சாதனையாளர் பக்கம்
மதுரை ஆர். கணேசன்
கற்க வேண்டுமா கற்றுக்கொள்! எங்கிருந்தும் எல்லாவற்றையும்; அத்தோடு கற்றவையெல்லாம் பிறருக்கும் கற்றுக்கொடு எல்லோருக்கும், அதற்கு மனமது செம்மையானால் போதும்..!
சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுற்றி வரும் போது, சிவபுரம் புத்தக விற்பனை அரங்கில் ஒரு சிறுவன் வெள்ளை சட்டை, வேட்டி மின்ன, கையில் புத்தகங்களை வைத்துக் கொண்டு எல்லோரிடமும் புத்தகங்களை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். காரணம், அவைல்லாம் அவன் எழுதிய புத்தகங்கள் என்பது கவனிக்கத்தக்கது..!
அச்சிறுவனின் நெற்றியில் திருநீறு பட்டை, நெஞ்சில் ருத்ராட்சக் கொட்டை, ஆன்மிகம் கமழும் புன்னகை நம்மை மட்டுமல்ல அனைவரது உள்ளமும் கவர்ந்த கள்வனாக மாறியிருந்தான்.
அங்கு வந்திருந்த பெரும் பாலோனார்கள் சிறுவனின் முதுகில் தட்டிக் கொடுக்கிறார்கள் “…இந்தக் காலத்துல பசங்கயெல்லாம் போனும் கையுமாக இருப்பாங்க. ஆனால் நீங்க இந்த வயசுல சிவதொண்டுடன் புத்தகங்களும் எழுதியிருக்கீங்க..” என்கிற மக்களின் நெகிழ்ச்சியான பாராட்டுக்களும் வாழ்த்துகளும் பெற்றுக் கொண்டிருந்தான்.
சென்னையில் உள்ள சிவபுரம் அறக்கட்டளையில் குருகுலக் கல்வி பயின்ற மாணவன் எஸ்.சிவகவி கலசனுக்கு 13 வயது ஆகுகிறது; சிவபாத பூஜை செய்து பத்து வயது முதல் கவிதைகள் எழுதத் தொடங்குகிறான். கவியை பார்த்தும் கேட்டும் பலர் பாராட்டி ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.
“..உண்மைக்கு ஒளியூட்டும் திருவாசகம், உணர்வுக்கு மருந்தாகும் திருவாசகம், அறிவூட்டும் ஆற்றல் திருவாசகம், ஊர் உலகம் போற்றும் திருவாசகம்…” இப்படியான கவிதை வரிகள் கலசனிமிடருந்து கனிந்து மலர்ந்திருக்கிறது.
ஒரு கவிஞனாக பிராவாகம் எடுத்ததில் “..கலசம் வருகிறது என்கிற கவிதைத் தொகுப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘நெஞ்சே ஒரு தாளாக’, ‘அடியேனை ஆண்ட இன்பொருளே’, ‘வானத்தை வாழ்த்தி விட்டு உறங்கினேன்..” போன்ற கவிதைப் புத்தகங்களை எழுதியிருக்கிறான்.
சிவபுரம் அறக்கட்டளையின் மந்திரம் “..கற்பதனால் அறிவு வளராது; அறிவிருந்தால் எதை வேண்டுமானாலும் கற்கலாம்..” என்கிற மெய்யறிவுக் கூற்றுப்படி பதிமூன்று வயது வரை சிவகவி கலசன் இந்த குருகுலத்தில் கற்றுக் கொண்டிருக்கிறான்.
சிவகவி கலசனைப் பார்க்க பக்திப் பழமாக ஜொலிக்கிறான், ஒவ்வொரு முறையும் யாரிடமும் பேசும் போது “..ஐயா நமச்சிவாயம் சொல்லுங்கய்யா..” குழைந்து பேசுகிறான்.
கவிஞர், சிலம்பாட்டம் தவிர ஆன்மிக நாடகங்களில் நடிக்கிறான். பிரசங்கம் பண்ணுகிறான் மற்றும் பியானோ வாசிக்கிறான்; அறம் அன்பு, ஒழுக்கம் சொல்லாமல் சொல்லித் தருகிறான்..!
சிவபுரம் அறக்கட்டளையின் குருவாக ஒளிர்கிற சிவபுரம் ஐயா தம்பிரான் தோழர் கபிலனார் அவர்களின் ஆசிபெற்றிக்கும் சிவகவி கலசன் ஓவியர் டிராஸ்கி மருது போன்ற பல்வேறு பிரபலங்களின் அன்பினையும் பெற்று வருகிறான்.
திருவாசகம் 24 ஆவது பதிகத்தில் அடைக்கலப்பத்து என்ற தலைப்பில் இடம் பெறும் “..வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால் பொறுப்பவனே அராப் பூண்பவனே..” என்கிற கலவைப் பாடலைப் பாடி அதற்குப் பொருளையும் சொன்ன போது கேட்க இனிமையாக இருந்தது. திரு வாசகத்திற்கு உருகாதோர் யார் இருக்க முடியும்..?!
இனி நம்மோடு எஸ்.சிவகவி கலசன்…,
“..நமச்சிவாயம் நான் குருகுலத்தில் தங்கி சுதந்திரமாக கல்வி கற்றுக் கொண்டேன். கடந்த 2023 ஆண்டில் அரசு சார்பாக நடத்துகிற எட்டாம் வகுப்புத் தனியார் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இந்த வருடம் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத ஆயத்தமாகி வருகிறேன்.
நான் என்னுடைய குழந்தைப் பருவத்துக்குரிய எதையும் இழக்கவில்லை, குறைக்கவும் இல்லை, அதேபோல வழக்கமாக பத்தோடு பதினொன்றாக இருக்கவும் விரும்பவில்லை.
எனது ஆசை கவிதைகள் எழுதுவது மூலம் மிகப்பெரிய கவிஞர் ஆக வேண்டும். அதன் வழியாக எழுச்சிமிக்க தலைவன் ஆகவேண்டும்.
ஈசனையும் எம்தமிழையும் எக்காலமும் மறக்காமல் மனதில் பதிய வையுங்கள்; வாழ்க்கை என்பது அறத்துடன் வாழ்வதே என்ற எங்கள் குருநாதரின் கொள்கையாகும் அதன்படி வாழ்கிறேன் வளர்கிறேன் எனக்கு ஆசி வழங்குங்கள்…”
பெற்றோர் கு.குழகனார் சபரீஷ், சிவதாபிரதீபா இணைந்து பகிர்ந்து கொண்டார்கள்…,
“..சிவபுரத்தில் குழந்தைக் கூத்தன் முன் அமர்ந்து போற்றிப் பாடிக் கொண்டிருக்கும் போது எனக்கு ஒரு தொப்புள் கொடி அதன் கீழ் ஒரு பை அந்த பைக்குள் ஒரு குழந்தை இருப்பதைப் போல் காட்சி தெரிந்தது.
இதைப் பற்றி ஐயாவிடம் சொன்னதற்கு கூடிய சீக்கிரம் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றார். அவர் கூறியது போல் கருவறை வாசம் பாடி பிறந்த குழந்தை தான் கலசன்.,
கலசன் பிறந்தவுடன் அவனைப் பார்க்க வந்த எனது குரு பத்தினி சத்யாம்மா அவர்கள், அவனைப் பார்த்துவிட்டு ‘‘இவன் தான் இந்த ஊரையே கூட்டி வருவான்’’ என்றார்.
குழந்தையாய் இருக்கும் போதே பிறர் மேல் அன்பாகவும், விட்டுக் கொடுத்தும் எல்லோரிடமும் பேதமின்றி பழகும் இனிமையானவன். நகைச்சுவை மிகுந்தவன். குழந்தைகளிடம் நேசமாகவும் அவர்களுக்கு பிடித்தபடி அவர்களுடன் சேர்ந்து விளையாடுவான்.
குழந்தைகளுக்கு அவனை மிகவும் பிடிக்கும். இவனுக்கும் இவன் அக்கா அண்ணனுக்கும் வாட்டர் பாட்டில் ஒன்றை சத்யாம்மா வாங்கிக் கொடுத்தார். சிவபுரன் என்ற குழந்தை அதை வேண்டும் என்று கேட்டான் மற்ற இருவர் தயங்க இவன் உடனே தன்னுடையதை தந்து விட்டான்.
இயற்கையையும் இயல்பான வாழ்வையும் மிகவும் விரும்புவான். தனிமையை மிகவும் தேடுவான். தனிமையான சூழலில் கவிதை எழுத விரும்புபவன், இயற்கையை மிகவும் விரும்பி அவன் எழுதிய கவிதையே தென்னை மர தோப்பினிலே.,
பூஜை (அபிஷேகம்) செய்யும்போது ஆத்மார்த்த ஈடுபாடுடனே செய்வான். திருவாசகம் முழுவதும் மனப்பாடமாகப் பாடுவான். மேலும் சிவபுரத்தில் நடக்கும் திருவாசக முற்றோதலின் போது, பாடலுக்கு தாள வாத்தியம் வாசிப்பதோடு சங்கு நாதமும் எழுப்புவான்.
கைலாய வாத்தியம் வாசிப்பதில் ஆர்வம் உடையவன். பாட்டுக்கு பாட்டு என்ற விளையாட்டை திருவாசகப் பாடல்களை வைத்து விளையாடுவான். விளையாடும் போது கூட தேர்கட்டி சுவாமி வைத்து இழுத்து விளையாடுவான்.
ஆருத்ரா தரிசனம் முடிந்து குழந்தை குத்தன் திருவீதி உலா நடைபெறும். சுமார் காலை 7 மணி அளவில் ஆரம்பித்து இரவு 8 மணி வரை நடை பெறும் திருவீதி உலாவில் தீபத்தட்டுடன் சோர்ந்து போகாமல் ஆராதனை தட்டேந்தி அர்ச்சனை செய்து பிரசாதம் தருவான்.
குழந்தை கூத்தன் பற்றியும், மாணிக்கவாசகர் பற்றியும் வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்வான். ‘‘உன்னை பார்த்தால் இறைவனைப் பார்த்தது. போல் இருக்கிறது’’ என்று கூறி இவன் காலில் சிலர் விழுவர். பலர் இவனுக்காக அன்பளிப்பும் தந்துள்ளனர்.
தனது குருநாதர் மேல் அன்பும் நேசமும் மிகுந்த பக்தியும் கொண்டுள்ளான். ஒருமுறை ஐயா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது அய்யாவை தேடி அய்யாவின் அறைக்குச் சென்ற கலசன், கட்டிலில் ஐயா இல்லை என்பதை பார்த்து மயங்கி விழுந்தான். அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஐயாவை காண்பித்த பின்னரே சரியானான்.
ஐயாவின் வழிகாட்டுதலினால் பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைப் புத்தகங்களை விரும்பிப் படிப்பான். அவனுக்குள் இருந்து கவிதை வரிகள் தோன்றும், அவற்றை உடனே செல்போனிலேயே தட்டச்சு செய்து வைப்பான்.
இசையில் ஆர்வம் கொண்ட கலசன் பியானோ வகுப்பிற்கு சென்று பியானோ பயின்றுள்ளான். தமிழ் வீரக்கலை பயிலகம் சென்று மாஸ்டர் ஆர். சௌந்தர்ராஜன் என்ற குருவிடம் சிலம்பம் பயின்றான். மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாவது பரிசையும் வென்றிருக்கிறான்.
பிறர் தன்னிடம் உள்ள ஏதேனும் பொருளை வேண்டும் என கேட்டால் சற்றும் தயக்கமில்லாமல் தந்துவிடுவான்.
சிவபுரத்தில் நாயன்மார் வரலாற்று நாடகம், சிறுவர் நாடகம் போன்றவற்றில் நடித்து எல்லோருடைய ஏேகாபித்த பாராட்டுகளையும் பெற்றிருக்கிறான்.
கவிதை எழுதுவதில் மட்டுமல்லாமல், கவிதைகளைத் தட்டச்சு செய்து பேஜ் மேக்கரில் புத்தக வடிவாக்கம் செய்வான். அத்துடன் புத்தகம் முழுமையாக வடிவம் பெறும் சிரத்தையுடனும் செய்து முடிப்பான்.
ஒருமுறை அய்யாவிடம் கலசன் சென்று என்னுடைய அம்மா அப்பா அன்பு இல்லாதவர்கள் என்று வருந்தினான் அப்போது ஐயா அவனிடம் மனிதர்களை நம்பாதே இறைவனை மட்டுமே நம்பு என்று கூறினார் அய்யாவின் வார்த்தைகளால் தெளிவடைந்த கலசம் பண்படு என்ற கவிதையை எழுதினான்.
ஐயா கலசனுக்கு குழந்தை கூத்தன் பாதுகையை சிரசின் மேல் சூட்டி தீட்சை வழங்கினார்.
சிவபாத பூஜை ஞாயிறுதோறும் சிவபுரத்தில் நடைபெறும். சிறப்பு பூஜை ஒரு நாள் ஐயா கலசனை அழைத்து ‘‘சிவபாத பூஜை போற்றியைப்
பாடு’’ என்று கூறினார்.
போற்றிப் பாடி பாடி திருவருள் சாரலில் நனைந்த கலசனுக்கு சிவபெருமான் கொடுத்த சிறப்பு பரிசு தான் கவிதை புனையும் ஆற்றல். அன்று முதல் கலசன் பல கவிதைகளை எழுதத் தொடங்கினான். சிவபெருமானும், இயற்கையும், மனித இயல்புகளும் பாடும் பொருள் ஆயின.
ஆனித் திருமஞ்சனம் நடராஜர் அபிஷேகத்தில் திருக்கலச நீரை சுமந்து வரும் பாக்கியம் பெற்றான் கலசன். அந்த கலசத்தை சுமந்து வரும்போது கலசத்தை வரவேற்க கவிதை ஒன்று எழுத வேண்டும் என ஐயா கூறினார். உடனே கலசன் ஒரு கவிதை எழுத ஐயா கலசனை வாழ்த்தி ‘சிவகவி கலசன்’ என பெயர் சூட்டி ஆசீர்வதித்தார்..”
இளம் வயதிலேயே இறை பக்திேயாடும், கவிபாடும் கலைஞனாகவும் ஜொலிக்கும் ‘சிவகவி கலகன்’ ெமன்ேமலும் உயர்ந்து, செழித்து, மலர ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது. =