நூல் அறிமுகம்
நூலின் பெயர் : பெண்ணே பேராற்றல்
ஆசிரியர் : திரு .ப.திருமலை
வெளியீடு : மண், மக்கள், மனிதம் வெளியீடு
விலை : ரூ 200/-
பத்திரிகையாளரும், சிறந்த எழுத்தாளரும், அற்புதமான பல நூல்களின் படைப்பாளருமான திரு. ப. திருமலை அவர்களின் 42-ஆவது நூல் ‘பெண்ணே பேராற்றல்’.
விடுதலைப் போராட்ட காலம் தொடங்கி, விடுதலை பெற்ற காலத் தொடக்கம் வரையிலும் மாபெரும் பங்கேற்பாளர்களாகத் திகழ்ந்தவர்களும், தொடர் சாதனை படைத்தவர்களும் இந்நூலில் அணிவகுத்து வருகின்றார்கள். மிகச் சிறப்பாக இந்தப் பேராற்றல் மிகு பெண்மணிகளின் பங்களிப்பை வழங்கியுள்ளார் நூலாசிரியர்
ப.திருமலை அவர்கள்.
ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், சமூகத்துக்கு நல்லது செய்ய விரும்பும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
இந்நூலில் எட்டுவிதமான தலைப்புகளில் மகளிரின் மாண்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது மிகச் சிறப்பாக அமைகின்றது.
‘விடுதலைப் போராட்ட வேள்வியில்’ என்னும் முதல் பகுதியில் காமா அம்மையார் தொடங்கி அரசி வேலுநாச்சியார் மற்றும் குயிலியின் பங்கேற்பு வரை முப்பத்து இரண்டு போராட்டப் பெண்மணிகளின் சாதனைச் சுவடுகள் மிக அருமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
“பாருங்கள், சுதந்திரப் போராட்டத்தின் கொடி இங்கே ஏற்றப்பட்டு உள்ளது. இதன் பெருமையை காப்பதற்காகப் பல்லாயிரம் இளைஞர்கள் தங்கள் குருதியைச் சிந்தி உள்ளனர். இந்தக் கொடியின் பெயரால் அழைப்பு விடுக்கிறேன், உலகில் உள்ள சுதந்திரத்தை விரும்புபவர்கள் அனைவரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தருக”என்று அழைப்புவிடும் காமா அம்மையாரின் வார்த்தைகள் சிறப்பான தொடக்கம்.
நம் தமிழ் மண்ணிலிருந்து இத்தனை மகளிர் மாணிக்கங்களா? என்று நம்மை வியக்க வைக்கும் பெண்டிர்கள் பலர். இளையான்குடியிலிருந்து பீபியம்மாள், கடலூரிலிருந்து அஞ்சலை அம்மாள், சென்னையிலிருந்து ருக்மணி லட்சுமிபதி என்று விரியும் மகளிரின் அணி அரசி வேலுநாச்சியாரின் புரட்சியையும், அவர் உதவியாளர் குயிலி என்று ஒவ்வொரு மகளிரின் இருப்பையும் சிறப்பாக தந்துள்ளார் நூலாசிரியர். பல செய்திகள் வாசிப்பதற்குப் புதுமையாகவும், இவ்வளவு துணிவு உள்ளவர்கள் களம் கண்டுள்ளார்களே என்று எண்ணும் போது, மிகப் பெருமையாகவும் அமைந்துள்ளது.
தொடர்ந்து அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்கேற்ற முதல் பெண் ஆளுநரான சரோஜினி நாயுடு, முதலில் அமைச்சரான ராஜ்குமாரி அம்ரித் கவுர், முதல் பெண் துணைவேந்தர் ஜீவ்ராஜ் மேத்தா, ஐக்கிய நாட்டின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட் என்று பல முதல் இடம் வகித்த, முதல் பணி செய்த பெண்மணிகளின் ஈடுபாடும், வாழ்வும் வியக்க வைக்கின்றது.
சமூகச் சீர்திருத்தத்தில் பெண்கள் என்னும் பகுதியில் பண்டித ரமாபாய், ரமாபாய் ரானடே, டாக்டர் ருக்மா பாய், மூவலூர் ராமாமிர்தம், நாகம்மாள், கண்ணம்மாள், முத்துலட்சுமி ரெட்டி, சா.தருமாம்பாள், மீனாம்பாள் சிவராஜ் என்று பல துறைகளிலும் பெண்கள் சமுதாய முன்னேற்றத்துக்குப் முக்கியப் பங்காற்றியவர்கள், போராடி உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்கள்
என்று, வாசிக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க அழைக்கின்றார்கள்.
பெண் கல்வியே இல்லை என்ற தேசத்தில் கல்வியைப் பெண்களிடம் கொண்டு சென்று புதிய சமுதாயம் படைத்தவர்கள் ‘கல்வியில் இந்தியப் பெண்கள்’ என்னும் முன்னோடிகள். முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் பூலேயும், முதல் பட்டதாரியான சந்திரமுகி பாசுவும், இன்னும் பலரும் அருமையான வழிகாட்டிகளாகத் திகழ்ந்ததை இப்பகுதியில் அருமையாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். அரசியல் மட்டுமா? அறிவியலிலும் கலக்குவோம் என்று களம் கண்டு இன்று பெண் விஞ்ஞானிகள் பலர் உருவாக அடித்தளமிட்ட
வர்களை “இந்திய அறிவியலில் பெண்கள்” என்று தந்துள்ளார் ஆசிரியர். முதன் முதலில் முனைவர் பட்டம் அதுவும் வெளிநாட்டில் பெற்ற ஜானகி அம்மையார், சர். சி. வி. ராமனின் ஆய்வக அறிஞர் அன்னமாணி, போன்றோரின் ஆய்வும், தொடக்கமும் அருமை, அருமை.
‘கலையில் தமிழகப் பெண்கள்’என்று அம்மையார்கள் கே.பி. சுந்தராம்பாள், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி, டி.கே. பட்டம்மாள் மற்றும் பொன்னுத்தாய் என்ற ஐவரின் சாதனைகளும், இவர்களால் தமிழகம் பெற்ற பெருமையும் வாசிப்பவர்களை உத்வேகப் படுத்துகின்றது
தமிழ் எழுத்தாளுமைகளாக மலரும் சுவர்ணகுமாரி தேவி, முதல் இந்தியப் பெண் எழுத்தாளராக மிளிர்கிறார். அசலாம்பிகை அம்மையார் தற்கால ஔவையாவும், கமலா சத்தியநாதன் முதல் ஆங்கிலப் பெண் பத்திரிகையாளராகவும், முதல் பெண் நாவலாசிரியை வை.மு. கோதை நாயகியும், பயண எழுத்தாளர் குமுதிணியும் களத்தில் இருந்து கதை எழுதிய ராஜம் கிருஷ்ணனும், இன்னும் பலரும் எழுத்துலக முன்னோடிகளாய் முன்னேறி வழிகாட்டியுள்ளார்கள்.
எட்டாம் பகுதியில் ஆற்றல்சால் பெண்மணிகளின் அடையாளங்களாக நிற்கின்றார்கள். அன்னிபெசன்ட் அம்மையார், கதீஜா யாகூர், நீதிபதி அன்னா சாண்டி, அன்னா ராஜம், கல்பனா சாவ்லா என்று இருபத்து ஐந்து முதன் முதல் சாதித்த ஆளுமைப் பெண்கள் வரலாறாக வந்திருக்கின்றார்கள்.
நூலாசிரியர் ப. திருமலை அவர்களின் இனிமையான, எளிமையான, வளமையான எழுத்துகளில் இந்த மாபெரும் பெண் சாதனையாளர்களின் வாழ்வும், பயணமும், வாசிக்கின்ற போது நமது குழந்தைகளையும் இவர்களைப் போலச் சாதிக்கத் தூண்டும் வண்ணம் அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலின் உட்பொருட்களுக்கான உழைப்பைப் பேராற்றலுடன் தந்துள்ளார் நூலாசிரியர். அவரது மிகச்சிறந்த இந்த படைப்புக்கு நன்றிகள், நன்றிகள்…