ஐந்து ஆறைவிடப் பெரியது 17
திரு.முகில்
அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துத் கொறித்துத் தின்னலாம்!
என்று குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களது அமரத்துவம் பெற்ற பாடலோடு இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பதைத்தான் அணிலே விரும்பும்.
பாடலில் சொல்லப்பட்டது போல, அணில்கள் கொறித்துண்ணும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை (Sciuridae). 40 – மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பூமியில் அணில்கள் துள்ளித் திரிந்து கொண்டிருக்கின்றன. 280-க்கும் மேற்பட்ட அணில் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் பிக்மி இன அணில்களே மிகவும் சிறியவை. வெறும் 16.5 கிராம் எடையும், 5.5 – அங்குல நீளமுமே கொண்ட அழகுப்பிள்ளைகள். உலகிலேயே பெரிய அணில்கள், ராட்சச மலபார் அணில்கள். இவை சுமார் 1 – மீ நீளம் வளரக்கூடியவை. சராசரியாக 2 – கிலோ எடை கொண்டவை. இவற்றுக்கு இன்னொரு பெயர், இந்திய ராட்சச அணில்கள்.
அடர்த்தியான காடுகளில் வாழும் இந்தப் பெரிய இந்திய அணில்களுக்கு சைவம், அசைவம் இரண்டுமே பிரியம். பூச்சிகளையும், பறவைகளின் முட்டைகளையும் விரும்பி உண்கின்றன. பழங்கள், விதைகள், கொட்டைகள், மரப்பட்டைகளையும் இரு கை பார்க்கின்றன. பலாப்பழங்களைத் துளையிட்டுக் கொறிப்பதில் அலாதிப் பிரியம். இந்தப் பெரிய அணில்கள் மீது சிறுத்தைகளுக்கும், ஆந்தை போன்ற இரைகொல்லிப் பறவைகளுக்கும் பிரியமோ பிரியம். மகாராஷ்டிராவின் மாநில விலங்காக இந்தப் ‘பெரியவர் அணில்’ கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறது.
வாலுடன் நிழலில் அமர்ந்திருக்கும் பிராணி – என்பதாக கிரேக்கத் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் அணில் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வாலைத் தூக்கி அணில் அமர்ந்திருக்க, அந்த வாலானது அணிலுக்கே நிழல் தந்தது என்று இதற்குப் பொருள் சொல்லுகிறார்கள். Skia என்றால் நிழல், Oura என்றால் வால் என்று கிரேக்க மொழியில் பொருள். இரண்டு சொற்களும் சேர்ந்து Skiouros என்ற சொல் அணிலைக் குறிப்பிடும்படி உருவானது. அது லத்தீனில்
Sciurus என்று மருவி, பழைய பிரெஞ்சில் Esquireul என்று உருப்பெற்று, Squirrel என்ற ஆங்கிலச் சொல்லாகப் பிறந்தது. அணில் என்ற தமிழ்ப் பெயருக்கு, தமிழ்ச் சொல் ஆய்வாளர் இராம. கி சொல்லும் விளக்கம், அண்ணு என்றால் வால். அண்ணு + இல் = அண்ணில். அதுவே அணில். பொருள் வாலுயிரி.
சங்க இலக்கியப் பாடல்களெங்கும் அணில்கள் துள்ளித் துள்ளி ஓடுவதை ரசிக்கலாம்.
‘அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட’ – அணில்களின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காய் என்ற அழகான உவமையைக் கொண்டுள்ளது புறநானூறு. ‘அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!’ – அதாவது அணிலின் பல்லைப் போன்ற பூந்தாதுக்கள் முதிர்ந்திருக்கும் முள்ளிச்செடியுள்ள நீலமணியின் நிறம் போன்ற பெரிய கழியினுக்கு உரிமையாளனே! என்று அணில் பல்லின் கூர்மையை வருணிக்கிறது குறுந்தொகை. ‘மூங்கா வெரு கெலி மூவரியணிலொடு’ என்று முதுகில் மூன்று வரிகள் கொண்ட அணிலை தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார். எனில், அவருக்கு நம் மண்ணைச் சாராத, முதுகில் ஐந்து வரிகள் கொண்ட அணில்கள் குறித்தும் தெரிந்திருக்கிறது என்று நம்பலாம்.
இந்த மூன்று வரி அணிலானது மனிதர்களிடம் நெருங்கிப் பழகாது என்பது அந்தக்கால உண்மை. அது சங்க இலக்கியக் குறிப்புகளிலும் பதிவாகியிருக்கிறது. கழுதைகள் பொதி சுமந்து செல்லும் சுங்கச் சாலையில் அணில்களைப் பார்க்க முடியாது என்கிறது பெரும்பாணாற்றுப்படை. மக்கள் நடமாட்டம் இல்லாத ஊரின் வீடுகளின் முற்றங்களில் அணில்கள் இறங்கி விளையாடுகின்றன என்பதை ‘மக்கள் போகிய அணில் ஆடும் முன்றில்’ என்கிறது குறுந்தொகை. அணில் முற்றத்தில் இறங்கி விளையாடுவதைப்போல, நெஞ்சில் துன்பம் இறங்கி விளையாடுகிறது என்று தலைவி சொல்வதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை எழுதிய சங்ககாலப் புலவரின் பெயர் என்ன தெரியுமா? அணிலாடும் முன்றிலார்.
அணிலுக்கு எத்தனைக் கால்கள்? நான்கு. அணிலுக்கு எத்தனைக் கைகள்? இரண்டு. ஆக மொத்தம் எத்தனை? நான்கு. ஆம், அவற்றின் முன்னங்கால்கள் இரண்டும் கைகளாகவும் செயல்படுகின்றன. ‘உன் கையைக் காலா நினைச்சுக்கிறேன்’ – இப்படி அணிலிடம் நாம் சொன்னால், ‘நீ நினைக்கலேன்னாலும் அதான் நிஜம்’ என்று அது பதிலுக்குச் சொல்லும். அணிலின் முன்னங்கால்கள், உணவைப் பிடித்துக் கொறிப்பதற்கும், தாவி ஓடுவதற்கும், முகத்தை அடிக்கடிச் சுத்தம் செய்வதற்கும் உதவுகின்றன.
அதன் நீண்ட வாலின் பணி முக்கியமானது. தாவி ஓடும்போது உடலைச் சமநிலைப்படுத்தி, கீழே விழாமல் இருக்க வாலே உதவுகிறது. தூங்கும்போதும், குளிரிலிருந்து பாதுகாக்கும் போர்வையாகவும் புசுபுசு வால் உதவுகிறது. தவிர, அணிலானது வாலை செங்குத்தாக வைத்திருந்தால் அது ஆபத்து என்று பிற அணில்களுக்குக் கொடுக்கும் சமிக்ஞை என்றும் புரிந்து கொள்ளலாம்.
அணில்களுக்கு நீச்சலடிக்கத் தெரியுமா?
இயற்கையிலேயே நீச்சலடிக்கும் திறமை அணில்களுக்குக் கிடையாது. நீருக்குள் தெரியாமல் விழுந்து விட்டாலோ, எதிரிகளிடமிருந்து தப்பிக்க நீருக்குள் புகுந்தாலோ, அல்லது வேறு ஏதாவது ஆபத்தான சூழலில் நீரைக் கடக்க வேண்டியது இருந்தாலோ அணில்கள் நீரில் சிரமப்பட்டு நீச்சலடிக்கும். அவற்றின் வலிமையான பின்னங்கால்கள் நீரில் உடம்பை முன்னோக்கித் தள்ளவும், நீண்ட புசுபுசு வாலானது நீரினுள் மூழ்காமல் இருக்கவும் உதவுகின்றன. எப்படியாவது இந்த ஆபத்தைக் கடந்து கரையை அடைந்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் மட்டுமே அணில்கள் நீச்சல் அடிக்கின்றன. அவை நீண்ட தூரத்துக்குத் தம்மால் நீந்த முடியாது என்று உணர்ந்தே இருக்கின்றன.
அதேசமயம், சிறிய நீர்ப்பரப்பில் நிச்சயம் மீண்டு விடலாம் என்று தைரியத்துடன் நீந்துகின்றன, அதுவரை நீச்சல் அனுபவம் இல்லாவிட்டாலும்கூட! ஆம், கடினமான சூழல்களே நமக்குள் புதைந்திருக்கும் திறனை வெளிப்படுத்தும்.
எதெல்லாம் பறக்கும், பறக்காது என்று வேடிக்கையாகச் சொல்லித் தருவதற்காக சிறு வயதில் வார்த்தை விளையாட்டு ஒன்றை ஆடியிருப்போம். கொக்கு… பற பற! கோழி… பற பற! மைனா… பற பற! மயில்… பற பற! அணில்?
மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.