வாழ்வியல் திறன்கள்

உலகமே எப்படியாவது இந்தக் கடுந்துயரிலிருந்து மீளவேண்டும் என்று அனைவரும் நித்தமும் மனதளவில் வேண்டுகின்ற ஒரு பெருந்தொற்றாக கொரோனா மக்களை அச்சுறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. முதல் அலையில் தட்டுத்தடுமாறி எழுவதற்குள், மிகவும் மோசமான விளைவுகளுடன் இரண்டாவது அலை மனித உயிர்களைப் பறித்துக்கொண்டிருப்பது கண்டு அனைவரும் கனத்த நெஞ்சத்துடன் உள்ளோம்.

“நோய் நாடி நோய்முதல் நாடி” (குறள்.948) என்ற நோயின் காரணத்தை அறிந்து தீர்வுகளுக்கு வழிவகுப்பதற்குள் மீண்டும் சூறாவெளியாய்ப் பெருந்தொற்றின் வீச்சு பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. அறிவுடன் எதிர்காலவியலை கணிக்கக்கூடிய விஞ்ஞானிகளும், நிர்வாகத்திறன் கொண்ட உயர் அதிகாரிகளும். அனுபவமிக்கத் தலைவர்களும் இருந்தபோதிலும் எப்படித் தவறவிட்டோம் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது. இந்நிலைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் போது, திருக்குறளில் உள்ள ஓர் அரிய குறள் புலப்பட்டது,

“இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு”      (குறள்.531)

ஒருவற்கு அளவு கடந்த சினத்தினும் பெருந்தீமை விளைப்பது, அளவற்ற மகிழ்ச்சியில் இன்றியமையாத கடமையை மறந்துவிடுவது. முதல் அலையின் வீச்சைத் திட்டமிட்டுக் குறைத்துக்கொண்டு வந்தநிலையில், மகிழ்ச்சியில், இரண்டாவது அலையின் எழுச்சியைக் கணிக்கத்தவறிவிட்டதாகும்.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை” (குறள். 435) என்ற வழி, இரண்டாவது அலையின் கடுமையானத் தாக்கத்தை வருவதற்கு முன்னரே திட்டமிட்டு நம்மைக் காத்துக்கொள்ளத் தவறியதன் விளைவே இதுவரை நிகழ்ந்த பேரிழப்புகள் எனலாம். எவர்மீது தவறு என்பதைவிட, இத்தொற்றின் தாக்கத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே சான்றோர்களின் பெருவிழைவாக உள்ளது. இருப்பினும் கடந்துபோன செயல் சோர்வை எண்ணி நம்மைநாமே வருத்திக்கொள்வதைவிட, ‘‘இதனை இதனால் இவன்முடிக்கும்” (குறள்.517) எனத் தெளிவாக ஆராய்ந்து உரியவர்களை உடனே நோய்தீர்க்கும் பணிகளில் முடுக்கிவிடவேண்டும். பல மாநிலங்களில் போதிய ஆக்ஸிஜன் மற்றும் சில முக்கிய மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு இல்லாததால் சில மாதங்களுக்கு முன்பு  பல உயிரிழப்புகள் கண்முன்னே அரங்கேறிய அவலங்கள் ஏராளம். நீதிமன்றங்கள் மத்திய அரசையும், மாநில அரசுகளையும் போர்க்கால அடிப்படையில் செயல்படுமாறு உத்தரவிட்டன. “உறுபசியும், ஒவாப்பிணியும், செறுபகையும்” (குறள்.734)என்ற குறள் கடிந்திட்ட இன்னாத நிலைகளில் நாமிருப்பது எண்ணிப்பார்த்தற்குரியது. எனவே, தனிமனித முனைப்புகளுக்கு இடம்தராது, மக்கள் காப்பாற்றப்பட வேண்டும், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், மக்கள் அச்சமின்றி வாழவேண்டும் என்ற முதன்மை நோக்குகளை நாட்டின் அடிப்படை நிறைவேற்றல்களாக அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். இங்கு பேத, வர்க்க, பிற குறுகிய பரிவுகளுக்குள் சிக்காமல் அனைவரும் கைகோர்த்துச் செயல்படும்போது இப்போதிருக்கக்கூடிய கொடிய இருண்டநிலை மாறுவதற்கான வாய்ப்புகள் பெருகும். இன்று மக்கள் தடுப்பூசிகளை அதிகம் செலுத்திக் கொள்வதும் பாராட்டத்தக்கதே. மேலும், மக்களிடையே,

  1. அறிவார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்,
  2. அச்சமும் பதட்டமும் இல்லாநிலையை உருவாக்குதல்
  3. ஊடகவியாலருடன் ஒரு கூட்டத்தை நிகழ்த்தி அதன்வழி செய்திகளை மக்களிடம் அணுக்கமாகக் கொண்டு செல்வதற்கான உத்திகளை நிறுவுதல்
  4. உளவியல் சார்ந்த அணுகுமுறைகளை தேர்ந்த நிபுணர்களுடன் திட்டமிட்டு மேற்கொள்ளுதல்;
  5. மக்களால் பெரிதும் போற்றப்பெறும் தலைவர்கள் வழி ஊக்கவுரைகளைத் தருதல்
  6. மக்களும் சுயக்கட்டுப்பாடுகளுடன் ஒழுகுவதற்கான வாயில்களை ஏற்படுத்துதல் அனைத்தும் சாத்தியமே என்ற நம்பிக்கை உணர்வை மக்களிடையே ஆழமாக ஊன்றுதல். இன்றைய நிலையில் அரசுகள் நல்ல பல ஆக்கப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்றபோதும், மக்களிடம் தன்னம்பிக்கை ஏற்படவில்லையென்றால் அனைத்தும் பயன்படா நிலையானது ஏதுவாகும்.

இன்றைய தாரக மந்திரமாக,

“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்”          (குறள். 611)

  1. எந்தச் செயலையும் கண்டளவில் மலைத்துவிடக்கூடாது.
  2. அனைத்திற்கும் தீர்வுகளுண்டு எனத் திடமாக நம்புதல் வேண்டும்.
  3. எண்ணியதை அடைவோம் என்ற விடாமுயற்சி மேலோங்க வேண்டும்.
  4. இவைகளுக்கான தீயனைய செயல்வீச்சுகளே அனைத்தையும் எய்தக்கூடிய ஆற்றலைத் தருவதோடு வெற்றிக்கான பெருமிதத்தையும் உண்டாக்கும்.

இத்தகைய அசாத்திய மனநிலையுடன் உலகமே ஒருமித்துச் செயல்படும்போது, இயலாதன என்ற ஒன்று இருக்கவே முடியாது.

“The greatest discovery of my generation is that, Human beings can alter their life by altering their attitude of Mind”

என்ற வில்லியம் ஜோன்ஸ் வரையறுத்தது போன்று இன்றைய நிலையில் மக்களின் மனப்பான்மையில் அனைத்தும் சாத்தியமே, என்ற உடன்மறைச் சிந்தனையை உறுதிசெய்யும்போது பல நல்மாற்றங்கள் நிகழ்ந்தேறும். பெருந்தொற்றுகள் சுவடிழந்து மக்களின் மறுமலர்ச்சி மாண்புறும்.=