ஐந்து ஆறைவிடப் பெரியது 06

திரு.முகில்

துபாய் ரிட்டர்ன் வடிவேலு திரைப்படக் காட்சியில் சொல்லும்போதெல்லாம் நகைச்சுவையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வருங்காலத்தில் ஒட்டகப்பால் டீ என்பது உள்ளூர்க் கடைகளில்கூட கிடைக்கலாம். ஒட்டகப்பால் காபி, மில்க்‌ஷேக், பிஸ்கட், ரோஸ்மில்க், ஒட்டகப்பால்கோவா என்று விதவிதமான உணவுகளுக்கான சந்தையும் பெருகி வளரலாம். அப்படி ஒட்டகப்பால் ஆறாக ஓடினாலும் தப்பில்லை. ஏன் என்பதை இந்தக் கட்டுரையின் பாலைவனப் பயணத்தில் ஊடே நாம் அறிந்து கொள்ளலாம்.

‘பாலைவனத்தின் கப்பல்’ என்பது ஒட்டகத்துக்கான சிறப்புப் பெயர். உடலின் அதிகபட்ச எடை 680 கிலோ. ஏழெட்டு அடி உயரம். 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும். பார்ப்பதற்கு பரபரப்பற்ற விலங்குபோலத் தோற்றமளித்தாலும் மணிக்கு 40 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது. 200 கிலோ வரை எடையைச் சுமந்து கொண்டு மணிக்கணக்கில் நடக்கக் கூடியது.

கொதிக்கும் மணலா? அதெல்லாம் விஷயமே இல்லை. 50° செல்சியஸ் வெப்பமா? பிரச்னையே இல்லை. குடிக்கத் தண்ணீரோ, உணவோ இல்லையா? அதனால் என்ன, கிடைக்குறப்போ மொத்தமாக எடுத்துக்கலாம். பாலைவனப் புயலா? எனக்கு கண் இமைகள் இரண்டு அடுக்கா இருக்குது. இமையில இருக்குற அடர்த்தியான முடி கண்ணுக்குள்ள மண்ணு போகாம பார்த்துக்கும். அப்புறம் இயற்கையாவே Whipper மாதிரி திரையும் என் கண்களைப் பாதுகாக்குது. நீங்க உங்க கண்ணை மூடி, என்னைக் கெட்டியாப் புடிச்சுக்கோங்க. அண்ணன் மண் புயலெல்லாம் பாக்க மாட்டேன். தங்கு தங்குன்னு நடந்துபோயி உங்களை போக வேண்டிய இடத்துக்குக் கொண்டு போய்ச் சேத்துடறேன். Don’t Worry Guys! இப்படித்தான் காலம் காலமாக ஒட்டகம் மனிதர்களைச் சுமந்தபடி உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறது.

ஓர் ஒட்டகம் என்பது பாலைவனத்தில் வாழத் தகுதியான உடலமைப்பு கொண்ட விலங்கு மட்டுமல்ல. பாலைவனத்தில் மனிதர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும் வாழ்க்கைக்கும் எல்லா விதங்களிலும் உதவும் ரட்சகனும்கூட. வரலாறெங்கும் மனிதனின் பெரும் பயணங்களில், ஒட்டகங்களின் குழம்படிகள் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றன. ஒட்டகங்கள் மட்டும் இல்லாதிருந்தால் ஐந்திணைகளில் பாலைவனத்தில் மனிதன் நிலைத்து வாழ்ந்திருக்கவே முடியாது.

ஒட்டகம் உணவின்றி, நீரின்றி எட்டு நாள்கள் வரை தாக்குப் பிடிக்கும். அதன் எடையில் சுமார் 22% இழந்த பின்னும் உயிர் வாழும் வலிமை கொண்டது. கடும் குளிர் காலத்தில் உணவும் நீரும் இல்லாவிட்டாலும் ஏற்கெனவே உடலில், தன் திமிலில் சேமித்து வைத்த ஆற்றலைக் கொண்டு நம்பிக்கையுடன் நாள்களைக் கடத்தும். இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் புல்லோ, கொஞ்சம் நீரோ கிடைத்தால்கூடப் போதும். தன் ஆற்றலையும் ஆயுளையும் நீட்டித்துக் கொள்ளும். மென்மையான புல்லோ, முள் நிறைந்த செடிகளோ எல்லாம் ஒட்டகத்துக்கு ஒன்றுதான். சப்புக் கொட்டிச் சாப்பிடும்.

இன்றைக்கு கிடைக்கும் புல் நாளைக்குக் கிடைக்குமா என்று தெரியாது. ஆகவே, கிடைக்கும்போது நிறைவாக உண். நீரைப் பார்க்கும்போது நிறைய குடி. (13 நிமிடங்களில் ஓர் ஒட்டகம் 135 லிட்டர் நீர் வரை குடித்துவிடும்). நல்ல தண்ணீரோ, உப்புத் தண்ணீரோ, எதுவாக இருந்தால் என்ன! தாகம் தீர வேண்டும். தாக்குப் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான். எதுவும் இல்லையா? அமைதியாக இரு. நம்பிக்கையுடன் இரு. இதுவும் கடந்து போகும்.

ஓர் ஒட்டகத்திடம் சென்று, ‘நீ இந்த உலகத்துக்கு சொல்ல நினைக்குற Message என்ன?’ என்று கேட்டால், அது தன் கீழ் தாடையை வலமும் இடமும் பெரிதாக அசைத்துச் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும். ‘Lifeல Back Up ரொம்ப முக்கியம் Dude!’

ஆம், ஒட்டகத்தின் வாழ்க்கை முழுக்க ஒரே ஒரு குறிக்கோள்தான். வருங்காலத்தின் பாதுகாப்புக்காக நிகழ்காலத்தில் சேமித்து வைப்பது. எதுவும் கிடைக்காவிட்டாலும் சேமிப்பின் பாதுகாப்பில் நிலைத்து வாழ்வது. மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஆழமான பாடம் இது.

இரட்டைத் திமில் ஒட்டகம். சீனாவிலும் மங்கோலியாவிலும் காணப்படுவது. ஆப்கனிஸ்தானுக்கு வடக்கே பாக்ட்ரியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் இது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ப்பு விலங்காக இருந்தது. ஆகவே இதற்கு ‘பாக்ட்ரியன் ஒட்டகம்’ என்ற பெயரும் உண்டு. ஒற்றைத் திமில் ஒட்டகங்களைவிட, இரட்டைத் திமில் ஒட்டகங்களுக்கு நிலைத்து வாழும் ஆற்றல் அதிகம். இந்த ஒட்டகங்கள் அதிக வெப்பநிலையில் மட்டுமல்ல, அதீதக் குளிரிலும், அதாவது -30° செல்சியஸிலும் நிலைத்து வாழக்கூடியவை. ஆம், வெயில் – மழை, நல்லது – கெட்டது, வெற்றி – தோல்வி, வளர்ச்சி – சரிவு, முன்னேற்றம் – பின்னேற்றம், புன்னகை – கண்ணீர் எல்லாம் வரும், போகும். இரட்டைத் திமில் ஒட்டகம் Bro என்ன சொல்கிறதென்றால், Keep Calm and Keep Living!

உலகப்புகழ்பெற்ற இரட்டைத் திமில் ஒட்டகம் ஒன்றின் வரலாறு இங்கே சுருக்கமாக.

1828-ம் ஆண்டில் சிரியாவில் ஏதோ ஒரு பகுதியில் பிறந்தது அந்த ஹீரோயின். 1850களில் அமெரிக்க ராணுவத்தினர் Kansas–Nebraska பிரதேசத்தில் சாலைகள் போடும் பணிக்காகத் திட்டமிட்டனர். அப்போது பொதி சுமந்து செல்ல ஒட்டகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கமாண்டர் ஒருவர் யோசனை சொல்ல, அமெரிக்காவிலிருந்து கப்பல் ஒன்று கிளம்பியது. மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து 33 ஒட்டகங்கள் ஏற்றப்பட்டன (1856). அதில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள். அதில் ஒன்று நம் ஹீரோயின். அதற்கு வைக்கப்பட்ட பெயர் டாப்சி. இன்னொன்று ஹாஜித் அலி. அதற்கு அமெரிக்கர்கள் வைத்த பெயர் Hi Jolly.

அமெரிக்காவுக்குச் சென்ற ஒட்டகங்கள் சமர்த்தாகப் பொதி சுமந்தன. கிடைத்ததை உண்டன. நிறைய நீர் குடித்து மகிழ்ந்தன. சாலை போடும் வேலை, ராணுவப் பணிகள், பிற வேலைகள் என்று ஏகத்துக்கும் உழைத்தன. ஒரு சில இறந்தும் போயின. 1864-ம் ஆண்டில் மீதி இருந்தவை வேறு பணிகளுக்காக விற்கப்பட்டன.

டாப்சியும் Hi Jolly-ம், அரிஸோனா பகுதியில் ஒரு சுரங்க வேலைக்குச் சென்றன. அங்கே சில காலம். அவற்றின் வித்தியாசமான தோற்றம், ஒட்டகமறியா அமெரிக்கர்களை வாய்பிளந்து பார்க்கச் செய்தது. ஆகவே, ரிங்லிங் பிரதர்ஸ் என்ற சர்க்கஸ் கம்பெனியினர், டாப்சியை வாங்கினர். ஊர் ஊராக, சாலை சாலையாக அழைத்துச் சென்று வித்தை காட்டினர். அப்படியாக அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்த டாப்சிக்கு, ஃபாக்ஸ் நிறுவனத்தினர் தயாரித்த சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இப்படியாக அமெரிக்கர்களின் மனத்தில் இடம்பிடித்த டாப்சி, ரயில் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டது. அதன் உடன் பயணம் செய்த Hi Jolly, மரித்துப் போனது. அது புதைக்கப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டது. விபத்தில் படு காயங்களுடன் பிழைத்த டாப்சி, மீண்டு வர கொஞ்ச காலம் பிடித்தது. ஃபாக்ஸ் நிறுவனம் மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு டாப்சியை விற்றது. பின்பு லாஸ் ஏஞ்சல்ஸ் மிருகக்காட்சி சாலைக்கு டாப்சி மாற்றப்பட்டது. 1934-ம் ஆண்டில் தன் 81-வது டாப்சி இறக்கும் வரையில் அங்கிருந்தபடியே மக்களைச் சந்தித்து மகிழ்ந்தது.

டாப்சியின் மரணச் செய்தி, பத்திரிகைகளில் இடம்பிடித்தது. அதன் அஸ்தி,  Hi Jolly தோழி ஒட்டகம் புதைக்கப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டது. ராணுவ வீராங்கனை, சாலைப் பணியாளர், வித்தை காட்டுபவர், சினிமா நட்சத்திரம், சர்க்கஸ் கலைஞர், மிருகக்காட்சி சாலையின் சூப்பர் ஸ்டார் என்று பல அவதாரங்கள் எடுத்த டாப்சியே, அமெரிக்காவில் அதிகக் காலம் வாழ்ந்த கடைசி ஒட்டகம். ஆம், நட்சத்திர மனிதர்களுக்கு நிகரான புகழுடன் சில ஒட்டகங்களும் உலகில் வாழ்ந்து மடிந்திருக்கின்றன.

வரலாறெங்கும் குருதி கொப்பளிக்க எழுதப்பட்டிருக்கும் பல போர்களில் ஒட்டகங்களும் உறுதி கொண்ட நெஞ்சோடு பங்கேற்றிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இரண்டு உலகப் போர்களிலும் ஒட்டகங்களின் வீரதீரச் செயல்களை அடிக்கோடிட்டிப் பேசியே தீர வேண்டும். வீரர்களைச் சுமப்பது தொடங்கி, உணவுப் பொருள்கள், வெடி மருந்துகள், ஆயுதங்கள், மருந்துகள் என்று பலவற்றையும் சுமந்து திரிந்தன ஒட்டகங்கள். குண்டு வெடித்தால் குதிரைகள் மிரள, ஒட்டகங்களோ ‘என்ன ஆனாலும் பார்த்துக்கலாம் மக்கா’ என்று நிமிர்ந்த நன்னடையுடன் முன்னேறிச் சென்றன. ஒட்டகங்கள் தம் கால்களால் பலமாக ‘கிக்’ செய்ய, எதிரிகள் விக்கித்து நின்றனர். மிரண்டு ஓடினர். நேச நாட்டு ஒட்டகங்களும் அச்சு நாட்டு ஒட்டகங்களும் எதிர் எதிரே மோதிக் கொண்ட சரித்திரமும் உண்டு. பிரிட்டிஷாரே ஒட்டகங்களை முதல் உலகப்போரில் அதிகம் பயன்படுத்தியாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. முதல் உலகப்போரில் மட்டும் பிரிட்டிஷார் அணியில் போராடிய சுமார் 1,20,000 ஒட்டகங்கள் உயிர் நீத்திருக்கின்றன. ஆம், எந்த நூற்றாண்டுக்கும் பொருந்தும் ஒரே திருவாசகம்,

‘இந்த உலகில் நிகழும் மற்ற உயிர்களுக்கு நிகழும் பேரழிவுகளுக்கெல்லாம் ஒரே ஒரு காரணம்தான், மனிதனின் சுயநலம்!’

அதற்காக ஒட்டகம் மீது மனிதர்களுக்குப் பாசமே இல்லையென்று ஒரேடியாகச் சொல்லிவிட முடியாது. ஆப்பிரிக்கர்களும் அரேபியர்களும் ஏனைய பாலைவன தேசத்தவர்களும் ஒட்டகம் வளர்ப்பதில் உன்னதமானவர்களே. இந்தியாவில் சொல்ல வேண்டுமென்றால் ராஜஸ்தானின் ரைக்கா இன மக்கள், பல நூற்றாண்டுகளாக ஒட்டகத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். ஒரு காலத்தில் ராஜஸ்தான் ஒட்டகங்களின் சொர்க்கமாக இருக்கக் காரணம் இவர்களே. இன்றைக்கும் ராஜஸ்தானில் ஒட்டகங்கள் எஞ்சியிருக்கக் காரணமும் இவர்களே.

பல மன்னர்களுக்கு ஒட்டகப் படைகளை நிர்வகித்த ரைக்கா மக்களுக்குத் தெரிந்த ஒரே தொழில் ஒட்டக வளர்ப்புதான். அதன் பால், அதைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்கள், ஒட்டக ரோமத்தைக் கொண்டு தயாரிக்கும் கம்பளி விற்பனை, ஒட்டகக் கன்று விற்பனை போன்றவையே அவர்களின் வாழ்வாதாரம்.

உயிரே போனாலும் பெண் கன்றுகளை விற்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்களது ஒட்டகப் பாசம் பெரியது. ஒட்டகத்தின் உடலில் ரோமத்தைச் செதுக்கி அதை ஓவியமாக வரையும் திறன், ரைக்கா மக்களுக்கு மட்டுமே உண்டு. சிறு கையசைவுகள், தலையசைவு மூலம் ஒட்டகங்களுடன் பேசவும் செய்கிறார்கள். எந்த ஒரு ரைக்காவுடனும் ஒட்டகம் பாசத்துடனேயே பழகுகிறது. அந்த அன்பு அதன் மரபணுவிலேயே நூற்றாண்டுகளாகப் பதிந்த விஷயம் என்றே சொல்லலாம்.

மேற்சொன்னவை எல்லாம் பழங்கதையாகிக் கொண்டிருப்பதுதான் இன்றைய நிதர்சனம். ஒட்டகங்கள் ராஜஸ்தானின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்ட பிறகு, 2015-ம் ஆண்டில் ஒட்டகங்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு, வனத்துறையினரும் பிற மக்களும் ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலங்களை பெருமளவு அபகரித்த பிறகு, இந்திய ஒட்டகங்களும், ரைக்கா இன மக்களும் ‘அழியும் நிலை’ உயிரினங்களாக மாறி விட்டன(ர்).  இங்கே ஒரு புள்ளிவிபரம். 1980களில் இந்தியாவில் சுமார் 15 லட்சம் ஒட்டகங்கள் இருந்தன.

2012-ல் கடைசியாக கணக்கீடு செய்தபோது அவை இரண்டரை லட்சம் ஒட்டகங்களாகச் சுருங்கியிருந்தன. இப்போது இன்னும் குறைந்திருக்கிறது. ஒட்டகங்கள் மீதான கட்டுப்பாடுகள் ரைக்காக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கின்றன. ரைக்காக்கள் ஒடுக்கப்படுவதால் ஒட்டகங்களின் எண்ணிக்கையும் குறைகின்றன.

புதிய தலைமுறை ரைக்கா இன இளைஞர்கள், தென்னிந்தியாவுக்கு வேலை தேடி நகர்கின்றனர். ‘எங்களின் அடையாளமே ஒட்டகம் மேய்ப்பவர்கள் என்பதுதான். நாங்கள் வளர்த்த ஒட்டகங்களைப் பிரிய மனமில்லை என்பதால் வருமானமே இன்றி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். எங்கள் அடுத்த தலைமுறையினர் இனியும் ஒட்டகங்களை நம்பிப் பிழைக்க முடியாது என்று கூலி வேலைக்குச் செல்கின்றனர். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒட்டகங்களுக்காகவே வாழ்ந்தவர்கள் நாங்கள். வருங்காலத்தில் ரைக்கா இனப் பிள்ளைகளே ஒட்டகங்களைப் புகைப்படங்களில் மட்டுமே பார்க்கும் நிலை வந்துவிடும்போல.’ இவை ரைக்கா இனப் பெரியவர்களின் மன வேதனை.

இல்சே கோஹ்லர்-ரோல்லேஃப்சன் (Ilse Köhler-Rollefson) என்பவர் Camel Karma என்ற நூலை எழுதியவர். ஜெர்மானியர். கால்நடை மருத்துவர். இந்திய ஒட்டகங்கள் மீது ரைக்காக்களுக்கு நிகராகப் பாசம் கொண்டவர். அவர் சில தன்னார்வலர்களுடன் இணைந்து ராஜஸ்தான் ஒட்டகங்களையும், ரைக்கா மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒட்டகப்பால் மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை மதிப்புக் கூட்டி இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் சந்தைப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் ரைக்காகளும் ஒட்டங்களும் மீளும் நிலை உருவாகலாம். காலம் பதில் சொல்லும்.

கூடுதல் தகவல். ஒட்டகப்பால் ஒன்றும் சாதாரணமானதல்ல. பசு அளவுக்கு ஒட்டகம் அதிகம் பால் தருவதில்லை. அதில் கொழுப்புச் சத்து குறைவு. விலை அதிகம். ஆனால், இதில் லாக்டோஸின் அளவு குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் அருந்துவதற்கு ஏற்றது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வைட்டமின் B மற்றும் C, இரும்புச்சத்து, துத்தநாகம் போன்றவையும் உள்ளன. ஒட்டகப்பால் பவுடர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தாராளமாகக் கிடைக்கிறது. வருங்காலத்தில் இந்தியாவிலும் ஒட்டகப்பால் பொருள்கள் சந்தையெங்கும் நிரம்பலாம்.

முதல் பத்தியில் சொன்ன விஷயம்தான். வருங்காலத்தில் ஒட்டகப்பால் டீ, உள்ளூரில் கிடைக்கிறதென்றால் வடிவேலுவை நினைத்துச் சிரிக்க வேண்டாம். ராஜஸ்தான் ஒட்டகங்களை வாழவைக்க நம்மால் ஆன நற்செயல் என்று சூடாக ஒட்டகப்பால் டீயை உறிஞ்சிக் குடிக்கலாம்.=