சமூகப் பார்வை – 41

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

மார்ச் 14- சர்வதேச நதிகள் தினம்

 

தொழிலுக்காகவும், உணவு சேகரித்தலுக்காகவும் அலைந்து கொண்டே இருந்த மனிதன், ஒரு கட்டத்தில் ஒரிடத்தில் தங்கியிருந்து விவசாயத்தில் ஈடுபட விரும்பினான், விவசாயத்துக்கு நீர் தேவை. நீரினைப் பெறுவதற்காகத் தமது இருப்பிடங்களை ஆற்றங்கரைகளில் அமைத்துக்கொண்டான். இவ்வாறு ஆற்றோரங்களில் தங்கி இருந்து உழவுத்தொழிலில் ஈடுபட்டதையடுத்துத்தான், நகரங்களும் அதன் தொடர்ச்சியாக நாகரிகங்களும் பிறந்தன. எகிப்திய நாகரிகம் நைல் ஆற்றையும், மெசபட்டோமிய நாகரிகம் டைக்ரீசு – யூப்ரடிசு ஆற்றையும், சிந்துவெளி நாகரிகம் சிந்து ஆற்றையும் மையப்படுத்தித் தோன்றியதாக வரலாறுகள் பேசுகின்றன.

கங்கை, யமுனை, நர்மதா, பிரம்மபுத்திரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் நம் தேசத்தினை வளமாக்கிக் கொண்டிருக்கின்றன. நம் தேசத்து ஆறுகளின் பெயர்கள் பெரும்பாலும் பெண்பால் சார்ந்தவை. ஆற்றினை மையப்படுத்திய முன்னோர் வழிபாடு உள்ளிட்ட சடங்கு முறைகளும் பண்டிகைகளும், விளையாட்டுகளும் நிறையவே உள்ளன. முக்கியமாக ஆறுகள் நம் உயிர்வாழ்தலின் ஆதாரம். ஆறுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதியன்று நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இன்றைய நிலை

ஆறுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை நாம் போதியளவு பாதுகாப்பதில்லை என்ற விமர்சனம் உண்டு. ‘Polluted River Stretches for Restoration of Water Quality, 2022’ என்ற தலைப்பில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் 30 மாநிலங்களில் ஓடும் 603 ஆறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் சென்னையில் உள்ள கூவம் ஆறு தான் இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த ஆறு என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் காவிரி, பவானி, அமராவதி, பாலாறு, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஸ்டா நதி, அடையாறு, கூவம் ஆகிய 10 ஆறுகள் அதிகபட்சமாக மாசடைந்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் அடையாறு, கூவம், மணிமுத்தாறு, வசிஸ்டா நதி ஆகியவை உயிரினங்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அமராவதி, பவானி, பாலாறு ஆகியவை சரி செய்யக்கூடிய முதல்நிலை பாதிப்பில் உள்ளதாகவும், இந்த ஆறுகளில் மாசு ஏற்படுவதைக் கண்காணித்துத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டெல்லி அறிவியல் சுற்றுச்சூழல் மையம் மற்றும் செய்தி நிறுவனங்கள் இணைந்து சுற்றுச்சூழல் தரவரிசை ஆய்வை நடத்தின. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இதன் அறிக்கையில், 2016ஆம் ஆண்டுக்குப்பின், சுற்றுச்சூழலில் தமிழகம் பின்தங்கியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் தமிழகம் 21வது இடத்தில் உள்ளது. இதற்கான அளவீட்டில் மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கையும் ஒரு அம்சமாக இருந்தது.

ஆறுகளின் அழிவு

மக்கள்தொகை பெருக்கமே ஆறுகளின் அழிவுக்குப் பிரதான காரணமாகிறது. ஆற்றினை மாசுபடுத்துதல், மணல் அள்ளுதல் ஆகியன ஆறுகளை அழிவின் எல்லையில் கொண்டுபோய் நிறுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 பில்லியன் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை, குப்பைகளைக் கடலுக்குள் கொண்டு செல்வதில் ஆறுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், விவசாய நிலங்களில் இருந்து மழைநீரோடு வரும் பூச்சிக்கொல்லிகள், மருத்துவக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள், தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுநீர், இறந்த விலங்குகள், கால்நடைப் பண்ணைகளில் இருந்து உருவாகும் கழிவுகள் போன்றவை ஆறுகளுக்குத் திருப்பிவிடப்படுவதால் ஆறுகள் மாசடைகின்றன. ஆறுகளில் நடைபெறும் துணி துவைத்தல், சமயம் சார்ந்த சடங்குகள் செய்தல், பிணங்களை எரித்தல் போன்ற செயல்களாலும் ஆறுகள் மேலும் மாசடைகின்றன. ஆற்றுநீர் மாசடைவதால் ஆற்றின் தன்மை பாதிக்கிறது. இதனால் படிப்படியாக நில மேற்பரப்பு நீர்வளம், நிலத்தடி நீர்வளம் இரண்டுமே கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன.

ஆற்றுமணலை வரைமுறையின்றி அள்ளுவதால் ஆறுகளின் தடையற்ற நீரோட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தின் ஆறுகளின் மரணத்துக்கு மணல் கொள்ளையே முக்கியக் காரணம்.

நீர் மாசுபாடு பாதிப்பு

தமிழகத்தில் காவிரி ஆற்றின் கரையில் உள்ள நகரங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரோடு, தோல் பதனிடுதல், சாயப்பட்டறைகள், காகிதம் தயாரித்தல் என இரசாயனம் தொடர்புடைய சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து தினசரி வெளியேறும் சுமார் 87,600 கியூபிக் மீட்டர் அளவிலான கழிவு நீர் காவிரியில் கலக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.

ஆறுகள் மாசடைவதால் மக்களின் உடல், மன ஆரோக்கியம் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகிறது. மாசடைந்த ஆற்று நீரினை உபயோகப்படுத்தும் மக்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு, சரும நோய்கள் எனப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். கங்கை ஆற்றில் புற்று நோயை உண்டாக்கும் மாசுகள் கலந்துள்ளன என்று தேசியப் புற்றுநோய் மையத்தின் ஆய்வு கூறுகிறது. கங்கை, யமுனை உள்ளிட்ட ஆறுகள் குளிப்பதற்குத் தகுதியற்றவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில் இயங்கிவரும் குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கூவம் ஆற்றின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அப்பகுதியில் வாழும் மக்களின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆற்றுநீர் மாசடைவதால் மீன்வளம் பாதிக்கிறது. மாசடைந்த நீரில் வாழும் மீனை உண்ணும் மக்களின் உணவுச்சங்கிலியிலும் விஷத்தன்மை நுழைகிறது. மேலும், மாசடைந்த ஆற்று நீரை அருந்தும் கால்நடைகளும் நோய்வாய்ப்படுகின்றன. ஆறுகள் மாசடைவதால் ஆறுகளின் கரையையொட்டி அமைந்துள்ள பகுதிகளின் நிலத்தடி நீரும் மாசடைந்து விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தகுதியற்றதாகி விடுகிறது. மாசடைந்த ஆற்று நீர் கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

அமராவதி ஆறு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் ‘ஆறுகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கொட்டப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும். ஆற்றுநீர் மாசடையும் போது நிலத்தடி நீரும் பயன்படுத்தத் தகுதியற்றதாகி விடுகிறது. நீரின் தரத்தைப் பாதுகாப்பதில் அரசு எந்தச் சமரசமும் செய்து கொள்ளக் கூடாது’ என்று அறிவுறுத்தினர்.

அரசு திட்டம்

நதிகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆறுகள் மாசடைவதை கட்டுப்படுத்த ரூ. 6,248.16 கோடி மதிப்பீட்டில் பதினாறு மாநிலங்களில் உள்ள முப்பத்தாறு ஆறுகளின் கரைகளில் உள்ள எண்பது நகரங்களில் நாளொன்றிற்கு 2,745 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் அடங்கும்.

ஆறுகள் ஏன் தேவை

குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு ஆறுகள் தண்ணீரை வழங்குகின்றன. அனைத்து ஜீவராசிகளுக்கும், வாழ்க்கையின் அனைத்து மேம்பாட்டுக்கும் நீர் தேவை. அதனைத் தருவது ஆறுகள்தான். ஆறுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவை, ஆறுகள் மதிப்புமிக்க இயற்கை வளம். தாதுக்கள் நிறைந்த வண்டல் மண்ணை எடுத்துச் செல்வதன் மூலம் மண் வளத்தை உறுதி செய்கின்றன. மின்சாரத்தை உருவாக்க பயன்படுகிறது. மனிதர்களின் உணவுக்கான மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் தேவையையும் ஆறுகள் பூர்த்திச் செய்கின்றன.

ஆறுகள் பல்லுயிரியலை ஆதரிக்கின்றன, மீன், பூச்சிகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடங்களை வழங்குகின்றன. கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி சேமிப்பதன் மூலம் உலகளாவிய காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை முக்கியமான கலாச்சார மற்றும் ஆன்மீக வளங்களாகவும் உள்ளன. பல பழங்குடி சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் கலாச்சார மரபுகளுக்காக ஆறுகளை நம்பியுள்ளன. மேலும், நீச்சல், படகுப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுகளும் ஆறுகளில் நடத்தப்படுகின்றன. நீர் வழிப் போக்குவரத்தும், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது.

என்ன செய்யலாம்

ஆறு உள்ளிட்ட நீராதாரங்களைக் காக்க அரசின் சட்டங்களும், விதிமுறைகளும் ஏராளமாக இருக்கின்றன. ஆனாலும் அவையெல்லாம் பல நேரங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை, பெரும்பாலான ஆறுகளில் ஆண்டுக்குக் குறைந்தது ஆறு மாதங்கள் நீர் ஓடும். நீர் வற்றிய போதும், கால்நடைகளுக்கும் அன்றாடத் தேவைகளுக்கும் போதுமான தண்ணீர் இருந்தது. ஆற்றின் அருகே விவசாயிகள் சிறுசிறு விவசாயம் செய்வார்கள். இன்று ஏதுமில்லை. நதிகள் பாதுகாக்கப்பட்டு, சிந்தனையுடன் பயன்படுத்தப்பட வேண்டுமானால், நதி மேலாண்மையை நிர்வகிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும். . கழிவுகள் ஆற்றில் கலக்காமலிருப்பதற்கான விதிமுறைகளைத் தொழிற்சாலைகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். அரசும் அதனைக் கண்காணிக்க வேண்டும். ஆற்றினைக் காக்க அரசுக்கு மட்டுமல்ல நமக்கும் பங்குண்டு.

மாணவர்களே!

உலகில் மிக அரிதாகக் கிடைக்கும் பொருள் தண்ணீர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீடுகளில் சேரும் குப்பைகளைக் குப்பைக்கொட்டும் இடங்களில் சேருங்கள். ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் போடாதீர்கள். நீர் நிலைகளில் போடப்படும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுங்கள். மாதம் ஒரு குறிப்பிட்ட நாள் ஆற்றின் கரையோரத்தில் ஒரு விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளுங்கள். ஆற்றின் முக்கியத்துவத்தைக் கரையோர மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதுபோன்ற பயணம் வெளிநாடுகளில் பல ஆறுகளை உயிர்த்தெழச் செய்திருக்கிறது.

பள்ளிகளில் பல்வேறு அமைப்புகள் இருப்பதுபோல “வாட்டர் கிளப்” என்ற அமைப்பையும் பள்ளி நிர்வாகத்தினர் தொடங்கவேண்டும். இந்த அமைப்பானது பள்ளிக்குள்ளும், பள்ளியினைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள மக்களுக்கும் நீர் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மூலம் ஏற்படுத்தவேண்டும். ஆற்று நீர் மாசுபாடு என்பது ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. இந்த நிலையை மாற்ற மாணவர்களால், இளைய தலைமுறையால் சாத்தியம். செய்யுங்கள். மனிதனின் இருப்பை நிலைநிறுத்துவதில் ஆறுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆறுகளின் இருப்பினை உறுதிசெய்வது நமது கடமை.=