கற்றல் எளிது -12
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
நெல்சன் டெல்லிஸ் வளரும்போது மற்ற சிறுவர்களைப் போலதான் இருந்தான். என்ன அவனுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம். நண்பர்களின் பிறந்தநாளை மறந்துவிடுவான். கடைக்கு போனால் என்ன வாங்க வந்தோம் என்று மறந்துவிடுவான். ஏன் சில நேரத்தில் அவனுடைய பெயரேகூட சட்டென்று நினைவுக்கு வராது. இதுகூடப் பிரச்சனை இல்லை. ஒருநாள் நெல்சனின் தந்தை அவனை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்தபோது வீட்டில் ஒரே புகை. பதறி அடித்து உள்ளே ஓடிச் சென்று பார்த்தால் அடுப்பில் இருந்த பாத்திரம் கருகிப் புகைந்துக்கொண்டு இருந்தது. அதை அணைத்துவிட்டு நெல்சன் எங்கே என்று தேடினார். நெல்சன் சாவகாசமாக விளையாடி முடித்துவிட்டு அப்போது தான் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தான்.
விசாரித்ததில், சமைக்க வேண்டும் என்று அடுப்பில் பாத்திரத்தை வைத்தவன் நண்பர்கள் அழைத்தவுடன் மறந்துவிட்டு விளையாடச் சென்றுவிட்டான். நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
வருடங்கள் உருண்டோடின. ஞாபக மறதி நெல்சன் அப்போது அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மிகப்பெரிய நினைவாற்றல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்தார். அவர் போட்டியின் கடைசிக் கட்டத்தில் இருந்தார். இந்தச் சுற்றில் அவர் தனக்கு தரப்பட்டிருக்கும் பெயர்களையும் எண்களையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பத்துப் பெயர்கள், இருபது பெயர்கள் அல்ல, இருநூற்று ஒன்று பெயர்களை. அதுவும் வெறும் பதினைந்து நிமிடங்களில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதீத ஞாபக சக்தி உடையவர்களுக்கே கடினம். நெல்சன் போன்ற ஞாபக மறதி ஆட்களால் முடியுமா? முடிந்தது நெல்சன் வெற்றிபெற்றார்.
அடுத்ததாக இறுதிச் சுற்று. இந்தச் சுற்றில் அவரிடம் சீட்டுக்கட்டுகள் கொடுக்கப்பட்டன. அதில் மொத்தம் நூற்று நான்கு கார்டுகள் இருந்தன. போட்டி இது தான். அந்தக் கார்டுகளை கொடுக்கப்பட்ட வரிசையிலேயே நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்! பெயர்கள், எண்கள் என்றால்கூட பரவாயில்லை. சீட்டில் உள்ள ஹார்டின், ஸ்பேட், டைமண்ட், க்ளோவர் ஆகிய பூக்கள், அதன் நிறங்கள், எண்கள் என அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும் நூற்றிநான்கு கார்டுகள் என்பதால் வந்த கார்டுகளே மீண்டும் மீண்டும் வரும்.
அதுமட்டுமில்லாமல் இறுதிச் சுற்றில் இவரைவிடப் பல மடங்கு ஞாபக சக்தி படைத்த ஜாம்பவான்கள் எல்லாம் அங்கு பங்கேற்றிருந்தனர். நெல்சனால் வெற்றி பெற முடியுமா?
அது இருக்கட்டும். சிறு வயதில் தன் பெயரையே மறந்த சிறுவனால் எப்படி நினைவாற்றல் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்று வரை முதலில் வர முடிந்தது? அதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
வெற்றிடமும், தீர்ந்துபோன டூத் பேஸ்ட் டியூப்பும்
சென்ற பகுதியில் தற்காலிக நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியில் நீண்ட கால நினைவாற்றல் குறித்து இன்னும் சற்று ஆழமாகப் பார்க்கலாம். நீண்ட கால நினைவாற்றலில் நாம் பயிலும் தகவல்கள் எப்படிச் சேகரிக்கப்படுகின்றன என்று பார்ப்போம்.
நமது நீண்டகால நினைவாற்றல் இரண்டு பகுதிகளாகவுள்ளது. ஒன்று டூத் பேஸ்ட் டியூப் (Tooth Paste Tube) போன்றது, மற்றொன்று வெற்றிடம் போன்றது. இந்தப் பகுதிகளில் தான் நமது தகவல்கள் சேகரித்து வைக்கப்படும். இப்படி கேட்கிறேன். நாம் ஏற்கனவே நீண்ட கால நினைவாற்றல் என்பது அலமாரி போன்றது என்று பார்த்தோம் இல்லையா? இப்போது உங்கள் அலமாரியில் ஒரே ஒரு தீர்ந்துபோன டூத் பேஸ்ட் டியூப் உள்ளது. மற்ற இடங்கள் எல்லாம் வெற்றிடமாக உள்ளது. இதில் எங்கே உங்களது பொருட்களை வைப்பீர்கள்?
இது என்ன முட்டாள் தனமான கேள்வியாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? யாராக இருந்தாலும் அலமாரியில் உள்ள வெற்றிடத்தில் தான் பொருட்களை வைப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் டூத் பேஸ்ட் டியூப்பிற்குள் யாராவது பொருளை வைக்க முடியுமா? அதற்குள் தண்ணீரை ஊற்றுவது என்றாலே கடினமான விஷயம். இதில் எங்கே பொருட்களை கொண்டு போய் வைப்பது? ஆனால் நம் மூளையில் உள்ள நீண்ட கால நினைவாற்றல் அப்படித்தான் செயல்படுகிறது. நம் நீண்ட கால நினைவாற்றலில் டூத் பேஸ்ட் டியூப் போன்று ஒரு சிறிய இடமும், காலியான பெரிய அறையும் இருக்கிறது. இதில் நீங்கள் எங்கே தகவல்களை வைக்கிறீர்கள் என்பது தான் விஷயம்.
நாம் எதையாவது ஒன்றைப் படிக்கிறோம், அல்லது பேசிக்கொண்டிருக்கிறோம், அல்லது ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால் அந்த நேரத்தில் அந்த தகவல்கள் நமது தற்காலிக நினைவாற்றலில் தான் இருக்கும். அந்தத் தகவல் நீண்ட நாட்களுக்கு நம் நினைவில் இருக்க வேண்டும் என்றால் நாம் அதை நீண்ட கால நினைவாற்றலுக்குள் வைக்க வேண்டும். அதற்காக நாம் அதைத் தனியாக ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நமது மூளை அதைத் தானாகவே செய்துவிடும். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நம் மூளை ஒரு தகவலை நீண்ட கால நினைவாற்றலில் உள்ள டூத் பேஸ்ட் டியூப் போன்ற இடத்தில் வைக்க வேண்டுமா? அல்லது காலியாகவுள்ள பெரிய இடத்தில் வைக்க வேண்டுமா என்று யோசிக்கும். நாம் எங்கே வைக்க வேண்டும் என்று சொல்கிறோமோ அங்கே தான் அதை வைக்கும்.
காட்சியும், கருத்தும்
நமது மூளை தகவல்களை கருத்தாகவும் (Facts), காட்சியாகவும் (Pictures) பிரித்து நீண்ட கால நினைவாற்றலில் சேகரிக்கிறது. பெயர்கள், எண்கள் இவையெல்லாம் கருத்துக்கள் (Facts). இதுபோன்ற கருத்துக்களை நம் மூளை டூத் பேஸ்ட் டியூப் போன்ற இடத்தில் தான் வைக்க முயற்சிக்கும். நம் மூளையின் அமைப்பே அப்படிதான்.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.