வெற்றி நமதே – 5
திரு.M.G.இராஜமாணிக்கம் IAS
எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்… பிளான் பண்ணி பண்ணனும்… ஓ.கே… போக்கிரி படத்துல நடிகர் வடிவேலுவோட Famous Dialogue இது. சினிமாவுல காமெடியா சொன்னாலும், வாழ்க்கையோட வெற்றிக்கு Serious-ஆவே பிளான் பண்றது அல்லது திட்டமிடுதல் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. ஆனால் என்ன ஒன்று… நமக்கெல்லாம் எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தோம், கவுத்ேதாம்னு செய்றதுலதான் ஒரு திரில் இருக்கு.
உலக வரலாற்றில் வெற்றியாளர்களாகக் கொண்டாடப்படும் யாருடைய சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தாலும், அவர்களுடைய வெற்றிக்கு மூலக்காரணம் சரியான, முறையான திட்டமிடுதல்தான்னு தெளிவாப் புரியும்.
சிறுசுல இருந்து ெபரிசு வரை நம்ம எல்லாரும் எல்லா விஷயத்துக்கும் Plan போடுற கூட்டம்தான். என்ன ஒன்னு Plan மட்டும்தான் நல்லா போடுவோம். அதை நடைமுறைப்படுத்தணும்னு வரும்போதுதான் சாதாரண மனிதனுக்கும், சாதனையாளனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.
School படிக்கும்போது காலைல 4 மணிக்கெல்லாம் எந்திருச்சு படிக்கணும்னு அலாரம் வைப்போம். இல்லேன்னா அப்பாவை எழுப்பிவிடச் சொல்லிட்டு தூங்கிருப்போம். பாவம் அந்த மனுஷன் நம்மல 4 மணிக்கு எழுப்பிவிடறதுக்கு, அவரு இடையில இடையில எந்திருச்சு 4 மணி ஆயிடுச்சான்னு பாத்துக்கிட்டே இருப்பாரு. அலாரம் அடிக்குதோ, இல்லையோ, கரெக்டா 4 மணிக்கு எழுப்பிவிட்டு டீயெல்லாம் போட்டு கொடுப்பாரு. நம்மளும் அதை வாங்கிக் குடிச்சிட்டு குறட்டைவிட்டு திரும்ப தூங்கிடுவோம். தூங்கறதுக்கும் எந்திரிக்கிறதுக்கும் இடையே நடக்கிற போட்டியில, அந்த ஒரு வருஷமும் முடிஞ்சிடும்.
இதைக்கூட மன்னிச்சு விட்றலாம், பாவம் சின்னப்பிள்ளைங்கன்னு. பெரியாளுங்க ஒரு Plan போடுவாங்க. New year plan. இந்த New yearல இருந்து இனிமே காலையில 5 மணிக்கு எழுந்து Walking போகணும்னு. முதல் வேலை நல்ல Shoe வாங்குறது. அப்புறம் T-Shirt, நல்ல Pant, Cap, கைக்கு Band, Smart Watch எல்லாம் வாங்கி ஊருக்கே 2 நாள் போட்டு காண்பிச்சிட்டு, மழை பெய்றது, நாயிருக்குன்னு எதையாவது சாக்கு போக்கு சொல்லிட்டு, சரி இனிமே ஒரு Tread Mill வாங்கி வீட்லயே நடப்போம்னு கழுதை அதையும் ஒன்ன வாங்கிப் போடுவோம்.
உண்மையிலேயே இன்னைக்கு வீடுகள்ல உபயோகிக்கிற Tread Millஐ கண்டுபிடிச்ச வில்லியம் ஸ்டாப் (William Staub) மட்டும் நம்ம Tread Mill உபயோகிக்கிற இலட்சணத்தைப் பார்த்தார்னா இரத்தக்கண்ணீர் வடிச்சிடுவார். பல வீடுகளிலேயும் துணி காயப்போடுறதுக்கு மட்டும்தான் Tread Mill பயன்படுது.
இப்படி பல நேரங்கள்ல நாம போடுற Plan Paperலயே முடிஞ்சிடுது.
அப்போ வெற்றிக்கும் திட்டம் போடுறதுக்கும் என்ன சம்பந்தம்னா, ‘திட்டம் தீட்டுவதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்குமிடையே உள்ள தூரம்தான் வெற்றி’.
Simple-ஆ சொல்லணும்னா, ஒரு வீடு கட்டணும்னு முடிவு பண்ணிட்டோம்னா முதல்ல Paperல Plan போடணும். அப்புறம் Paperல மட்டுமே Plan போட்டால் வீடு எப்படி paper வீடாகவே இருக்குமோ, அப்படித்தான் நிஜ வாழ்க்கையில் வெற்றியடைவதிலும் Plan போட்டால் மட்டும் பத்தாது. அதை நடைமுறைப்படுத்தணும். அப்போ எல்லாத்துக்கும் முக்கியம் நல்ல ஒரு Planning.
ஒரு சின்ன அனுபவம். 2009-இல் இந்திய அரசு Planning பயிற்சிக்காக ஒரு வாரம் சிங்கப்பூர் அனுப்பி வைத்தது. அங்கே Urban Redevelopment Authority எனப்படும் நகரச் சீரமைப்பு ஆணையத்திற்கு கூட்டிட்டு போனாங்க. பாத்து அப்படியே மிரண்டுட்டேன். அப்பதான் ஒரு உண்மை புரிஞ்சது. சிங்கப்பூர் சின்ன நாடா இருந்தாலும், எப்படி வளர்ச்சி அடைந்த நாடா மாறுச்சுன்னு. என்னா ஒரு Planning. Singapore City-யோட நகர்ப்புற கட்டமைப்பு (Urban Infrastructure) அடுத்த 50 வருஷத்துல எப்படி இருக்கணும்னு 1974-லேயே முடிவு பண்ணி, ஒவ்வொரு 10 வருஷம் ஆகும் போதும் அந்தந்த காலகட்டத்துக்கு ஏத்த மாதிரியான Review பண்ணி Modify பண்றதுன்னு என்னமா பிளான் பண்றாங்க.
இதுல highlight என்னான்னா எங்ககிட்ட 2009-க்கான day to day master plan book-ஐ கையில கொடுத்து அன்னைக்குத் தேதிக்கு எங்க, என்ன மாதிரி development நடக்கும் அப்படிங்கிறத நேரில காட்றதுக்காக எங்களையே ஒரு site visit பண்ணச் சென்னாங்க. நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டப்படுகின்ற Residential Complex கட்டடத்தை குறிப்பிட்டு அதை site visit பண்ணனும்னு சொல்ல, எங்க எல்லாரையும் கூட்டிட்டு போனாங்க. அந்த Master Plan Book-ஐ அனுசரிச்சு, நாங்க போன தேதிக்கு 86-ஆவது மாடிக்கு concrete slab போடுற வேலை. நேரில் போய் பார்த்தா அந்த வேலைதான் ஓடிட்டு இருந்துச்சு. Magic போட்ட மாதிரி பயபுள்ளக என்னம்மா வேலை பாக்குதுக. அப்போதுதான் ஒன்னு புரிஞ்சுச்சு, ஏன் Singapore, Singapore-ஆ இருக்குனு. என்னமா பிளான் பண்றாங்க.
இந்தியாவும் சிங்கப்பூருக்கு சளைச்ச நாடில்லை. ஒரு நாட்டை நல்லாக்கத்தான் சிங்கப்பூர் plan போட்டுச்சு. ஒரு நாட்டை நாடாக்க இந்தியா போட்ட plan இருக்கே, உலக History, Geography-ல எங்க தேடுனாலும் கிடைக்காது. உலகில் வல்லரசு சண்டை நடந்த காலகட்டத்துல அமெரிக்காவை எதிர்க்கும் துணிச்சலுடைய ஒரே வல்லரசு அன்னைக்கு இருந்த USSR எனப்படும் சோவியத் யூனியன் தான். அப்பேற்பட்ட சோவியத் யூனியன் சுக்கு நூறா சிதறுன கதை தான் இதுவரை வரலாற்றுல கேட்டிருப்போம். ஆனால், சுக்கு நூறா சிதறிக் கிடந்த தேசத்தை இந்தியா அப்டிங்கற ஒரே நாடாக்க இராப்பகலா plan போட்ட இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலையும், அவர் எப்படி இந்தியாவை plan பண்ணி இந்தியாவாக்குனார் என்கிற கதையைத் தான் சொல்லப் போறேன்.
சத்ரியனா இருக்கிறதவிட சாணக்கியனா இருக்கணும்னு கேள்விபட்டிருப்போம். இந்தியாவ இந்தியாவாக்குற மிகக் கடினமான task-ஐ அதனாலதான் நேரு, சர்தார் படேல்ங்கிற சாணக்கியன்ட்ட ஒப்படைச்சாரு. அந்த மிகப் பிரம்மாண்டமான பணியை தனது சாணக்கியத்தனத்தால் நடத்திக் காட்டிய நிகழ்வைவிட, சரியான திட்டமிடலுக்கு சிறந்த ஒரு உதாரணம் சொல்லிவிட முடியாது. Simple-ஆ சொல்லணும்னா திட்டமிடுறதுக்கு வேற பேருதான் சாணக்கியத்தனம்.
இப்பவும் News Paper செய்தியில ரெண்டு கிராமத்துக்கு நடுவுல வரப்பு சண்டை, வாய்க்கால் சண்டைன்னு ரெண்டு ஊரு காரணும். கம்பையும் கத்தியையும் தூக்கிட்டு சண்டை போடுறத படிப்போம். ரெண்டு கிராமத்தை சமாதானப்படுத்துறதே மிகக் கஷ்டமான வேலை. ஆனால், “இந்தியா எனது நாடு, இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தோர்னு” daily school assembly-ல உறுதிமொழி வாசிச்சிருப்போம். ஞாபகமிருக்கா… இப்போ நாம பெருமையோட பேசற இந்தியா, சுதந்திரத்துக்கு முன்னாடி இப்ப உள்ள இந்தியாவின் பரப்பளவுள 48% தான். ஏன்னா மிச்சம் உள்ள 52% பரப்பளவு 565 மன்னராட்சி அரசாக (Princely States) சிதறிக் கிடந்தது.
நம்மைச் சுரண்டிப் பிழைக்க வந்த களவாணிப்பயலுக சுதந்திரப் போராட்டம் சூடுபிடிக்க, இந்தியாவிட்டு கிளம்பலாம்னு முடிவெடுத்திட்டு, போகிறபோக்கில ஒரு வேலையை பாத்துவிட்டு போனாங்க. நமக்கு ஒரு கண் போச்சுனா நம்ம எதிரிக்கு ரெண்டு கண் போகணும்னு நினைக்கிற மாதிரி…
June 1948-ல இந்தியாவுக்கு முழு சுதந்திரம்னு பிரிட்டன் Parliamentல announce பண்ணிட்டு June 1947-லேயே ஒரு Plan-ஐ announce பண்ணாங்க. அதான் Mountbatten Plan. பிரிட்டிஷ் இந்தியாவை, இந்தியா பாகிஸ்தான்னு ரெண்டா பிரிச்சு நாட்டை ரணகளமாக்கிறதுதான் அந்த Plan. Winston Churchil ேஜாசியம் பாத்து சொன்னாரு, சுதந்திரத்துக்கு பின்னாடி இந்தியா சின்னாபின்னமாகப் போகுதுன்னு. அதான் சின்னாபின்னமாக்கிதான் கையில கொடுத்தீங்கன்னு நீங்க சொல்ற Mind voice கேக்குது. இதோட Twist என்னான்னா. அன்னைக்கு நம்மள ஆளத் தகுதியில்லாதவங்கனு சொன்ன பிரிட்டனை, இப்ப ஆளுறதே நம்ம இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்தான். ‘கடவுள் இருக்கான் குமாரு…
இந்தியாவ Plan போட்டு அழிக்க நினைச்ச அந்த Mountbatten Plan என்னான்னா…
பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் என இரண்டு சுதந்திர நாடாக பிரிக்கப்படும்.
பிரிட்டனின் குடைக்கீழில் இருந்த மன்னராட்சி அரசு அல்லது சமஸ்தானங்கள் இந்தியாவோடயோ, பாகிஸ்தானோடயோ அல்லது சுதந்திர நாடாகவோ இருக்கலாம்.
Final-ஆ ஒரு Twist கொடுத்தாங்க. முன்னாடி announce பண்ண மாதிரி June 1948-ல் அல்ல சுதந்திரம் August 15, 1947-ல. இந்தியாவுக்கு இக்கட்டான சூழ்நிலை. இந்தியா ரெண்டாகுமா இல்ல, 565 ஆகும்மான்னு? 565 சமஸ்தானத்தை இந்தியாவுக்குள்ள இணைக்கலேன்னா Churchil சொன்ன ஜோசியம் பலிச்சிடும். அதேநேரத்துல ஒண்ணா இணைக்க 2 மாசம் அவகாசம்.
அருணாச்சலம் படம் பாத்த மாதிரியே இருக்கா? 30 நாள்ல 30 கோடி செலவு பண்ணலேன்னா 3000 கோடி சொத்து கையவிட்டு போயிடும். ஆனா செலவு பண்ற 30 கோடிக்கும் பின்னாடி இருந்து வருமானத்தை கொடுத்து சதி பண்ற மாதிரி தான் அன்னைக்கு British அரசாங்கமும் ெசய்தது.
அந்த இக்கட்டான சூழ்நிலைல தான் ஜவஹர்லால் நேரு திட்டமிட்டு வெற்றி பெறுவதில் வல்லவரும், அரசியல் சாணக்கியருமான சர்தார் படேலை 565 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் மிகப்பெரிய பணியை ெகாடுக்கிறார். திட்டம் போட்டு சாதிக்கிறதுல வல்லவரான வல்லபாய்க்கான count down start ஆகுது. பயங்கரமான பிளானோடு இந்தியா முழுசும் சூறாவளி சுற்றுப்பயணம் பேச்சுவார்த்தைனு களத்துல குதிக்கிறார் சர்தார். எல்லாரும் இந்தா வச்சுக்கோ என் நாட்டைனு கையில எடுத்தா கொடுப்பானுக. அதுவரை உபயோகிச்ச சுகபோகம் போயிடாதா? ஆனால் அப்படி கொடுத்த ஒரு சில புண்ணியவான்களும் இருந்தாங்க.
இருந்தாலும் நம்ம தலைவர் ஒரு திட்டம் தீட்னாரு. அதுக்கு பேரு Privy Purse திட்டம். அது என்னான்னா… எல்லாரும் சும்மா அரண்மனைல இருந்து சேவல் சண்டைய நடத்துங்க. அதுக்கு மாசாமாசம் ஒரு amount உங்கள தேடி வரும். மக்களையும் அரசையும் நாங்க பாத்துக்குறோம் அப்படிங்கிறதுதான் அந்த திட்டம். அந்த deal பிடிச்சுபோயி நிறைய பேர் இந்தியாவோட சேந்தாங்க. கொஞ்ச பேர் பாகிஸ்தானோட சேர்ரதுக்கு பயந்துகிட்டு சேந்தாங்க. கொஞ்ச பேர் தேசபக்தி உணர்வோட ேசந்தாங்க. இப்படி 565 சமஸ்தானங்களை தனது சாம, பேத, தான, தண்ட முறைகளையும் உபயோகிச்சு இணைக்கத் தொடங்குகிறார்.
நம்ம தலைவர் பிளான்படி எல்லாம் நல்லபடியா ஒருபுறம் நடக்க, மறுபுறம் திருவிதாங்கூர், ஐதராபாத், ஜுனாகத், ஜோத்பூர், போபால், காஷ்மீர்னு மறுபுறம் தலைவலி கொடுக்க ஆரம்பிச்சுச்சு.
ஜோத்பூர் மகாராஜா ஹன்வந்த் சிங் அவரோட முன்காமி இந்தியாவோட இணைஞ்சுக்கிறம்னு கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தை வச்சுகிட்ட ஜின்னாட்ட பேரம் பேச ஆரம்பிச்சார். இந்தியா எனக்கு இதெல்லாம் தருது. நீ என்ன தருவ? என்னா ஒரு வில்லத்தனம். பதிலுக்கு என்ன வேணும்னாலும் தர்றோம்னு ஜின்னா வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுத்தர, நம்மாளு ஒரு அடி அடிச்சாரு. ஜோத்பூர் ரயில் மூலம் கத்தியாவாமேடு (குஜராத்) இணைக்கிறோம்னு. ஏன்னா கடல்வழி வாணிபம் செய்ய அதான்வழி. மன்னர் surrender. இப்படி, போடுற பால் எல்லாம் சிக்சர் அடிச்சு 565 சமஸ்தானங்களை இன்னைக்கு இருக்கிற இந்தியாவா மாத்துன பெருமை, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலேயே சாரும்.
இன்னைக்கு நிலைமைக்கு ரஷ்யா-உக்ரைன் சண்டை கூட இடத்தைப் பிடிக்க நடக்கிற அடிதடி சண்டை. இப்படி இடத்தை பிடிச்சுக்க அடிக்கிற உலக நாடுகளுக்கு மத்தியில, உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டா ஒரு முன்மாதிரியா இன்னைக்கு வரைக்கும் இந்தியா இருக்குன்னா… அதுக்கு முக்கிய காரணம்… சர்தார் Plan தான்.
திட்டமிடுகிறதுக்கு தோற்றுப் போகிறவன், தோற்றுப் போவதற்குத் திட்டமிடுகிறான். நம்ம ஆஸ்தான ஜோசியர் Winston Churchil சொன்னமாதிரி நம்ம வாழ்க்கையில வெற்றி பெறணும்னா…
“எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்” அப்படி பிளான் பண்ணா… வெற்றி நமதே! l