வெற்றி நமதே – 7
செவி வழித் தடையைத் தன் தனி வழி(லி)யில் வென்ற திரு.ரஞ்சித் IAS அவர்கள்
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை
‘‘ஒழுக்கங் கெட்டு நடக்கலாமாடான்னு’’ நான் School-ல படிக்கிற காலத்துல, என்னோட தமிழாசிரியர் சேட்டை பண்ற பசங்களோட காதைப் பிடிச்சு திருகிகிட்டே சொல்லுவார்.
நாங்களும் காது வலி பொறுக்காம ‘‘ஐயா, இனிமே ஒழுங்கா இருப்போம்னு’’ கெஞ்சுவோம். காதை விட்டுட்டு கடைசியா சொல்லுவாரு.
‘‘ஒழுக்கம் தான்டா உயர்வைத் தரும்’’ என்று. எவ்வளவு நிதர்சனமான உண்மை. வாழ்க்கையில ெஜயிக்கிறதுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் இந்த discipline, இங்க discipline என்பது, நல்லொழுக்கம் என்ற அடிப்படையில் இல்ல நான் சொல்ல வர்றது.
ஒழுக்கம் ரொம்ப முக்கியம் தான் என்றாலும் நான் சொல்ல வர்ற discipline ஒழுங்கு. செய்யும் செயலில் உள்ள ஒழுங்கோடு கூடிய அர்ப்பணிப்பு (dedication and discipline).
உலக வரலாற்றுல எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், ஒழுங்கும், அர்ப்பணிப்பும் இல்லாம ஒரு வெற்றியாளன் உருவாகியிருக்க முடியாது.
ஆனால், வாழ்க்கையில நமக்கெல்லாம் ரொம்ப கஷ்டமான விஷயம், இந்த discipline-ஐ கடைப்பிடிக்கிறது. ஏன்னா மனிச மனசு ஒரு குரங்கு மாதிரி. நாம எப்பவெல்லாம் அத ஒழுங்கு பண்ணி காரியம் சாதிக்க நினைக்கிறோமோ, அப்பதான் அது கூடுதல் indiscipline ஆகும்.
அதனால தான் நாம எடுக்கிற New Year சபதம் ஒரு வாரத்துக்கு மேல தாக்குப்பிடிக்க மாட்டேங்குது. ஒவ்வொரு New Year-க்கும் இனிமேல காலைல எழுந்து Walking போகணும், Gym போகணும்னு சபதமெல்லாம் எடுப்போம். புதுசா Shoe-ம் T-shirt-ம் வாங்கினது தான் மிச்சமா இருக்கும். நம்மளில் பலரும் School/College போகும்போது, daily routine follow பண்றதுக்கு ஒரு time table போடுவோம். பல் தேய்க்கிறதுல இருந்து Bathroom போற வரை. ஆனா, அது பாட்டுக்கு ஒரு மூலைல யாருமில்லாத அனாதை மாதிரி Fan காத்துக்கு சும்மா சுத்திட்டு இருக்கும்.
இப்படி நாம செய்யுற ஒவ்வொரு செயல்லயும் ஒழுங்கோ, அர்ப்பணிப்போ இல்லேன்னா வெற்றிங்கிறது எட்டாக் கனியாகவே போயிடும்.
அதனால எப்ப ஒரு மனிசன் தன்னோட மனசை ஒழுங்குபடுத்தி, எடுத்த காரியத்துல அர்ப்பணிப்போட இருக்கானோ, அப்ப தொடங்கும் அவனோட வெற்றி.
நாம சந்திக்கிற நிறைய பேரு தன்னோட லட்சியத்துல வெற்றி பெற தகுதி இருந்தாலும், discipline இல்லாததால அவங்க எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது.
உதாரணத்துக்கு, மதுரையிலிருந்து இமயமலைக்கு நடந்து போயி எவரெஸ்டை தொடறது தான் லட்சியம்னு வச்சுக்கோங்க. அந்த லட்சியத்தை நோக்கிய பயணத்துல ஒழுங்கும், அர்ப்பணிப்பும் இல்லேன்னா அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாம போயிடும். இங்க நாம ஒழுங்குன்னு சொல்றது daily ஒரு 50 km. ஆவது regular-ஆ நடக்க திட்டமிடுறதும், அந்த 50 km. நடக்க dedicated-ஆ follow பண்றதும் தான் ஒருவனை வெற்றியாளனாக்கும். குரங்கிலிருந்து தான் மனிசன் வந்தான்னு நம்ம மனசை வைச்சே correct-ஆ கண்டுபிடிச்சிடலாம். ஏன்னா முன்னாடியே சொன்ன மாதிரி ஒழுங்கை மீறத்தான் மனசு ஆசைப்படும். அதனால குதிரைக்கு கடிவாளம் போட்டு கட்டுற மாதிரி, குரங்கு போல அலையுற மனசை ஒழுங்குன்ற கடிவாளத்தைப் போட்டு கட்டுறவன் தான் வாழ்க்கையில சாதனை படைக்க முடியும்.
அப்படி ஒரு சாதனையாளனின் கதை தான் சொல்லப் போறேன். சுற்றி நின்ற சமூகம் ஏளனமாய் பேசிய போதும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் (ஏன்னா அவனால காதுல வாங்குற திறன் இல்லை) தனது dedicated discipline-ஆல் சரித்திரம் படைத்த சாதனையாளன்.
நம்மள பத்தி மத்தவங்க சொல்றத நம்பக்கூடாதுன்னு உலகத்தையே நம்பவச்ச ஆள்தான் நம்ம கதை(தா)நாயகன் ரஞ்சித்.
பிறப்பிலேயே செவித்திறன் இல்லாமல் பிறந்த புண்ணியவான். ஏன்னா கண்டவன் பேச்சையும் கேட்க வேண்டியதில்லையே! ஆனா என்ன, சுத்தியிருந்த சமூகம், ‘‘பெத்தவங்க என்ன பாவம் செஞ்சாங்களோன்னு’’ ஏளனமா பேசறத இவனால கேட்க முடியலேன்னாலும், அவனோட அம்மா, அப்பா கேட்டப்போ, ஒருவேளை அவங்களுக்கு தோன்றியிருக்கலாம். இதையெல்லாம் கேட்கிறதுக்கு நமக்கு செவித்திறன் இல்லாம போயிருக்கலாம்னு!
சாதாரண மனுசனுடைய அம்மாவா இருந்தா OK… நம்ம சாதனை நாயகனோட அம்மாவாச்சே… அதனால கவிப்பேரரசு வைரமுத்து சொல்ற மாதிரி,
‘‘உலகம் முன்னால் சென்றால் கடிக்கும்
பின்னால் சென்றால் உதைக்கும்
உலகின் வாயை மூடுதல் கடினம்
உன் காதுகளை மூடுதல் சுலபம்’’
அப்படின்னு எதையும் காதுல வாங்காம, மகாபாரதத்துல கணவனுக்காக கண்ணைக் கட்டின காந்தாரி மாதிரி, மகனுக்காக காதைக் கட்டினாங்கன்னு வேணும்னா சொல்லலாம்.
‘எதையும் கத்துக்க லாயக்கில்லாத முட்டாள் என்று ஆசிரியரால் முத்திரைக் குத்தப்பட்ட சிறுவனை எடிசனாக்கிய Nancy Edison-ஐப் போலத்தான் நம்ம ரஞ்சித்தோட அம்மா அமிர்தவள்ளியும்!’
நம்மாளுக்கு பிறப்பிலேயே செவித்திறன் இல்லேன்னாலும், ஒன்றரை வயசுல ஒரு தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும் போது, Cool-ஆ பல்லக் காட்டிட்டு இருந்தப்போதான், அந்தப் பிரச்சினை இருக்குமோன்னு பயம் வந்துச்சு. உடனே, சென்னையில அவனோட மாமா உதவியோட ஒரு Audiologist-ஐ பாத்தப்போதான் அது confirm ஆச்சு. செவித்திறன் இல்லாததால இனிமேல் அவனால வாழ்க்கையிலேயே பேசமுடியாது. அதனால கோவையில ஒரு சிறப்புப் பள்ளி இருக்கு, அங்க போயி Sign language (சைகை மொழி) படிக்க வைங்கன்னு ஒரு இடியைத் தூக்கிப் போட்டார்.
ஈரோட்டுல, எல்லப்பாளையம் கிராமத்துல உள்ள மிகச்சாதாரண விவசாய குடும்பம். அப்பா தர்மலிங்கம் ஆவின்ல 1800 ரூபாய் சம்பளத்துல வேலை பாக்குற சாமான்ய மனிதர். ரெண்டு ஆண் பிள்ளைகள். மூத்த ஆள் அருண் பிரசாத். கடைக்குட்டிச் சிங்கம்தான் நம்ம ஆளு. இப்படிப்பட்ட backgroundல எப்படி கோயம்புத்தூருக்கு போறதுன்னு யோசிச்சாங்க.
இந்த கிராமத்து செட்அப்ல எங்கடா சுத்தியிருந்த கருத்து கந்தசாமிகளை காணலைன்னு, நீங்க யோசிக்கிற mind voice எனக்கு கேட்குது. Don’t worry சினிமாக்கதை மாதிரிதான். சுத்தியிருந்த சொந்தக்காரங்க ஆறுதல் சொல்றேன்னு கருத்து சொல்ல ஆரம்பிச்சாங்க.
‘‘என்ன பாவம் பண்ணீங்களோ, இப்படி ஒரு புள்ள பிறந்திருக்குன்னு’’ கொஞ்ச பேர்; ‘‘கஷ்டப்படுற சூழ்நிலைல கோயம்புத்தூர்ல போய் படிக்க வச்சு என்ன கலெக்டராவா ஆக்கப் போறீங்க, பேசாம இங்கயே ஏதாவது ஒரு Government Schoolல படிக்க வைங்கன்னு’’ கொஞ்ச பேர்.
இதுல highlight advice இதுதான்… ‘பேசாம தோட்டத்துல மாடு, கண்ணு மேய்க்க விடுங்க, அவனுக்கும் பிரயோஜனமா இருக்கும்னு.’
‘‘மாடு மேய்த்தல் தவம்’’னு வைரமுத்து எழுதுனத படிச்ச ஆளுங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
உலகத்தோட ஏளனப் பேச்சுல, சாதாரண அம்மாவா இருந்தா அழுதிட்டே, கவலைப்பட்டுட்டு ஒரு மூலைல
உக்காந்திருப்பாங்க. ஆனா இவங்க என் பிள்ளைய சமூகத்துக்கு முன்னாடி தூக்கி நிறுத்துறதுன்னு ஒரு முடிவு பண்ணாங்க.
‘ஒரு தாயின் சபதம்’.
பத்து மாசம் அம்மா பட்ட மொத்த வேதனையையும் installmentல ஆயுசு full-ஆ அனுபவிக்கிற ஆள்கள்தான் அப்பாக்கள். இந்தக் கதையிலயும் அப்பாவோட Role அதுதான்றதுனால அத silent role-ஆ வச்சுக்கலாம்.
அப்படி அவனை சமூகத்துக்கு முன்னாடி நிப்பாட்ட அவனோட அப்பா, அம்மா அன்னைக்கு எடுத்த முடிவுதான், இன்னைக்கு அவனை சாதனையாளனா நம்ம முன்னாடி நிறுத்தியிருக்கு. அது என்னா முடிவுன்னா…
மூத்த பையனை அவனோட அம்மாயி (அம்மாவின் அம்மா) வீட்டுல விட்டு படிக்க வைக்கிறது. அப்பா ஈரோட்ல continue பண்றது. நம்மாளும், அம்மாவும் கோவைல போயி தங்கி, அவன special school-ல படிக்க வைக்கிறதுன்னு ஒரு முடிவு எடுத்தாங்க.
கோவையில போனப்பதான் புரிஞ்சது, அந்த special school எல்லா மாற்றுத் திறனாளிகளுக்கும் உள்ள பொதுவான ஒரு பள்ளியின்னு. ஒரு எட்டு மாசம் அங்க இருந்துட்டும் பெரிசா ஒரு பிரயோஜனமும் இல்ல.
அப்பதான் இருட்டான வாழ்க்கையில சின்ன வெளிச்சம் போல சக்தி நிறுவனத்தோட ஆதரவுல, மதிப்பிற்குரிய கிறிஸ்டோபர் அவர்கள் வழிகாட்டல்ல Kasthurba Gandhi Oral School for Hearing Impaired (KOSHI)ன்னு ஒரு school செவித்திறனற்ற மாணவர்களுக்காகவே தொடங்கப்பட்டது.
அந்தப் பள்ளில சேர்ந்த உடனே நம்ம பழைய சிவாஜி படம் ‘சரஸ்வதி சபதத்’தில வர மாதிரி சரஸ்வதி அருளால
‘அகர முதல எழுத்தெல்லாம்
அறிய வைத்தாய் தேவி…’ன்னு
Magic போட்ட மாதிரி ஒன்னும் பேச ஆரம்பிக்கல. ஆனால் செவித்திறனில்லாத, ‘அ’னாகூட சொல்ல முடியாத ஒரு சிறுவனை தமிழிலேயே IAS interview attend பண்ண வச்சு இந்திய ஆட்சிப் பணியில அமர்த்தியதுக்கு பின்னால இருந்த அந்த அற்புத Magic வேற ஒண்ணும் இல்ல, அந்த அம்மாவும் மகனும் எடுத்த காரியத்த செயல்படுத்துறதுல இருந்த ஒழுங்கும், அர்ப்பணிப்பும் தான்.
இந்த வெற்றில அந்த KOSHI School பங்களிப்பையும் மறுக்க முடியாது. அவனுக்கு ஒவ்வொரு தமிழ் எழுத்தோட ஓசையும் இப்படித்தான் இருக்கும்னு அவன உணரவச்சு, ‘அ’வை உணர வைக்க தொண்டைல கைவச்சும் ‘ம்’ஐ உணர வைக்க மூக்கில கைவச்சும், ‘பா’வை உணர வைக்க கையில பேப்பரவச்சு பறக்கவிட்டும், தமிழில் இருக்கிற 247 எழுத்துக்களையும் ஓசையையும் படிச்சு அதுக்கப்புறம் அம்மா, அப்பான்னு வார்த்தைகளைப் படிச்சு அதுக்கப்புறம் வாக்கியங்களைப் படிச்சு, இலக்கணம் படிச்சு, இலக்கியம் படிச்சுன்னு
ஸ்…ஸ்… அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதா…?
KOSHI School-ல சேர்ந்த புதுசுல கிட்டத் தட்ட எட்டு மாசம் ஒன்னும் improvement இல்லாம இருந்ததால அவனோட அப்பா, அம்மாவுக்கு வருத்தம் இருந்துச்சு. ஆனால் அதுக்கப்புறம் முதல்முறையா ஆ…ப்..பி…ள்ன்னு சொன்னப்போ அம்மான்னு கேட்க ஆசைப்பட்ட தாய் ஆப்பிள்னு கேட்டு பரமானந்தம் அடைஞ்சாங்க. Schoolல 9-4 மணிவரை ஓசையும் வார்த்தையும் சொல்லிக் கொடுக்க, வீட்ல மத்த நேரங்கள்ல வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆமா… தினந்தோறும் தான் செய்ற அனைத்து செயலையும் பொறுமையா உதட்டை அசைத்து அவனுக்கு புரிய வச்சாங்க.
உதாரணத்துக்கு சமைக்கும் போது அவன கூட இருக்க வச்சு, இது அ..டு..ப்..பு,
ச..ட்..டி, எ..ண்..ணெய்.., க..டு..குன்னு தொடங்கி பஸ்ல போகும் போது இது க..ண்..ட…க்..ட..ர்,
டி..க்..கெ..ட்னு ஒவ்வொரு நாளும் சமூகச் சூழலுக்குத் தேவையான வார்த்தையை எல்லாம் உதட்டசைவிலேயே புரிய வச்சாங்க. இந்த ஒழுங்குமுறைப் பாடம் ஒரு நாள், ஒரு வருஷம் இல்ல… கிட்டத்தட்ட 10-12 வருஷம்.
பஸ்ல போறப்ப இந்தம்மா சொல்றதப் பாத்து, இந்தம்மாவுக்கு எதுவும் problem-ஆ இருக்குமோன்னு பாத்து ஏளனமா சிரிச்சவங்கெல்லாம் இருக்காங்க. ஒரு சமயம் இழவு (சாவு) வீட்டுக்கு அவன கூட்டிட்டு போயி இதுதான் பிணம்னு காண்பிச்சு கொடுத்த கொடுமைலாம் நடந்திருக்கு.
அம்மாவோட அர்ப்பணிப்பு, அப்பாவோட அரவணைப்பு அம்மா கிழிச்சக் கோட்டை தாண்டாத ஒரு discipline, அவனுடைய ஒழுங்கான பயிற்சி மற்றும் மன உறுதிக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது. அவன் எட்டாவது படிக்கும்போது Cochlear implant surgeryயைப் பத்தி கேள்விப்படுறாங்க. அதாவது இந்த Operation பண்ணா அவனுக்கு செவி கேட்கும் திறன் வந்துடும். ஆனால் அதுக்கு 7 லட்சம் வேணும். கொஞ்ச நஞ்சம் இருந்த விவசாய நிலத்தையும் வித்து அதையும் செஞ்சாங்க.
‘அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்’னு சும்மாவா சொல்லுச்சு ஒளவைப்பாட்டி.
சோகம் மட்டுமே குடியிருந்த வீட்ல நம்பிக்கையோட நிழல் விழுது. செவி கேட்கும் திறனைப் பெறுகிறான் அருமை மகன். அப்படியே விட்றல அவன… Special schoolல இருந்து normal schoolக்கு மாத்துறாங்க.
‘இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்றான்பா’ என்ற மாதிரி, அம்மா சொல்றது அப்படியே செய்யுது அந்தப்புள்ளை. Normal school போனப்பதான் புது சிக்கல் ஆரம்பிக்குது. அதாவது, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு English படிக்கிறதுக்கு விலக்கு இருக்கு. ஆனால், normal schoolல English Subject கட்டாயம். தமிழ்ப்பால் மட்டுமே குடிச்சு வளர்ந்த பிள்ளைக்கு English பால் குடிக்க வேண்டிய கட்டாயம். No problemம்னு அந்தப்புண்ணியவதியும் ABCDன்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க, நம்மாளும் அம்மாட்ட கையக் கட்டி மறுபடியும் படிக்க ஆரம்பிச்சுட்டான்.
என்னது… மறுபடியும் முதல்ல இருந்தான்னு தலை சுத்துதா…
தமிழில் 247 எழுத்து படிச்ச ஆளுக்கு English-ல
26 எழுத்து ஜூஜூபி மாதிரிதான். அதோட இப்போ செவித்திறனும் வந்துருச்சு. ரெண்டே வருஷத்துல English-ஐயும் பயபுள்ள கத்துகிச்சு.
பெத்தாங்களா… செஞ்சாங்களா… இருந்தாலும் இவனுடைய பேச்சையும் செயலையும் பாத்து புது school புள்ளைங்க கிண்டலடிக்க, அம்மாட்ட வந்து அழுவுது அந்தப் பிள்ளை. இந்த குறை உன் தப்பு இல்ல. அதுமட்டுமில்ல, நம்மள கேலி பண்றவனைப் பார்த்து அழுதிட்டு இருந்தோம்னா, வாழ்க்கை பூராவும் அழுதிட்டு தான் இருக்கணும்னு அவனோட அம்மா கொடுத்த தைரியத்துல, ‘‘போடா போடா புண்ணாக்கு’’ன்னு பாட்டு பாடிட்டே 10th கிளாஸ்ல 472 மார்க் எடுத்து சாதனை பண்ணாரு நம்மாளு.
நமக்கெல்லாம் இப்படி ஒரு பிரச்சனை இருந்தா எப்படிடா school போகாம இருக்குறதுன்னு தான் plan பண்ணுவோம் ஆனால், நம்மாள் 11வதுல அடுத்த ஒரு சிக்சர், Physics,
Chemistry, Biology, Maths எடுத்து படிக்கிறாப்ல.
மறுபடியும் கண்ணைக் கட்டுதா… இந்த முறை அண்ணனும் சேந்துட்டாப்ல இந்த ஆட்டத்துல. குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கற மாதிரி தம்பிக்கு சொல்லிக் குடுத்து 12வது Examல மாற்றுத்திறனாளி மாணவர்கள்ல மாநிலத்துலயே 1117 மார்க் எடுத்து முதலிடம். அன்னைக்கு cm ஜெயலலித்தாம்மா கூப்பிட்டு கோட்டைல வச்சு பாராட்டி அனுப்புறாங்க.
நம்மாளு வாழ்க்கையே ஒரு Challenge ஆனதால வாழ்க்கைல எல்லாதையுமே
Challenge ஆவே பண்ண ஆசைப்பட்டார். 12வது முடிச்சிட்டு கோயம்பத்தூர் psg Techல BE Mechanical.
முடியல…. முடியல… disciplineக்கும், dedicationக்கும் பேர் போன நம்மாளுக்கு Engineering படிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமா இல்ல. 80% மேல மார்க் எடுத்து BE முடிச்சு, இனிமே வேலைக்கு போய் Settle ஆயிடலாம்னு நினைச்சா, Placementக்கு வர்ற ஒவ்வொருத்தனும் அவனோட குறையைச் சொல்லி Reject பண்ணிடறாங்க. அவன விட கொஞ்சமா மார்க் எடுத்தவனுக்கெல்லாம் லட்சக் கணக்கான சம்பளத்துல வேலை.
அப்பவும் அசரலயே! தன்னைப் படிக்க வச்ச சக்தி group கம்பனிலேயே 10,000 ரூபாய் சம்பளத்துல வேலையைத் தொடங்கினார் நம்ம ஆளு. போராடி போராடி வந்தவனுக்கு சும்மா உட்கார புடிக்கல. மனசு, நல்ல வேலைக்குப் போன்னு தந்தி அடிக்க, அந்த நேரத்துல Doctor
படிச்சு முடிச்சு, Chennaiல வேலை பாக்குற அண்ணன் சொல்றான் உன் Comfort Zoneல இருந்து வெளில வா… ஏதாவது ஒன்ன இழந்தா தான் ஒன்ன அடைய முடியும்னு. அன்னைக்கு night-ஏ Chennaiக்கு அப்பீட்… சென்னைல இருந்து Bank Examக்கு Prepare பண்ணி 17 முறை எழுதி தோத்துப் போனாப்ல. கஜினி ரஞ்சித்! சென்னைல ஒரு Libraryல இருந்து Bank Examக்கு Prepare பண்ணிட்டு இருந்ததால அங்க வந்த upsc படிக்கிற நண்பர்கள் பழக்கத்துல தான் தெரியுது, செவித்திறன் குறைபாடுள்ளவர்களும் IAS எழுதலாம்னு.
கடவுள் இருக்கான் குமாரு, மாதிரி இருந்துச்சு அவருக்கு இருந்தாலும் நம்மால முடியுமான்னு ஒரு தயக்கம். நம்ம Potential என்னான்னு try பண்ணாத்தான் தெரியும்னு மனசு சொல்ல ‘நாம கஷ்டப்படாம இருக்க கஷ்டப்படணும்னு’ IAS பரிட்சைக்கு இஷ்டப்பட்டு படிக்க ஆரம்பிக்கிறார். Daily ஒரு 12-14 மணி நேரம்.
Time table போட்டு Timetableஏ தோத்துப் போற அளவுக்கு disciplineஆ அதை follow பண்ணி படிக்க, IAS Examஏ அவர் dedicationக்கு முன்னாடி மண்டிபோட 2021ல் IAS பாஸ் பன்றார் நம்மாளு.,
என்ன பாவம் பண்ணீங்கன்னு கேட்ட சமூகத்துக்கு முன்னாடி அவரோட அம்மா, அப்பாவை ‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்க’ வச்சு, நம்மள பத்தி மத்தவங்க சொல்றத நம்பக் கூடாதுன்னு நம்ப வச்ச புண்ணியவான்.
‘ஒழுக்கம் தான்டா உயர்வைத் தரும்’னு என்னோட தமிழாசிரியர் சொன்ன மாதிரி தன்னோட ஒழுங்காலும், அர்ப்பணிப்பாலும் சரித்தரம் படைத்த அந்த சாதனையாளனைப் போல நம்மளும் discipline ஆவும் dedication ஆவும் நம்ம லட்சியத்தை நோக்கி பயணம் செய்தால் வெற்றி நமதே! l