வாழ்வியல் திறன்கள்
முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரிடமுள்ள மனந்தான் சிறந்த நண்பன் மற்றும் பகைவன் எனலாம். மனத்தினைப் பண்படுத்தி நேர்படுத்தியுள்ளவர்கள் எந்தச் சிக்கல்களையும் முறைபடக் கையாண்டு சிறந்த மனிதர்களாக உருப்பெறுகின்றனர். ஆனால் மாறாக, மனத்தின் போக்கில் செல்பவர்கள் சிறிய பிரச்சனைகளில் கூட சிறைப்பட்டு சிதைந்து போகின்றனர். எனவே மனந்தன்னை சரிவரக் கையாள்வது ஒன்றே மனிதனுக்கான மகத்தான தீர்வு எனலாம். நம் பள்ளிப்பாட முறைகள் வரலாற்றில் வெற்றி பெற்ற மாவீரர்களை, மகத்தான மனிதர்களையெல்லாம் பட்டியலிட்டு அவர்களின் சாதனைகளைப் பட்டியலிட்டு காட்டுகிறதேயின்றி, அம்மாமனிதர்கள் அதற்காக மனத்தளவில் எத்துணைத் தீரர்களாக இருந்தார்கள் என்பதனை முழுமையாக விளக்குவதில்லை.
ஆனால் இன்றைய தலைமுறையினர் மிக வேகமாக அனைத்து இலக்குகளையும் அடைந்திட வேண்டும் என்று புகழின் உச்சத்தை மிக குறுகியக் காலத்தில் அடைந்துவிட வேண்டும் என்று முனைகின்றனர். அடைந்துவிட்டால் அளவிலா ஆனந்தம், இல்லையென்றாலோ உடனே உயிரையே மாய்த்துக்கொள்ளும் கோழைத்தனமாக முடிவெடுப்புகள்.
இம்மாதம் 2023, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரவுள்ளன. தேர்ச்சி பெறுவது மட்டுமின்றி சிறந்த மதிப்பெண்களே அவர்களின் எதிர்கால இலக்குகளுக்கு அடிநாதமாக விளங்குவதாக உள்ளது. எனவே குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் முதலில் தத்தமது வீடு மற்றும் சார்ந்த சமுதாயச் சுட்டல்களில் சிக்குவது எளிது. எதிர்காலமே மதிப்பெண்களில் என்பது போன்ற மாயத்தோற்றத்தில் சிறைப்பட்டு அவர்கள் தங்களையே காயப்படுத்திக் கொள்ளுவது கண்கூடாகவுள்ளது. சிலர் என்பது கழிந்து இன்று பலர் தங்களது வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் சோகக் கதைகளும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மதிப்பெண்கள் மட்டும்தான் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடியதா? இந்த சிந்தனை வினாவினை ஒவ்வொரு மாணவனும் சிந்திக்கக்கூடிய சூழலை அனைத்து தரப்பினரும் ஏற்படுத்தவேண்டியது தலையாயக் கடமை எனலாம்.
- நினைத்தது நடக்கவில்லையென்றால், உடனே எதிர்வினையாகச் செயல்படாது இருக்கும் மனநிலையை உருவாக்கம் செய்ய வேண்டும்
- படிப்பது சுகத்திற்காகவே அன்றி, ஏதோ மதிப்பெண்ணுக்காக என்ற தவறான புரிதலைத் தவிர்த்திடல் வேண்டும்
- அறிந்து கொள்ள வேண்டும் என்று தன்னார்வத்தை மாணவர்களிடம் உருவாக்கம் செய்திடல் அவசியமாக்கப்பட வேண்டும்
- தேர்வுகள் என்பது ஒரு தற்சோதனையே அன்றி மாணவர்களின் திறமையை அளவிடும் அளவுகோலன்று என்று அறிவுறுத்திட வேண்டும்
- தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால், உடனே தோற்றுவிட்டோம் என்பது போன்ற எதிர்மறை சிந்தனையில் சிக்கிக்கொள்ளாத மனதைரியத்தை உண்டாக்க வேண்டும்
- எதிர்பார்க்கும் துறை மேற்படிப்பில் கிடைக்கவில்லை என்றால், இடிந்துபோகாது, அடுத்து எதனைத் தேர்ந்து சிறக்கவேண்டும் என்ற அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கப் பழக்க வேண்டும்
- அனைவருக்கும் உறுதியாக சிறந்த எதிர்காலம் உண்டு என்ற ஆழ்மனத்தில் நம்பிக்கையை விதைக்கும் படக்காட்சியையும் மற்றும் சுயஅறிவுறுத்தல் கலையும் (Visualisation & Auto suggestions) மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் நெறிபடுத்துதல் வேண்டும்.
மனக்காட்சியை முன்னிருத்திச் செயல்படக் கற்றவருக்கு அனைத்தும் சாத்தியமாவது திண்ணமாகும். அடையவேண்டிய இலக்குகளை மனக்காட்சியின்வழி நிறுத்தும் போது, மனமானது அடைந்துவிட்டது போன்ற விளைவுகளைத் தந்திடும்;. மேலும், மனக்காட்சிகளை முன்னிருத்தும் போது,
- அடையவேண்டிய குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே முன்னிருத்த வேண்டும்
- எய்த வேண்டிய இலக்கினைக்குறித்து ஒரு தெளிவான படக்காட்சியை உருவாக்கம் செய்திடல் வேண்டும்
- இலக்கினை நோக்கி உறுதியாகச் செல்வது போன்று காட்சிப்படுத்த வேண்டும்
- இலக்கினை அடைந்திட மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிகளையும் காட்சிப்படுத்த வேண்டும்
- மனக்காட்சியுடன் மட்டுமே அமைந்திடாது, தெளிவான கற்பனையையும் சார்த்தி மனத்தில் இயக்குதல் வேண்டும்
- எண்ணியதை அடைந்துவிட்டது போன்று மனத்தில் நினைத்து மகிழவேண்டும்
- மேற்குறித்த அத்தனை வரைவுகளையும் மனத்தில் அவ்வப்போது இருத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.
அதேபோன்று உடன்மறை அறிவுறுத்தல்களையும் மனத்திற்குள் சொல்லிச் சொல்லிப் பார்க்கும் போது ஒருவரின் ஆழ்மனம் எண்ணியதை வசமாக்கும் சக்தியை இயல்பாக்குவது உறுதியாகும்.
“Auto suggestion is the way to condition your subconscious mind to make a statement into a self fulfilling prophecy. Its a powerful self confidence building tool”
உடன்மறையான சுய அறிவுறுத்தல்கள் ஒருவரால் எண்ணப்படும் உறுதிப்பாடுகளை செய்விக்கக்கூடிய புனிதவாக்கியங்களாகும். ஒருவரின் தன்னம்பிக்கையை பன்மடங்கு பெருக்கும் சக்திவாய்ந்த ஆயுதமாகும்.
எனவே சுயஅறிவுறுத்தல்களை,
- சரியான வார்த்தைக் கோர்வைகளாக்கவேண்டும்
- நிகழ்காலத்தினதாக அமைத்திட வேண்டும்
- தன்னில் இருந்து சொல்வதாக இருத்தல் வேண்டும் (தோன்றியதைக் காட்டிலும்)
- ஆழமானதான இருத்தல் வேண்டும். (வல்லமை, திறன், ஆற்றல் என்பன போன்று)
- சுருக்கமானதாக அமைதல் சிறப்பு
- இயன்றவரை பல முறைகளாகச் சொல்லப்படல் வேண்டும்
- அடைவது உறுதி என்று திடமாக நம்புதல் வேண்டும்.
இவ்வாறு, மாணவ மாண்புகளும், சரி அல்லது இலக்கினை மனத்தில் வைத்து எய்தும் நோக்கும் உடையவர் எவராயினும், மனக்காட்சியும், சுயஅறிவுறுத்தல்களும் எண்ணியதை எண்ணியாங்கு அடைவதற்கு மேலான துணையாயிருக்கும். இதனையே நம் குறளும்,
“உள்ளியது எய்தல் எளிது மன்மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்” (குறள்.540)
மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றது. ஆழ்மனத்தில் எண்ணப்படும் எந்த உயரிய திட்டமிட்டப்பட்டன யாவையும் ஒருவரின் தொடர்ச்சியான நம்பிக்கைக்கூடிய எண்ணவகைமையில் எண்ணியவாறு அடையப்பெறுவது உறுதி என்பதனை மனித குலத்திற்கு நெறிபடுத்தி நிற்கின்றது திருக்குறளும்.
எனவே, உலகில் அரியதாக கிடைத்த வரமான மனிதப்பிறவியை, எதிர்மறை எண்ணங்களால் சிதைத்துவிடாது, தன்னம்பிக்கைத் தரக்கூடிய மனம் சார்ந்த உளவியல் வழிமுறைகளைப் பின்பற்றி சாதித்து வாழ்வதாக அமைத்து கொள்ள வேண்டும்..