சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 03

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

குடிபோதைக்கு அடிமையாகிப் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அந்த மனிதர். இப்போதும் அவர் உயிருக்குப் போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சில மருந்துகள் தொடர்ச்சியாகத் தரப்பட்ட பின்பு இன்று கண்விழித்துப் பார்த்தார். அருகில் நின்ற மருத்துவரிடம், ‘‘டாக்டர், நான் இங்கே இப்போது எத்தனையாவது முறையாக வந்துள்ளேன்?’’ என்று கேட்டார். மருத்துவர் உடனடியாக ‘‘ஐம்பதாவது முறை பில் வில்சன், அதாவது நீங்கள் அரை சதம் அடித்துச் சாதனை புரிந்துள்ளீர்கள்?’’ என்று வருத்தமுடன் சொன்னார்.

தொடர்ந்து மருத்துவர் பில் வில்சனிடம், ‘‘ஆனால், நீங்கள் தொடர்ந்து உயிர் பிழைத்துச் செல்ல வழியில்லை என்று உங்கள் உடல் ஆய்வுகள் சொல்கிறது. அனேகமாக இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் உயிர் பிரியலாம்’’ என்று வேதனையோடு தன் மருத்துவக் குறிப்பைச் சொன்னார் மருத்துவர்.

பில் வில்சன் சோகமாகத் தன் முகத்தை ைவத்துக் கொண்டு, ‘‘அப்படியா, நான் இறப்பது நிச்சயம் என்றால், நான் இன்னும் ஒரு முறை குடித்தால் என்ன?’’ என்று தன் மதுப்பழக்க அடிமைத்தனத்தின் உச்சியிலிருந்து கேட்டார்.

மருத்துவர் அவரிடம், ‘‘அதில் ஒன்றும் தவறில்லை. உங்கள் ஆசையை நிறைவேற்றலாம். காரணம் நீங்கள் பிழைக்க வாய்ப்பு இல்லை. ஆனால், எங்களுக்கு உங்களிடம் ஒரு உதவி தேவைப்படுகின்றது. அதை மறுக்காமல் செய்ய முடியுமா?’’ என்று கேட்டார்.

பில் வில்சன், ‘‘என்ன உதவி?’’ என்று கேட்டார். மருத்துவர் அவரிடம், ‘‘உங்கள் அறைக்குப் பக்கத்தில் ஒரு இளைஞன் உங்களைப் போல குடிபோதைக்கு உட்பட்டு, சிகிச்சைக்கு வந்திருக்கிறான். உங்களுடைய கொடூரமான வாழ்க்கை நிலையை நீங்கள் அவனுக்கு எடுத்துச் சொன்னால், மதுவின் கொடுமைகளை அவன் உணர்ந்து கொள்ள முடியும். அதன்பிறகு அவன் வாழ்நாள் முழுவதும் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற்று நல்வாழ்வு வாழலாம். அவனைத் திருத்தும் சக்தி உம்மிடம் இருந்து வரவேண்டும். நீர் சொல்லும் வேதனை மிக்க சூழல்கள், அவனை மனம் மாற்றினால் மகிழ்ச்சியடைவோம்’’ என்று கூறினார்.

பில் வில்சன், ‘‘அப்படியா, அவனுக்கு நான் அறிவுரை தர முயற்சிக்கின்றேன். ஆனால், அவனைச் சந்தித்துவிட்டு நான் வரும்போது எனக்கு ஒரு கோப்ைப மது வேண்டும்’’ என்று கூறி, அவனைச் சந்திக்கச் சென்றார்.

அடுத்த அறையிலிருந்த அந்த இளைஞனைச் சந்தித்தார் பில் வில்சன். அவன் தன் எதிர்காலம் சீரழிந்துவிட்டதாகவும், தன் வாழ்க்கையே நிர்மூல மாகிவிட்டதாகவும், வாழவே விருப்பமில்லை என்றும், அதனால் குடிப்பதாகவும் புலம்பினான்.

பில் வில்சன் ஒரு சில நிமிடங்கள் யோசித்தார். ‘‘மது உன்னை ஆக்கிரமித்துள்ள ஒரு புற ஆற்றல். இன்னொரு ஆற்றலால் தான் உன்னைக் காப்பாற்ற முடியும். அது கடவுளாக இருக்கலாம், அல்லது நீ விரும்பும் ஒரு நபராகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்கு நீ ஒத்துழைப்புத் தர வேண்டும்’’ என்று கூறிவிட்டுத் தன் வாழ்க்கைச் சீரழிவை அவனிடம் எடுத்துச் சொன்னார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனிடம் இறுதியாக, ‘‘எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்துவிடு. கடவுளை நம்பு, அவர் உன்னைக் காப்பாற்றுவார்’’ என்று கூறிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பினார்.

அந்த இளைஞனைச் சந்தித்து விட்டு வரும்போது ஒரு கோப்பை மது வேண்டும் என்று மருத்துவரிடம் சொன்னதை மறந்து விட்டிருந்தார் பில் வில்சன். அறைக்குத் திரும்பிய அவருடைய காதுகளில், அந்த இளைஞனிடம் அவர் பேசிய வார்த்தைகளும், நம்பிக்கை மொழிகளும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. தன்னையே அவர் ஊக்கமூட்டிக் கொண்டதாக உணர்ந்தார்.

அந்த இளைஞனிடம் இறுதியாகச் சொன்ன அந்த வார்த்தை, ‘‘கடவுளை நம்பு, அவர் உன்னைக் காப்பார்’’ என்பது தன்னையே, இதோ இன்னும் சில நாட்களில் இறக்கப்போகும் தன்னைக் காப்பாற்றாதா? என்று சிந்தித்தார்.

அப்போது தன் வாழ்க்கை முழுவதையும் அசைபோட்டுப் பார்த்தார். பில் வில்சன், எமிலி மற்றும் பரோஸ் வில்சன் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். அவரது தந்தை வழித் தாத்தா வில்லியம் வில்சனும் மதுவுக்கு அடிமையானவர்தான். ஆனால், ஒரு மதபோதகரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, ஒரு ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார். அதன்பிறகு, அவர் மது அருந்தவில்லை என்பதை நினைத்துப் பார்த்தார்.

பெற்றோர்களால் இளம் வயதில் ைகவிடப்பட்ட பில் வில்சனும், அவரது சகோதரியும் தாய்வழிப் பாட்டி, தாத்தாவால் வளர்க்கப்பட்டனர். பள்ளிக் கல்வியின் போது அதிகம் சேட்டை செய்பவராக இருந்தார். பின்பு உயர்நிலைப் பள்ளியில் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தார். அதன் இசைக் குழுவில் முதன்மையான வயலின் கலைஞராகவும் இருந்தார். அதே சமயம் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டார்.

1916ஆம் ஆண்டில் பீரங்கிப் படை அதிகாரியானார். அங்கு இராணுவப் பயிற்சியின் போது இரவு விருந்துக்குச் சென்ற போது முதன்முதலில் ‘பீர்’ குடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து சில நாட்களில் வேறு ஒரு விருந்தில் மதுபானம் குடித்தார். இந்நிலையில் 1918ஆம் ஆண்டு லோயிஸைத் திருமணம் செய்து கொண்டார். முதலாம் உலகப் போரின் போது கடற்கரை பீரங்கிப் படையின் 2-வது லெப்டினன்டாகப் பணிசெய்தார்.

சட்டம் பயிலச் சென்றார். குடிபோதையில் இருந்ததால் அவருக்குச் சட்டம் சார்ந்த டிப்ளமோ மறுக்கப்பட்டது. குடிப் பழக்கத்தை  விட்டு விலக வேண்டும் என்று ஆசைப்பட்டார். பங்கு வர்த்தகத்தில் பயணங்களை மேற்கொண்டார். நல்ல இலாபம் கிடைத்தது. சுகமான வாழ்க்கையும் கிடைத்தது. ஆயினும் தன் குடிப்பழக்கத்தால் பல இழப்புகளை வணிகத்தில் சந்தித்தார். குடிப்பழக்கத்திலிருந்து மீள நியூயார்க் நகரின் சார்லஸ் பி. டவுன்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். பல முறை மருத்துவ உதவி பெற்றும் திருந்தாமல் வாழ்ந்ததால் அன்று இறப்பின் விளிம்பில் நிற்பதாக உணர்ந்தார்.

பில் வில்சன் தன் வாழ்க்கைப் பாதையில் தடுமாறி விழத் தன் குடிப்பழக்கமே காரணம் என்பதை முழுமையாக உணர்ந்தார்.

இறப்பதற்கு முன்பு திருந்தி வாழ வாழ்வு கிட்டுமா? என்று ஏங்கினார். மருத்துவமனையில் இதைப் பற்றி அவா் சிந்தித்த அச்சமயம் அவரிடம் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ‘‘இனிக் குடிப்பதில்லை’’ என்று முடிவெடுத்தார். அன்றோடு தன் குடிப்பழக்கத்தை நிறுத்தினார். நலம்பெற்று வீடு திரும்பினார்.

இந்தச் செய்தியறிந்த ஆக்ஸ்போர்டு குழுமத்தைச் சார்ந்த எபி தாச்சர் வில்சனைச் சந்தித்து அவர் குடிபோதையிலிருந்து, தொடர்ந்து மீண்டுவர வழிகாட்டினார். சார்லஸ் பி. டவுன்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி அவரைக் கண்காணிக்க வழிகாட்டியதும் இந்த எபி தாச்சர் தான்.

இப்போது மனமாற்றம் அடைந்த பில் வில்சன், தன்னைப் போலவே குடிபோதைக்கு ஆட்பட்டு, கஷ்டப்பட்டுத் திருந்திய அமெரிக்க அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர். பாப் ஸ்மித் என்பவரோடு இணைந்து 1935ஆம் ஆண்டு ‘‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.

இந்த இயக்கத்தின் நோக்கம், குடிபோதைக்கு ஆட்பட்டவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்தி, அவர்கள் வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வருவதேயாகும்.

ஒரு இளைஞனைத் திருத்தச் சென்ற பில் வில்சனின் வாழ்வுப் பயணம் மாறியதோடு, பல இலட்சம் மனிதர்களுக்கு நல்வாழ்வு தந்து கொண்டிருக்கும் ஒரு இயக்கத்தையும் தொடங்கிட அது காரணம் ஆகியது. ஒரு நற்செயல் மேலான பெரிய நற்செயலுக்கும் வழிகாட்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்று நிலவரப்படி இந்த ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (Alcoholic Anonymous (AA)) அதாவது ‘பெயரிடப்படாத குடிகாரர்கள் குழு’ என்று பெயர்கொண்ட இந்த இயக்கம் இன்று உலகளவில் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட குழுக்களைக் கொண்டுள்ளது. 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.

இந்த இயக்கத்தை மிகச் சிறந்த முறையில் உளவியல், இறையியல் மற்றும் ஜனநாயக முறையில் பில் வில்சன் எடுத்துச் சென்றார். வில்லியம் கிரிஃபித் வில்சன் என்பது இவரது முழுப் பொயர். இந்த ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA) அமைப்பை திடமாக உருவாக்கிச் சாதனை படைத்த பில் வில்சனை, புகழ்பெற்ற அல்டஸ் ஹக்ஸ்லி ‘‘நமது நூற்றாண்டின் மிகச்சிறந்த சமூகக் கட்டடக் கலைஞர்’’ என்று அழைத்தார்.

டைம் (TIME) இதழ் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான நூறு நபர்களின் பட்டியலில் பில் வில்சன் பெயரை வெளியிட்டது. ‘‘தனது கசப்பான அனுபவத்தின் மூலமாக, குடிப்பழக்கத்திலிருந்து மீளும் செயல்பாட்டு வழிமுறைகளைக் கண்டறிந்தவர்’’ என்று புகழ்ந்தது. 1941ஆம் ஆண்டில் நியூயார்க்கின் கட்டோனாவில் எட்டு ஏக்கரில் ‘ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ்’ என்று அழைக்கப்படும் வீட்டை வாங்கினார். அவரது செயல்பாடுகள் மற்றும் வாழ்வுப் பயணத்தைச் சித்தரிக்கும் தேசிய வரலாற்று அடையாளமாக 1912ஆம் ஆண்டிலிருந்து அந்த இல்லம் திகழ்கின்றது.

மாற்றம் தேவை

இன்று பல இளைஞர்கள் குடிப்பழக்கம், போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்வை இழப்பதை அன்றாடம் பார்க்கின்றோம், கேள்விப் படுகின்றோம்.

கொண்டாட்டங்கள் என்று வந்தாலே, குடிப்பது ஒரு தேவை என்ற ஒரு கலாச்சாரத்தை நமது இளைஞர்கள் கொண்டு வந்துள்ளார்கள். வீடுகளில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் மதுபானங்கள் ஒரு பகுதியாகிவிட்டது போன்ற சூழல் உலவி வருகின்றது.

பொதுவாக சுப காரியங்கள் நிகழும் போது மதுபானம் சாப்பிடுவது ஒரு தேவையான விஷயம் போன்ற சீரழிவுக் கலாச்சாரம் உருவாகி வருகின்றது. முதலில் கொஞ்சம் எடுக்கலாம், எப்போதாவது எடுக்கலாம் என்று தொடங்கும் இந்தச் செயல் பலரையும், அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களையும், உறவுகளையும் துன்புறச் செய்வதோடு, உறவுகள் முறிவதற்கும் காரணமாகின்றது.

பல இளைஞர்கள் மிகச்சிறிய வயதிலேயே இறப்பதற்கு காரணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும், புகைப் பழக்கத்தால் புற்றுநோய் வந்து சாவதும் கண் முன்னே பார்க்க முடிகின்றது.

பள்ளி, கல்லூரிகளில் மிக அதிகமாக மாணவ, மாணவிகளுக்கு இந்தப் போதைப் பழக்கம் பற்றிய விழிப்புணர்வு கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். சிந்திக்கவும், சிறகடிக்கவும், சாதிக்கவும் வேண்டிய இளைஞர்கள், தங்கள் விடுமுறை நாளில் குடித்துவிட்டு நேரத்தை வீணடிப்பதோடு, பல்வேறு பின்விளைவுகளையும் இதன் மூலம் பெற்று வேதனைப்படுகின்றார்கள்.

இவ்வுலகில் ரசிப்பதற்கு, சேவை புரிவதற்கு, மகிழ்வோடு வாழ்வதற்கு எண்ணற்ற காரியங்கள் இருக்கின்றன. இலக்குகளின் மீதான ஆசையை வளர்ப்பதற்குத் தான் நூல்கள் பலவும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இன்று வாசிப்புப் பழக்கத்தையே முடக்கிவிட்டு மாணவர்களை நாம் சிந்திக்க எப்படி அழைக்க முடியும்? பெரியோர்களின் சிந்தனைக் கருவூலங்களான நூல்கள், மனித வாழ்க்கையை மாண்புறச் ெசய்யக் கூடியவை. எனவே, வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவோம்.

நல்ல சிந்தனை செய்யும் மனமே நல்ல கனவு காணும், நல்ல கற்பனை செய்யும் மனத்திற்கு  நல்ல வாழ்வும் கிட்டும். குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தொடர்ந்து சிந்தனைக்கு உரமூட்டும் செயல்களை, நிகழ்வுகளை முன்னெடுத்தால், தீய பழக்கங்கள் குடிபுகாமல், திறமையோடு ஜொலித்து, நாட்டுக்கும் வீட்டுக்கும் நம் பிள்ளைகள் நன்மை தருவார்கள். =