ஐந்து ஆறைவிடப் பெரியது 06

திரு.முகில்

மிஸிங் என்பது அசாமின் இரண்டாவது பெரிய பழங்குடி இனம். அந்த இனத்தில் பிறந்தவர் ஜாதவ் பேயெங். அவர் வாழ்ந்த மஜுலிப் பகுதியில் ஓடும் பிரம்மபுத்திரா நதியின் நடுவில் சிறு சிறு தீவுகள் உண்டு. 1979-ம் ஆண்டிலும் பிரம்மபுத்திராவில் குமுகுமுவென வெள்ளம் பொங்கிப் பெருகி, புரண்டோடி, பின் வடிந்தது. தீவுகளின் மணற்பரப்பில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஏராளமான பாம்புகள் செத்துக் கிடந்தன. சில பாம்புகள் சுடுமணலில் வெப்பம் தாங்க முடியாமல் நீரைத் தேடி தவிப்புடன், உயிர் துடிக்க நெளிந்து கொண்டிருந்தன.

பாம்புகளின் பரிதாப நிலையைக் கண்ட ஜாதவ் அதிர்ந்தார். ‘தீவில ஒதுங்க மரம் இல்ல. சூடு தாங்காம அப்படித்தான் செத்துப் போகும். ஒண்ணும் பண்ண முடியாது’ என்று பெரியவர்கள் சொன்னார்கள். ஜாதவ், அந்தப் பாம்புகளுக்காக அழுதார்.  உலகில் மரமெல்லாம் அழிந்து போய்விட்டால் ஒருநாள் மனிதர்களும் இப்படித்தானே செத்துக் கிடப்பார்கள். நினைக்கும்போதே உடல் நடுங்கியது. மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் ஜாதவின் மனத்தில் ஆழமாக வேரூன்றியது. அந்தத் தீவில் மரங்கள் வளர்க்கலாம் என்று ஊர்க்காரர்களை அழைத்தார். யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

ஜாதவ், தனக்குக் கிடைத்த மரக்கன்றுகள், அகப்பட்ட விதைகளுடன் அந்தப் பெரிய தீவை நோக்கிக் கிளம்பினார். விதைகளைத் தூவினார். மரக்கன்றுகளை நட்டார். நதியிலிருந்து நீர் எடுத்து வந்து ஊற்றினார். அவை வேர் பிடித்து வளரும் என்று காத்திருந்தார். நாளடைவில் ஜாதவின் நம்பிக்கை பட்டுப் போனது. ஜாதவ், தயக்கத்துடன் வனத்துறையினரிடம் ஆலோசனை கேட்டார். ‘அந்த மணலில் எல்லா மரங்களும் வளராது. மூங்கில் மட்டுமே வளரும்’ என்றார்கள். ஜாதவுக்குள் உற்சாகம். மூங்கில் கன்றுகளை நட்டு, தினமும் பராமரித்தார். காலப்போக்கில் அவை வளர்ந்தன. ஜாதவின் நம்பிக்கையும். ‘இனி இந்தத் தீவில் மரங்கள் வளர்ப்பது மட்டுமே என் வேலை. ஒரு பெரிய காடாக இந்தத் தீவை நான் மாற்றிக் காட்டுவேன்.’

ஜாதுநாத் பேஸ்பருவா என்ற அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரைத் தேடி சென்று, மஜுலித் தீவில் பிற மரங்கள் வளர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் ஜாதவ். ‘அந்த மண்ணை அதற்குத் தகுந்தாற்போல வளப்படுத்த வேண்டும். மண்புழுவைப்போல், சிவப்பு நிறக் கட்டெறும்புகளுக்கும் மண்ணின் தன்மையை வளப்படுத்தும் தன்மை உண்டு’ என்றார் பேராசிரியர். ஜாதவ், தினமும் நூற்றுக்கணக்கில் எறும்புகளைத் தேடிச் சேகரித்து, தீவுக்கு இடம்பெயர்த்தார். அந்த எறும்புகள் வெண்மணலில் ஊர்ந்து செல்லச் செல்ல, அவை சுரக்கும் சில நொதிகளால் மண்ணின் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. அதன் பிறகு நட்ட பிற மரக்கன்றுகளும் வேர்பிடித்துத் துளிர்த்தன. ஜாதவ், தன்னைக் கணக்கின்றிக் கடித்த சிவப்பு எறும்புகளுக்கு மனதார நன்றி சொன்னார். வெண்மணல் தீவில் பச்சைப் புள்ளிகள் படர ஆரம்பித்தன. இன்றைக்கு ‘இந்தியாவின் வன மனிதர்’ என்று கொண்டாடப்படும் ஜாதவ் பேயேங், முப்பத்தைந்து ஆண்டுகள் தனி ஆளாக முதுகெலும்பு தேய உழைத்து, உருவாக்கிய காட்டின் பரப்பளவு ஏறக்குறைய 1360 ஏக்கர். ஜாதவின் பெருஞ்சாதனையில் சிற்றெறும்புகளுக்கும் சிறப்பான பங்கு இருக்கிறது என்பதே உண்மை.

ஆம், மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பூமியில் மண்ணை வளப்படுத்தும் வேலையை விசுவாசமாகச் செய்து வருகின்றன எறும்புகள். உலகின் முதல் விவசாயி யார்? நிச்சயமாக மனிதன் அல்ல. மண்புழு என்று தோன்றலாம். இல்லை, எறும்புகளே உலகின் முதல் விவசாயிகளாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைகள் பக்கம் பக்கமாகத் தகவல்களை வாரிக் குவிக்கின்றன. அமெரிக்காவின் இயற்கை வரலாற்றுக்கான ஸ்மித்ஸோனியன் தேசிய அருங்காட்சியகத்தில் பூச்சியியலாளராகப் பணியாற்றும் டெட் ஷுல்ட்ஸ் (Ted Schultz). அவரது ஆய்வுக்கட்டுரை எறும்புகளின் விவசாயம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கிறது.

மனிதர்கள் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்புதான், வாழ்வாதாரத்துக்காக முறைப்படுத்தப்பட்ட விவசாயத்தைத் தொடங்கினர். தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த சில வகை எறும்புகள், சுமார் 55 முதல் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூஞ்சைகளை வளர்க்கும் விவசாயத்தைத் தொடங்கிவிட்டன. அங்கே மழைக்காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகளில் இந்த எறும்புகள், பூஞ்சைத் தோட்டங்களை மில்லியன்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. தரைக்கடியில் உருவாக்கிய மண் அறைகளில் எறும்புகள் பூஞ்சைகளைப் பயிரிடுகின்றன. கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இலைகள் எறும்புகளின் முக்கிய உணவு. ஆனால், இலைகளில் உள்ள செலுலோஸ் (Cellulose) என்ற கரிமச் சேர்மப்பொருள் எறும்புகளுக்குச் செரிமானம் ஆகாது. சில பூஞ்சை வகைகளால் அதைச் செய்ய முடியும். அதனால்தான் எறும்புகள் தம் குடியிருப்புகளில் பூஞ்சைகளை வளர்க்கின்றன. இலைகளை எடுத்து வந்து பூஞ்சைகளுக்குக் கொடுக்கின்றன. அவை அவற்றோடு சேர்த்து மக்குகின்றன. செல்லுலோஸ் செரிமானம் ஆன, ஊட்டச்சத்து மிகுந்த பூஞ்சைகளை எறும்புகள் உண்கின்றன.

விவசாயத்துக்கு வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பது அவசியம் அல்லவா. வெப்பம் அதிகரிப்பது போலிருந்தால் எறும்புகள், தம் விவசாயப் பண்ணையின் மண்ணை மிகவும் ஆழமாக ஆழமாகத் தோண்டுகின்றன. பழங்கள், தாவரங்கள், காலைப் பனி போன்றவற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து பூஞ்சைகளுக்கான ஈரப்பதத்தையும் பராமரிக்கின்றன. அங்கும் தேவையில்லாத பாக்டீரியாக்களின் தொல்லைகள் உண்டு. தீங்கு செய்யும் அந்த பாக்டீரியாக்களிடமிருந்து பூஞ்சைகளைப் பாதுகாக்க, உழைப்பாளர் எறும்புகள் தம்மிடம் இயற்கையாகச் சுரக்கும் (Antibiotics) வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன. ‘நூறு சதவிகித இயற்கை விவசாயத்தைக்’ கைவிடாத உயிரினங்கள் எறும்புகளே!

இந்த எறும்புகள் எல்லாம் விவசாயம் செய்வது ஒரேவகையான பூஞ்சை அல்ல. எறும்புக்கூட்டங்களுக்கு, அவை வாழும் பிரதேசங்களுக்கு ஏற்ப இந்தப் பூஞ்சைகள் மாறுபடுகின்றன. எந்நூறுக்கும் மேற்பட்ட பூஞ்சைகளை அவை விவசாயம் செய்வதாக வருடக்கணக்கில் நுட்பமாக ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கின்றனர். அதாவது எறும்புகளும் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து, தாம் பயிரிடும் பூஞ்சைகளையும் பரிணாம வளர்ச்சி அடையச் செய்துள்ளன.

இந்த விதவிதமான பூஞ்சைகளை, மரபணுப் பரிசோதனை செய்தால் இன்னும் கூடுதல் ஆச்சரியங்கள் கிடைக்கலாம் என்று ஆய்வாளர்கள் அதையும் செய்து பார்த்தார்கள். ஒரு எறும்பு காலனியில் பயிரிடப்பட்ட பூஞ்சைகள் இன்னொன்றில் கண்டறியப்பட்டன. அங்கே கலப்பின பூஞ்சை விவசாயம் நடைபெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. கிவ் அண்ட் டேக் பாலிஸி! ‘விவசாயத் தொழில்நுட்பத்தில் நான் மில்லியன் தலைமுறைக்கும் முன்னோடி’ என்று நறுக் என்று நிரூபித்திருக்கிறது எறும்பு.

விவசாயம் செய்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. எறும்புகள் கால்நடைகளையும் வளர்க்கின்றன. அந்தக் கால்நடைகளின் பெயர் அபிட்ஸ் (Aphids). இவை எறும்புகளைவிடச் சிறிய பூச்சியினங்கள். தாவரங்களிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சியெடுத்து, தம் உணவுக்குழாயில் தேன்மெழுகு போன்ற திரவத்தைச் சுரக்கின்றன. இந்தத் தேன்மெழுகு, எறும்புகளுக்கு மிகவும் ஆரோக்கியமான புரதச்சத்து மிகுந்த உணவாகப் பயன்படுகிறது. அபிட்ஸ்களிடமிருந்து எறும்புகள் தம் உணர்கொம்புகள் மூலமாக அந்தத் தேன்மெழுகை எடுத்து உணவாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆக, தைப்பொங்கல் கொண்டாடவில்லையே தவிர, எறும்புகள் மனிதர்களைவிட மிக மூத்த இயற்கை விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்பதில் பாசக்காரர்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் எறும்புகளுக்குப் பிரச்னையில்லை. 

உலகின் அதிக எண்ணிக்கை கொண்ட உயிரினங்களில் எறும்பும் ஒன்று. பூமியில் ஒரு மனிதனுக்கு இருபத்தைந்து லட்சம் எறும்புகள் என்ற விகிதத்தில் இருப்பதாக உத்தேசக் கணக்கு சொல்கிறார்கள். எறும்புகள் கூட்டமாக மட்டுமே வசிப்பவை. ஒவ்வொரு எறும்பு காலனியிலும் ராணி எறும்பே சர்வாதிகாரி. ஆண் எறும்புகள் உண்டு. காவலாளி எறும்புகள், வேலை வாங்கும் மேஸ்திரி எறும்புகள்கூட உண்டு. வேலைக்கார எறும்புகளே எண்ணிக்கையில் அதிகம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணி. உணவு சேகரிப்பது வேலைக்கார எறும்புகளின் பிரதான பணி. தம் காலனிக்குள் அந்நிய எறும்புகளை காவலாளிகள் அனுமதிக்காது. ஆபத்தான சமயங்களில் தற்காப்புத் தாக்குதல் நடத்தும் திறனும் எறும்புகளுக்கு உண்டு.

எறும்புகளுக்கு மோப்ப உணர்வு அதிகம். உணவை மோப்பம் பிடித்துச் செல்லும் எறும்பு, தன் தலையில் உள்ள உணர்கொம்புகளால் அதைத் தொட்டுப் பார்த்து உறுதி செய்கிறது. தான் மட்டும் அதைச் சாப்பிட நினைப்பதில்லை. அங்கிருந்து திரும்பிச் செல்லும் பாதையெல்லாம் தன் உடலின் பின்புறத்திலிருந்து ஃபெரமோன் (Pheromone) என்ற வேதிப்பொருளைச் சுரந்தபடி நிலத்தில் கோடு போட்டபடியே தன் புற்றை அடைகிறது. அதை மோப்பம் பிடிக்கும் பிற எறும்புகள், அந்த உணவு இருக்கும் இடத்தை எளிதாக, விரைவாகச் சென்றடைகின்றன. அடுத்து என்ன, அலேக்காகத் தூக்கிச் செல்ல வேண்டியதுதான்.

கொஞ்ச நேரம் மொபைலை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு எறும்புக் கூட்டத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் போதும். வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ பாடங்களைக் கற்கலாம்.

எறும்பின் பாதையில் தடை உண்டானால் அது ஒருபோதும் பின்வாங்காது. உடனடியாக மாற்றுப்பாதையைத் தேடி, முயன்று, தன் இலக்கை அடைவதில் மட்டுமே உறுதியாக இருக்கும். Never Give Up.

எறும்புகள் பெரும்பாலும் தம் எடையைவிடப் பல மடங்கு எடை கொண்ட பொருள்களையே தூக்கிச் செல்கின்றன. எந்தப் பெரிய பொருளைப் பார்த்தும் மலைப்பதில்லை. அவற்றைத் தூக்க முயற்சி செய்கின்றன. தம்மால் முடியும் என்று நம்புகின்றன. Believe Yourself.

தன் எடையைவிட பல மடங்கு எடை கொண்ட பொருளைத் தூக்கிச் செல்லும் எறும்பானது தன் பாதையில் பள்ளமோ, பிளவோ இருந்தால் தயங்கி நிற்காது. சுமந்து வந்த பொருளைக் கொண்டே இடைவெளியை நிரப்பும். அதன் மீதே ஏறிச் சென்று, மறுகரையில் பொருளை மீண்டும் தூக்கிச் செல்லும். Think Smart!

கோடையில் எறும்புகள் மழை மற்றும் குளிர்காலத்துக்காக உணவைச் சேகரிக்கின்றன. திட்டமிட்டுச் செயல்பட்டால் கஷ்டம் தவிர்க்கலாம். குளிர்காலத்தில் கோடையின் வருகைக்காகக் காத்திருக்கின்றன. ஆம், இதுவும் கடந்து போகும். எறும்புகள் எதிர்காலத்தை நோக்கியே எப்போதும் சிந்திக்கின்றன. செயல்படுகின்றன. Retain Positive Attitude.

கூட்டத்தில் நான் மட்டும் உழைக்க வேண்டுமா? அவனைப் பார், சோம்பேறியாகத் திரிகிறான். எல்லா வேலைகளையும் என் தலையிலேயே கட்டுகிறீர்கள் என்று எந்த எறும்பும் உழைக்கச் சலித்துக் கொள்வதில்லை. நம் கூட்டம் நிம்மதியாக வாழ உழைத்துக் கொண்டே இரு. Keep on Working.

வசிக்கும் காலனி சிதைந்துவிட்டதா? உடனடியாக வேறு இடத்துக்குச் செல்ல வேண்டுமா? சேகரித்த  உணவெல்லாம் இல்லாமல் போய்விட்டதா? விடுடா பாத்துக்கலாம் என்று எறும்புகள் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். புதிய சூழலுக்குக்கேற்ப தம்மை உடனே மாற்றிக் கொள்ளும். Keep on Living.

இரண்டு அடியோ, இரண்டாவது மாடியோ, இருநூறு அடியோ, எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும், எறும்புக்கு அடி படாது. விழுந்த அதிர்ச்சியை ஒரு நொடியில் உதறிவிட்டு, ‘வேலையைப் பாக்கலாமா’ என்று அடித்த நொடி உடலைச் சிலுப்பிக் கொண்டு கிளம்பிவிடும். நிக்க நேரமில்ல, தலைக்கு மேல சோலி கெடக்குது மச்சி!

குதிக்கும் எறும்புகள் (Trap-jaw ants) என்று ஒருவகை இருக்கின்றன. இவற்றின் தாடைகள் மிக வலுவானவை. எதிரிகளிடமிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ள மின்னல் வேகத்தில் எகிறிக் குதித்து விலகிப் போகின்றன. இந்தக் குதித்தல் என்பது நாம் கண் சிமிட்டும் நேரத்தைவிட பல மடங்கு வேகமானது. தம் தாடையை மிக வேகமாகத் திறந்து மூடுவதன் மூலம் அவை இப்படி மின்னல் வீரனாகக் குதித்துத் தப்பிக்கின்றன. இது எந்தவொரு சூப்பர் ஹீரோவாலும் இயலாத காரியம்!

மழையோ, நிலநடுக்கமோ, வேறு பேரிடர்களோ வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் உணர்திறன் எறும்புகளுக்கு உண்டு. குறிப்பாக, நெருப்பு எறும்புகள் (Fire Ants) பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவை நீரில் மூழ்காமல் இருக்கும்விதத்தில் தம் உடலமைப்பை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவை. நீர்நிலையைக் கண்டால், இந்த எறும்புகள் ஒன்றோடொன்று பிணைந்து காற்றுப்புகாத வண்ணம் நெருக்கமான அமைப்பை உருவாக்குகின்றன. அப்படியே நீரில் எறும்புப் படகுபோல மிதக்க ஆரம்பிக்கின்றன. அந்தப் படகு அமைப்பின் கீழும் பல நூறு எறும்புகள் ஒன்றிணைந்து ஓர் அஸ்திவாரம் போல பிணைந்து நீரில் மிதக்க உதவுகின்றன. ஆக, மழையோ, வெள்ளமோ, நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் என்று இந்த எறும்புகள், தம் கூட்டுமுயற்சியால் தப்பிக்கின்றன.

பாலைவனங்களில் பலவகை எறும்பு இனங்கள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இரை தேடி நீண்ட தூரம் செல்லும். அப்படிப் பயணம் செய்யும்போது அந்த எறும்புகள் தாம் செல்லும் பாதைகளையும் திசைகளையும் தொடர்ச்சியாகத் தம் மூளையில் பதிவு செய்து கொள்கின்றன. தம் கண்ணில் படுகிற நிலப்பரப்புகள் குறித்த அடையாளங்களையும் நினைவில் ஏற்றிக் கொள்கின்றன. இதெல்லாம் கூகுள் மேப்பில் எத்தனை அப்டேட் வந்தாலும் ஈடு செய்ய முடியாத காரியம். அந்தத் திசைகளை, பாதைகளைத் தம் சந்ததிக்கும் கடத்தும் திறன் எறும்புகளுக்கு உண்டு.

ஆம், எறும்புகள்  மரபணு வழியாகவே தம் சந்ததிக்கு வாழ்வியல் முறைகளையும், மில்லியன் ஆண்டுகள் கணக்காகக் கற்றுணர்ந்த பிழைத்திருக்கும் பாடங்களையும் கடத்துகின்றன. மனிதர்களாக நாம் மரபணுக்கள் மூலம் நம் சந்ததிக்குக் கடத்த முடிந்தது சொற்பமே. கலாசாரத்தையும் வாழ்வியலையும் நாம் கற்றுத்தரத்தான் முடியும். ஆனால், நாம் எளிதாக நசுக்கிக் கொல்லும் எறும்புகள், இதிலும் மனிதனைவிட எங்கோ உயரத்தில் இருக்கின்றன.

உயிரியலாளர் லூவிஸ் தாமஸ், தனது பல்வேறுகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு எறும்புகள் குறித்து ஏகப்பட்ட ஆச்சரியமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அத்தனையையும் ஒட்டுமொத்தமாக இந்த வார்த்தைகளில் உணரலாம்.

‘எறும்புகள் மனிதர்களைவிட பன்மடங்கு அறிவாற்றல் மிகுந்தவை. ஆனால், நம்மைப்போல் மற்ற உயிரினங்களுக்கோ, இயற்கைக்கோ ஒருபோதும் தீங்கு விளைவிக்காதவை.’ =