ஊடகம் பழகு 12
திரு.மனோஜ் சித்தார்த்தன்
ஒரு பழமொழி சொல்வார்கள் ‘‘திக்குத் தெரியாத காட்டில் (திசை தெரியாத காட்டில்) மாட்டிக்கிட்ட மாதிரி’’ என, ஆம் அது போன்று தான் இன்றைய பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்த வேண்டுமா, ஏன் இப்படி போய்ட்டு இருக்கு, வருமானமே இல்லையே, ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியவில்லையே, எத்தனை பேர் வேலை பாக்குறாங்க? இருக்கிறவர்களை பாதியாகக் குறை, இவ்வளவுதான் சம்பளம், தேவை என்றால் வேல பாருங்க, இல்லனா போங்க என்ன செய்யப் போறேன்னு தெரியல என விழி பிதுங்கி இருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் பல உள்ளன இங்கு.
நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இதே நிலைதான். ஏன் இந்த நிலை? தொலைக்காட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியினை youtube தளத்தின் வளர்ச்சிக்கு முன், வளர்ச்சிக்குப் பின் என்று பிரித்துப் பார்க்கும் மனநிலை சரியானதா, தொலைக்காட்சி நிறுவனங்கள் சரிவில் இருப்பது உண்மைதானா. கொரோனா பொது முடக்க காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது தான் இத்தளம், இது எவ்வாறு தொலைக்காட்சிகளைப் பாதிக்கின்றது, இவற்றால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தொலைக்காட்சிகள் மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம்
இன்றும் தொலைக்காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்கள் மனதில் உடனடியாக இடத்தை பிடிக்கவில்லை, படிப்படியாகத்தான் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத, ஏன் ஒரு சில பகுதிகளில் மின்சார வசதிகள் என்றால் என்ன என்று அறியாத காலங்களில் தொலைக்காட்சிகள் என்பது அறிமுகம் ஆகின. நான் முன்னரே சொன்னது போல, ஆரம்ப காலத்தில் இது ஒரு ஆடம்பரப் பொருளாகவும் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்தும் வகையிலும் இருந்தன. அப்போதைக்கு இதன் விலையும் பாமரர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருந்தன. தொலைக்காட்சிப் பெட்டிகள் இவ்வாறு தான் இருக்கும் என்பதனை நகர் பகுதியில் இருந்து கிராமப் புறங்களுக்கு வரும் மக்கள் கிராமப்புற மக்களிடம் எடுத்துக் கூறினர். அதனை ஆச்சரியத்துடன் கேட்டனர் கிராமப்புற மக்கள்.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் இதைப் பற்றி புரிதல் ஏற்பட்டு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் அரசின் வரி குறைப்பு போன்ற காரணங்களால் விலையிலும் சற்று குறைந்தன. ஆடம்பரப் பொருளானது அத்தியாவசிய பொருளானது, இதனால் பார்வையாளரின் எண்ணிக்கை அதிகரித்தது. தொலைக்காட்சிகளின் வரவால் சினிமா திரையரங்குகள் பெரும் வருவாய் இழப்பை அடைந்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. மக்களைச் சினிமா எந்த அளவிற்கு கவர்ந்தது. அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே.
அவ்வாறு இருந்த திரையரங்குகள் வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு தொலைக்காட்சிகள் தான், முதல் காரணம் என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஒன்றை இழந்து தான் இன்னொன்றைப் பெற முடியும் என்ற கூற்றின்படி திரையரங்குகளுக்குச் செல்லும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து தொலைக்காட்சிகளில் பார்வையாளர்கள் அதிகரித்தனர். இதனால் காலப்போக்கில் தொலைக்காட்சிகள் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளில் இருந்து வண்ணத் தொலைக்காட்சிகளாக மாறியது. தொலைக்காட்சிகளில் புதிய தொழில்நுட்பங்கள் என தொலைக்காட்சிகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் பல மாற்றங்கள் பெற்று அசைக்க முடியாத சக்தியாக திகழ்கின்றன தொலைக்காட்சிகள்.
தொலைக்காட்சிகளுக்கு இருக்கும் தனித்துவம்
தனித்துவமான தொலைக்காட்சிகளுக்கு எப்போதும் மக்கள் மனதில் வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அதன்படி இந்தியாவில் மொத்தப் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் 8% பார்வையாளர்கள் செய்திகளை விரும்பிப் பார்ப்பதாகவும், இந்தியா முழுவதும் செய்திகளுக்கென பல்வேறு மொழிகளில் 2016 – ல் 142 தொலைக்காட்சிகளில் இருந்து 2017 – ல் 163 செய்தி தொலைக்காட்சிகளாக அதிகரித்துள்ளது (BARC-The Broadcast Audience Research Council). தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணக்கிடும் இந்த அமைப்பு வெளியிட்ட தகவல். அதன்படி பல மொழிகளில் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்கள் பல உள்ளன தமிழில் 2000 – ஆவது ஆண்டில் முதல் தனியார் செய்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அந்த வகையில் ஒட்டு மொத்த இந்தியாவிலும் சுமார் 15 சதவீதம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.