வெற்றி நமதே – 9
தோல்வியின் உச்சி வரை சென்று, வென்று காட்டிய ஷெரின் ஷஹானா IRMS
வாழ்க்கைய கத்துக் கொடுக்காம, சும்மா படிச்சு வாந்தி எடுத்து மார்க் எடுக்குறதுக்கு மட்டும் கத்து குடுக்கறதுக்கு பேரு தான் கல்வியான்னு கேட்டா, இல்லைனு தான் சொல்வேன்.
Tenthல 500க்கு 500 எடுக்கணும். 12thல 600க்கு 600 எடுக்கணும். NEET Examல பாஸாகி, MBBS Seat வாங்கணும்னு பிள்ளைங்க மேல பெற்றோரும், சமூகமும் போடுற Pressure இருக்கே… அப்பப்பா… கடுப்பா இருக்கு… என்ன ரொம்ப விரக்தியா பேசுறேன்னு நெனக்கிறீங்களா? உண்மைதான்.
Recent-ஆ TVலயும், News Paperலயும் வர்ற newஐ பாத்திட்டு மனசு குடைஞ்சுகிட்டே இருக்குது.
திருவாரூர்ல 10th படிக்கிற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை, சென்னைல 12th படிக்கிற மாணவன் தற்கொலை, NEETல Pass ஆகலேன்னு மாணவன் தற்கொலைனு, போன மாசம் மொத்தம் ஒரு கொலையுதிர் காலமா போச்சேன்னு மனசு கிடந்து அடிக்குது.
என்ன கொடுமையடா இது. School புள்ளைங்கள்லாம் suicide பண்றத யோசிக்குற அளவுக்கு மோசமாவா இருக்கு நம்ம கல்விமுறைன்னு Education System-த்தை மட்டும் குறைசொல்லிட முடியாது.
புள்ளைங்க மேல பெற்றோரும், School-ம் சமூகமும் சேர்ந்து போடுற pressure-ஐ தாங்குற மனப்பக்குவத்தை நம்ம education system-ம் தரதில்லை. Parents-க்கும் புள்ளைங்க மேல அதிகமான pressure இருக்குன்றத புரிஞ்சிக்கவும் முடியறதில்லங்கறதுக்கு மிகப்பெரிய உதாரணம் தான் சிறுவயது தற்கொலைகள். இதுல கொடுமை என்னான்னா, அந்த pressure-ஐ தர்றதே இந்த education system-மும் parent-ம் தான்.
ஒரு காலத்துல school-க்கு போயி மத்தியானம் சூடா சத்துணவு சாப்பிட்டு, friends-ஸோட விளையாடி அப்படியே cycle-gap-ல படிச்சிட்டு வந்திட்டிருந்தோம். அதுலயும் school-ஐ cut அடிச்சிட்டு சினிமாவுக்குப் போன பயலுகள் தான் பாதிக்கு மேல (நான் உட்பட).
ஆனா இன்னிக்கு அப்படியா இருக்கு. School-க்குப் போறதே குதிரை race-க்குப் போற மாதிரிதான் இருக்கு. குதிரை மேல காச கட்டி வா, வான்னு கத்தி கத்தி ஓட வச்சு 1st வர்ற குதிரையை மாலை மரியாதை பண்ணி கொண்டாடுறதும், last வர்ற குதிரையை ஒன்னுக்கும் லாயக்கில்லைன்னு ஒதுக்கி வக்கிறதையும் தான் நம்ம எல்லாரும் சேந்து செஞ்சிட்டு இருக்கோம்.
ஒரு விஷயத்தை ஏன் செய்றோம்னு தெரியாம, கூட்டமே செய்யுதுன்னு, மந்தைல போற ஆடு மாதிரி அதப்பாத்து நம்மளும் செய்றதுக்கு காரணம், எங்க நம்ம புள்ளைக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காம போயிடுமோன்னு parents-க்கு உள்ள பயம்தான். ஆனால், நம்மளோட பயத்துக்கு இரையாகுறது நம்ம புள்ளைங்க தான்றத, நம்ம மறந்திடுறோம். ஏன்னா இந்த காலத்து பிள்ளைகளுக்கு pressure அதிகம்.
Friend-புள்ள Chess-ல Grand Master ஆகும், சொந்தக்காரப் புள்ள Badminton-ல Nationals விளையாடும், பக்கத்து வீட்டு புள்ள 10thல State 1st வாங்கும், வீட்ல வேலை பாக்குற அம்மாவோட புள்ள NEETல நல்ல மார்க் எடுத்து doctor ஆகும், Officeல கூட வேலை பாக்குற நண்பரோட புள்ள Campus Interviewல Select ஆயி இலட்சக்கணக்குல சம்பளம் வாங்கும்.
இப்படி நம்மள சுத்தி நடக்குற வெற்றியை மட்டும் நம்ம புள்ளைகளோடு compare-பண்ணி பேசும் போது, அதுக மனசுலயும் வெற்றி மட்டும் தான் வாழ்க்கை அப்படின்ற எண்ணம் அவங்கள அறியாம புகுந்து, சின்ன சின்ன தோல்வியைக் கூட தாங்க முடியாத அளவுக்கு புள்ளைகளும் மாறிடுதுக, இல்லேன்னா நம்ம மாத்திடுறோம்.
நம்ம இதெல்லாம் பிள்ளைங்க நல்லதுக்கு தான சொல்றோம்னு நினைக்கலாம். ஆனா உண்மை என்னான்னா, டேய் கோபால் பொண்ணு Badminton மெடல் வாங்கிடுச்சு, நீ swimming போனயே என்னாச்சுன்னு கேட்கும் போதே ஒருவித தாழ்வு மனப்பான்மையும் Pressure-ம் வந்து Medal வாங்குனாத்தான் ெவற்றின்ற மனநிலைமைக்கு பிள்ளைங்க வந்துடுவங்க.
நல்லா யோசிச்சு பாருங்க, நம்ப யாராவது வீட்ல, பக்கத்து வீட்டு பையன் 12th fail ஆயிட்டான், அதனால என்ன அவன் super cricket player எப்படியாவது அதுல பெரிய ஆளா வருவான்னு பேசியிருக்கோமா, எனக்கு அப்பவே தெரியும். அவங்க அப்பன் அலட்டுன அலட்டுக்கு அவன் fail ஆகாம… அப்படின்னு ஏளனமா பேசுவோம்.
இப்ப வேற ஒரு புது trend வந்திருக்கு. 10th, 12th, NEET Exam-னு நல்ல மார்க் எடுக்குற புள்ளைங்கள, flex அடிச்சு தெருவெல்லாம் வக்கிறது. ஜெயிச்ச புள்ளைங்கள கண்டிப்பா பாராட்டணும் தப்பில்லை. ஆனா இதப் பாத்துட்டு நம்ம புள்ளையும் இதே மாதிரி flexல வரணும்னு நெனச்சு pressure-ஐ கொடுக்கிறதுனால சில புள்ளைங்க கண்ணீர் அஞ்சலி flexல வர்ற கொடுமைதான் நடக்குது.
‘‘வெற்றியைப் போலவே தோல்வியும் நல்லதடி’’னு ஒரு சினிமாப் பாட்டுல வர்ற மாதிரி வெற்றியைக் கொண்டாடுற சமூகம் தோல்விய கொண்டாடவும் சொல்லிக் கொடுக்கணும். தோல்வியைக் கொண்டாடுறதுன்னா, Super-வான்னு 1 கிலோ சாக்லேட் கேக் வாங்கி வெட்டி கொண்டாடுறது இல்ல.
இப்ப தோத்தா என்ன, ஜெயிச்சவனுக்கு சந்தோஷம், தோத்தவனுக்கு அனுபவம்னு வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கணும். தோல்வியைப் பாத்து பயந்து ஓடாம அத எதிர்த்துப் போராடுறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கணும். வடிவேலு சொல்ற மாதிரி, ‘‘சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு’’. அதனால தோத்துட்டோம். மனசு உடைஞ்சு வாழ்க்கையே முடிஞ்சு போச்சுனு உக்காந்திராம அடுத்து நம்ம எடுத்து வைக்கிற அந்த ஒரு அடில இருக்கு வாழ்க்கையோட வெற்றினு சொல்லிக் கொடுக்கணும்.
இப்படித்தான், வாழ்க்கைல தினம் தினம் செத்துப் பொழைக்கிறதுக்கு ஒரேடியா செத்துடலாம்னு முடிவு பண்ணி சாவை அதோட விளிம்பு போய் சந்திச்சு அதுல இருந்து எழுந்து பீனிக்ஸ் பறவையா உயர்ந்துவந்த பொண்ணெப் பத்தித்தான் பேசப் போறோம்.
இவங்க வாழ்க்கைல அனுபவிச்ச கொடுமையை பாத்தா நம்ம பிரச்சினை எல்லாம் ஒன்னுமே இல்லன்ற அளவுக்கு பிரச்சினையிலேயே வாழ்ந்து, சாகுற நிலைமைக்குப் போயி success ஆன ஒரு ஆள்.
‘‘நான் செத்து, பிழைச்சவன்டா
எமனை பாத்து சிரிச்சவன்டான்’’னு சாவின் விளிம்பை பாத்துட்டு வந்து மீண்டும் வந்து சரித்திரம் படைத்த ஷெரின் ஷஹானா தான் இந்த மாச கதை(தா)நாயகி.
கேரளாவில் உள்ள மலைப் பிரதேசமான வயநாட்டில் ஒரு குக்கிராமத்தில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியான உஸ்மல் ஹாஜிக்கும் அமினாவுக்கும் பிறந்த 4வது பெண் குழந்தைதான் நம்ம ஷெரின்.
கஷ்டப்படுற குடும்பமானாலும் வாழ்க்கை சந்தோஷமாத்தான் இருந்துச்சு சின்ன வயசுல. பக்கத்து வீட்ல ஒரு அண்ணன் சின்ன வயசுல Civil Service Exam பாஸ் பண்ணி Railway Protection Force (RPF)ல Commandant-ஆ வந்தப்போ, ஊர்ல அவருக்கு இருந்த மரியாதையைப் பாத்து நம்மளும் collector ஆகணும்னு மனசுக்குள்ள ஒரு ஆசை. அதனால School முடிச்சு, Collegeல BA Politics-ம் MA Politics-ம் எடுத்து படிக்குது இந்தப் புள்ள.
எல்லாம் நல்லாப் போனா தான் ஒரு twist வருமே. திடீர்னு ஷெரின் அப்பா heart attackல இறந்து போக, அடுத்து என்ன பண்றதுன்னு குடும்பமே குழம்பிப் போய் நிக்குது. அப்பா இருக்கும் போதே மூணு புள்ளகளையும் கட்டிக் கொடுத்துட்டதால, ஷெரினோட அம்மாவுக்கு இந்த புள்ளயும் எவனுக்காவது கையைப் புடிச்சுக் கொடுத்துட்டா கடமை முடிஞ்சிடும்னு கவலைப்பட்டாங்க.
நெறைய பொம்பளப்புள்ள வாழ்க்கை வீணாப் போகுறதால இந்த மாதிரி அவசரக் கல்யாணத்துலதான்றது வேற விஷயம்.
துபாய்ல Software Engineerன்னு ஒருத்தன பாத்து fix பண்ணி அவசரக் கல்யாணம் நடக்குது. கல்யாண மேடைலதான் இந்தப் புள்ளக்கு பையனக் காட்றாங்க. நம்ம ஷெரினுக்கு அப்போ 19 வயசு. மாப்பிள்ளைய பாத்த உடனே shock ஆயிடுது. ஒரு 35-40 வயசிருக்கும் அந்த பயலுக்கு. சரி விடுன்னு குடும்பக் கஷ்டத்தை நெனச்சு கல்யாணம் பண்ணிக்குது அந்தப் புள்ளயும்.
கல்யாணம் முடிச்சு கொஞ்ச நாளைக்கு அப்புறம்தான் தெரியுது. அவன் ஒரு டுபாக்கூர்னு. பத்தாங்கிளாஸ் படிச்சுட்டு, Gulfல எங்கடா வேலன்னு கேட்டா, வடிவேலு சொல்ற மாதிரி நம்பர் 9 விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்துல… ேகக்ரான் – மேக்ரான் மாதிரி companyல வேலையப் பாத்துட்டு ஊரை ஏமாத்திட்டு இருந்திருக்கான்னு.
சரி போய் தொலையுது படிக்கலேன்னாலும் கல்யாணத்துக்குக்காக அந்த பொண்ணு போட்ட ஒரே கண்டிஷன் கல்யாணத்துக்கு அப்பறமும் தன்னை படிக்க allow பண்ணனும் அப்டீங்கிறது தான். அவன் படிக்கலேன்னாலும், அந்த புள்ளைய படிக்க வைப்பான்னு பாத்தா, அந்தப்புள்ளய வெளியில போகவே விடாம வீட்டுக்குள்ளேயே வச்சு கொடுமைப்படுத்த ஆரம்பிச்சான்.
எங்க இத அம்மாட்ட சொன்னா மனசு உடைஞ்சுவாங்களோன்னு நெனச்சு வீட்டுக்குள்ளேயே குமுறிட்டிருந்துச்சு இந்தப்புள்ள.
நாளுக்கு நாள் சைக்கோ போல நடக்க ஆரம்பிச்சான் அவன். ஒரு நாள் shave பண்ற blade எடுத்து உடம்புல கீறி, showerல நிறுத்தி ரத்தம் ஒழுகுறத பாத்து ரசிச்சிருக்கான் அந்தப் பரதேசி.
இந்த மாதிரி கொடுமையான சூழ்நிலைல வாழறதுக்கு சாகுறதே மேல்ன்னு suicide பண்ணலாம்னு மனசெல்லாம் குழம்பிப் போய் நடைப்பிணமா அலைஞ்சுட்டு இருந்துச்சு நம்ம ஷெரின்.
அப்படி ஒரு நாள், ஒரு நல்ல மழைக்காலத்துல காயப்போட்டிருந்த துணியை எடுக்க Terrace-க்கு போயி கால் தடுக்கி மாடில இருந்து கீழே விழுந்திடுது.
மாடில இருந்து கீழே விழுந்த புள்ள சுயநினைவு இல்லாம கிடக்குது. ஆனா உடம்புல எங்கயும் அடிபடல. கூடியிருந்த ஆள்கள் அப்படியே அலேக்கா தூக்கி அங்கே இருந்த சின்ன Maruti கார்ல ஏத்த, Hospital-க்கு ஓடுறாங்க.
மலைப்பிரதேசம்ன்றதால பெரிய ஆஸ்பத்திரி இல்ல. 2 மணி நேரத்துல கிடைச்ச Hospitalல X-ray பாத்தா Spinal Cord (தண்டுவடம்) Crack, கோழிக்கோடு medical college கூட்டிட்டு போங்கன்னு சொல்ல, அங்கிருந்து 3 மணிநேரம் travel பண்ணி அங்க போனா… டாக்டர் தூக்கிப்போட்டாரு ஒரு குண்டை… 4 நாளுக்குமேல தாங்காது. அதோட stretcher வச்சு எடுக்காம, அலேக்கா தூக்கி சின்ன கார்ல மடக்கி கொண்டு வந்ததால கழுத்துக்குக் கீழ மொத்தம் செயலிழந்துடுச்சுன்னு. operation பண்ணா சில அசைவுகள் வரலாம். ஆனால் நாலு நாள்ல சாகப்போற ஆளுக்கு இலட்சக்கணக்குல காசு கொடுத்து operation பண்ணனுமானு கேட்க, இதைக் கேட்ட ஷெரின் அம்மாவுக்கு உலகமே இருண்டு போயிடும் மாதிரி இருந்துச்சு. இருந்தாலும், மனச தளரவிடாம வேற ஒரு பெரிய Hospitalக்குக் கொண்டுபோயி ஊரே கடன் வாங்கி Operation நடத்துறாங்க.
மாசக்கணக்குல treatment நடத்தி, உயிர் பொழைச்சிருது. ஆனா 22 வயசுலயே நடைபிணமான வாழ்க்கை. மொத்த வாழ்க்கையும் கட்டிலும் விட்டமும் தான். Bedலயே படுத்து, படுத்து படுக்கைப்புண் (Bedsore) வந்து படுக்கவும் முடியாத கஷ்டமான ஒரு நிலை.
இந்த மாதிரி ஒரு நிலைமைல வாழறதுக்கு செத்திருக்கலாமேன்னு, மனசு கிடந்து அடிக்குது. அந்த நேரத்துல மனசுல ஒரே எண்ணம். எப்படியாவது தற்கொலை பண்ணிக்கணும்.
இதுல கொடுமை என்னான்னா… கழுத்துக்கு கீழே தளர்ந்த நிலைல சொந்த அவசியத்துக்கே மத்தவங்க support தேவைப்படும்போது suicide பத்தி யோசிக்க மட்டும்தான் முடிஞ்சுச்சு நம்ம ஷெரினுக்கு.
வலியும், வேதனையும், துயரமுமே வாழ்க்கைனு மாறிப்போனப்போ, அதைத் தாங்க முடியாம அவங்க அம்மாகிட்ட, “யாருக்குமே கெட்டது நினைக்காத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு கதறி அழுது”, “என்னால இனிமே வாழமுடியாது”ன்னு சொல்ல, அதைக்கேட்டுப் பதறிப்போயி அமினாம்மா அழுதுட்டே சொன்னாங்க, “சாகுறதுக்காகவா உன்னை இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ வச்சிட்டு இருக்கேன்னு”.
‘‘படைச்சவன் உனக்காக ஒரு திட்டம் வச்சிருப்பாரு. நீ அனுபவிக்கிறதெல்லாம் அவனோட பரீட்சை. அந்தப் பரீட்சைல ஒருநாள் நீ ஜெயிச்சு வருவ பாரு, அதை நீ வாழ்ந்தா தான் புரிஞ்சுக்க முடியும். அதனால அவனோட போக்குல விட்ருனு’’ சொல்ல, அந்தப் புள்ள மனசுல அது ஒரு பயங்கர மாற்றத்தை ஏற்படுத்துச்சு.
பழைய மாதிரி எந்திரிச்சு ஓடி, ஆடி நடப்போம்னு கனவு காண்றதாலதான் இத கஷ்டம்னு நினைக்கிறேன். உண்மையான reality என்னான்னா, என்னாலே இனிமே நடக்க முடியாது. இதுதான் கடவுள் எனக்கு வச்சிருக்கிற திட்டம். அதனால அத accept பண்ணனும் 1st மனசுல நினைக்குது.
கஷ்டத்துல இருக்கும்போது, எல்லாம் கடவுள் செயல்னு எப்ப மனசு நெனக்க ஆரம்பிக்குதோ, அப்ப தொடங்குது வாழ்க்கைக்கு ஒரு புதுப் பாதை. ஷெரினுக்கும் அப்படித்தான். நம்மால முடியலேன்னாலும் மத்தவங்க உதவியில உட்கார்ந்திடணும். முடிவு பண்ணி ஒரு வீல் சேர்ல தன்னை உட்கார வைக்க சொல்றாங்க. ஆரம்பத்துல 1 second கூட உட்காராம கவுந்து கவுந்து விழுந்திட்டே இருந்து, daily கொஞ்சம் கொஞ்சமா 5 minute, 10 minute, 1 மணிநேரம், 10 மணிநேரம்னு நேரத்தைக் கூட்டி, கூட்டி வீல் சேர்ல நாள் முழுக்க உக்கார அளவுக்கு (மத்தவங்க உதவில தான்) practice பண்ணுச்சு அந்தப்புள்ள.
வீழ்வது தோல்வி அல்ல
வீழ்ந்த இடத்திலேயே
வீழ்ந்து கிடப்பதுதான்
தோல்வின்னு – சாக்ரடீஸ் சும்மாவா சொன்னார்!
எவ்வளவு ஒரு மனத்திடம் ேவணும். படுத்துக்கிடக்குற உடம்பு 24 மணிநேரம் வீல் சேர்ல இருக்கப் பழகுறதுக்கு.
வீல் சேர்லயே இருக்கப் பழகுனதுக்கப்புறம் தான் புரியுது, அந்த நாலு சுவருக்குள்ள ஷெரினுக்கு இருக்கிற ஒரே சொந்தம் நேரம் மட்டும்தான்.
ஏன் சின்னப் பிள்ளைகளுக்கு tution சொல்லிக் கொடுக்கக் கூடாதுன்னு யோசனை வர அதைத் தொடங்கி அப்புறம் ஏன் நம்ம UGC-NET எழுதி teacher வேலைக்குப் போகக்கூடாதுன்னு முடிவு பண்ணி இராப்பகலா படிக்க ஆரம்பிக்குது நம்ம புள்ள.
‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ங்ற மாதிரி UGC-NET clear பண்ணி Ph.D.க்கு IITல apply பண்ணா இவங்க நிலைமைய பாத்து உங்களால Ph.D. பண்ண முடியாதுன்னு IIT Back அடிக்க, calicut universityல Ph.D. பண்ண ஆரம்பிக்குது அந்தப்புள்ள.
திட்டம் போடுறது கடவுளாச்சே. ஒருநாள் ‘வனிதா’ன்னு ஒரு பிரபலமான மலையாள Magazineல இந்த மாதிரி நிலைமையிலயும் படிக்குற நம்ம ஷெரின பேட்டி எடுத்துப் போட, சும்மா தீப்பெட்டி வாங்க ஒரு கடைக்குப் போன ஒரு IAS Academy நடத்துற ஒருத்தர் எதார்த்தமா அந்த interview-வை பாத்து, நம்ம ஷெரின தேடிக் கண்டுபிடிச்சு போயி மாற்றுத் திறனாளிகளுக்கு அங்க நடத்துற ‘சித்திர சலபம்ன்ற’ programல join பண்ணி IAS படிக்கிறியாமான்னு கேக்க, கரும்பு தின்ன கூலியா என்ன? அங்க தொடங்குது ஷெரின் வாழ்க்கைல மாற்றம்.
புருஷன் கொடுமை தாங்காம சாகணும்னு முடிவு பண்ண ஒரு ஆளுக்கு சாவை கண் முன்னாடி காட்டி, வாழும்போதே நடைபிணமா வாழவச்சு அங்கேயிருந்து ஏதோ ஒரு கடைல தீப்பெட்டி வாங்க போன ஒரு ஆள் வழில சின்ன வயசுல ஆசைப்பட்ட IAS ஆசையை மீண்டும் தட்டி எழுப்புனது எல்லாம் தெய்வத்தோட திட்டம்னு திடமா நம்புச்சு நம்ம ஷெரின்.
கடவுளோட திட்டமும், ஷெரினோட மனத்திடமும் விடாமுயற்சியும் வீணாப் போகல. இந்த வருஷம் Civil Service Examல 913வது ரேங்க் எடுத்து, இந்திய ரயில்வே மேலாணமை பணி (Indian Railway Management Service – IRMS) பாஸாகுது நம்ம புள்ள.
‘God is Great’ நம்ம ஜெயிக்கிறதயும் தோக்கிறதயும் தீர்மானிக்கிறது உலகம் இல்ல; நம்ம மனசுதான். நம்ம மனசு என்னைக்கு நம்ம தோத்துப் போயிட்டோம்னு நெனக்குதோ அப்பதான் நம்ம தோத்து போறோம்.
மாடில இருந்து கீழ விழுந்து அந்த accident நடக்கலேன்னா, ஒரு வேளை நான் suicide பண்ணி வாழ்க்கைல தோத்திருப்பேன்.
அத தடுத்து போராடி வாழ்றதுல இருக்கு வாழ்க்கைனு புரிய வைக்க கடவுள் போட்ட திட்டமா இருக்கும் எனக்கு நடந்ததெல்லாம்னு இப்ப எனக்கு புரியுதுனு கண்ணீர் மல்க கூறும் ஷெரின் ஷஹானா, தோத்துட்டா suicide தான் முடிவுன்னு நெனக்கிறவங்களுக்கு மட்டும் உதாரணமல்ல, தோத்தா தான் வாழ்க்கையில ெஜயிக்க முடியும்ன்றதுக்கு ஒரு சிறந்த உதாரணம்.
வடிவேலு சொல்ற மாதிரி, ‘‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்பா…’’
அதனால மக்களே தேர்வுலயும் வாழ்க்கையிலேயும் தோல்வி வர்றப்போ துவண்டு போயி உக்காரதுல இல்ல வாழ்க்கை. அங்கயிருந்து நம்ம எடுத்து வைக்கிற அடுத்த அடில இருக்கு வாழ்க்கை. அதனால அடுத்த அடி எடுத்து வக்கிற நம்பிக்கை உள்ளவங்களா நம்ம பிள்ளைகளையும் சமூகத்தையும் மாத்தணும். அப்படி ஒரு நம்பிக்கை நம்ம புள்ளைகளுக்கு வந்துச்சுன்னா நம்ம daily தோத்து, தோத்து விளையாடலாம். சிவாஜி படத்துல சாலமன் பாப்பையா ‘வாங்க பழகலாம்’னு சொல்ற மாதிரி ‘வாங்க தோற்கலாம்…’