சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 14
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
ஜான் போரிசோவிட் கோம், ஒரு உக்ரேனிய-அமெரிக்கப் பில்லியனர். 15.1 பில்லியன் டாலர்களுக்குச் சொந்தக்காரரான இவர் அமெரிக்கப் பணக்காரர்களின் பட்டியலில் 44-ஆம் இடத்தில் உள்ளவர்.
2.5 – பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் 836 – வது பணக்காரர் என்று கருதப்படுபவர் பிரையன் ஆக்டன்.
ஜான் போரிசோவிட் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் இருவரும் இணைந்து உருவாக்கியதுதான் ‘வாட்ஸ் அப்’ என்னும் செயலி. இன்று 180 – நாடுகளில் 2.95 – பில்லியன் அதாவது 300 – கோடி மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக உள்ளது. 2025 – ஆம் ஆண்டு இறுதிக்குள் 314 – கோடி என்று உயரும் என்கிறார்கள்.
பல்வேறு செயலிகள் இன்று மனித வாழ்வை ஒருங்கிணைத்தாலும் எளிதாகச் செய்திகளை, படங்களை, வீடியோக்களை அனுப்பிட உதவும், எல்லோருக்கும் செயல்படுத்திப் பயன்படுத்த எளிதான செயலியாக வாட்ஸ் அப் என்னும் பகிரி அல்லது புலனம் உள்ளது. இந்தச் செயலியை இன்று நாம் அதிகம், அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். இந்தப் பயன்பெறுதலுக்குப் பின்னே இரண்டு சிறந்த மனிதர்கள் செயல்பட்டுள்ளார்கள். சமூக உணர்வோடு உலகிற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள். இந்த மனிதர்களின் சேவையை அறிந்துகொண்டால் இப்படியும் சிந்திக்கலாம், சாதிக்கலாம் என்பது நமக்குப் பதிலாக அமைகின்றது.
ஜான் கோம்
1976 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24 – ஆம் தேதி மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜான் கோம். உக்ரைனில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் வாழ இயலாத சூழல் காரணமாகத் தன் தாய் மற்றும் பாட்டியுடன் அமெரிக்கா வந்தனர். 1992 – ஆம் ஆண்டு ஜான் கோமுக்குப் பதினாறு வயது நடந்த போது கலிபோர்னியாவிலுள்ள மவுண்ட் வியூவிற்கு வந்த அவர்களுக்கு ஒரு இரண்டு அறைகள் கொண்ட வீடு கிடைத்தது.
அன்றாட உணவுக்குச் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசாங்கம் தரும் நன்கொடை உணவுகளைப் பெற வேண்டிய நிலையில் கோமின் குடும்பம் இருந்தது. எனவே ஜான் கோம் ஒரு மளிகைக் கடையில் தரையைத் துடைத்துக் கொடுக்கும் பணியில் சேர்ந்தார். தாயார் குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு இடத்தில் பணிசெய்தார். ஜான் கோமின் தந்தைக்கு உக்ரைனை விட்டு வர மனமில்லாததால் அவரை வற்புறுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
இந்நிலையில் 1997 – ஆம் ஆண்டு ஜான் கோமின் தந்தை இறந்தார். ஜான் கோமின் தாய் அடுத்த மூன்று ஆண்டுகள் புற்றுநோயுடன் போராடினார். பின்பு 2000 – ஆம் ஆண்டில் இறந்தார். தந்தை, தாயின் அடுத்தடுத்த இழப்புகள் ஜான் கோமைப் பாதித்தன. ஆயினும் தனக்கென ஒரு வாழ்வைக் கொண்டு செல்ல அவர் உழைத்தார்.
வறுமையின் காரணமாக நேரடியாகக் கல்வி நிறுவனங்களுக்குச் ெசன்று படிக்க கோமுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. அமெரிக்கா வந்த நாளில் இருந்தே கணிப்பொறியின் அடிப்படைகளைத் தேடிக் கற்றுவந்தார் கோம். பின்பு எர்ன்ஸ்ட் மற்றும் யங் என்னும் நிறுவனத்தில் பாதுகாப்புச் சோதனையாளராகப் பணி செய்தார். அப்போது அஞ்சல் வழிக் கல்வி மூலம் சான் ஜோஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி நிரலாளர் பயிற்சியில் சேர்ந்தார்.
அதன் பிறகு 1996 – ஆம் ஆண்டில் நாப்ஸ்டர் படைப்பாளர்களான ஷான் ஃபான்னிங் மற்றும் ஜோர்டன் ரிட்டர் ஆகியோரைச் சந்தித்தார். கணிப்பொறி ஆர்வம் அதிகரித்தது. 1997 – ஆம் ஆண்டில் பிரையன் ஆக்டனைச் சந்தித்தார். ஆண்டு இறுதியில் யாகூ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். உள்கட்டமைப்புப் பொறியாளராகப் பணிசெய்தார். ஒன்பது ஆண்டுகள் நண்பர் பிரையன் ஆக்டனுடன் யாகூ நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
இந்தக் காலக்கட்டத்தில் தான் ஜான் கோம் தாயை இழந்த வேதனையில் துவண்ட போது பிரையன் ஆக்டன் அவருக்கு நல்ல நண்பராக இருந்து உதவினார். மன உளைச்சலால் ஜான் கோம் தவித்த போது விளையாட்டுகளில் ஈடுபடுத்தியது, பொருளாதார நெருக்கடிகளில் உதவியது, என்று பல வகைகளிலும் உற்ற நண்பராகத் திகழ்ந்தார் பிரையன் ஆக்டன். இந்த நட்பு அவர்களது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், இணைந்து முன்னேறவும் வழிகாட்டியது.
வாட்ஸ் அப் உருவானது
ஜான் கோம், பிரையன் ஆக்டன் இருவரும் ஒன்பது ஆண்டுகள் யாகூ நிறுவனத்தில் பணிசெய்த பின்பு, இருவரும் வேலையை ராஜினாமா செய்தார்கள். ஓராண்டு ஓய்வுக்குப் பின்பு தென் அமெரிக்காவுக்குச் ெசன்றார்கள்.
தென் அமெரிக்காவில் பேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார்கள். நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட இருவரும் தகுதிச் சுற்றில் தேர்வு பெறாமல் புறக்கணிக்கப்பட்டார்கள்.
இச்சூழலில் 2009 – ஆம் ஆண்டு ஜான் கோம் ஒரு ஐபோனை வாங்கினார். அதன் செயலிச் செயல்பாடுகள் அவருக்குத் திருப்தியாக இல்லை. மேலும் அக்காலத்தில் செய்திகளைப் பகிர்ந்து கொள்வது என்பது வெறும் செய்தியை மட்டும் வழங்குவதாக அமைந்தது. 2004 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ேபஸ்புக் பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளின் பாதுகாப்பு அல்லது தனியுரிமையை வெளிக்காட்டுதலில் நேர்த்தியை வழங்கவில்லை. இதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார் ஜான் கோம்.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.