முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! 7

ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

“வருங்காலத்தில் அண்ணாதுரை நடை, அண்ணாதுரைத் தமிழ் என்று ஒன்று வரப்போகின்றது. எதிர்காலத்தில் தமிழ்மொழி மெல்ல அழிந்துவிடுமோ என்ற சஞ்சலம் எனக்கிருந்தது. தமிழைக் காப்பாற்ற இதோ அண்ணாதுரை வந்துவிட்டார். இனி நான் நிம்மதியோடு இறப்பேன்” என்று கல்கி அவர்கள் பேரறிஞர் அண்ணாவை அறிஞர் பெர்னாட்ஷாவுடன் ஒப்பிட்டு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார் என்று அறியப்படுகின்றது.

ஆம், தமிழ்மொழி மட்டுமல்ல அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகள் வாழ்வதற்கும், ‘தமிழ்நாடு’ இன்று இந்த அளவில் வளர்ச்சிகண்டு நிற்பதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தவர்களில் போற்றப்படக் கூடியவர் பேரறிஞர்அண்ணா அவர்கள்.

1909, செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி நடராஜன் மற்றும் பங்காரு அம்மாள் தம்பதியருக்கு மகனாகக் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் அண்ணா. நடுத்தர செங்குந்த நெசவாளர் குடும்பத்தில் பிறந்த இவர் தன் பள்ளிக்கல்வியை காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். தனது இளநிலைக் கல்லூரிக் கல்வியை சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் பெற்றார். பின்பு பொருளாதாரம் மற்றும் அரசியலில் முதுகலைப்படிப்பையும் அதே பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். கல்லூரிப் படிப்பின் போது முதல்நிலை மாணவராகவும், ஆங்கிலம் மற்றும் தமிழில் அருமையாகப் பேசுபவராகவும், எழுதுபவராகவும் அறியப்பட்டார். அண்ணாவின் பேச்சாற்றலால் கவரப்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார்கள்.

கல்லூரிப் படிப்பை முடித்த அண்ணா பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகச் சில காலம் பணிசெய்தார். இவரது பேச்சாற்றல், நாடகத் திறமைகளைக் கண்ட பலரும் பொதுவாழ்வில் ஈடுபட்டால் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வித்திடுவார் என்று கூற அப்படியே பொதுவாழ்வுக்கு வந்துவிட்டார் அண்ணா.

வாசிப்பும், அண்ணாவும்

புத்தகங்கள் வாசிப்பது என்றால் அண்ணாவுக்கு அவ்வளவு பிரியம். வீட்டிற்கு வரும் உணவுப் பொட்டலங்கள், பலசரக்குப் பொட்டலங்களைப் பிரித்தபின்பு அவற்றில் கூட என்ன செய்திகள் வந்திருக்கின்றன? என்று தேடிப் படித்துவிடும் பழக்கம் கொண்டிருந்தார். நூலகங்களில் நாம் மாதம் முழுவதும் வாசிக்கக்கூடிய நூல்களை மூன்று, நான்கு நாட்களில் படித்துவிட்டு, அடுத்த நூலைப் படிக்க ஆரம்பித்துவிடுவார் அண்ணா.

கன்னிமாரா நூலகம், சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள கிளை நூலகங்கள் அவரது அறிவுப் பசிக்குத் தீனியிட்டன என்றால் மிகையில்லை. தனக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட போது கூட வாசித்துக் கொண்டிருந்த நூலைப் படித்துவிட்ட பிறகு அறுவைச் சிகிச்சை செய்யுங்கள் என்று மருத்துவரைக் கேட்டுக் கொண்டவர் அண்ணா அவர்கள்.

பொதுவாழ்வில் நுழைந்த ஆரம்ப கட்டங்களில் வார, மாத இதழ்களில் ஆசிரியராக இருந்ததோடு, சிறப்பான கட்டுரைகளை எழுதிவந்தார். தந்தை பெரியார் நடத்திவந்த ‘விடுதலை’ இதழின் துணை ஆசிரியராக 1939-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் அண்ணா. அந்த இதழில் “ரிப்பன் கட்டடத்தில் சீமான்கள்” என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையினைப் படித்த தந்தை பெரியார், அண்ணா அவர்கள் தங்கியிருந்த மூன்றாவது மாடிக்கு மூச்சிறைக்க வந்து வாழ்த்துச் சொன்னார். அந்த அளவுக்கு அண்ணாவின் எழுத்து வலிமைமிக்கதாக இருந்தது.

 அண்ணாவின் எழுத்தின் வீரியத்தைக் கண்ட பெரியார் தான் நடத்தி வந்த சுயமரியாதை இதழ்களான விடுதலை மற்றும் குடியரசு ஆகியவற்றின் பொறுப்பை அண்ணாவிடம் ஒப்படைத்தார். 1942-ஆம் ஆண்டில் டி.பி.எஸ் பொன்னப்பா என்பவர் தொடங்கிய ‘திராவிட நாடு’ இதழில் அண்ணாவின் முத்தான எழுத்துகள் தொடர்ந்து கோலோச்சின. தமிழில் மட்டுமல்ல தமிழ் தெரியாதவர்களும் நாட்டு நிலைமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆங்கிலத்தில் ‘Home Land’ என்ற இதழ் வெளிவந்தது. இந்த இதழின் மூலம் அண்ணா அவர்களின் ஆங்கிலப் புலமையை அகிலம் கண்டுகொண்டது.

“புத்தக வாசிப்பு தான் என்னை எழுத்தை நோக்கி ஈர்த்தது. அந்த எழுத்தாற்றல் பேச்சாற்றலாகவும் வெளிப்பட்டது. ஒரு எழுத்தாளன் பேசுவதற்கு என்று தனியாக உரை தயாரிக்க வேண்டியதில்லை” என்று சொன்னார் அறிஞர் அண்ணா. இந்தச் சொற்றொடர் புத்தக வாசிப்பின் மேன்மையை நமக்குச் சொல்லுகின்றது.

பேரறிஞர் அண்ணாவும், பேச்சாற்றலும்

ஒரு சமயம் எழுத்தாளர்கள் எல்லாம் கூடி ஒரு சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்த வந்திருந்தார் எழுத்தாளர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி அவர்கள். கூட்டத்துக்கு பார்வையாளர்கள் வந்துவிட்டார்கள். தலைமை தாங்கிட வந்த கல்கி கிருஷ்ணமூர்த்தியும் வந்துவிட்டார். பேச்சாளர்களில் ஒருவரான அண்ணாவும் வந்துவிட்டார். இந்த எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் அண்ணாவின் பேச்சாற்றல் பற்றி அதுவரை அவ்வளவு தெரியாது. கூட்டத்தில் பேச வேண்டிய மற்ற பேச்சாளர்கள் பலரும் அன்று வந்து சேரவில்லை. கூட்டத்தினர் முணுமுணுக்க ஆரம்பித்ததும், அண்ணா அவர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் காதுபட எதையோ பேசிவிட்டு, மேடையேறினார்.

மேடையேறிய அண்ணா, அங்கே அழைக்கப்பட்டு வராத பலருக்கும் வழங்கப்பட்ட தலைப்பிலும், தன்னுடைய தலைப்பிலும் அற்புதமாகப் பேசி அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்திவிட்டார். “திடீரென மேடை ஏறி அனைத்துத் தலைப்புகளிலும் ஒருவர் பேசுகின்றார் என்றால் அவர் மாபெரும் அறிஞராகத் தான் இருப்பார்” என்று கூறிய அவ்விழாவின் தலைவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவரை இனி ‘அறிஞர் அண்ணாதுரை’ என்று அழைப்பதே பொருந்தும் என்றார். அன்று முதலே அறிஞர் அண்ணாவாக உயர்ந்தார் அண்ணா. அதன்பிறகு தனது மாபெரும் பேச்சாற்றல், அறிவாற்றல் மற்றும் செயலாற்றலால் இன்று ‘பேரறிஞர் அண்ணா’ என்று போற்றப்படுகின்றார்.

அண்ணா அவர்கள், ஆரம்பத்தில் நீதிக்கட்சியில் உறுப்பினராக இருந்தார். அச்சமயம் தந்தை பெரியாரும் நீதிக்கட்சியில் இருந்தார். திருச்சியிலே ஒரு நீதிக்கட்சி மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு தமிழ் தெரியாத தலைவர்கள் பலரும் வந்தார்கள். அவர்களின் பேச்சை தமிழில் மொழி பெயர்த்த போது அண்ணாவின் அறிவாற்றலும், பேச்சாற்றலும் எல்லோருக்கும் புரிந்தது.

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் டெல்லியில் நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணாவின் பேச்சு இன்றும் வரலாறாக இருக்கின்றது. மாநிலங்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும், இந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும் போன்ற பல்வேறு தேவைகள் பற்றி அறிஞர் அண்ணா பேசிய பேச்சு பலரையும் கவர்ந்தது. அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் பேச்சைக் கேட்கவும் அதில் உள்ள அர்த்தங்களைக் கண்டு வியக்கவும் அன்றைய நாடாளுமன்றம் காத்திருந்தது என்றால் இது மிகையில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியைத் தமிழ்நாட்டில் கொண்டுவந்து அரியணையில் ஏற்றுவதற்கு அண்ணாவின் பேச்சே முதல் காரணமாக அமைந்தது.

அவரது பேச்சைக் கேட்க மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்ததும், அவரது பேச்சின் மூலம் தெளிவு பெற்றதும் வரலாறாக நிற்கின்றது. மடை திறந்த வெள்ளமென, ஒரு தனித்துவம் வாய்ந்த குரலில், அர்த்தங்கள் மிகுந்த, அருவி போன்று சொற்கள் கொட்ட, அழகுத் தமிழில் அண்ணா பேசிய பேச்சு ஆயிரம் ஆயிரம் உள்ளங்களைக் கட்டிப் போட்டது. அந்தப் பேச்சு தான் மாபெரும் வெற்றி கண்டு ஆட்சியைக் கைப்பற்றி ‘தமிழ்நாடு’ நலம் பெறக் காரணமானது.

அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளால் உலகில் பல நாடுகளும் கவரப்பட்டன. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் அவரை உரையாற்ற அழைத்திருந்தது. அந்தப் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசிய அண்ணாவின் சொற்பொழிவு தமிழ் மண்ணைச் சார்ந்த ஒரு மாபெரும் மனிதரை அவர்களுக்கு அடையாளம் காட்டியது.

அண்ணாவும், அரசியல் வாழ்வும்

பொதுவாழ்விற்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்ட அண்ணா, பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். பெரியாரின் சொற்பொழிவுகளும், கொள்கைகளும், எழுத்தும் அண்ணாவை இளமையிலேயே கவர்ந்தது. அதே சமயம்  அண்ணாவின் திறமைகளை நன்கு புரிந்து கொண்ட பெரியார், தனது இல்லத்திலேயே ஒரு பகுதியில் அண்ணாவைத் தங்க வைத்துக் கொண்டு பத்திரிகை மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தினார்.

தனது 26 -ஆம் வயதில் அதாவது 1935 -ஆம் ஆண்டு பெரியாரிடம் வந்து சேர்ந்தார் அண்ணா. 1939 -ஆம் ஆண்டுகளில் ‘விடுதலை’ போன்ற இதழ்களில் திராவிட நாடு ஒன்று அமைய வேண்டும், அதன் தேவைகள் என்ன? என்பது பற்றிப் பல்வேறு ஆதாரங்களுடனும் கட்டுரைகளை அண்ணா எழுதி வந்தார். இக்கட்டுரைகள் மிகுந்த பரபரப்பை உருவாக்கின. இக்காலக்கட்டத்தில் பெரியாரின் மூத்த தொண்டராக இருந்த கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் நீதிக்கட்சியில் பொதுச்செயலாளராக இருந்தார். பெரியாருடன் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக அவர் நீதிக்கட்சியில் இருந்து விலகியதால் நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராக அண்ணாவை நியமித்தார்கள், அண்ணா அவர்கள் இப்போது கட்சியின் பொதுச் செயலாளராக உருவெடுத்தார். அதன்பிறகு நீதிக்கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டினார்.

பெரியார், அண்ணாவை அழைத்துக்கொண்டு  1940-ஆம் ஆண்டில் வட இந்தியா சென்றார். நீதிக்கட்சியின் கோட்பாடுகளைப் பற்றி பெரியார் தமிழில் பேச அதை அண்ணா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசி வந்தார். இச்சமயங்களில் பெரியாரின் கருத்துகளுக்கு வட இந்தியர்கள் பலரிடம் மதிப்பும், மரியாதையும் கிடைத்தது.

நீதிக்கட்சி பொதுவாக பல நலத்திட்டங்களை முன்வைத்தாலும் அதன் தலைவர்கள் பலர் பெரும் பணக்காரர்களாகத் திகழ்ந்தார்கள். இதனால் மக்கள் மத்தியில் அது ‘பணக்காரர்கள் கட்சி’ என்றே பார்க்கப்பட்டது. இதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்துகளை, மிகவும் வலுவாக அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். இதற்கு எதிர்ப்புகளும் வலுவாக இருந்தது. ஆனால், அண்ணாவின் கருத்துகளில் உண்மையும், நன்மையும் உள்ளதை உணர்ந்த பெரியார் அவரை ஊக்கமூட்டினார்.

சேலத்தில் 1944-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானம் வரக்கூடாது என்று பலர் திரை மறைவு வேலைகளிலும், நேரடியாகவும் மோதினார்கள், ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ‘திராவிடர் கழகம்’ உருவானது. இதனை வாழ்த்திப் பேசிய தந்தை பெரியார் இத்தீர்மானத்தை ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்றே அழைத்தார்.

எல்லோருக்கும் கல்வி, பெண்களுக்கு உரிமைகள் மற்றும் சுதந்திரம், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப் பாடுபடுதல் என்று அண்ணாவின் பேச்சும், எழுத்தும், செயலும் அமைந்தது. மக்கள் மத்தியில் அவரது மதிப்பை உயர்த்தியது. தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்ட அண்ணா தன் வாழ்நாளின் இறுதிவரை தந்தை பெரியாரைத் தன் குருவாக, தலைவராகவே பாவித்தார்.

தந்தை பெரியாரும்,
அறிஞர் அண்ணாவும்

முதலில் நீதிக்கட்சி பின்பு திராவிடர் கழகம் என்ற அரசியல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு சமுதாயத்தின் சீர்கேடுகளைச் சாடிக் கொண்டிருந்தார் தந்தை பெரியார். அவரது அன்புச் சீடராகவும், கொள்கைகளைப் பட்டி, தொட்டியெல்லாம் பரப்பும் வீரராகவும் திகழ்ந்தார் அறிஞர் அண்ணா. இப்படி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறாத அன்பும், மதிப்பும் வைத்துப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சூழலில் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த நாளை துக்க நாளாகக் கொண்டாட திராவிடர் கழகத்திற்கு அழைப்பு விடுத்தார் பெரியார். அதாவது இந்தியா விடுதலை பெற்றாலும் அது உயர்சாதியினர் கையிலும், வட இந்திய வசதி மிக்க பனியாக்காரர்களிடமும் சிக்கிவிடப் போகின்றது. எனவே, இது சரியான விடுதலை இல்லை என்பது தந்தை பெரியாரின் வாதமாக இருந்தது.

ஆனால், அறிஞர் அண்ணா இந்த விஷயத்தில் பெரியாரிடமிருந்து முரண்பட்டார். அதாவது, இந்திய விடுதலையை நாம் கொண்டாடுவோம். காரணம், வெள்ளையர்களிடமிருந்து விடுதலை என்பதே முதலில் நமக்கு மகிழ்ச்சியான செய்திதான். அதன் பிறகு நமது தேசத்துக்குள் உள்ள அடிமைத் தனங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்று எழுதினார். இந்த கருத்துகள் பெரியாரின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அண்ணா தனது கருத்தில் பின்வாங்கிடவில்லை.

தந்தை பெரியாரின் அரசியல் நிலைப்பாடு என்பது ஆட்சியதிகாரத்தை நோக்கியதாக இல்லை. அதிகாரம் வந்தால் சேவைகள் நின்றுவிடும் என்று பெரியார் கருதினார். அதனால், மக்கள் மன்றத்தில் தேர்தல்களில் ஈடுபடுவதை திராவிடர் கழகம் புறக்கணிக்க வேண்டும் என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது. இருப்பினும் மக்களுக்கு நல்லது செய்திட ஆட்சி அதிகாரமும் உதவும் என்பது அண்ணாவின் எண்ணமாக இருந்தது. இந்த காலக் கட்டத்தில் தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் இடையில் தந்தை பெரியாரின் திருமணம் சார்ந்து ஒரு கசப்பான சூழல் உருவானது, இச்சூழலில் தனித்து இயங்கலாம் என்று அண்ணாவிடம் பலரும் வலியுறுத்தியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தோற்றுவித்தார். ஆயினும் தனது புதிய அரசியல் கட்சிக்குக் தலைவராக யாரையும் அண்ணா நியமிக்கவில்லை. அதாவது திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிடர் கழகத்தின் ஒரு பகுதிதான் அதன் தலைவர் பதவி என்பது தந்தை பெரியாருக்கே என்று மானசீகமாக உணர்த்தினார். ஆகவேதான் அறிஞர் அண்ணா இறக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் பதவி என்பது இடம்பெறவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றம்

சென்னை பவளக்காரத் தெருவில் 17-9-1949 அன்று ஏழாம் எண் வீட்டில் திராவிடக் கழகத்தின் மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்று கூட வேண்டும் என்று அழைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் ஒன்றுகூடினர். அந்த நாளில், அந்த வீட்டில்தான் திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு உருவானது. அந்த நாள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய அறிவிப்பும்
18-9-1949 அன்று மாலை வண்ணாரப்பேட்டையில் இருந்த ராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கழகத்தையும், தலைவர்களையும் ‘கண்ணீர்த் துளிகள்’ என்று பெரியார் அழைத்தார். ஆனால், தந்தை பெரியாரை ஒருபோதும் அறிஞர் அண்ணா அவதூறாகப் பேசவில்லை தன்னுடைய மேலான ஆசானாகவே கருதினார்.

தன்னோடு சேர்ந்து கழகத்தில் இணைந்தவர்களை அன்போடு தம்பி என்றே அண்ணா அழைப்பார். பெயரில் மட்டுமல்லாமல், பாசத்தோடு வழிநடத்துவதிலும் அறிஞர் அண்ணா அவரது தம்பிகளுக்கு அண்ணா0வாகத் திகழ்ந்தார்.

1963-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் இந்தியை ஆட்சி மொழியாக்கும் முயற்சியும், சட்டமும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திமொழி ஆட்சி மொழியானால் மற்ற மாநில மொழிகள் அழியும் என்று ஆணித்தரமாக வாதிட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்கள் பல மாதம் சிறை சென்றார்கள் வன்முறைகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இறுதியில் ஒன்றிய அரசு ஆட்சி மொழி மசோதாவை திரும்பப் பெற்றது. அந்தந்த மாநிலங்களில் அவரவர் மொழியே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்பது அண்ணாவின் முழக்கமாகும். இதனிடையில், 1957ஆம் ஆண்டு அண்ணா உட்பட 15 சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதன்முதலாக சட்டசபையில் நுழைந்தது திராவிட முன்னேற்றக் கழகம். பின்பு 1962ஆம் ஆண்டு 50 சட்டமன்ற உறுப்பினர்கள் வென்றார்கள். ஆனால், அண்ணா அந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்றார்.

தொடர்ந்து, பல்வேறு போராட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகம்
எல்லா ஊர்களிலும் மிக மிக வேகமாக வளர்ந்தது. பல்வேறு தவறான கொள்கை மற்றும் கோட்பாடுகளால் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி நோக்கிச் சென்றது. 1967-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 138 இடங்களில் வென்றது தி.மு.க. 25 நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா தமிழ்நாடு முதல்வராக 6-3-1967 ல் பதவியேற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் அண்ணா

முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அறிஞர் அண்ணா இந்த வெற்றியை தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று கூறினார். அவரிடம் சென்று முதலில் ஆசிபெற்றார். தந்தை பெரியாரும் கண்ணீர் மல்க தான் வளர்த்த பிள்ளைகளை வாழ்த்தினார்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்று பெயர் வைக்கப்பட்டது. சென்னை மாநிலம் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றினார் அறிஞர் அண்ணா. ‘சத்யமேவ ஜெயதே’ என்று இருந்த தமிழ்நாடு அரசின் இலச்சினை வார்த்தையை ‘வாய்மையே வெல்லும்’ என்று மாற்றினார். ஒருபடி அரிசித் திட்டத்தைக் கொண்டு வந்தார். சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வந்தார். இருமொழிக் கொள்கை அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.

தன் உடல் நலனைக் கண்டுகொள்ளாது உழைத்தார் அண்ணா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றினார்.

முதல் உலகத் தமிழ் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. எனவே 1968-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா பொறுப்பேற்றுக் கொண்டு சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நிகழ்த்தினார். மிகப்பெரிய ஊர்வலமும், தமிழின் பெருமையை உணர்த்தும் கண்காட்சிகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், நாடகங்கள் மற்றும் நாட்டியங்கள் நடத்தப்பட்டன. ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்ட அண்ணா மாநாடுகளில் காட்சிப்படுத்துதலில் தனிக் கவனம் செலுத்தினார்.

ஏழை எளியவர்கள், விவசாயிகள் நலம் பெறத் திட்டங்கள் பல தீட்டிய வேளையில் 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. குறுகிய காலமே முதலமைச்சராக இருந்த தலைவர் என்றாலும், அவரது புகழ் அளவு கடந்ததாக இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட கூட்டம் இன்றும் இந்திய வரலாற்றில் முறியடிக்கப்படவில்லை. அவ்வளவு தொண்டர்களின் நெஞ்சில் உறைந்தவராக விளங்கினார் அண்ணா. அதனால் தான் அவர் ‘பேரறிஞர் அண்ணா’ என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் தந்தை பெரியாரின் வழியில் நடைபோட அரசியல் களம் அமைத்துத் தந்தவர் பேரறிஞர் அண்ணா. மாநிலங்கள் உரிமையோடு திகழ்ந்தால்தான் அந்தந்த மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற மாநில சுயாட்சிக் கொள்கைக்கு அடித்தளமிட்டவர் பேரறிஞர் அண்ணா. இன்றைய தமிழகத்தில் கல்லூரிகள், பள்ளிகள் பெருகி, தொழில் வளர்ச்சி கண்டுள்ளதற்குமான அடிப்படைகளை உருவாக்கித் தந்தவர் பேரறிஞர் அண்ணா. சமதர்ம சமுதாயம் மலர வழி கண்டவர் பேரறிஞர் அண்ணா.

இதனால்தான் அண்ணா போற்றப்படுகின்றார். ‘தமிழ்நாடு’ என்று சிந்திக்கும்போது முதல் மனிதராக முன்னேற்றப் பாதைகளுக்குப் பாதை காட்டியவராக திகழ்பவர் பேரறிஞர் அண்ணா. அரசியலில் நாகரீக அரசியலை வளர்ப்பதில் தனிக் கவனம் கொண்டு இருந்தவர் என்பதும், இளையவர்களை ஊக்கமூட்டி நாடாளும் கலையைத் தந்து, தலைவர்களாக உருவாக்கிப் பல்வேறு முன்மாதிரிகளைத் தந்துள்ளார் பேரறிஞர் அண்ணா. எனவே, என்றும் வாழும், உயரும் தமிழ்நாட்டில் அணையாத விளக்காகப் பேரறிஞர் அண்ணா சுடர் விட்டுக் கொண்டிருக்கின்றார்.=

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

=  சமதர்மம் ருசிகரமான வார்த்தை. இன்று நாட்டில் பலராலும் பேசப்பட்டு வரும் இலட்சிய வார்த்தை. உண்மையிலேயே இந்த உயர்ந்த இலட்சியத்தின்படி சமூகம் சீர்திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

=  தமக்குள்ள பொறுப்புகளை உணராமல், கடமைகளை நிறைவேற்றாமல் உரிமைகளைப்பற்றி மட்டும் உரத்த குரலில் வலியுறுத்திக் கொண்டிருந்தால் அந்த நிலை நம்மைப் பிணக்கிலும், ஏமாற்றத்திலும் தான் கொண்டு போய்விடும்.

=  இளைஞர்கள் ஆசிரியர்களாக வேண்டும். உலகத்தை கிராமத்து மக்களுக்குக் காட்டவேண்டும். இளைஞர்கள் பாலம் அமைக்க, நீர்த் தேக்கம் அமைக்க, உழவு முறையை மாற்றப் பணிபுரிய வேண்டும். பழமையின் பிடியிலிருந்து மக்களைப் பக்குவமாக விடுவித்து, புதுமையின் நன்மையைக் காட்டிப் புத்துலகு அமைக்க முன்வர வேண்டும்.

=  ஒரு வேலைக்கும், இன்னொரு வேலைக்கும் இடையே செய்யும் வேலைதான் ஓய்வு.

=  ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள், நிகழ்கால உலகம் எவ்வழியில் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்.

=  பிறருக்குத் தேவைப்படும் போது நல்லவர்களாகத் தெரியும் நாம் தான், அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகி விடுகின்றோம்.

=  நெஞ்சிலே வலுவிருந்தால் வெற்றி தஞ்சமென்று வந்து நம்மிடம் கொஞ்சிடும் என்பது உறுதி.

=  உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன், வாழ்த்துக்குரியவன், அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நலமான வாழ்வையே புரையோடச் செய்வதாகும்.

=             நீதியையும், நேர்மையையும், சமுதாயத்தில் அமைதியையும், சுபிட்சத்தையும் விரும்பும். எவரும், தொழிலாளர்களின் பிரச்சனைகளை அலட்சியம் செய்திடவோ அல்லது அடக்குமுறை கொண்டு அழித்துவிடக் கூடுமென்றோ எண்ணக்கூடாது.

=  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

=  பாட்டாளி பாடுபட்டுக்கட்டுவது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் போன்ற மனைகள், நான்கடுக்கு, ஐந்தடுக்கு அரண்மனைகள் போன்ற வீடுகள். இவற்றை நிமிர்ந்து நோக்கினால் கழுத்து வலிக்கும். ஆனால், பாட்டாளி குடியிருப்பதோ, குனிந்து செல்லும் குடிசை. ஏன், இந்தப் பேதம் என்று நாட்டிலே சிந்திக்க வேண்டும்.

=  நாட்டில் நல்ல அரசியல் மரபை உண்டாக்கவும், உண்மை ஜனநாயகம் மலரவும் அனைத்து அரசியல் கட்சியினரும் பாடுபட வேண்டும்.

=  மலர்கொண்டு மாலை தொடுத்தலிலே கைத்திறன் முழுவதும் காட்டி, காகிதப் பூமாலை தொடுத்தால், பயன் என்ன? மாலைக்கு முதற்பொருள் மனமுள்ள மலர். அதுபோல பேச்சிற்கு முதற்பொருள் சுவையும், பயனுள்ள நல்ல கருத்துகளும் ஆகும்.

=  கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.

=  வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானைபிடிக்கத் தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால், தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம், அதேபோல், நல்வாழ்வு பெறவேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத் தான் வேண்டும்.

=  அறிவாலும், ஆற்றலாலும் ஆகாத காரியம் என்று ஒன்றும் இல்லை. அறிவும், ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.

=  ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை.

=  வாழ்க்கை ஒரு பாறை, உங்களிடம் அறிவு என்ற உளி இருக்கிறது. அதனைக் கொண்டு அழகான சிற்பமாக வாழ்வை வடித்து ரசியுங்கள்.

=  மோரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல, அறிவை வளர்த்துக் கொண்டு பலன்பெற வேண்டும்.

=  அஞ்சா நெஞ்சம் படைத்த இலட்சியவாதிகள் தான் ஒரு நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய ஒப்பற்ற செல்வங்கள். ஏனெனில், பணம் வெறும் இரும்புப் பெட்டியில் தான் தூங்கும். ஆனால், இந்தச் செல்வங்களோ, மக்களின் இதயப் பெட்டியில் வாழும்.