிட,

அனைவரிடமும் அன்பு காட்ட நான் இருக்கின்றேன் என்பது உடன்மறைச் சிந்தனை.

எனக்கு அதிர்ஷ்டமே இல்லை என்பதைவிட, எனக்கு உண்டானதை என்னுடைய கடினமுயற்சியால் பெறுவேன் என்பது ஆக்கச் சிந்தனை. என்னிடம் எவருமே ஆதரவாக இல்லை என்று வருந்துவதைவிட, எவருக்கும் உதவக்கூடிய ஆற்றலுடன் உள்ளேன் என்பது வலிமைச்சிந்தனை.

என்னிடம் எவரும் உண்மையான நட்புடன் இல்லை என்பதை விட, எவரிடமும் நாணயமுடன் நடந்துகொள்கிறேன் என்பது நலமிக்கச்சிந்தனை

எனக்கு உகந்தவகையில் எந்தக் காலமும் அமையவில்லை என்று அங்கலாய்ப்பதைவிட,

எந்தச் சூழலையும் அறிவார்ந்த முறையில் உகந்ததாக்கிக் கொள்வேன் என்பது உன்னதச் சிந்தனை. இந்த உலகமே எனக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை விட உலகத்திற்கு உரியனவற்றை உண்டாக்கித்தரும் உள்ளார்ந்த ஊக்கம் என்னிடம் உள்ளது என்பது உந்துசக்தி சிந்தனை. இவ்வாறாக நேர்மறை மற்றும் உடன்மறைச் சிந்தனைகளாவன, ஒருவருக்கு இருவேறு விளைவுகளைத் தருகின்றது.

வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற உறுதிமிக்கச் சிந்தனையும், பயனுள்ளவராகப் பரிணமிக்க வேண்டும் என்ற பண்பட்டச் சிந்தனையும் உடைமையாக்கியவர்கள் சான்றாண்மைமிக்கத் தேர்வுகளை தெரிவு செய்து எண்ணியதை எண்ணியவாறு எய்துவதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு ஆக்கச் சிந்தனை இல்லாதவர்களே தன்னையும் வருத்திக் கொண்டு உலகினரையும் பழித்துப் பேசி பயனற்றுப் போகின்றனர். நல்ல திண்ணிய சிந்தனைகளாவன, ஒருவற்கு அவரிடமுள்ள எல்லையற்ற, ஆற்றல்கூறுகளை அவரளவில் அறியச்செய்து அகிலத்தின் சீர்மைக்கு பாதை சமைத்துத் தருகின்கின்றது. ஆக்கச் சிந்தனையாளர்கள் எதிரான சூழலில் தொலைந்து போவதில்லை, மாறாக தங்களிடமுள்ள எல்லையற்ற ஆற்றல்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளாக வார்த்தெடுத்து வாகைசூடுகின்றார்கள்.

எனவே, எதிரான நிகழ்வுகளைப் பழித்துப் பேசி சாக்குகளைத் தேடுவதைவிட அவ்வெதிர் சூழலையே தனக்குச் சாதகமாக உருவாக்கம் செய்யவேண்டிய அறிவார்ந்த செயல்பாடுகளே வெற்றியின் பலன்களை வளமாகத் தருவிக்கும்.

‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை” (குறள். 594)

என்ற குறள்வழி, உடைபடா உள்ளத்தோடு ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயலாக்கம் நிகழ்த்துவோர் பெறக்கூடிய அதிரடிப் பயன்களை அறியமுடிகின்றது.

எனவே, “ஊழையும் உப்பக்கம் காண்பர்” (குறள்.620) என்ற குறள்வழி, வலிய விதிகளின் கடுமையைக்கூட ஆற்றல்மிக்கச் செயல்பாடுகள் வழி கடந்து வெல்லலாம் என்று நேர்பட உணர்த்துகின்றது. எனவே,

புலம்பலுக்கு விடைகொடுத்து புத்தாக்கச் சிந்தனைகளுக்கு இடம் கொடுப்போம் 2. வாழ்க்கை வாழ்ந்து காட்டுவதற்கன்றி வருந்தி வீழ்வதற்கல்ல என்று உணர்வோம் 3. ‘முடியாது’ என்பதினும் முடிவில்லா முயற்சிவழி முடித்துக்காட்ட முனைந்திடுவோம் 4. பயந்து பின்வாங்குவதைவிட, துணிந்து செயலாற்றி செறிவு காண்போம். என்றவழி நாளும் திடமிக்கச் சிந்தனைகளை உள்ளத்தில் உலவவிட்டு உலகத்தின்கண் நடைமுறையாக்குபவர்கள் மனஇறுக்கத்தில் தளர்ந்து போவதில்லை மாறாக மனஊக்கச் செயல்பாட்டடில் திளைத்து எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திக்காட்டுகிறார்கள். எனவே புத்தாண்டில் புத்தாக்கச் சிந்தனைகளை மன ஆழத்தில் நடவுசெய்து, அச்சிந்தனைகளை வாழ்முறையாக்கி இப்பாரின்கண் பயனுற வாழ்ந்திடுவோம். =