சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 02
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
வெற்றித் தலைமுறை’ என்ற அருமையான தலைப்பில் எழுத்தாளர் சூர்யா கோமதி ஒரு நூலைத் தந்துள்ளார். நாணயம் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூல் விகடன் பிரசுரம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
சினிமாவில் சாதனைகள் நிகழ்த்திய ஏ.வி.எம். நிறுவனம், அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கும் நவீன்ஸ், ஆடைத் தொழிலில் போத்தீஸ், ஓட்டல்களில் அடையார் ஆனந்தபவன், வி.ஜி.பி. சாம்ராஜ்யம் என்று பல நிறுவனங்களின் சாதனைத் தடங்களைக் காட்டியதோடு, சிறிய ஒரு தொழில் தொடங்கி சாதித்த பலரையும் பேட்டி எடுத்து வழங்கியுள்ளார் சூர்யா கோமதி.
எல்.ஜி.பெருங்காயம், ஆர்.எஸ். பதி தைலம், தங்கமயில் ஜூவல்லரி என்று தனித்துவம் வாய்ந்த தொழில்கள் கண்ட வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். தொழில் நாட்டம் உள்ளோர், சுயதொழில் செய்வோர் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். இந்த நூலை வழங்கிய சூர்யா கோமதி அவர்களுக்கும், விகடன் பிரசுரத்திற்கும் நன்றி சொல்லிவிட்டு கட்டுரைக்குள் செல்வோம்.
திருவிழாக் கொண்டாட்டங்கள், தீபாவளிக் கொண்டாட்டங்கள், தற்போது மாநாடுகளின் போதும் வாண வேடிக்கைகள் அமர்க்களம் செய்கின்றன. சிறியோர் முதல் பெரியோர் வரை மகிழ்வோடு காணும் பட்டாசுகளின் ஆரவாரம் பெரும் தொழிலாகத் தமிழகத்தில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் இடையன்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் 1930ஆம் ஆண்டில் சிவகாசியில் ஒரு தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். சில ஆண்டுகளில் தீப்பெட்டி தயாரிக்கும் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டதோடு, தேர்ந்த தொழிலாளியாக விளங்கினார். அதனால், தன் முதலாளியிடம் தனது சம்பளத்தை இரண்டு ரூபாய் அதிகரித்துத் தருமாறு கேட்டார். அன்று இரண்டு ரூபாய் என்பது பெரிய தொகை தான். ‘முடியாது’ என்று முதலாளி கூறவும் தன் நண்பர்கள் சிலரோடு சேர்ந்து ‘ஸ்டாண்டர்டு பையர் ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
இன்று இந்த நிறுவனத்தின் பட்டாசுகள் விழாக் காலங்களிலும், வருடம் முழுவதுமே நம்பிக்கையோடு வாங்கப்படுகின்றது. நூறு ஆண்டுகளை நெருங்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கிய செல்லதுரை அவர்கள், ஒரு தேர்ந்த தொழில்நுட்ப வல்லுநராகத் திகழ்ந்துள்ளார்.
பட்டாசுத் தொழிலை விரிவு செய்திட எண்ணி கம்பி மத்தாப்புகள் தயாரிக்க இயந்திரங்களை வாங்க ஜெர்மனி சென்றுள்ளார் செல்லதுரை. 1951ஆம் ஆண்டில் கம்பி மத்தாப்புகள் செய்யத் தேவையான மிஷன்களை வாங்கிய போது குண்டூசிகள் தயாரிக்கும் மிஷன்களைப் பார்த்திருக்கின்றார். அருகிலேயே ‘கிளிப்புகள்’ தயாரிக்கும் மிஷின்களையும் கண்டவர். அவை இரண்டும் தயாரிப்பதற்கு நான்கு மிஷன்களை வாங்கிக் கொண்டு இந்தியா வந்துள்ளார்.
‘ஸ்டான்டர்டு பையர் ஒர்க்ஸ்’ நிறுவனம் பங்குதாரர்களோடு ஒரு பக்கம் வெற்றிகரமாகப் பயணிக்க, தன் குடும்பத்துக்கான குண்டூசிகள், கிளிப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். தன் மனைவி ‘நேசமணி’ என்பவரின் பெயரிலுள்ள ‘மணி’ அதனை ஆங்கிலத்தில் ‘Bell’ என்று அழைப்பதையும் குண்டூசிகளின் பெயரையும் சேர்த்து ‘Bell Pins’ என்ற ஒரு நிரந்தரப் பெயரை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார்.
உழைப்புக்கு உதாரணமாகச் செயல்பட்டுள்ள இந்த மாமனிதர், காலையில் முதல் நபராகத் தன் தொழிற்சாலையைத் திறந்து உள்ளே செல்பவராகவும், இறுதியாக ஆலையிலிருந்து வீடு திரும்புபவராகவும் உழைத்துள்ளார். இன்று மூன்றாம் தலைமுறையினர் வரை குடும்பமாக உழைக்கும் இவர்களது வெற்றிக்குக் காரணமே, இணைந்து செயல்படும் திறனாகும்.
மூன்று தலைமுறையாக ஒவ்வொருவரும், அவர்களது குழந்தைகளும் தொழிலில் ஈடுபட்டு, பயிற்சி பெற்று, முன்னேற்றத்தில் பங்கெடுத்து வருகின்றார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஒரு ‘குண்டூசி’ தயாரிக்கக்கூட தொழில்நுட்பம் இல்லாத நிலையில் எந்தத் தொழில் தேசத்துக்குத் தேவை என்று கண்டு அதை வளர்த்துள்ள இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். ஆம். ஜப்பானிலிருந்து ஊக்குகள். ஸ்டாப்லர் பின்கள் தயாரிக்கும் மிஷன்களையும் கொண்டு வந்து தொழிலை வளர்த்துள்ளார்கள்.
அதன்பிறகு தங்களது பொருட்களை உற்பத்தி செய்யும் மிஷின்களையே உற்பத்தி செய்து தொழிலில் சிகரம் தொட்டுள்ளார்கள். ‘‘குடும்பமாக நிறுவனத்தைக் கவனித்துக் கொள்கின்றோம். எந்த முடிவுகள் எடுக்கும் முன்பும், தொழிலில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொருவரும் கலந்து பேசி முடிவு செய்கின்றோம். அப்படிப் பேசும்போது ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால், அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுகின்றோம். ஆகையால் தான் இன்னும் குடும்பம் உடையாமல் உள்ளது’’ என்று ஒரு பேட்டியில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இக்குடும்பத்தின் சஞ்சய் குணசிங் கூறுகின்றார்.
சைக்கிள் பியூர் அகர்பத்தி
மனம், ஊதுபத்திகளின் வாசனையைப் பெற்றதும் எல்லையற்று விரிவடைகின்றது. குறிப்பாக அனைத்து மத ஆலயங்களிலும் ஊதுபத்திகள் இடம்பிடிக்கின்றன. கோவில்களில் மட்டுமல்ல. நமது இல்லங்களின் பூஜையறைகளிலும், தெய்வங்களின் தரிசனத்துக்கும் அகர்பத்திகள் தூண்டுதலாக உள்ளன.
‘அகர்பத்தி’ உற்பத்தியின் மூலம் கோடான கோடிகளில் வர்த்தகம் செய்து அசத்தும் ‘சைக்கிள் பியூர் அகர்பத்தி’ வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலாம்.
80 ஆண்டுகள் கடந்து பயணிக்கும் இந்த அகர்பத்தி நிறுவனம் இன்று இந்தியா முழுவதும் 4,500 விநியோகிப்பாளர்களைக் கொண்டுள்ளது. எட்டு லட்சம் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. வருடத்துக்கு 15 பில்லியன் அதாவது (1500 கோடி) பத்திகளைத் தயார் செய்கின்றார்கள். குடும்பமாக இணைந்து பல தலைமுறை கடந்து ஜொலிக்கின்றார்கள்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு என்ற ஊரில் வசித்தவர் ரங்காராவ். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தனது படிப்புக்காக, பெரிய கடைகளில் இனிப்புகளை வாங்கிச் சிறிய கடைகளில் விற்பனை செய்துள்ளார். படிப்பு முடிந்து கர்நாடகா சென்ற அவருக்கு அரசு வேலையும் கிடைத்தது. தொழிலா? அரசு வேலையா? என்ற குழப்பம் வந்த போது, மனைவியின் நகைகளை விற்று தொழிலைத் தொடங்கியுள்ளார்.
தெய்வ பக்தி கொண்ட குடும்பத்திலிருந்து வந்த இவருக்கு, அது சார்ந்து ஒரு தொழில் தொடங்கிட எண்ணம் உதித்தது. எனவே அகர்பத்தி தயாரிக்கும் தொழிலைக் கற்றுக்கொண்டு அதனைத் தொடங்கினார். இன்று இந்த நிறுவனத்தில் முப்பதாயிரம் பணியாளர்கள் வேலை செய்கின்றார்கள். அப்படியானால் முப்பதாயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகின்றன.
ஆரம்ப காலத்தில் அகர்பத்திகள் எல்லாம் சில்வர் பெட்டிகளில் அடைக்கப்பட்டே விற்கப்பட்டது. பத்திகளைவிட ‘சில்வர்’ பெட்டிகள் விலை அதிகம். மேலும் பத்திகள் தானே முக்கியம் என்றுணர்ந்து முதன்முதலில் அட்டைப் பெட்டிகளில் பத்திகள் விற்கும் உத்தியைத் தொடங்கினார் ரங்காராவ். தொடங்கப்பட்ட இருபது ஆண்டுகளில் இந்தியாவின் முதல் அகர்பத்தி நிறுவனமாகியது.
ஒரு சமயம் ஒரு வாடிக்கையாளர் ‘‘ஒரே வாசனையுடன் பத்தியைத் தருவதற்குப் பதிலாக வேறு வேறு வாசனைகளையும் கொண்டு பத்திகளைச் சேர்த்துத் தரலாமே!’’ என்று அறிவுரை சொல்ல, ‘சபாஷ்!’ என்று மலர்ந்தது தான் ‘three in one’ என்னும் மூன்று வாசனைகள் கொண்ட பத்திகள், இதனை ஒரே பெட்டியில் தந்து விற்கின்றார்கள்.
வாசனை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதிலும், தெய்வீக மணம் கமழ வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாய் உள்ளதால் எண்பது ஆண்டுகள் கடந்தும், கொடிகட்டிப் பறக்கின்றார்கள்.
இக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வெற்றி கண்டு வருகின்றார்கள். முதன்மையான சைக்கிள் பியூர் அகர்பத்தித் தொழிலில் சிறக்கக் காரணம், குடும்பமாக உழைத்ததும், உழைப்பதும் தான். இவர்களது அனைத்துத் தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு உறுப்பினராக இருந்து, தங்களுக்குள் வழிகாட்டிக் கொண்டு உயர்கின்றார்கள்.
குடும்பத் தொழில்கள்
தரும் சிந்தனை!
‘சைக்கிள் பியூர் அகர்பத்தி’, ‘பெல் பின்ஸ்’ இப்படி நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்கள் கோடானகோடி வர்த்தக உயரத்தை அடைந்து வெற்றி பெறக் காரணம், குடும்பமாகத் தொடர்ந்து தொழில்புரிவது தான்.
இந்த நிறுவனங்கள் அனைத்தின் வெற்றிக்கும் பின்னாலுள்ள சில செய்திகளை நாம் பாடமாகக் கொள்ளலாம்.
- வெற்றி பெற்றுள்ள, பல தலைமுறை தாண்டிப் பயணிக்கும் நிறுவனங்களின் நிறுவனர்கள் மிகுந்த தொலைநோக்குக் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்.
- ஆரம்பம் முதலே தாங்கள் தொடங்கிய தொழில் ‘ஒரு சிறு பொருள் உற்பத்தி’ என்றாலும் அதை நிரந்தரமாகச் சந்தைப்படுத்துவதில் (Brand) கவனம் செலுத்தியுள்ளார்கள்.
- தங்கள் தொடர் வாரிசுகளுக்குப் பயிற்சி தந்ததோடு, நிறுவனம் உருவான கடினமான காலங்களைப் புரிய வைத்துள்ளார்கள்.
- படிக்கின்ற போதே இந்த நிறுவனங்களின் குழந்தைகள் தொழிலில் ஈடுபாடு காட்டியுள்ளார்கள். தொழிலகத்துக்கு மாலையிலும், விடுமுறை காலத்திலும் ெசன்று, கூட இருந்து தொழிலைக் கற்றுள்ளார்கள். அதேசமயம் உயர்கல்வியைப் பயின்று தங்கள் தொழில்களில் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து, உற்பத்தியைப் பெருக்கியுள்ளார்கள். சேவைகளை அதிகரித்து ெவற்றி பெற்றுள்ளார்கள்.
- பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, மாமா என்று தங்கள் உறவுகளுக்கு மரியாதை தந்து குடும்பமாக இணைந்து தொழிலில் கவனம் செலுத்துகின்றார்கள். ‘இது என் நிறுவனம்’, ‘என் இரத்தத்தில் கலந்தது’ என்ற உணர்வு பெறுவதால் கடினமாக உழைத்து உயர்ச்சி அடைகின்றார்கள்.
- சவால்கள் அனைத்தையும் இணைந்து சமாளிக்கின்றார்கள். முடிவுகள் எடுக்கும் முன்பு கூடி அமர்ந்து, ஆலோசனை பெற்றுக் காரியத்தில் இறங்கிச் செயல்படுகின்றார்கள். இதனால் விளைவுகளுக்கு அனைவரும் பொறுப்பேற்கின்றார்கள்.
- தொழிலின் வளர்ச்சியில் இளையோர் தரும் புதிய தொழில்நுட்ப ஆலோசனைகளை, பெரியோர்கள் அங்கீகரிப்பதோடு, ஆதரவு தந்து அதைப் பயன்படுத்தித் தொழிலை விரிவாக்கம் செய்கின்றார்கள்.
- பெரும்பாலும் ஒரே தொழில், ஒரே பொருள் உற்பத்தி அல்லது மையத் தொழிலை உள்ளடக்கிய உபரித் தொழில்களில் கவனம் செலுத்திப் போட்டியாளர்களைச் சமாளிக்கின்றார்கள்.
- விளம்பர உத்திகளில் கவனம் செலுத்தி வெற்றி காண்கின்றார்கள். தங்களது ‘பிராண்டை’ மக்கள் மனதில் பதியச் செய்வதில் அதிகக் கவனமும், அக்கறையும் கொண்டு, முயன்று வெல்கின்றார்கள்.
- முத்தாய்ப்பாக, தொழிலில் தங்கள் பொருளின் உற்பத்தித் தரத்தில், எவ்விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் ‘‘தரமே தங்கள் வெற்றியின் தாரக மந்திரம்’’ என்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். இதனால் தான் இவர்களது பொருட்களை மக்கள் நம்பி வாங்குகின்றார்கள்.
கோழிக்கறியைச் சிறப்பாகச் செய்து கொடுத்ததில் உலகப்புகழ் பெற்ற KFC-சிக்கன் கடைகள் போல, தங்களது குடும்பத்துக்குப் பழக்கப்பட்ட, தரத்தோடு பெயரை நிலைநாட்டிய தொழிலில் நம்மவர்கள் ஜொலித்து வருகின்றார்கள். நாம் அன்றாடம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சில நிறுவனங்களின் பெயர்களைத் தேடி வாங்கிடக் காரணம், அந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் மீதான நம்பிக்கைதான்.
ஒவ்வொரு சிறிய பொருளும்கூட விற்பனைக்கு வரும்போது தரமுள்ளதாக அமைந்தால் அந்த, ஒன்றை வைத்தே உலகில் வெற்றி பெறலாம் என்பதை நாம் அறிய முடிகின்றது.
சில நூறு ரூபாய்களில், ஒரு சிறிய அறையில், சிறிய தள்ளுவண்டியில், சிறிய மருத்துவக் குறிப்பில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள் பெரிய இடத்தை அடைந்தது கடுமையான உழைப்பாலும், தொடர் முயற்சியாலும் தான் என்பதை நாம் அறிகின்றோம்.
ஆகையால், எந்தத் தொழிலையும் அற்பமென்று எண்ணாமல், கவனம் செலுத்தினால், தொடர்ந்து தரத்தோடு மக்கள் மனமறிந்து வியாபாரம் செய்தால், வெற்றிகளைக் குவித்து மாபெரும் நிலையடையலாம். குடும்பமாய் இணைந்து செயல்படும் போது குறையாத செல்வர்களாகத் திகழலாம் என்பதற்கு நம்மிடையே எண்ணற்ற தொழில்புரியும் சாதனையாளர்கள் வலம் வருகின்றார்கள். இவர்களது வெற்றிப் பாதைகளைக் கூர்ந்து நோக்குவோம். தொழில் செய்து, தொண்டு செய்து, வாழ்வில் உயர்வோம். =