வெற்றி நமதே – 8

துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துல ஒரு பாட்டு…

‘‘தேடல் உள்ள உயிர்களுக்கே

தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை

வாழ்வில் ருசியிருக்கும்

பாடல் போல தேடல் கூட

ஒரு சுகமே…’’

மூனே வரியில வாழ்க்கையோட மொத்த தத்துவத்தையும் அடக்குன ஒரு பாட்டு.

உண்மைதான் மக்களே! தேடல் மட்டும் இல்லேன்னா, இப்பவும் மனிசன் குரங்காத்தான் அலைஞ்சிருப்பான். காட்டுவாசியில இருந்து கம்ப்யூட்டர்வாசி ஆனவரைக்கும் மனிசன் முன்னேறிட்ேட இருக்கான்னா அதுக்குக் காரணம் அவனுக்குள்ள இருக்கிற தேடல்.

குரங்கைப் போல மரத்துக்கு மரம் தாவிகிட்டு இருந்த மனுசன், ரெண்டு காலில எந்திரிச்சு நடந்து ஆதிவாசியா அலைஞ்சு திரிஞ்சு வாழ்க்கையைத் தேடத் தொடங்குனப்ப ஒரு 12000 வருஷத்துக்கு முன்னாடித்தான் விவசாயத்தைக் கண்டுபிடிச்சான்.

எதையெல்லாம் விவசாயம் பண்ணலாம் என தேடித்தேடித்தான் ஒரு 7000 வருஷத்துக்கு முன்னாடி அரிசியைக் கண்டுபிடிச்சான். அரிசிய அப்படியே சாப்பிட தொடங்கிருந்தான்னா இன்னைக்கு வரை அரிசிய தான் தின்றுக்கனும். அதை சோறாக்குறது எப்படின்னு தேடி அப்புறம் அதை மாவாக்கி, இட்லியாக்கி, மினி இட்லியாக்கி, தோசையாக்கி, மசால் தோசையாக்கி இப்படி பல item-ங்கள இன்னைக்கு design design-ஆ order பண்ணி சாப்பிடுறோம்னா அதுக்கு காரணம் நம்ம ஆதி மனிசனோட தேடுதல்தான்.

நம்ம ஆதி குடிமக்கள் சாப்பாட்டத் தேடித் தேடி அலைஞ்சு சாப்புட்டதாலயோ என்னவோ, இன்னைக்கு வரைக்கும் விதவிதமா சாப்பாட தேடித்தேடி சாப்புடுற பழக்கம் நம்மள விட்டு போகமாட்டேங்குது. Technology வளர்ந்தப்போ, நம்ம சாப்பாட்டுத் தேடல் இப்ப Zomato, Swiggy Range-ல வந்து நிக்குது.

வாழ்க்கையோட சுவாரஸ்யமே இந்தத் தேடல்தான். தேடல் மட்டும் இல்லேன்னா, மத்த விலங்குக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாம, நம்ம வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போயிருக்கும். நம்ம பாரதி பாடுன மாதிரி,

‘‘தேடிச் சோறு நிதம் தின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பம் மிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரைகூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக்கு இரைஎனப் பின்மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போல…’’

மனிச வாழ்க்கையும் வேடிக்கையாவே போகாம இருக்கணும்னா, நம்ம வாழ்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கணும். இல்லேன்னா, அதுக்கு ஒரு அர்த்தத்தை நம்ம உண்டாக்கணும்.

போன மாதம், கேரளாவோட முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய உம்மன் சாண்டி இறந்து போயிட்டார். அவரோட இறுதி ஊர்வலம் திருவனந்தபுரத்துல இருந்து அவரோட சொந்த ஊர் புதுப்பள்ளிக்குப் போய் சேர்வதுக்கு கிட்டத்தட்ட மூணு நாள் எடுத்தது. கேரளாவே வழிநெடுக வந்து பாத்துச்சு. ஒரு மனுஷன் தன்னோட பையனையும் கூட்டிட்டு கடைசியா ஒருமுறையாவது அவரோட முகத்தைப் பார்த்திடணும்னு அந்த உடலைக் கொண்டுபோன வண்டி கூடவே அழுதிட்டு ஓடுனது Social Media-ல செம வைரல். ஏன் இதைச் சொல்ல வந்தேன்னா… வாழ்ந்தா அந்த மாதிரி வாழணும். ஏன்னா இருக்கும் போது நிறைய பேர் வருவான்; ஆனா செத்ததுக்கு அப்புறமும் இலட்சக்கணக்குல வந்தாங்கன்னா, அத்தன பேர் வாழ்க்கையில ஏதாவது ஒரு வகையில தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு போயிருக்காருன்னு அர்த்தம். வாலி எழுதுன வைர வரிகள் மாதிரி…

‘‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’’.

சரி, எப்படிடா வாழ்க்கைக்கு அர்த்தத்தை உண்டாக்க முடியும்? இல்லேன்னா அர்த்தம் உள்ளதா எப்படி வாழமுடியும்?

வாழ்க்கைன்னா, நான், என் குடும்பம்னு குறுகிய வட்டத்துல யோசிக்காம, வட்டத்தைப் பெரிசாக்குனோம்னா, நம்ம வாழ்க்கையோட அர்த்தமும் பெரிசாகும்.

‘‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ மாதிரி.

அப்படித்தான் நம்ம கதை(தா)நாயகியும். சராசரி குடும்பப் பெண்ணா தானுண்டு, தன் குடும்பம் உண்டுன்னு வாழ்க்கையை சின்ன வட்டத்துக்குள்ள சுருக்காம, நமக்கும் பிரயோஜனமா, நம்ம சுத்தியிருக்கிறவங்களுக்கும் பிரயோஜனமா என்ன பண்ண முடியும்னு தன்னோட தேடுதலைப் பெரிசாக்குனதால இன்னைக்கு குடும்ப பெண்களுக்கெல்லாம், ஏன் இன்னும் சொல்லப் போனா நம்ம சமுதாயத்துக்கே Role Model-ஆ மாறியிருக்கிற பெண் சிங்கம்.

‘சாமி’ சினிமாவுல ஒரு சாமி… ரெண்டு சாமி… மூணு சாமி.. நாலு சாமி… அஞ்சுச்சாமி… ஆறுச்சாமி… ஆறுச்சாமி, I.P.S. மாதிரி, நம்ம பெண் சிங்கமும் ஒரு IPS அதிகாரிதான். ஷஹ்னாஸ் இலியாஸ், I.P.S.

சாமான்யனுக்கும் சரித்திரம் படைக்கிறவனுக்கும் இடையில முக்கியமான ஒரு difference இருக்கு. நமக்கு கிடைச்சத வச்சுகிட்டு வாழ்க்கையை அதோட போக்குல சராசரியா ஓட்றவன் சாமான்யன். நம்ம வாழ்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கணும்னு நமக்கான வாழ்க்கையை தேடிப்போய் உருவாக்குறவன் சரித்திரம் படைக்கிறான்.

நாமெல்லாம் ஒரு ராஜா வீட்டு புள்ளயா பிறந்திருந்தோம்னா, அப்பாடா God is Greatனு வாழ்க்கையை ஓட்டிருப்போம். ஆனால் இளவரசனான சித்தார்த்தன் தனக்கு கிடைச்சு ராஜபோகத்தை உதறித் தள்ளிட்டு வாழ்க்கையைத் தேடிப் போனதால தான் கௌதம புத்தரா சரித்திரம் படைக்க முடிஞ்சது. நம்ம ஷஹ்னாஸும் அது மாதிரித்தான்.

Electronics & Communication Engineering முடிஞ்சிட்டு, Infosysல வேலைக்குச் சேர்ந்து, கைநிறைய சம்பளம் வாங்கி வாழ்க்கையை சந்தோசமா ஓட்டிட்டு இருந்தவங்கதான் நம்ம ஷஹ்னாஸ். சின்ன வயசுலயே இலட்சக்கணக்குல சம்பளம் வாங்குனாலும் மனசுல ஒரு சந்தோசம் இல்ல.

யார்றா இந்தப்பிள்ள,,, அவன் அவன்
Engineering முடிச்சிட்டு வேலை கிடைக்காம வெட்டியா ஊரை சுத்திட்டு இருக்காங்க, இவங்க என்னடான்னா இலட்சக்கணக்குல சம்பளம் வாங்கிட்டும் திருப்தியில்லைன்னு புலம்பிட்டு இருக்காங்கன்னு நீங்க புலம்பறது வெளில கேக்குது… ஆனா ஷஹ்னாஸுக்கோ, என்னடா வாழ்க்கை இது. காலைல எந்திரிச்சு சமைச்சு, வேலைக்குப் போயி, திரும்ப night-ல வீட்டுக்கு வந்து, சமைச்சு, சாப்பிட்டு, தூங்கி, மறுபடியும் காலைல எந்திரிச்சுன்னு வாழுற வாழ்க்கை பயங்கரமா போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு.

ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் ஏதாவது ஒரு அர்த்தம் உண்டாகணும். இல்லைன்னா அர்த்தத்தை உண்டாக்கணும். வாழ்க்கையை அர்த்தமுள்ளதா ஆக்கணும்னா என்ன பண்ண முடியும்னு மனசுக்குள்ள ஒரு தேடல். ‘வாழ்க்கையே ஒரு தேடல் தான்ற மாதிரி!’ அப்ப ஒரு idea தோணுது. ஏன் Government வேலைல சேரக்கூடாதுன்னு. வேலைக்கு வேலையும் ஆச்சு, அதே நேரத்துல Society-க்கும் பிரயோஜனமா ஏதாவது செஞ்ச மாதிரியும் ஆச்சுனு ஒரு தோணல்.

இது என்ன பிரமாதம்; எல்லோருக்கும் தோன்றது தானேன்னு நம்ம நினைக்கலாம். உண்மைதான். ஆனால் ஷஹ்னாஸ்க்கு இது தோணும் போது அவங்க 6 மாச புள்ளய வயித்துல சுமந்துட்டு இருந்தாங்க.

‘Timing முக்கியம்ல…’

Government வேலைய பத்தி பெரிய idea இல்லாம, எந்த வேலைக்கு apply பண்ணலாம்னு யோசிக்கும்போது, அந்த நேரம் பார்த்து
Paperல Group-2 exam-க்கு call for வருது. சரி, apply பண்ணலாம்னு முடிவு பண்ணி, Exam எழுதப் போகும் போது நிறைமாச கர்ப்பிணி. ஒரு குழந்தையை வயத்துல சுமந்து புள்ள பெத்துகிறதே வாழ்வா, சாவா போராட்டம். அதுக்கிடையில வாழ்க்கையோடும் parallel-ஆ போராடி Group-2 Preliminary Exam Clear பண்றாங்க.

நம்மளா இருந்தா, super-ன்னு mains-க்கு படிக்கத் தொடங்கியிருப்போம். ஆனால், ‘தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்னு’ பாட்டு கேக்குற ஆள் போல நம்ம ஷஹ்னாஸ்.

நிறைமாச கர்ப்பிணியா இவ்வளவு கஷ்டத்துலயும் நம்மளால Group-2 Exam பாஸ் பண்ண முடியும்னா, நம்ம ஏன் இதுக்கும் மேல ஒரு பெரிய Exam எழுதக்கூடாதுன்னு மீண்டும் மனசுக்குள்ள ஒரு தேடல் தொடங்குச்சு.

இந்த தேடலுக்கும், கனவை விதைங்க. அதுதான் வெற்றிக்கு முதல் படின்னு, முதல் தொடர்ல பாத்ததுக்கும் நிறைய தொடர்பு இருக்கு.

ஷஹ்னாஸோட தாத்தா (அம்மாவின் அப்பா) Railway Station Master. அவருக்கு 3 பொண்ணுங்க, 2 பசங்க. நம்ம ஷஹ்னாஸ் கடைசி ெபாண்ணோட புள்ள, ஷஹ்னாஸ் Final year முடிச்சு வேலைக்குப் போகும் போது தான், அவங்க தாத்தா ஷஹ்னாஸ்ட்ட சொல்றாரு, ரொம்ப லேட்டா தான் உன்கிட்ட சொல்றேன். இருந்தாலும் என் மனசுக்குள்ளயும் ஒரு ஆசை இருக்குன்னு. அது என்னான்னா, ஏதாவது ஒரு பேரப்புள்ளையயாவது கலெக்டர் ஆக்கிடணும்னு ஒரு ஆசை. அதுக்காக எல்லாப் பேரப் பிள்ளைகளையும் கூட்டிட்டு போயி UPSC Exam-லாம் எழுதவிட்டிருக்காரு மனுஷன். அதுல தப்பிச்சது நம்ம புள்ளதான். ஏன்னா, ஷஹ்னாஸோட அம்மா கல்யாணம் பண்ணி சென்னை போயிட்டதால, ஷஹ்னாஸ மட்டும் Exam எழுத வைக்கிற வாய்ப்பு இவருக்குக் கிடைக்கல. பேத்திகிட்ட தன்னோட ஆசையைச் சொல்லிட்டு கொஞ்ச நாள்ல தாத்தாவும் இறந்து போயிடுராரு.

நல்ல எண்ணத்தை கனவாய் விதைச்சால் அது ஏழேழு தலைமுறைக்கும் கடந்து செல்லும்ன்ற மாதிரி, நம்ம தாத்தாவோட தேடல் பேத்தியோட மனசுல விதையா விழுந்தாலும், அது பாறைல போட்ட மாதிரி, அப்ப ஒன்னும் workout ஆகல. ஆனால், நிறைமாத கர்ப்பிணியா ஏதாவது பெரிய Exam எழுதணும்னு தேடும் போதுதான் தாத்தா போட்ட விதை அவங்களுக்கே தெரியாம மனசுல துளிர்விடுது. ஏன் I.A.S. Exam எழுதக் கூடாதுன்னு.

அதுனால தான் மக்களே, எப்போதும் நல்ல எண்ணத்தையும், கனவையும் நம்ம புள்ளைங்க மனசுல விதைக்கணும்னு சொல்றது. ஏதாவது ஒரு காலத்துல அவங்களுக்கே தெரியாம அது வெளிய வரும். அதுதான் மனிச மனசோட ஒரு அபார சக்தி.

தேவர் மகன் படத்துல சிவாஜி dialogue மாதிரி…

‘விதை நான் போட்டது; ஆனால் பழம்…’

அப்படித்தான் ஷஹ்னாஸோட மனசுலயும் UPSC Exam எழுதுறதுன்னு முடிவு வந்துச்சு.

ஆனால் மனசுக்குள்ள ஒரு பயம். UPSC Exam-ன்னா ஒரு 10-14 மணிநேரம் daily படிக்கணுமே. மூணு மாசக் குழந்தையை கையில வச்சுகிட்டு நம்மாள முடியுமான்னு ஒரு சின்ன யோசனை. சரி விடு கழுதைய, சும்மா Try பண்ணி தான் பாக்கலாம்மேன்னு துணிச்சு இறங்குனாங்க.

அப்பதான் நம்ம கதைல எப்பவுமே வர கருத்து கந்தசாமிங்க வந்தாங்க. பச்ச புள்ளைய கையில வச்சுகிட்டு இந்த படிப்பு கருமமெல்லாம் நமக்கு தேவையான்னு…

நம்ம சமூகத்துல இந்த மாதிரி 4 பேர் எப்பவுமே இருந்துட்டுதான் இருந்தாங்க. இதுவே ஒரு ஆம்பள கல்யாணம் பண்ணிட்டு படிச்சான்னா, இங்க பாரு குடும்பத்துக்காக புள்ள எவ்வளவு கஷ்டப்படுதுன்னுவாங்க. அதுவே பொண்ணா இருந்தா, அதுவும் கைக்குழந்தையோட… அவ்ளோதான், சொல்லவே வேணாம். ஆனால் சுத்தியிருந்தவங்க சொல்றத எதையுமே கண்டுக்கல நம்ம ஷஹ்னாஸ்.

அவங்க மனசுல, அந்த தேடல் மட்டும்தான் லட்சியமாக இருந்துச்சு. என் மகளுக்கு நல்ல ஒரு அடையாளத்தைக் கொடுக்கணும்னா, அதுக்கு நான் ஒரு நல்ல நிலைமையை அடையணும். அதுக்காக 2 வருஷம் என் பச்சபுள்ள கஷ்டப்பட்டாலும் பரவாயில்லேன்னு தைரியமா படிக்க ஆரம்பிச்சாங்க.

நம்ம நாட்ல, குறிப்பா தமிழ்நாட்ல ஒரு சாபக்கேடு இருக்கு. பொம்பள பிள்ளைகள நல்லா படிக்க வைப்பாங்க. அந்தப் புள்ளையும் 10ங் கிளாஸ்ல State 1st, 12வதுல State 1st, Collegeல Gold Medal வாங்கி, கைநிறைய சம்பளம் வாங்குற வேலைக்கும் போகும். ஆனால் அதுக்கப்புறம் கல்யாணம், குழந்தை, குடும்பம்னு சாதாரண வாழ்க்கையோட ஐக்கியமாகி, குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் தன்னோட கனவையும் இலட்சியத்தையும் மனசுல போட்டு புதைச்சிட்டு வாழ்க்கையை சாமன்யமா வாழ்ந்திட்டு போயிடுவாங்க.

இதுக்கு முக்கிய காரணம் என்னான்னா, சமூகம் அவங்கள குறை சொல்லிடுமோன்னு ஒரு குற்ற உணர்ச்சிதான். நல்ல மனைவியா இல்ல, நல்ல அம்மாவா இல்ல, நல்ல மருமகளா இல்லன்னு சமூகம் முத்திரை குத்திடுமோன்னு உள்ள குற்ற உணர்ச்சியிலயே வர்ற வாய்ப்ப விட்ருவாங்க.

இந்த குற்ற உணர்ச்சியைக் கடந்தவங்க மட்டும் தான் உலகத்துல வெற்றி பெற்றிருக்காங்க. மத்தவங்கெல்லாம் சராசரி குடும்பப் பெண்ணா தன்னோட கனவை, பிள்ளைகளைக் கொண்டு மட்டுமே சாதிக்க try பண்ணிட்டு இருப்பாங்க.

ஷஹ்னாஸோட மனசுல இந்த குற்ற உணர்ச்சிய எடுத்து மாத்துனாங்க. பச்சக் குழந்தையை வச்சுகிட்டு படிக்கிறதுன்றது, அதுவும் IAS/IPS–க்கு
படிக்கிறதுன்றது அடுப்புல பால வச்சுகிட்டு ெபாங்கவிடாம பாத்துக்கிற கதைதான்.

எப்படித்தான் பாத்துகிட்டாலும், பால் பொங்கி ஊத்தற மாதிரிதான். கண்ணுல எண்ணெய ஊத்திக்கிட்டு பிள்ளையையும் பாக்கணும். படிக்கவும் செய்யணும். புள்ள பசிக்கு கத்தும், பால் கொடுக்கணும். வயித்து வலிக்குக் கத்தும், மருந்து கொடுக்கணும். தூக்கத்துக்குக் கத்தும், தொட்டில போட்டு ஆட்டணும். இடையில இடையில காய்ச்சல் வரும், பேதி வரும், எல்லாத்தையும் சமாளிச்சு, படிச்சு ஸ்ஸ்ஸ்… அப்பப்பா… இப்பவே கண்ணைக் கட்டுதா…

Infact, இவங்க தேடல் முயற்சில அவங்க குடும்பமே உறுதுணையா இருந்துச்சுன்றதுதான் Highlight. அம்மா காலைல எந்திரிச்சு, சமைச்சு எல்லாம் ready ஆக்கிட்டு வேலைக்குப் போக, சின்ன வயசுல இருந்தே வீட்ல இருந்த அக்கா குழந்தையை சாயங்காலம் வரை பாத்துக்க, அதுக்கு அப்புறம் அவங்க அம்மா, அப்பான்னு Shift போட்டு மகளோட தேடல் முயற்சிக்கு பின்பலமா இருந்திருக்காங்க.

எவ்வளவு ஒரு determination இருந்தா, இவ்வளவு சவாலையும் சமாளிச்சு படிச்சிருக்கும் அந்தப்புள்ள. ஏன் நம்மள்ள நிறைய பேர் சராசரி வாழ்க்கையை வாழ்ந்திட்டு போறோம்னா அதுக்கு காரணம் சவால்கள கண்டு பயந்து போறதுதான்.

தேடல்ன்ற நினைப்பு மனசுக்குள்ள கொழுந்துவிட்டு எரியும் போது எவ்வளவு இடைஞ்சல் வந்தாலும் அதை சமாளிச்சு கடந்து போறதுல இருக்கு வாழ்க்கையோட வெற்றி.

அப்படித்தான், சவாலான சூழ்நிலை வரும்போது அதப்பாத்து பயந்துடாம, மனசை cool-ஆ வச்சுகிட்டு, இதுவும் கடந்து போகும்னு Time-ஐ ஓட்டுனாங்க நம்ம பெண் சிங்கம்.

முயற்சி எடுக்கிறவன் எல்லாம் தேடுறத நிப்பாட்டுறது இந்த மாதிரி சவால்கள சமாளிக்க முடியாம தான். ஒரு மனுஷன் சாதனையாளனா மாறுறதும் சாதாரணக்காரனா மாறுறதும் இந்த இடத்துலதான்,

நம்ம மனசுல நம்மள பத்தி என்ன தேடுதல் இருக்கோ, அதை கண்டுபிடிச்சு உழைச்சா வெற்றி நிச்சயம்ன்ற மாதிரி, ஒரு நிறைமாத கர்ப்பிணியோட தேடுதல் 2021-ல வெற்றியடைஞ்சுச்சு. ஆமாங்க 2021 UPSC தேர்வுல, நம்ம ஷஹ்னாஸ் IPS பாஸ் பண்றாங்க. IT பொண்ணா சுத்திக்கிட்டிருந்த ஷஹ்னாஸ் IPS பொண்ணா மின்னுறாங்க.

தேவர் மகன்ல சிவாஜி, ‘விதை நான் போட்டது; ஆனால் அதெல்லாம் இருந்து பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்னு’ dialogue சொல்ற மாதிரி, தாத்தா இட்டு வச்ச விதையை வளர்த்து இன்னைக்கு ஒரு சிறந்த IPS அதிகாரியா முன்னேறியிருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் வாழ்க்கையே ஒரு தேடல்தான்னு அவங்க நம்புனதுனாலதான். அதனால மக்களே! நம்மளும் வாழ்க்கையில் ஒரு தேடலை வச்சுகிட்டு உழைச்சோம்னா வெற்றி நமதே!!! =