ஐந்து ஆறைவிடப் பெரியது 06

திரு.முகில்

சிறுவன் சலிம் அலி மிகப்பெரிய வேட்டைக்காரன். பம்பாயின் தன் வீட்டின் அருகே கோழி, குருவி, வாத்து, மைனா என்று துப்பாக்கியால் வேட்டையாடுவது அவனது வழக்கம். தனது பத்தாவது வயதில் பொம்மைத் துப்பாக்கியால் குருவி ஒன்றைச் சுட்டான். அது கீழே விழுந்து துடிதுடித்து இறந்துபோனது. சலிமுக்கு மனம் கேட்கவில்லை. அந்தக் குருவியை கையில் எடுத்துப் பார்த்தான். இளஞ்சாம்பலும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்தக் குருவியின் தொண்டைப் பகுதியில் மஞ்சள்நிறப் புள்ளி இருந்தது. தன் மாமாவிடம் எடுத்துச் சென்றான்.

‘இது என்ன குருவி? வித்தியாசமாக இருக்கிறதே?’

அவருக்கும் தெரியவில்லை. அவர் சலிமை, Bombay Natural History Society (BNHS) என்ற அமைப்பைச் சாந்த W.S.மில்லர்ட் என்பவரிடம் அழைத்துச் சென்றார். அவர், ‘இது மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி’ என்று தெரிவித்தார். அந்தக் குருவி பற்றி, அதன் வாழ்க்கை முறை பற்றி நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போனார். இன்னும் பல குருவிகள் குறித்து தகவல்களை அடுக்கினார். அந்த சொசைட்டியில் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்ட பறவைகளைக் காண்பித்தார். சலிம், அனைத்தையும் ஆர்வத்துடன் கேட்டான். அதுவரை அவனுக்குள் உலவிக் கொண்டிருந்த ‘வேட்டைக்காரச் சிறுவன்’ கரைந்து காணாமல் போயிருந்தான். ஒரு குருவியின் மரணம், ‘சலிம் அலி’ என்ற ‘இந்தியாவின் பறவை மனிதரை’  உருவாக்கியது. அந்தப் பறவை மனிதரால் இந்தியப் பறவையினங்கள் குறித்த நுட்பமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. புள்ளினங்காள் குறித்து அடுத்தடுத்த சந்ததியர் விரிவாக அறிந்துகொள்ள அற்புதமான புத்தகங்களை எழுதினார் (அவரது சுயசரிதையின் தலைப்பு : The Fall of Sparrow). பறவைகள் குறித்த ஆய்வுக்காகவே தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்டார். ஆம், அந்த மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி நிச்சயம் அவரை மன்னித்திருக்கும்.

‘பறவையைச் சும்மா பார்த்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று சொல்கிறார்கள். உணவுக்காக வெறும் ரொட்டியைச் சம்பாதித்துக் கொண்டிருப்பதால் மட்டுமே வாழ முடியுமா என்ன?’ என்பது சலிம் அலியின் கேள்வி. முக்கியமான கேள்வி. ‘பறவை பார்த்தல்’ என்பது வெறும் பொழுதுபோக்கு விஷயம் அல்ல. பறவைகளின் வாழ்வில் இருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கின்றன. நாம் இந்த அத்தியாயத்தில் குருவிகளைப் பார்ப்போம், கொஞ்சம் உன்னிப்பாக.

கிராமங்களின் அதிகாலை அலார ஒலியே குருவிகளின் கீச் கீச் இனிய ஒலிதான். குருவிகள், மனிதர்களோடு பழகி வாழும் செல்லப்பிராணிகள் அல்ல. மிரண்டு விலகியே நிற்கும். ஆனால், அவை மனிதர்களின் வசிப்பிடங்களிலேயே இயைந்து வாழும். வீடுகளின் மாடக்குழிகளிலும், கூரைகளின் இடுக்குகளிலும், போட்டோக்களின் பின்புறமும் கூடுகட்டி குஞ்சு பொரித்து சந்ததியைப் பெருக்கும். குருவி ஒன்று வீட்டுக்குள் வந்து செல்கிறது, அதைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அறையின் மின்விசிறியை பயன்படுத்தாமல் வாழும் மனிதர்களும் இங்கு உண்டு. அதேசமயம், தன் தேசத்தில் குருவியே இருக்கக்கூடாது என்று கொடூரச் சிந்தனையுடன் செயல்பட்ட ஒருவரை அத்தியாயத்தின் இறுதியில் பார்க்கலாம். அதற்கு முன் ‘குரு’வியிடம் சில நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

சிட்டுக்குருவியின் தனித்துவமே அதன் குரல்தான். நீ உருவத்தில் எவ்வளவு சிறியவனாக இருக்கிறாய் என்று எண்ணி முடங்கிப் போகாதே. உன் குரல் எவ்வளவு உரத்து ஒலிக்கிறதோ, அவ்வளவு நீ கவனிக்கப்படுவாய். உருவத்தால் பரிகசிக்கப்படுபவனும், உரத்த குரலால் ஆளுமையாக மதித்துப் போற்றப்படுவான். ‘எப்போதும் குரலை ஓங்கி ஒலிக்கத் தயங்காதே!’ என்பது குருவியின் வாய்ஸ்நோட்.

ஒரு சிட்டுக்குருவியின் உடலில் 3000 இறகுகள் வரை இருக்கும். மணிக்கு 17 முதல் 24 மைல் வேகத்தில் பறக்கும். ஆபத்து என்றால் இன்னும்கூட வேகத்தைக் கூட்டிக் கொள்ளும் திறன் உண்டு. உருவத்தில் சிறியது, இறக்கைகள் சிறியது என்றாலும் சிட்டுக்குருவி பறக்கும் வேகம் அசாத்தியமானது. ஒரு நொடியில் அது பதினைந்து முறை இறக்கைகளை அசைத்துப் பறக்கும். எதிரியிடம் சிக்கக்கூடாது என்பதற்காக நீரிலும் வேகமாக சிறகடித்து நீந்தும் திறனும் குருவிகளுக்கு உண்டு. பொடியன். எளிதாக வீழ்த்தி விடலாம் என்று எள்ளல் செய்யாதே! என் வேகம், ஜிகா, டெரா, பெட்டா பைட் வேகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று கெத்து காட்டுகிறது சிட்டுக்குருவி.

பொதுவாகவே குருவிகள், புழு, பூச்சி, கொசு, தானியங்கள், பழங்களை விரும்பி உண்பவை. மனிதனோடு இணைந்து வாழ்ந்து பழகிப் பழகி, கிடைக்கும் பலவிதமான உணவுகளையும் உண்ணும் தன்மையோடு தம் உடலைத் தகவமைத்துக் கொண்டன. அமெரிக்காவின் டெக்ஸாஸில் வசிக்கும் குருவிகள், சுமார் 800-க்கும் மேற்பட்ட வகை உணவுகளை உண்பதாக அவை குறித்த கையேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘ருசி முக்கியமல்ல. பசியை வென்று வாழ்வதற்காகப் புசித்தலே முக்கியம்’ என்று அமைதியாக உணர்த்துகின்றன அமெரிக்கக் குருவிகள். 

குருவியின் பரம்பரைக்காரரான தூக்கணாங்குருவியாரையும் கவனிப்போம். எத்தனைப் பேர் உலகின் ஆகச்சிறந்த பறவை எஞ்ஜினியரான தூக்கணாங்குருவியின் கூட்டை, அது கூடு கட்டுவதை நேரில் பார்த்திருக்கிறீர்கள்? உலகில் அழிந்து வரும் குருவி இனத்தில் ஒன்றான Weaver Bird என்ற தூக்கணாங்குருவி, தெற்கு ஆசியாவைச் சேர்ந்தது. குறிப்பாக இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் நீர்நிலைகளைச் சுற்றிய இடத்தில் தூக்கணாங்குருவிகளைக் காணலாம். நீர்நிலைகள் பாதுகாக்கப்படாததால் இதன் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து வருகிறது.

ஈச்சமரம், கருவேலமரம், இலந்தை மரம், பனை மரம், முருங்கை மரம், தென்னை மரங்களைப் பொதுவாக தூக்கணாங்குருவி கூடுகட்டத் தேர்ந்தெடுக்கிறது. தான் கூடு கட்டும் இடத்தைச் சுற்றி நீர் இருக்கும்படி, உணவு தானியங்கள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறது. எதிரிகளின் தொல்லை இல்லாதபடி பாதுகாப்பான இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. ஆண் தூக்கணாங்குருவி மட்டுமே கூடு கட்டும். பெண்? அதை, கூட்டின் எஜமானி எனலாம். அல்லது மேனேஜர் அல்லது குவாலிட்டி கண்ட்ரோலர் என்று சொல்லலாம். ஏன்?

தூக்கணாங்குருவி கூடு கட்ட, ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தபின், தென்னை ஓலை அல்லது பனை ஓலை, கரும்பு, சோளம் போன்றவற்றின் நார்களைத் தேடி எடுத்து வருகிறது. வீட்டுக்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல கூட்டுக்கு தூக்கணாங்குருவி போடும் முதல் முடிச்சானது மிகவும் முக்கியமானது. எந்த அளவுடைய கூடு கட்டப்போகிறதோ, அதற்கேற்றாற்போல அந்த முடிச்சு பலமானதாக இருக்கும்.

ஒரு கூடு கட்டத் தேவையான நார் சேகரிப்புக்காக தூக்கணாங்குருவி சுமார் ஆயிரம் முறையாவது பறந்து சென்று வருகிறது. தோராயமாக 4000 நார்கள் ஒரு கூடு கட்டுவதற்கு அதற்குத் தேவைப்படுகின்றன. ஒரு கூடு கட்ட 18 நாள்கள் வரை எடுக்கும். அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு மட்டும் 8 நாள்கள் ஆகிறது. ஒவ்வொரு நாரையும் தன் சிறிய அலகில் வைத்து, வளைத்து, பின்னி, முடிச்சிட்டு, வளைவு நெளிவுகளோடு கூடு செய்யும் மாயவித்தை… எத்தனைக் கோடி கொடுத்தாலும் மனிதனால் கற்றுக் கொள்ளவே முடியாது.

உறுதியான, பாதுகாப்பான கூட்டை சுமார் 80% கட்டி முடித்தபின் ஆண் தூக்கணாங்குருவி, தான் இணை சேர நினைக்கும் பெண் தூக்கணாங்குருவியை இசையால் அழைக்கும். பெண் மேனேஜர் அல்லது குவாலிட்டி கண்ட்ரோலர் தூக்கணாங்குருவியானது வந்து அந்தக் கூட்டைச் சுற்றிப் பார்க்கும். அதன் வலுவைப் பரிசோதிக்கும். பிடித்திருந்தால், இங்கே கொஞ்சம் இடம் பத்தாது, அங்கே கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது போன்ற திருத்தங்களை மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பும். ஆண் தூக்கணாங்குருவி எஜமானியம்மாவின் கட்டளைகளை ஏற்று கூட்டைச் சரிசெய்து, அதற்கு வாசல் வைத்து முழுமையாகக் கட்டி முடிக்கும். அந்தக் கூடு தேறாது, சரியாகக் கட்டப்படவில்லை என்றால், பெண் மேனேஜர், ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என்று கூவாமல் கூவிவிட்டுக் கிளம்பிவிடும். அந்த ஆண், அந்தப் பருவத்தில் தனியே தன்னந்தனியே சூப் சாப் பாடியபடி பறந்து திரிய வேண்டியதுதான்.

மனித எஞ்சினியர்களுக்கெல்லாம் முன்னோடி தூக்கணாங்குருவிதான். வரவேற்பறை, படுக்கையறை, உணவு சேமிக்கும் அறை, இரண்டு வாசல்கள் உள்ளிட்டவற்றை நுட்பமாக அமைத்து கூட்டைக் கட்டி முடிக்கிறது. பின் பெண் தூக்கணாங்குருவி அங்கே குடிபுக வருகிறது. இல்லறத்தைத் தொடங்குகிறார்கள். பெண் தூக்கணாங்குருவி முட்டைகள் இடுகிறது. கூட்டினுள் இருக்கும் முட்டைகள் வேகமாக வீசும் காற்றில் கீழே விழுந்து விடக்கூடாது, ஒன்றோடு ஒன்று மோதி உடைந்துவிடக்கூடாது அல்லவா. ஆகவே களிமண்ணையும் சாணத்தையும் எடுத்துவந்து பசைபோலப் பயன்படுத்தி உள் அறையில் சமதளத்தை உருவாக்குகிறது ஆண் தூக்கணாங்குருவி. தவிர, காற்றடிக்கும் திசையைக் கணித்து அதற்கு எதிர்த்திசையில்தான் கூட்டின் வாசலையும் அமைத்துக் கொள்கிறது. முட்டைகளையும் குஞ்சுகளையும் உணவாக்கிக் கொள்ள வரும் பாம்பு, காகம் ஆகியவற்றிடம் இருந்து தப்பிக்கும் வகையிலும் கூடு பாதுகாப்பாகவே இருக்கிறது. மழைக்காலத்துக்கு முன்பே நிறைய பூச்சிகளையும் தானியங்களையும் எடுத்து வந்து கூட்டில் தனி இடத்தில் சேமிக்கிறது. களிமண்ணில் ஒட்டப்பட்ட மின்மினிப்பூச்சிகள் ஒளிர, இரவில் கூடே வெளிச்சத்தில் மினுங்கும். உலகில் முதன் முதலில்  ‘மின்(மினி) இணைப்புடன் வீடு’ கட்டிய உயிரினம் தூக்கணாங்குருவிதான்.

அவை ஆகச்சிறந்த வெதர்மேன்களும்கூட. இயற்கையை உணர்ந்த கிராமத்து அனுபவசாலிகளிடம் கேட்டால் சொல்வார்கள். மழைக்காலத்துக்கு முன்பாக தூக்கணாங்குருவி தனது கூட்டினை, கண்மாய்க்கு அருகிலிருக்கு மரங்களில் உயரமான இடத்தில் கட்டினால், அந்தப் பருவத்தில் மழை அதிகம் பெய்யும். உயரம் குறைவான இடத்தில் கட்டினால் மழை அவ்வளவாக இருக்காது. கூட்டின் பக்கவாட்டு வாசலை வடக்குப்பக்கமாகக் கட்டினால், தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்யும் என்று அர்த்தம். தெற்குப்பக்கமாகக் கட்டினால், வடகிழக்குப் பருவமழை நன்றாகப் பெய்யும் என்று அர்த்தம். ஆம், இயற்கையை மட்டுமே நம்பி வாழும் உயிரினங்களுக்கு, மனிதர்களைவிட நுண்ணுணர்வு மிக மிக அதிகம். மனிதர்கள், உயிரினங்களின் நடவடிக்கைகளையும் கவனித்துக் கணிக்கத் தெரிந்தால் போதும். பல ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். தற்காத்துக் கொள்ளலாம்.

ஆனால், குருவிகளால்தாம் மனிதர்களிடமிருந்தும், அதீத விஞ்ஞான வளர்ச்சியின் பெயரில் அவர்கள் உண்டாக்கும் அழிவுகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. அதிகபட்ச ஒலியால் உண்டாகும் மாசு, மரங்கள் அழிப்பு, உயர்ந்த கட்டடங்கள், இட நெருக்கடியால் உண்டான வாழ்விட இழப்பு, செல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சு, அதனால் உருவாகும் மலட்டுத் தன்மை – இப்படிக் குருவிகளின் அழிவுக்குப் பல காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. முன்பெல்லாம் வயல்வெளிகளில் சாணத்தைக் கொட்டி, இயற்கை உரமிட்டு விவசாயம் செய்தனர். அந்த சாணக்குவியலில் புழுக்கள் உயிர் பெற்று வரும். அவற்றைக் குருவி இனங்கள் கொத்தித் தின்னும். அதேபோல பயிர்களைப் பாதிக்கும் சிறு பூச்சிகளையும் விரும்பி உண்ணும். ஆக, குருவி போன்ற சிறு பறவைகள் விவசாயிகளின் நண்பனாகத் திகழ்ந்தன. ரசாயனப் பூச்சிக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் வயல்வெளிகளை ஆக்கிரமிக்க, புழு பூச்சிகள் அழிக்கப்ட்டன. குருவிகள் உணவின்றி நொந்தன. எண்ணிக்கையில் குறுகிப் போயின.

மனிதனின் சுயநலத்தால், உலக அளவில் 80 சதவிகிதம் சிட்டுகுருவிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிட்டுக்குருவிகளையே இதுவரை கண்டிராத 2கே கிட்ஸை உருவாக்கியிருக்கிறோம், ‘மார்ச் 20’– உலகச் சிட்டுக்குருவிகள் தினத்தை அனுசரிக்கிறோம் என்பதையெல்லாம் மனிதனின் சாதனையாகவா சொல்ல முடியும்? உங்கள் பகுதியில் காணாமல் போன குருவிகள், அதிகாலை அலாரமாக கீச் கீச் ஒலியுடன் மகிழ்ச்சியாக எழுப்பும் நிலை மீண்டும் திரும்பினால் இயற்கை உங்களை ஆசிர்வதிக்கும்!

  1. சீனாவின் தலைவர் மாவோ, தனது மக்களுக்குக் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். எலி, ஈ, கொசு, சிட்டுக்குருவி – இந்த நான்கும் சுகாதாரக்கேடு விளைவிப்பவை, நோய்களை பரப்புபவை. நான்கையும் அழித்தொழியுங்கள் என்றார். சிட்டுக்குருவிகள் வயல்களில் தானியங்களை எல்லாம் தின்று விடுகின்றன. அதனால் உணவுப்பற்றாக்குறை உண்டாகிறது என்று மாவோ தப்புக்கணக்கு போட்டார். சீனர்கள், தங்கள் தலைவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு எலி, ஈ, கொசுவோடு, சிட்டுக்குருவிகளையும் கொன்று குவித்தார்கள் (Four Pests Campaign). அதிகக் குருவிகளைக் கொன்று எடுத்து வருபவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் வெட்டுக்கிளிகள் பெருகின. பயிர்களை அழிக்கும் பூச்சியினங்கள் பெருகின. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெட்டுக்கிளிகளின் எதிரிகள் சிட்டுக்குருவிகளே என்று மாவோ உணரும்போது நிலைமை கைமீறிப் போயிருந்தது. சிட்டுக்குருவிகள் அங்கே இல்லாமலேயே போயிருந்தன. சீனாவைப் பஞ்சம் சூழ்ந்தது. அந்த உணவுப் பஞ்சத்தால் (Great Chinese Famine 1959-1961) சுமார் இரண்டு முதல் ஐந்தரைக்கோடி சீனர்கள் வரை இறந்து போயினர்.

இந்த வரலாற்றால் அறியப்படும் நீதி என்னவென்றால்…