வெற்றி நமதே – 10

திரு.M.G.இராஜமாணிக்கம் IAS
கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் –  உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை

பாட்ஷா படத்துல ரஜினி ஆட்டோவுல எழுதியிருக்கிற வசனம். என்னா ஒரு Powerful dialogue.

ஆனால் நம்மள்ள பல பேர் அடுத்தவன் என்ன நினைப்பான், ஊர்ல என்ன பேசுவாய்ங்க, யாராவது நம்மள பாத்து ஏளனமா சிரிச்சுட்டா?… இப்படி அடுத்தவன், அடுத்தவன்னு (அடுத்தவளும் தான்!!!) அடுத்தவனுக்காகவே வாழ்ந்து, நம்ம வாழ்க்கையை நம்ம நினைச்ச மாதிரி வாழாம காணாம போறவங்க தான்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல வர்ற அந்த நாலு பேர் மாதிரி தான் நம்ம எல்லார் வாழ்க்கையிலேயும் நாலு பேர் இருப்பாய்ங்க.

வாழ்க்கைல பல நேரங்கள்ல நாம Stuckup ஆகி முன்னாடியும் போக முடியாம, பின்னாடியும் போக முடியாம தவிச்சுகிட்டு நிக்கிறதே இந்த நாலு பேர்னால தான்.

அதனால தான் நம்ம புரட்சித் தலைவர் MGR பாடுனார் :

‘‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
இந்த உலகத்தில் போராடலாம்’’னு.
வாழ்க்கைன்ற போராட்டத்துல தோல்வி, அவமானம், வலி, வேதனைன்னு எல்லாரும் சந்திச்சுட்டுதான் இருக்கோம்.

என்னா ஒன்னு, போன தொடர்ல சொன்ன வடிவேலு வசனம் மாதிரி,

‘‘சண்டைல கிழியாத சட்டை எங்க தைக்கிறாக…’’

அது மாதிரிதான் வாழ்க்கை. யார் இந்தத் தோல்வியையும் அவமானத்தையும் தாண்டி இலட்சியத்தை நோக்கி போறாங்களோ, அவங்கதான் வாழ்க்கையில வெற்றியாளனா வர்றாங்க.

ஏன்னா,

எல்லா முயற்சிக்கும் ஒரு  தோல்வி தேவைப்படுது.

எல்லா வெற்றிக்கும் ஒரு அவமானம் தேவைப்படுது.

அப்படித்தான்… வாழ்க்கை நம்ம எல்லாருக்கும் வாய்ப்புகளை கொடுத்திட்டுதான் இருக்கு. ஆனால் அதுதான் நமக்கான வாய்ப்புனு அதை பயன்படுத்துறவன்தான் வெற்றியாளனா வருவான்.

நம்ம கதா(ைத)நாயகனும் அப்படித்தான். படிக்க லாயக்கில்லை மக்குமக்குனு எல்லாரும் கிண்டல் பண்ணுன ஒரு ஆள். அப்போதெரியல மக்குனாதாண்டா அது உரமா வரும்னு. அப்படி மக்கி உரமான நந்தகுமார் IRS கதையைத்தான் பேசப்போறோம்.

சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டம். மிகச் சாதாரண குடும்பம். Government schoolல தமிழ் மீடியம்தான் படிக்கிறாரு. Schoolல சத்துணவுல மட்டுமில்ல. பரீட்சையிலயும் முட்டை வாங்குற அளவுக்கு தான் படிப்பு வருது புள்ளைக்கு என்னான்னு பாத்தா… அவருக்கு சின்ன வயசுலயே கற்றல் குறைபாடு இருந்துச்சு. அதாவது ‘dyslexia’. Dyslexia-னு சொன்ன உடனே நம்ம எல்லாருக்கும் அமீர்கான் நடிச்ச ‘தாரே ஜமீன்பர்’னு ஒரு சினிமா தான் ஞாபகத்துக்கு வரும். அந்தப் படத்துல வர்ற சின்னப்பையன் மாதிரி தான் நம்ம ஆளு. எழுத்தெல்லாம் பறக்கும், தலைகீழாத் தெரியும். ஆனா இதுதான் பிரச்சனைனு எவனுக்கும் புரியாது. இப்படி குழம்பிப் போயி இருக்குற புள்ளைய நம்ம ஆளுக மக்குனு முத்திரை குத்திடுவாய்ங்க. அப்படித்தான் நம்மாளும் மக்கா உருவாகுறாப்ல.

இது பத்தாதுனு சின்ன வயசுல இருந்தே சின்ன சின்ன வியாதி, அதுக்காக மாத்திரை மருந்துனு சாப்பிட்டு சாப்பிட்டு class போனா நம்மாளோட வேலை என்னான்னா… குறட்டை விட்டு தூங்குறதுதான். நம்ம கும்பகர்ணனுக்கு tough competition குடுத்த ஆளு.

எப்படியோ தட்டுத் தடுமாறி 6-ங்கிளாஸ் வர வந்ததுக்கப்புறம் school வெறுப்பாகுது. School போகணும்னு ஆசைதான். ஆனாலும், teachers திட்டுறதுக்கு பயந்துகிட்டு school-ஏ வேணாம்ற நிலைமைக்கு வந்துடுது அந்தப் பச்சப்புள்ள.

மக்கு மக்குனு பேசுன மண்டக்கசாயங்க ஏன்டா மக்கா இருக்கான்னு கொஞ்சம் யோசிச்சிருந்தா நம்மாளு Schoolல படிச்சிருப்பாரு. பாவம் ‘தாரே ஜமீன்பர்’ல வர்ற அமீர்கான் மாதிரி ஒரு teacher
அந்த புள்ளக்கு கிடைக்காம போயிடுச்சு. நல்ல வேளை கிடைக்கல. கிடைச்சிருந்தா அவ்ளோதான் நம்ம Sundar Pitchai-க்கே tough குடுத்திருப்பாரு (நந்தகுமார் சாயலும் ஏறக்குறைய சுந்தர் பிச்சை மாதிரிதான் இருக்கும்ன்றது வேற விஷயம்). ஆனால் நாட்டுக்கு ஒரு மிகச்சிறந்த பேச்சாளரையும், இந்திய வருவாய்த் துறைக்கு (IRS) மிகச்சிறந்த அதிகாரியும் நஷ்டமா போயிருந்திருக்கும்.

இப்படி School-க்கு Tata காட்டிட்டுப் போன ஆளு வருமானத்துக்கு வழி கண்டுபிடிக்க நிறைய வேலை தேடுறாப்ல. சத்தியமா சொல்லணும்னா, வருமானத்துக்கு வேலை தேடுனதவிட School-க்கு போறதுக்கு பயந்திட்டு தான் வேலை தேடுனாரு.

எப்படியோ ஒரு Xerox கடைல வேலை கிடைக்குது. பாவம், அங்கயும் போயி தப்புத்தப்பா xerox எடுக்க கடுப்பான owner, ஒரு xerox எடுக்கக்கூட உனக்குத் துப்பில்லைனு துப்பாம துப்பி விரட்டி விட்றாரு. சரிவிடுனு சித்தாள் வேலைக்குப் போறாரு. காத்தடிச்சா பறக்குற மாதிரி நோஞ்சானா இருந்த நம்மாளு எங்க கல்லையும் மண்ணையும் தூக்க? பேனா தூக்குறதே overweight. அப்புறம்ல மத்ததெல்லாம். அதுலயும் லாயக்கில்லைனு விரட்டிவிட டீக்கடை, Electronics கடைனு ஒரு round அடிச்சு, எல்லா இடத்துலயும் வடிவேலு வசனம் மாதிரி ‘இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்’னு துரத்திவிட, ‘ஓடினான் ஓடினான் வாழ்க்கையில் எல்லை வர ஓடினான்’ மாதிரி நம்மாளும் சளைக்காம ஓடுறாப்ல.

கடைசில ஒரு லாட்டரி கடைல வேலை கெடைக்குது. அப்பாடான்னு நிம்மதியா இருந்தாலும், friends-ஓட parents-லாம் அவங்கூட சேந்து கெட்டுகிட்டு போயிடாதனு பூச்சாண்டி range-க்கு நம்மாள treat பண்ண, நம்மாளுக்கு சுருக்குனு உரைக்குது. புத்தருக்கு போதி மரம் மாதிரி நம்மாளுக்கு லாட்டரி கடைல தான் ஞானம் பொறக்குது, நம்மள லாயக்கில்லைனு கேலி பண்றவங்களுக்கு மத்தியில எப்படியாவது படிச்சுடனும்னு. அப்படி ஒரு நாள் லாட்டரி கடைல இருக்கும் போது பழைய School Friend, Uniformல நடந்து போறத பாக்குறாப்ல. நமக்கும் இப்படி School-க்கு போக முடியலயேன்னு வருத்தம், ஆதங்கம்.

‘உன்னை நெனச்சு பாக்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது. ஆனால் அதை எழுதணும்னு நெனக்கும் போதுதான் அந்த வார்த்தை… அபிராமி… அபிராமி…’ன்னு குணா கமல் மாதிரி.

படிக்கணும்னு நெனச்சா புடிக்குது. ஆனால் அந்த School-ல திட்றதுதான்… teacher… teacherனு குணா styleல friendகிட்ட புலம்ப, school போகலேன்னா என்னடா, privateஆ Exam எழுதலாமேன்னு ஒரு idea கொடுக்கிறார் அந்த friend. ‘நண்பேன்டா…ன்னு’ அந்த idea-வ கப்புனு புடிச்சிகிறாப்ல நம்ம ஆளு.

நான் முன்னாடியே சொன்ன மாதிரி, வாழ்க்கை நம்ம எல்லாத்துக்கும் வாய்ப்பை கொடுத்துட்டு தான் இருக்கு. ஆனா அதுதான் வாய்ப்புனு நெறைய பேருக்கு தெரியுறதுக்குள்ள வாழ்க்கையே முடிஞ்சு போயிடும். ஆனா அதுதான்டா நமக்கான வாய்ப்புனு எவன் கப்புனு புடிச்சிக்கிறானோ, அவன் தான் சாதனையாளனா சரித்திரம் படைக்கிறான்.

அப்படித்தான் நம்மாளு அவரோட நண்பர் கொடுத்த ideaல, privateஆ 8வது Exam எழுதுறதுக்குப் படிக்க ஆரம்பிக்கிறாரு, யாருக்கும் தெரியாம ரகசியமா. ஏன் சொந்த அப்பா அம்மாவுக்குக்கூட தெரியாம. வெளில தெரிஞ்சா, உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு கேலி பண்ணுவாய்ங்கிளோன்னு ஒரு பயம்.

இந்த தலைமறைவு வாழ்க்கைக்கு லாட்டரி கடை சிறந்த இடமா இருந்துச்சு. நம்ம ஏற்கனவே பாத்த மாதிரி நம்மாளுக்கு dyslexia (கற்றல் குறைபாடு) இருந்ததால, (அது dyslexia தான்னு அப்போ தெரியாது) ஒன்று ரெண்டு தடவை படிச்சா மண்டைல ஏறாது. அப்படி ஏறுனாலும் எழுதுறதெல்லாம் தப்புதப்பா தான் எழுதுவாப்ல. என்ன பண்றதுன்னு தெரியாம படிச்சதையே திரும்பத் திரும்ப 40-50 தடவை படிச்சுப் பார்த்து, அதை அப்படியே பாத்து பாத்து எழுதிப்பாத்துன்னு சொந்தமா ஒரு idea கண்டுபிடிச்சு idea மணி ஆனார் நம்ப ஆளு. இந்த technique superஆ workout ஆக சும்மா 8-ங் கிளாஸ் பாஸ் பண்ணி பட்டையைக் கெளப்ப ஆரம்பிச்சாப்ல. சொந்தமா படிச்சு, private-ஆ எழுதி பாஸ் பண்ணப்போ ஒரு புதுவித தெம்பும் நம்பிக்கையும் பொறக்குது.

வடிவேலு சொல்ற மாதிரி சும்மா அந்த ஊர்ல அடிச்சாய்ங்க பாரு ஒரு அடி, அப்புறம் எந்த ஊர்ல அடிச்சாலும் அதைத் தாங்குற சக்தி உடம்புக்கு வந்திடுச்சுன்ற மாதிரி, சொந்தமா படிச்சு பாஸ் பண்ண வெற்றி அப்புறம் எதை வேணும்னாலும் படிச்சிடலாம்னு மனசுக்குள்ள தைரியமும், தன்னம்பிக்கையும் பொறக்குது. அதே தைரியத்தோட மனுஷன் 10-ங் கிளாஸ் private-ஆ படிக்க ஆரம்பிக்கிறாப்ல, எப்பவும் போல யாருக்கும் தெரியாமத்தான்.

அந்த சமயத்துல உடம்பு முடியாமப் போக, ஊர்ல ஒரு doctorஐ பாக்கப் போயி காத்துகிட்டு கிடந்த சமயத்துல, shelfல IAS பரிட்சைக்குள்ள book-ஐ பாக்குறாப்ல. இப்பதான் எந்தப் புக்கை பாத்தாலும் ‘எந்திரன்’ ரஜினி மாதிரி scan பண்ணி பழகியாச்சே. அதனால சும்மா அதை எடுத்து புரட்டிப் பாக்க, கொடுமை கொடுமைன்னு ேகாயிலுக்குப் போனா, அங்க ரெண்டு ஜிங்ஜிங்குன்னு ஆடுச்சாம்ன்ற மாதிரி, அதப் பாத்த doctor, லாட்டரி விக்கிறவனுக்கு எதுக்கு IAS Bookனு அங்கயும் அவமானப்படுத்தி, நம்மாளுக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி விட்டாய்ங்க. Mindல அதையும் வச்சுகிட்டு முன்னாடியவிட வெறித்தனமா படிச்சு 10வதும் பாஸ் பண்றாப்ல.

Ok Super. அப்ப 12வதும் படிச்சிட வேண்டியதுதான்னு நினைக்கும் போதுதான் வருது ஒரு twist. தமிழக அரசு லாட்டரிக்கு தடை விதிக்கிறாங்க. படிப்புக்கு படிப்பு வருமானத்துக்கு வருமானமா இருந்த தொழில் கையவிட்டுப் போக மனுஷன் என்ன பண்றதுன்னு குழம்பிப் போயி நிக்க, ஒரு Mechanic Shop-ல வேலை கிடைக்குது. லாட்டரி கடை மாதிரி படிக்கிறதுக்கோ அதுவும் யாருக்கும் தெரியாம படிக்கிறதுக்கோ வாய்ப்பில்லை இங்க. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ ஒரு யோசனை தோணுது. கழுதைய கிழி புஸ்தகத்தைனு Examல Bit அடிக்கிற மாதிரி பேப்பரை கிழிச்சு பைல வச்சுகிட்டு owner இல்லாத நேரத்துல எல்லாம் படிக்கிறாப்ல. நீ என்னத்த கிழிச்சன்னு இனிமே நாக்கு மேல பல்லைப் போட்டு கேட்க முடியாதுல. அதனால கிழிச்சு, கிழிச்சு படிச்சு மனுஷன் 12வதும் பாஸ் பண்ணிடுறாரு.

இவன்லாம் எப்புடிடா 12வது பாஸ் பண்ணான். ஊரே ஆச்சரியமா பாக்குது. நம்மாள School போயிதான் படிக்க முடியல. College ஆவது போயி படிக்கணும்னு கொள்ள ஆசை. அதனால எல்லா College-க்கும் apply பண்றாரு. ஆனா ஒருவரும் seat கொடுக்கல. 6வதுக்கப்புறம் school-க்கு போகல, private-ஆ படிச்சிருக்க, 12ஆம் வகுப்புல 538 மார்க் தான் எடுத்திருக்கன்னு எதையாவது சாக்குப் போக்கு சொல்லி ஒரு College-லயும் seat கிடைக்கல. கடைசில ஒரு College-ல இவரு நிலைமைய புரிஞ்சுகிட்டு, சரி Ok, உன் பிரச்சனையெல்லாம் Explain பண்ணி, ஒரு letter எழுதி கொடுன்னு சொல்ல, நம்மாளு ஒரு letter எழுதிக் கொடுக்க, அதைப் பாத்த Principal, get out அடிச்சு விரட்டுறாரு.

‘அண்ணாமலை’ படத்துல, ஜனகராஜ் English Paper படிப்பாரே, நாசமா நீ போனியா தெரு… யோவ் அது நேசமணி பொன்னையா தெருயா, அப்படின்ற range-க்கு letter எழுதியிருந்தாரு நம்மாளு. என்னடா வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேனு வருத்தத்துல இருக்கும்போது தான் அவருக்கு டாக்டர் அம்பேத்கர் காலேஜ்ல B.A., English Literature Seat கிடைக்குது. அப்பாடான்னு போயி சேந்திடுறாரு. தமிழ் படிக்கவே தகிடதத்தம் போடணும். English-னா சொல்லவே வேணாம். Break, Disco-லாம் ஆடி, கஷ்டப்பட்டு கொஞ்ச நாள்ல English படிக்கவும் பேசவும் கத்துகிட்டு B.A., Pass பண்றாரு நம்மாளு.

6வது படிக்கவே லாயக்கில்லைனு முத்திரை குத்தின ஆளு B.A., படிச்சு சாதிச்சு காட்டுனாரு.

6வது கூட படிக்க முடியாத ஆளு, B.A., வரை படிச்சு பாஸானதெல்லாம் பெரிய விஷயம் தான். ஆனால் நம்மாளு அதோட நிப்பாட்டல.

இங்கதான் சாதாரண வெற்றியாளனுக்கும் சரித்திரம் படைக்கிற வெற்றியாளனுக்கும் ஒரு difference.

அப்படித்தான் TNPSC போட்டித் தேர்வுக்கு Prepare பண்ண ஆரம்பிக்கிறாரு.

‘‘When you truly want something, இந்த முழு பிரபஞ்சமும் அதை அடைவதற்கு உதவி செய்யும்னு’’ Paulo Coelho சொல்ற மாதிரி, நம்மாள சிரிச்சு கேலி பண்ணவங்க முன்னாடி அவரோட திறமையை நிரூபிக்க முழு பிரபஞ்சமும் உதவி பண்ண ஆரம்பிச்சுச்சு.

ஆமாங்க, TNPSC பரீட்சைக்கு கேள்வியெல்லாம் 6வதுல இருந்து 12வது வரை உள்ள Book-ல இருந்துதான் கேட்பாங்க. நம்மாளு தான் 50-100 தடவை கிழிச்சு, கிழிச்சு படிச்சுதான பாஸ் பண்ணாரு. அதனால TNPSC Examல லட்டு மாதிரி பாஸ் பண்றாரு.

ஒரு வெற்றியாளனுடைய மிகப்பெரிய தகுதி என்னான்னா, சும்மா ெஜயிச்சிட்டோம்னு காலரைத் தூக்கி விட்டு நடக்கிறதுல இல்ல. ஒரு வெற்றிக்கப்புறம் தன்னோட தகுதியை இன்னும் வளர்த்துகிட்டு அடுத்த இலட்சியத்தை அடையுறதுல இருக்கு.

அதனால அடுத்து TNPSC Group I படிக்க ஆரம்பிச்சு அதுலயும் வெற்றி அடையிறாரு நம்மாளு. ஒவ்வொரு தடவை ெஜயிக்கும் போதும் அடுத்த இலக்கை அடையணும்னு தூண்டிவிட, இந்த முறை TNPSC Group I Pass பண்ணதுக்கு அப்புறம் என்ன பண்றது room போட்டு யோசிக்க, அப்ப வருது ஒரு யோசனை. ஒரு IAS Book-ஐ புரட்டிப் பாத்ததுக்கு எவ்வளவு அவமானப்படுத்துனாய்ங்க, ஏன் நம்ம IAS படிக்கக் கூடாதுன்னு.

மக்களே… நம்மள பாத்து இவன் எதுக்கும் லாயக்கில்லைனு ஏளனமா சிரிக்கிறவங்களுக்கு நம்ம கொடுக்கிற பதிலடி என்னான்னு தெரியுமா? நம்மளால எதை முடியாதுன்னு நெனச்சாங்களோ, அதை சாதிச்சுக் காட்றதுதான்…

அதைத்தான் செஞ்சாரு நம்மாளும். Civil
Service Exam-க்கு படிக்க ஆரம்பிச்சாப்ல வெறித்தனமா. கஷ்டப்பட்டு படிச்சு மூணு முறை எழுதியும் பாஸாக முடியல. என்னான்னு யோசிச்சா நம்மாளுக்கு மூணு மணி நேரம் தொடர்ந்து எழுதி எல்லா question-க்கும் answer பண்ண முடியல. நான் முன்னாடியே சொன்ன மாதிரி when you truly want something, முழு பிரபஞ்சமும் உதவி மட்டுமல்ல, சதியே செஞ்சு நம்மளுக்கு help பண்ணும். அது மாதிரித்தான் நம்மாளுக்கும் பிரபஞ்சம் help பண்ணுச்சு.

எப்படின்னா… தாரே ஜமீன்பர் சினிமாவுல அந்த சின்னப் பையனுக்கு படிப்பு வராது. ஆனா, படம் வரையுறதுல பலே கில்லாடி. நம்மாளும் அதே categoryதான். 3D படம் வரையுறதுல பலே கில்லாடி. நாலாவது முறை Civil Service தேர்வுல நிறைய படம் வரைஞ்சு எழுதலாம்னு ஒரு idea வர, அது super-ஆ click ஆச்சு. இந்த முறை எல்லா question-ஐயும் இந்த புது ideaவ use பண்ணி time-ல எழுதி முடிக்கிறாரு. அப்புறம் என்ன Civil Service Pass. 2005-ஆம் ஆண்டு Civil Service தேர்வுல 334-வது rank எடுத்து இந்திய வருவாய்ப் பணி (IRS)ல வெற்றி பெற்றாரு நம்மாளு.

6வது கூட பாஸ் பண்ண முடியாத, xerox கூட எடுக்க முடியாத மக்கு, IRS ஆயி, ஊரே மூக்கில விரல வக்கிற அளவுக்கு வளர்ந்து நின்னுச்சு.

இதுல highlight என்னான்னா, IRS ஆனதுக்கப்புறம் இவரோட நிறைய motivational speech-ஐ எல்லாம் பாத்து ஒரு doctor தன்னோட பையன இவர்கிட்ட கூட்டிட்டு போயி, தயவு செஞ்சு என் மகனை IAS படிக்க guide பண்ணுங்கன்னு கேட்டாராம். அந்த doctor வேற யாரும் இல்ல, நம்மாள IAS புக்கை புரட்டிப் பாத்ததுக்கு அவமானப்படுத்துனாறே same ஆள்தான்.

கடவுள் இருக்கான் குமாரு…

வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளும், வெற்றிகளும் தோல்வியிலயும் அவமானத்துலயும் தான் பிறந்திருக்கு. என்னா ஒன்னு, அந்த தோல்வியையும் அவமானத்தையும் வெகுமானமா மாத்தப் பழகணும். அப்படி அவமானத்தை வெகுமானமா மாத்தி, கஷ்டப்பட்டு உழைச்சா வெற்றி நமதே!=