சாதனையாளர் பக்கம்
மதுரை ஆர். கணேசன்
பெங்களூருவில் உள்ள விண்வெளிப் பூங்காவில் “…போயிங் இண்டியா இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்ப மையத்தில் விண்வெளித்துறையில் பெண்கள் மேம்பாடு குறித்த போயிங் சுகன்யா திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி…” கடந்த ஜனவரி மாத இறுதியில் துவக்கி வைத்திருக்கிறார்.
பிரதமரின் திட்டத்திற்கு வலுவூட்டும் விதமாக அறிவியல் துறையில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகள், அவர்களது தொலை நோக்கு சிந்தனைகள் மற்றும் அறிவியலில் தனித்துவ ஆற்றல்கள் நாட்டிற்கான அடித்தளமாக நிச்சயமாக அமையும் என்பதில் மிகையில்லை..!
அந்த வகையில் தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் தாட்கோ (உமன் ஸ்கில் டெவலப்மெண்ட் புரோகிராம்) நிதியுதவியுடன் சென்னை IIITDM (Indian institute of information technology, design and manufacturing) யில் சமீபத்தில் நடைபெற்ற ஐஐடி மற்றும் போயிங் நேஷனல் ஏரோமாடலிங் காம்பெட்டிஷனில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றனர்..!
வானத்தில் ஏரோப்பிளேன் பறக்கும் காட்சியை ஆச்சர்யத்துடன் பார்க்கும் யாவரும் ஒருநாள் விமானத்தில் போக வேண்டும் என்று நினைப்பார்கள். அதுவே மாணவர்களாக இருந்தால் “..நான் விமானி ஆவேன், நான் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் ஆவேன்..” என்று லட்சியமாக நினைக்கக்கூடும்..!
அன்பு மாணவர்களே..! நீங்கள் விமானிகள் மட்டுமல்ல; உங்களால் விமானங்களையும் தயாரிக்க முடியும் என ஊக்கப்படுத்தியிருக்கிறது சென்னையைச் சேர்ந்த 360 பிளையிங் கிளப். இதன் மேனேஜிங் டைரக்டர் N.சுரேஷ்குமாரிடம் பேசினோம்…,
“…எங்களது 360 பிளையிங் கிளப் மூலமாக தமிழக அரசின் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தியதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, மாடல் ஏரோப்பிளேன் தயாரிக்கும் அறிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.
இந்திய தொழில் நுட்பக் கல்லூரி (IIT) மற்றும் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் (BOEING) நிறுவனமும் இணைந்து நடத்திய விமான வடிவமைப்புப் போட்டியில் அரசு ஆதி திராவிடப் பள்ளி மாணவிகள் தென்மண்டல அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிகளில் படிக்கும் 2033 மாணவர்களுக்கு முதலில் ஏரோ ஸ்பேஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினோம்.
ஒரு ஏரோப்பிளேனை வடிவமைத்துக் கொண்டு வரவேண்டும், அப்புறம் அந்த பிளேனுக்குள்ள லோடிங், அன்ட்லோடிங், சைஸ் மற்றும் மெக்கானிசம் பயன்படுத்தி பிளேன் தயாரிப்பது, மற்றும் தயாரித்த பிளேனை போட்டோ எடுப்பது, குறிப்பிட்ட நேரத்தில் நடுவர்கள் முன்னிலையில் செய்து காட்டுவது போன்ற பலகட்டப் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிக்கு 497 குழுக்கள் முதல் கட்டமாக பதிவு செய்ததில், 70 குழுக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. அந்த 70 குழுக்களில் 5 ஆதி திராவிடப் பள்ளி குழுக்களும் (4 ஆண்கள் குழுக்கள் +1 பெண்கள்குழு) தேர்வு செய்யப்பட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறினர்.
இரண்டாம் கட்டமாக ஜனவரி 4-ல் நடந்த போட்டியில் 25 குழுக்கள் தேர்வு செய்தபோது அடுத்த நாள் 5ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆதி திராவிடப் பள்ளி பெண்கள் குழு (Greats) தேர்ச்சி பெற்று, மூன்றாம் இடத்தைப் பெற்று பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து பெங்களுரூவில் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்காக நாலு மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.
முதன்மைக் கல்லூரி மாணவர்களுக்கிடையில் அரசு ஆதி திராவிடர் பள்ளி மாணவிகளின் வெற்றி என்பது தமிழ்நாடு அரசுக்கே கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ADW, தாட்கோ அத்துடன் எங்களது அமைப்பின் உறுப்பினர்கள், போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் அரசின் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனரை சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்த ‘கல்வி 40’ பிரேம் குமார் உள்பட அனைவர்க்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…”
எம்.பாத்திமா, 9ஆம் வகுப்பு அரசு ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளி, பாலவாக்கம், சென்னை,
“…சென்னை ஐ.ஐ.டி.,போயிங் நிறுவனம் ஏரோப்பிளேன் தயாரித்துக் காட்டுகிற போட்டிக்காக தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை முழு ஆதரவு தந்த 360 பிளையிங் கிளப் மூலமாக நானும் போட்டிகளில் கலந்து கொண்டு தேர்வானேன்.
எங்களுடன் போட்டி போட்ட கல்லூரி மாணவர்களைக் கண்டு முதலில் பயந்தோம். பின்னர் எங்களுக்கு சுரேஷ் சார், அருண், சுந்தர், அனஸ், மூன்று அண்ணன்கள் ஊக்கம் கொடுத்த காரணத்தினால் மூன்றாவது இடம் பெற்று வெற்றி பெற்றிருக்கிேறாம்.
இதன் மூலம் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து நடக்கும் இறுதி போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது.
என்னுடைய நோக்கமெல்லாம் இஸ்ரோவின் விஞ்ஞானி ஆகவேண்டும், அதற்கு இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவமே மேலும் ஆர்வத்தை அதிகரிக்கிறது…”
ஜெ. சிவ ஆசிகா, 10 ஆம் வகுப்பு, அரசு ஆதி திராவிடர் நல மேல் நிலைப்பள்ளி அனகாபுத்தூர், சென்னை,
“…எனக்கு IIT AND BOEING இணைந்து நடத்திய AERONAUTICAL போட்டியைப் பற்றி சுரேஷ்குமார் சார் கூறினார். அதற்கு பிறகு ஆர்வம் ஏற்பட்டது அறிவியலைப் படிப்பதற்கும் அதை நானே நேரடியாகச் செய்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
எங்களுடன் போட்டியிட்ட IIT மாணவர்கள் மத்தியில் நாங்கள் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள். அதனால் நாங்கள் வெற்றி பெற்றது அனைத்து அரசு ஆதி திராவிடர் பள்ளிகள் மாணவர்கள் வெற்றி பெற்றது போல் உணர்ந்தேன். அடுத்து நடக்க இருக்கும் இறுதிச் சுற்றுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவோம்.
இதன் மூலம் என்னுடைய கனவான இந்திய விமானப்படையில் பணிபுரியும் ஆசையும் நிறைவேறும். இதற்கு உதவிய எனது ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையைச் சார்ந்த அனைவர்க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..”
மு.ரேஷ்மி, 11 ஆம் வகுப்பு, அரசு ஆதி திராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கன்னிகாபுரம், சென்னை,
“…முதலில் எங்க பள்ளியில் 360 பிளையிங் கிளப் மூலமாக AEROSPACE AWARENESS PROGARAM நடத்துனாங்க. அது எனக்குப் பிடித்திருந்ததால் கலந்து கொண்டேன். எனது லட்சியம் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பதாக முடிவு செய்திருந்தேன்.
அந்த புரோகிராம் நடக்க இருந்த போது சுரேஷ் சார் ரெண்டு நாட்களில் உங்களால் முடிந்த அளவில் செலவு இல்லாமல் ஒரு விமானம் தயாரிக்கச் சொன்னார். அதற்காக நூறு மதிப்பெண் தேர்வு வைத்தனர், அதில் நான் தேர்ச்சி அடைந்ததும் என்னை ஒரு குழுவில் சேர்த்து விட்டார்கள்.
அந்தக் குழுவில் இருந்த என்னுடன் சேர்த்து நாலு பேரும் மாணவிகள் நாங்கள் ஒன்றாக இணைந்து நேஷனல் ஏரோநாட்டிகள் போட்டியில் கலந்து கொண்டோம்.
நாங்கள் தயாரித்த விமானம் ஒரு கிலோவிற்கு கம்மியாகவும் MAIN WING அளவு 120 Cm இருக்கணும் LOADING AND LOADING செய்ய வேண்டும், 30 நிமிடம் வானத்தில் பறக்கச் செய்ய வேண்டும், இவை அனைத்தும் மூன்று நிமிடங்களில் செய்து காட்ட வேண்டும்.
எங்களைத் தவிர மற்ற அனைவரும் IIT AND NIT போன்ற கல்லூரி மாணவர்களுடன் போட்டியிட்டு நாங்கள் SOUTH ZONE மூன்றாம் நிலையில் வெற்றி பெற்றோம்…”
பி.சி.ராஜேஸ்வரி, 10ஆம் வகுப்பு, அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, அனகாபுத்தூர், சென்னை,
“..எங்கள் பள்ளியில் ஆதி திராவிடர் நலத்துறை மூலமாக 360 பிளையிங் கிளப் குழுவினர் ஐஐடி மற்றும் போயிங் இணைந்து நடத்தும் ஏரோமாடலிங் போட்டி நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.
இந்தப் போட்டியில் குறைந்த எடை கொண்ட விமானம் அதிக அளவில் எடை தூக்கிச் செல்வதே போட்டி என்பதை தெரிவித்தனர். விமானம் செய்வது, பறக்க வைப்பது, பழுது பார்த்தல் போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.
சென்னை ஐஐடியைப் பார்த்து வியந்தேன். பெரிய பெரிய கல்லூரிகள் கலந்து கொள்ளும் போட்டியில் என்னை போன்ற மாணவ மாணவிகள் கலந்து கொள்ள வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
IIITDM மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு, தென் மண்டல அளவில் மூன்றாம் இடம் பெற்றது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெறுவோம். எனக்கு விமானம் மற்றும் ட்ரோன் இரண்டையும் தயார் செய்யும் கம்பெனி வைப்பதே என்னுடைய ஆசை லட்சியமாக கருதுகிறேன்…”
தமிழக அரசின் ஆதி திராவிடர் நலப்பள்ளியின் வெற்றி பெற்ற மாணவர்களை “..ஆளுமைச் சிற்பி..” மனதார வாழ்த்திப் பாராட்டுகிறது…! =