கல்வி, அறிவு, ஞானம்

உங்கள் அறிவுத் திறன், நினைவாற்றல் ஆகியவற்றிற்கும் நீங்கள் அருந்தும் நீரின் அளவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை கடந்த இதழில் கண்டோம். இனி, கற்கும் திறனுக்கும் உண்ணும்  உணவுக்கும் உள்ள தொடர்பு குறித்துக் காணலாம்.

எந்த ஒரு இயந்திரமாக இருந்தாலும், அது இயங்க ஒரு சக்தி (எரிபொருள்) அவசியமாக உள்ளது. நமது உடலிலுள்ள செல்களின் இயக்கத்திற்கும் ‘சக்தி’ அவசியம்.

நமது செல்கள் அனைத்துமே, தமது எரிபொருளாக ‘குளுகோஸ்’ எனப்படும்
சர்க்கரையைத்தான் பயன்படுத்துகின்றன! இந்த குளுகோஸ் எப்படி செல்களுக்குக் கிடைக்கிறது?

உணவே எரிபொருள்

நாம் உண்ணும் உணவிலுள்ள சில சத்துக்களே வயிறு, குடல் பகுதிகளில் செரிமானமாகி, குளுகோசாக  உருமாறுகிறது. இந்த குளுகோஸ் ரத்தத்தில் கலந்து, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் தனக்குத் தேவையான குளுகோஸை ரத்தத்திலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன.

ஆனால் செல்கள் நேரடியாக குளுகோசை பயன்படுத்த முடியாது. செல்களின் உள்ளே இந்த குளுகோஸ் மேலும் பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு சக்தியாக உருமாறுகிறது. இந்த சக்தியே செல்களின் அனைத்து இயக்கங்களுக்கும் எரிபொருளாகப் பயன்படுகிறது.

உண்ணும் உணவு சத்துள்ளதாகவும், சரிவிகித உணவாகவும் இருந்தால் மட்டுமே உடலும் மூளையும் தமது முழுத் திறனோடு இயங்க முடியும்.

பிராணவாயு

செல்களின் உள்ளே குளுகோஸ் சக்தியாக உருமாற; பிராணவாயு எனும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதையும் ரத்தத்திலிருந்தே செல்கள் பெற்றுக்கொள்கின்றன.

மூளையிலுள்ள நியுரோன் செல்கள் இயங்கவும் பிராணவாயு அவசியம். நாம் சுவாசிக்கும் முறை சரியாக இருந்தால் மட்டுமே தேவையான பிராண சக்தி மூளைக்குக் கிடைக்கும்.

உடலிலுள்ள பிற செல்களோடு ஒப்பிடும்போது மூளையிலுள்ள செல்களே குளுகோஸையும், ஆக்சிஜனையும் அதிக அளவில் பயன்படுத்துகின்றன.

உடலின் எடையோடு ஒப்பிடுகையில் மூளையின் எடை சுமார் மூன்று சதவிகிதம்தான். ஆனால் இந்த மூன்று சதவிகித செல்கள் உடலில் உற்பத்தியாகும் குளுகோஸில் சுமார் 30 சதவிகிதத்தையும், ஆக்சிஜனில் 40 சதவிகிதத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றன.  பிற செல்களின் இயக்கத்தைவிட மூளைச் செல்களின் இயக்கம் பல மடங்கு அதிகமாக இருப்பதால்தான் அவற்றிக்கு சக்தியும் அதிக அளவில் தேவைப்படுகிறது.

இரத்தத்திலுள்ள குளுகோசின் அளவும் பிராணவாயுவின் அளவும் நாள் முழுவதும் குறையாது பார்த்துக்கொண்டால் மட்டுமே மூளை தனது முழுத்திறனோடு இயங்க முடியும். உங்களது கற்கும் திறனும் மேம்படும்.

ரத்தத்தில் குளுகோஸின் அளவு குறையாதபடி உங்களது உணவு முறை அமைய வேண்டும்.

மூளைக்குத் தேவையான அளவு குளுகோஸ் சக்தி தொடர்ந்து தடையின்றிக் கிடைக்க, சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு உண்பது அவசியம். ஒரே நேரத்தில் தேவைக்கு அதிகமான அளவில் உணவு உண்பது உடலிலும், மூளையிலும் ஒருவித மந்தத் தன்மையையும், சோம்பலையும் உருவாக்கிவிடும்.

நீண்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பது அல்லது மிகக் குறைந்த அளவில் உணவு உண்பது உடற்சோர்வையும், மூளைச்சோர்வையும் உருவாக்கிவிடும்.

தற்போது மாணவர்களின் மிகப்பெரிய பிரச்சினை காலை உணவுதான்: பல பள்ளிகளும், கல்லூரிகளும் காலை எட்டு மணிக்கே வகுப்புகளைத் துவங்கிவிடுவதால் மாணவர்கள் காலை உணவை உண்ணாமலே அரக்கப்பரக்க வகுப்புகளுக்கு ஓடுகிறார்கள்.

பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளும் ஊரைவிட்டு விலகி வெகு தொலைவில் அமைந்திருப்பதால் ஒன்பது மணி வகுப்புகளுக்கு மாணவர்கள் ஆறு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பும் நிலை உள்ளது. இந்த மாணவர்களும் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர்.

முதல் நாள் இரவில் உணவு உண்ட பின் அடுத்த நாள் மதியம்தான் அடுத்த உணவு என்றால் கிட்டத்தட்ட 15 மணி நேரம் வயிறு காலியாக இருக்கும். ரத்தத்தில் குளுகோசின் அளவு மிகவும் குறைந்து போகும்.

தேவையான அளவு குளுகோஸ் கிடைக்காததால் மூளை மந்தகதியிலேயே செயல்படும். மிக விரைவில் மூளைச் சோர்வு ஏற்படும். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் கவனம் செல்லாது மனம் அலைபாயும் அல்லது அரைத் தூக்க நிலைக்குச் சென்றுவிடும்.

இதைத் தவிர்க்க காலை உணவை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலை உணவில் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்து அதிகமாக இருக்க வேண்டும்.

மாவுச்சத்து

நமது பாரம்பரிய காலை உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, புட்டு, ஆப்பம், இடியாப்பம், கஞ்சி, கூழ் ஆகிய அனைத்துமே மாவுச்சத்து நிறைந்த உணவுகளாகவே உள்ளன. மேலை நாட்டினர் காலை உணவாக உட்கொள்ளும் ரொட்டி (Bread) கூட மாவுச்சத்து நிறைந்த உணவுதான்.

இது ஏதோ யதேச்சையாக அமைந்த ஒன்றல்ல. நமது முன்னோர்கள் காரண காரியங்களோடுதான் இத்தகைய உணவு முறையை உருவாக்கி வைத்துள்ளனர்.

காலையில் எழுந்தவுடன் நமது உடல் உறுப்புகளும், மூளையும் சுறுசுறுப்பாக இயங்க குளுகோஸ் அவசியம். மாவுச்சத்து நிறைந்த காலை உணவே இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

இது தவிர, புரதம், கொழுப்பு போன்ற சத்துக்களும், விட்டமின்களும் தாதுக்களும் தேவையான அளவில் உணவில் இருப்பது அவசியம். அருந்தும் நீரின் அளவும் சரியாக இருக்க வேண்டும். அவை குறித்து பின்னர் விரிவாகக் காணலாம்.

மூச்சுப் பயிற்சிகள்

உணவிலிருந்து தேவையான குளுகோஸ் கிடைத்தாலும், தேவையான அளவில் பிராணவாயு இரத்தத்தில் இல்லாது போனால் குளுகோஸ் சக்தியாக மாற இயலாது. உடலில் பிராணவாயுவின் அளவை அதிகப்படுத்த சில எளிய மூச்சுப் பயிற்சிகளையும், சில முத்திரைகளையும் இனி வரும் இதழ்களில் காணலாம்.     (தொடரும்)