மாண்புமிகு ஆசிரியர்கள் -19 

முகில்

ரு பெரிய மரத்தின் அடியில் மாணவர்களாக விலங்குகளும் பறவைகளும் நிற்கின்றன. ஒரு காகம், ஒரு குரங்கு, ஒரு பென்குயின், ஒரு யானை, சிறு தொட்டியில் ஒரு மீன், ஒரு ஸீல், ஒரு நாய். அந்த மாணவர்களின் முன்பாக நாற்காலி, மேசையில் ஆசிரியர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் தன் மாணவர்களைப் பார்த்துச் சொல்கிறார்.

‘தேர்வு என்பது நியாயமானதாக இருக்க வேண்டும். அதனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பரிட்சை வைக்கப்போகிறேன். சரி, எல்லோரும் அந்த மரத்தில் ஏறுங்கள்!’

அப்போது குரங்கு உற்சாகமாகச் சிரிக்கிறது. காகத்துக்கும் பிரச்னையில்லை. மற்ற மாணவர்களாகிய யானை, ஸீல், மீன், பென்குயின், நாய் எல்லாம் திகைப்புடன் பார்க்கின்றன. இது ஒரு புகழ்பெற்ற கார்ட்டூன். சட்டெனச் சிரிப்பை வரவழைப்பதுதான். நிதானித்து ஒரு நொடி யோசித்தால் புரியும், ‘கல்வி முறை’யைக் கடுமையாக விமரிசிக்கும் மிக அழுத்தமான கருத்துப்படம் என்று. வரைந்தவர், Micah Russell. எந்தக் காலத்துக்கும் பொருத்தமான உலகின் மிகச்சிறந்த கார்ட்டூன்களில் ஒன்று.

1993-ம் ஆண்டில் புதுச்சேரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்த புவனா வாசுதேவனும் ‘கல்வி முறையில்’ இருக்கும் பாரபட்சத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்தார். ஏழாம் வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியையாக அவர் இணைந்தபோது மாணவர்களின் கற்றல் திறனில் இருக்கும் சிக்கல்கள் அவருக்குப் புரிந்தன. ஒவ்வொரு குழந்தையும் திறமையானவர்களே. ஆனால், அனைத்தையும் ஒரே போல புரிந்துகொள்ளும் திறன் எல்லோருக்கும் கிடையாது. சிலருக்கு வாய்ப்பாடுகள் எளிதில் மனப்பாடமாகிவிடும். சிலர் ஏழு பெருக்கல் ஏழு என்று கேட்டால் சட்டென விடை சொல்லிவிடுவார்கள். சிலர் ஓரேழு, ஈரேழு என்று தொடங்கி, கணக்குப் பார்த்து விடைக்கு வந்துவிடுவார்கள். இன்னும் சிலருக்கு பெருக்கல் குறியைக் கண்டாலே வியர்க்க ஆரம்பித்துவிடும். இன்னும் சில குழந்தைகளுக்கு எண்களைக் கண்டாலே தலைசுற்றத் தொடங்கிவிடும். அப்படி இருக்கும்போது எல்லோராலும் ஒரே வேகத்தில் புரிந்து கொள்ள முடியுமா? புரிந்து கொண்டதை பரிட்சைத் தாளில் எழுத முடியுமா? பரிட்சையில் மாணவன் எடுக்கும் மதிப்பெண்ணே அவனது தகுதி என்றால் நம் கல்வி முறையானது எவ்வளவு மோசமான ஒன்றாக இருக்கிறது?

ஆசிரியையாகச் சேர்ந்த சில நாள்களிலேயே தனக்குள் உண்டான கேள்விகளால் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளானார் புவனா. மாலை நேரங்களில் தன் வீட்டில் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்தார். ‘வீட்ல இவன் படிக்கவே மாட்டேங்கிறான்’, ‘போன எக்ஸாம்ல மூணு சப்ஜெக்ட்ல இவ ஃபெயிலு’, ‘எப்படியாவது இவனை பாஸ் பண்ண வைச்சிருங்க’ என்று பெற்றோர்களால் குற்றம் சாட்டப்பட்டு டியூசனில் சேர்க்கப்பட்ட குழந்தைகளே அதிகம். அந்தக் குழந்தைகளுடன் பழகப் பழக புவனாவுக்கு ஓர் உண்மை புலப்பட ஆரம்பித்தது. எல்லோருக்கும் ஒரே போலச் சொல்லிக் கொடுத்தால் புரியாது.

அடுத்தக்கட்டமாகத் தன் பள்ளியில் ஏழாம் வகுப்பில் 15 மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர்களது செயல்பாடுகள், கற்றலில் இருக்கும் நிறை குறைகள் ஒவ்வொன்றையுமே கவனித்துக் குறிப்புகள் எடுத்து, தனித்தனி கோப்புகளாகச் சேகரித்துக் கொண்டார். அந்த குறிப்புகளைக் கொண்டு ஆய்வு செய்தார். அது இணையப் பயன்பாடு வராத காலம். கூகுள் பிறக்கவில்லை. நூலகங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கான கற்றல் குறைபாடுகள், கற்பித்தல் முறைகள் குறித்து படித்துத் தெரிந்து கொண்டார் புவனா. குழந்தைகள் சைக்காலஜியும் தெரிந்து கொண்டார்.

வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளுதலில் குறைபாடு. அதாவது தாய்மொழியே வாசிக்கத் தடுமாறும்போது ஆங்கிலம் பூதமாக பயமுறுத்தும். எழுத்துப்பிழை குறைபாடு. தவறின்றி வார்த்தைகளை எழுதுவதில் தடுமாற்றம். தெளிவாக எழுதுதல் குறைபாடு. அதாவது எழுத்துகள் எல்லாம் அவர்களுக்கு ஓவியம்போலத் தெரியும். கணிதக் குறைபாடு. இதில் எண்கள் எல்லாம் நடனமாடும். இப்படிப் பல பிரச்சனைகள் குறித்து புவனா உணர்ந்து கொண்டார். இவை எல்லாம் அந்தக் குழந்தைகளின் குறையல்ல. பிறவியிலேயே இயல்பாக அமைந்த திறன்சார் குறைபாடு. இதனால் அவர்களுக்குக் கற்றலில் விருப்பமில்லை என்றும் அர்த்தம் அல்ல. இந்தக் குறைபாடுகளைச் சொல்லிச் சொல்லி பெற்றோரும் மற்றோரும் கொடுக்கும் மன அழுத்தத்தால் அந்தக் குழந்தைகள் படிப்பு என்றாலே பயந்து முடங்குவதையும் அல்லது கோபத்தில் முரண்டு பிடிப்பதையும் புரிந்து கொண்டார் புவனா.

ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்ப, தான் கற்பிக்கும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென்று முடிவுசெய்த புவனா, செயல்வழிக் கற்றல் முறையைக் கையில் எடுத்தார். வண்ண வண்ண சார்ட்டுகள் உயிர் பெற்றன. எண்கள் பெரிதாக எழுதப்பட்ட ஃப்ளாஷ் கார்டுகள் தயாராகின. சிறு சிறு பொருள்கள் எல்லாம் கூட்டல், பெருக்கல் கணித யுத்தத்துக்குச் சிப்பாய்களாக உதவின. எழுத்துகளும் வார்த்தைகளும் இசை வடிவம் பெற்றன. ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்றாற்போல ‘மாற்றி யோசித்து’, அவர்களது சிந்தனையைத் தூண்டி, விளையாட்டுப் போக்கில் விடைகளைப் பெற்றார். அவர்களது சின்னச் சின்னப் பதில்களையும் புன்னகையுடன் கொண்டாடினார். அரவணைத்து ஊக்கப்படுத்தினார். தடுமாற்றத்தில் இருந்த அந்த மாணவர்களுக்குள் நம்பிக்கை விதை விழுந்தது. அதுவரை எதிர்மறை வார்த்தைகளை மட்டுமே கேட்டுக் கேட்டு முடங்கிப் போன அந்தப் பிஞ்சுகள், புவனாவின் நேர்மறையான அணுகுமுறையால், சுவாரசியமான கற்பித்தலால் பாடங்களை இலகுவானதாக உணர்ந்தனர். பள்ளிக்கு வருவது என்பது அவர்களது விருப்பத்துக்குரிய விஷயமாகிப் போனது. ஆம், அந்தக் குழந்தைகளுக்குப் புதிய சிறகுகள் முளைத்தன.

‘ஒரு குழந்தைக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அது ஏன் புரியவில்லை என்பது எனக்குத் தெரிய வேண்டும். அந்தக் குழந்தையின் காலணியில் என் கால்களைப் பொருத்தி நடந்து பார்த்தால்தான் அதன் சிரமங்களை நான் உணர முடியும். அதன் பிறகே எந்த முறையில் கற்பித்தால் தீர்வு கிடைக்கும் என்ற முடிவுக்கு வர முடியும். அதைத்தான் நான் செய்ய ஆரம்பித்தேன்.’

இதே விஷயங்களை தனது டியூசன் மாணவர்களிடத்தும் செயல்படுத்தினார். ஒரு சில மாதங்களிலேயே மாற்றம் தெரிந்தது. அந்தப் பெற்றோர்களின் முகத்தில் புன்னகை. மன பாரம் குறைந்த நிம்மதியில் ஆசிரியை புவனாவுக்கு நன்றி சொன்னார்கள். கூடவே ஓர் ஆலோசனையைச் சொல்லி வற்புறுத்தினார்கள். ‘நீங்கள் கற்றல் குறைபாடு கொண்ட இது போன்ற குழந்தைகளுக்காகவே பள்ளி ஒன்றை ஆரம்பியுங்கள்.’

புவனாவுக்குள்ளும் அப்படி ஒரு சிந்தனை பிறந்திருந்தது. சாதாரண பள்ளிகளில் இந்த சிறப்புக் குழந்தைகள் படும் பாட்டை உணர்ந்தவர் என்பதால் அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

1998-ம் ஆண்டில் பாண்டிச்சேரி தந்தை பெரியார் நகரில் Bridges Learning Vidhyalaya என்ற பள்ளி 6000 சதுர அடியில் உருவானது. டிஸ்லெக்சியா, ஆட்டிசம், ADHD (attention deficit hyperactivity disorder) மற்றும் பிற வகையான கற்றல் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி. புவனா, அதை ஆரம்பிக்க பாண்டிச்சேரி அரசும் உதவி செய்தது. அந்த அரசின் பாடத்திட்டமே அங்கே செயல்படுத்தப்பட்டது.

தனது பள்ளியில் சேர்க்கைக்காக வரும் குழந்தைகளுக்கு Malins Intelligence Scale For Indian Children (MISIC) என்ற IQ அளவைப் பரிசோதிக்கும் சோதனையை நடத்தினார் புவனா. அதைக் கொண்டு அவர்களது குறைபாடுகள் என்ன, எந்த அளவுக்குக் கவனம் தேவை, என்ன மாதிரியான கற்பித்தல் முறை அவர்களுக்குச் சரி வரும் போன்றவற்றை முடிவு செய்தார். பெற்றோரிடமும் உட்கார்ந்து பேசினார். அவர்களது குழந்தைகளின் மனநிலையைப் புரிய வைத்தார். ‘மற்ற குழந்தைகளைவிட உங்கள் குழந்தையின் சிந்தனைத்திறன் கூர்மையானது. விளையாட்டில் சிறந்து இருப்பார்கள். கற்பனைத் திறன் அபாரனமானதாக இருக்கும். ஆனால், இந்தக் கற்றல் குறைபாடு மட்டும் பிரச்னை. அதையும் சரி செய்யலாம். அதற்குச் சில மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்கள் பிடிக்கும். பொறுமை தேவை. உங்களது ஒத்துழைப்பும் தேவை.’

தனது பள்ளியில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் கொடுத்தார். தனது அனுபவப் பாடங்களைச் சொன்னார். உடன் நின்று வழிநடத்தத் தொடங்கினார். காவல் துறையினர், தங்கள் கண்காணிப்பில் இருந்த சில குழந்தைகளையும் அந்தச் சிறப்புப் பள்ளியில் சேர்த்தனர். புவனா, அந்தக் குழந்தைகளையும் வாரி அணைத்துக் கொண்டார். நல்மாற்றங்கள் நிகழ்ந்தன.

‘நாங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம் என்று சொல்வது சரியல்ல. அவர்களிடமிருந்துதான் நாங்கள் அனுபவங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.’

Bridges Learning வித்யாலயா 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை கொண்ட மேல்நிலைப்பள்ளியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 25 வருடங்களில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கே கல்வி பயின்று தேர்ச்சி பெற்று வாழ்வின் அடுத்த நிலைக்கு நகர்ந்திருக்கிறார்கள். பொறியாளர்கள், மேலாளர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் என்று வெவ்வேறு பணிகளில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கற்றல் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கான கலங்கரை விளக்கமாக ஆசிரியை புவனா தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.

‘என் மகன் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டிருந்தான். நான்காம் வகுப்பில் இங்கே சேர்த்தோம். சில மாதங்களிலேயே அவனது கற்றலில் முன்னேற்றம் தெரிந்தது. இப்போது எம்.பி.ஏ. முடித்துவிட்டான்.’

‘என் குழந்தையின் எதிர்காலம் குறித்த கவலை என்னைத் தூங்கவிடாமல் செய்தது. ஆனால், ஆசிரியை புவனா எடுத்துக் கொண்ட அக்கறையாலும், கடும் முயற்சிகளாலும் அவனும் மற்ற மாணவர்கள்போல படிக்க ஆரம்பித்தான். இப்போது கேம்பஸில் தேர்வாகி பணிக்குச் செல்கிறான்.’

‘முன்பெல்லாம் என் குழந்தையை வெளியே அழைத்துச் செல்லவே தயங்குவோம். அவ்வளவு அசாதாரணமாக நடந்து கொள்வாள். இப்போது அப்படி இல்லை. அவளுக்குள் அந்த அளவுக்கு நல்ல மாற்றங்கள் இந்தப் பள்ளியால் நிகழ்ந்துள்ளன.’

இவை எல்லாம் பெற்றோரின் சந்தோஷக் குரல்கள். குறைந்த மதிப்பெண் எடுக்கும் குழந்தைகளை சில பள்ளி நிர்வாகங்கள் எட்டாவதிலோ, ஒன்பதாவதிலோ இரக்கமே இன்றி வெளியே அனுப்பும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அப்படிப்பட்ட குழந்தைகளை அள்ளி அரவணைத்து அவர்களை பத்தாவது, பன்னிரண்டாவது பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறச் செய்யும் பணியையும் சவாலாக எடுத்துக் கொண்டு இயங்குகிறார்கள் புவனாவும், அவரது பள்ளி ஆசிரியர்களும். இந்தப் பள்ளியானது பொதுத்தேர்வுகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சி என்ற சாதனையையும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து படைத்து வருகிறது. இங்கே பயிலும் சுமார் 30% மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே கல்விக்கட்டணம் வாங்கப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளும், வறுமைக் கோட்டில் வாழும் குழந்தைகளும், கிராமப்புறக் குழந்தைகளும் இங்கே கல்வி பயில்கிறார்கள்.

வருங்காலத்தில் கற்றலில் சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி அளிக்கும் கல்லூரி அமைப்பதும் புவனாவின் கனவாக இருக்கிறது. ஆசிரியை புவனா ஆசிரிய சமூகத்துக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்றுதான். ‘நாம் பெற்றோரிடம், ‘உங்கள் குழந்தை சரியில்லை, ஒழுங்காகப் படிப்பதில்லை’ என்று புகார் சொல்வதால் ஒரு பலனும் இல்லை. அந்தக் குழந்தையின் பிரச்னை என்ன என்று உணர்ந்து, அதை அக்கறையுடன் சரிசெய்து, கல்வியில் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டும். அதுதான் ஓர் ஆசிரியரின் கடமை!’ l