வெற்றியோடு விளையாடு!  – 16

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

ளிமையான நல்ல குடும்பத்தில் பிறந்து இன்று பல ஏற்றங்களைச் சந்தித்து வருபவர். அதோடு தன்னிடம் பயிலும் மாணவர்களை வெற்றி மேடைகளில் ஏற்றிவிடும் ஏணியாகவும் இருக்கிறார் முனைவர் சாந்தி. தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர். தாய் தமிழ் ஆர்வம் உள்ள இல்லத்தரசி. இவரோடு பிறந்தவர் இரண்டு சகோதரிகள்.

மயிலாடுதுறை ஏ.வி.சி அரசு உதவிபெறும் கல்லூரியில் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர். வரலாறு மற்றும் பொதுத்துறை நிர்வாகவியல் பாடங்களில் முதுகலைப் பட்டங்களும், கூடுதலாக வரலாற்றுத் துறையில் எம்.ஃபில்., பி.எச்டி, பட்டங்களும் பெற்றிருக்கிறார்.

தன் துறை சார்ந்தும் தன் திறமை சார்ந்தும் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட விருதுகளையும், 180 க்கும் மேற்பட்ட வெற்றிச் சான்றிதழ்களும், 6 உலகச் சாதனை நிகழ்வில் பங்கேற்று சான்றிதழ்களும் பெற்றிருக்கிறார் என்பதே இவரது சாதனை. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது ஆச்சரியம்.

‘‘எப்படி முடிகிறது உங்களால்?’’ என்று கேட்டால் ‘‘கடின உழைப்புதான் எனது வெற்றியின் ரகசியம்’’ என்கிறார். ‘‘சிறு வயது முதலே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளே மேலோங்கியே இருக்கும்.

கடந்து போகும் காலம் மீண்டும் நம் வாழ்க்கையில் வராது என்பதை உணர்ந்து ஒவ்வொரு நாளையும் ஏதோ ஒரு பயனுள்ள வேலையில் செலவு செய்வேன்.நேரத்தை வீண் செய்வது என்பது  நான் விரும்பாத ஒன்று.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே பல போட்டிகளில் பரிசுகள் பெற்றேன். ஓவியம் வரைவதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு’’.

‘நாகை மாவட்ட ஆட்சியரிடம் மத நல்லிணக்க ஓவியம் வரைந்ததற்காக  முதல் பரிசு பெற்றேன்’ என்கிறார் பேராசிரியர் சாந்தி. கவிதை, பாட்டு, கட்டுரை, பேச்சு, நடனம்  பூத்தையல், கைவினைப் பொருட்கள் செய்தல், கண்ணாடி ஓவியம்,கோலம், வர்ணம் தீட்டுதல், சமையல் போன்ற கலைகளிலும் தனது திறமைகளை ஜொலிக்க விடுகிறார்.

‘‘இப்படி தொடர்ந்து இயங்குவதால் நீங்கள் களைப்படைவது இல்லையா?’’  என்று கேட்டோம்.

‘புத்தகங்கள் படிப்பதும்,  இசை கேட்பதும் எனது  பொழுது போக்கு.   அவை என்னை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கின்றன’ என்கிறார்.

‘‘பள்ளி ஆசிரியராக 10 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறேன்.  அப்போதெல்லாம் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவந்து பல பரிசுகள் பெற வைத்தேன்.  அதனால் எங்கள் பள்ளிக்கு  சிறந்த பள்ளிக்கான விருதினை மனித வள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கியது. அதுபோல  சென்னை  ராமகிருஷ்ண மிஷன் அளித்த சிறந்த பள்ளிக்கான ஊக்கப்பரிசினை நான் பணியாற்றிய  பள்ளிக்கு பெற்றுத் தந்திருக்கிறேன்.  மாவட்ட அளவில் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல  போட்டிகளில் மாணவிகளைத் தயார் செய்து முதல் இடம், இரண்டாம் இடம் பரிசு பெறச் செய்திருக்கிறேன். சிறந்த ஊக்குவிப்பு ஆசிரியர் விருதும் எனக்கு கிடைத்தது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் என்னுடைய சமூக அறிவியல் பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி அளித்தமைக்காக தமிழக அரசின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றிருக்கிறேன் .

கல்லூரியில் நிரந்தரப் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.  பலமுறை 100% தேர்ச்சி விழுக்காடு மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர், விடுதித் துணைக் காப்பாளர், பெண்களுக்கு எதிரான வன் கொடுமை தடுப்பு இயக்க உறுப்பினர், மன நல ஆலோசனை மைய உறுப்பினர், படிக்கும் போதே வேலை செய்து பயன் பெறும் திட்ட ஒருங்கிணைப்பாளர்
தொழில் முனைவோர் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர், தேர்வுக் குழு உறுப்பினர், கல்வி அலுவல் குழு உறுப்பினர், பாடத்திட்டக் குழு உறுப்பினர், புகையிலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், போன்றவற்றிற்கு பொறுப்பேற்று செய்து வந்துத்திருக்கிறேன்’’ என்று அவர் சொல்லும் போதே நமக்கு மூச்சு முட்டுகிறது. 

‘‘5 முறை தேர்தல்களில் தலைமை அதிகாரி (Presiding Officer) பொறுப்பினை சிறப்பாக செய்திருக்கிறேன்.

மாணவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை  சிறந்த முறையில் எதிர்கொள்ள போட்டித் தேர்வுப் படிப்பகம் வரலாற்றுத் துறையில் ஏற்படுத்தியிருக்கிறேன்.

இப்போதும் பல்வேறு தனியார் மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள் நடத்தும் கருத்தரங்குகள், போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்,சமீபத்தில் ஆஸ்திரேலிய  தமிழ் அமைப்பில் உலக சமாதானம் பற்றிப் பேசி வருகிறேன்.  செய்யும் செயல்களில் கிடைக்கும் வெற்றி என்னை உற்சாகமாக வைப்பதுடன்  என்னுடைய மாணவர்களையும் ஊக்கப் படுத்துகிறது.

அது மட்டுமல்ல என்னுடைய தாய் தந்தையர் பெயரில்  கல்லூரிக்கு  வழங்கிய நன்கொடை  மூலம் ஆண்டுதோறும் ஒரு மாணவர் பயன் பெறுகிறார். இது தவிர ஏழை மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணமும் செலுத்தி வருகிறேன்.
என் எல்லா பணிகளுக்கும் உறுதுணையாக என் கணவர் இருக்கிறார் என்பதை நான் இங்கே சொல்ல வேண்டும்.

நான் வாழும் இந்த சமூகத்திற்கு பயனாக  வாழ வேண்டும். என் மகனையும்  பிறருக்கு உதவியாக நன்மை செய்து வாழ வேண்டும்  என்று கூறுகிறேன்.

 என்னிடம் பயிலும் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு என் எதிர்கால செயல்திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறேன். என்னிடம் பயிலும் மாணவர்களின் வெற்றிதான் இனி என்னுடைய வெற்றி’’ என்கிறார்.

பேராசிரியர் முனைவர் ரு. சாந்தி அவர்களின் செயல் திட்டங்கள் வெற்றி பெற ஆளுமைச் சிற்பி வாழ்த்துகிறது. =