சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 09
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
‘‘என்னால் சவாலை ஏற்றுக்கொண்டு நல்லதைச் செய்ய முடிந்தது – நான் எதைச் சாதித்திருந்தாலும், அது என் நாட்டின் கௌரவத்தை உயர்த்த உதவியது என்பதை அறிவதில் ஆறுதல் இருக்கிறது” தனது 103-வது வயதில் மோகன் சிங் ஓபராய் சொன்ன வார்த்தைகள் இவை. உழைப்பால், விடாமுயற்சியால் உலக நாட்டுப் பயணிகளை, உள்ளார்ந்த ஆர்வமுடன் வரவேற்கும் ஓபராய் ஓட்டல்களை, உலகத் தரமுடன் நிறுவி சாதனை படைத்த மாமனிதர் ஓபராய்.
மோகன் சிங் ஓபராயின் வாழ்க்கைச் சாதனைகளை, சாதிக்க விரும்பும், ஒவ்வொரு மனிதரும் படிக்க வேண்டும்; அறிய வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல செய்திகளைச் சொல்லிச் சென்ற சிறந்த மனிதர். வையகம் உள்ளவரை போற்றப்படும் வரலாற்றுச் சாதனைகளைத் தன் வாழ்க்கை மூலம் பதித்துச் சென்றுள்ளார்.
இளமையும், வறுமையும்
1898 – ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15 – ஆம் தேதி, இன்றைய பாகிஸ்தானில் உள்ள, அன்று இந்தியாவுடன் இருந்த ஜீலம் மாவட்டம், பெளனில் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆறு மாதத்தில் தந்தை இறந்துவிட்ட கொடுமை அவரது அன்னையை அதிகம் உழைக்க வைத்தது. தன்னாலான உழைப்பைக் கொடுத்து மோகன் சிங் ஓபராயைப் புதுமுகக் கல்லூரி வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு அனுப்பிட வசதியில்லை. எனவே ஒரு செருப்புக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.
அங்கு ஷுக்கள் தைப்பது, விற்பது என்று பல செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் கைதேர்ந்தவரானார். ஆனால், ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்டம் தொடர்ந்ததால் அந்த செருப்புக் கம்பெனியை மூடிவிட்டார்கள்; வேலை போயிற்று.
இதனிடையில் நல்ல ஆங்கிலமும், தட்டச்சு, சுருக்கெழுத்தும் கற்றுக்கொண்டால் வேலை கிடைக்கும் என்று பலரும் சொல்ல அதனை சிரமேற்கொண்டு கற்றுக்கொண்டார். ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. இச்சூழலிலும் இவர் மீது நம்பிக்கை வைத்து இர்ஷான் தேவி என்ற பெண்ணின் தந்தை, அவரை மோகன் சிங் ஓபராய்க்குத் திருமணம் செய்து வைத்தார்.
அக்காலகட்டத்தில் காலரா நோய் பஞ்சாபில் அதிகம் பரவியதால் மகனையும், மருமகளையும் மாமனார் வீட்டுக்குப் பத்திரமாக இருக்க அனுப்பி வைத்தார் ஓபராயின் தாயார். வேலை இல்லாத மருமகனாக மாமனார் வீடு வந்து சேர்ந்தார். மாமனார் வீடு சிம்லா அருகில் இருந்தது. எனவே, சிம்லா சென்று வேலை தேடினார். பல நாட்கள் சுற்றியும் வேலை கிடைக்கவில்லை. அந்த நாட்களில் வெள்ளைக்காரர்களில் உயர் பதவி வகிப்பவர்கள், பெரிய அரசு அதிகாரிகள் வந்து தங்கிச் செல்லும் நகரமாக சிம்லா விளங்கியது.
ஒரு நாள் சிம்லா நகரில் நடந்த போது, பிரம்மாண்டமான செசில் ஓட்டலைக் கண்டார் ஓபராய். எப்படியும் இங்கு வேலை கிடைக்கும் என்று உள்மனம் சொல்ல, வேகமாக ஓட்டலை நோக்கிச் சென்றவரை, வாயிற்காப்பாளர் வெளியே நிறுத்தினார். அந்த சொகுசு ஓட்டலுக்குள் செல்லவோ, வேலை கேட்கவோ தகுதியானவராக அப்போது ஓபராய் தென்படவில்லை. “மேலாளர் இல்லை, உள்ளே போக முடியாது” என்று காவலர் சொன்னார்.
எப்படியும் அங்கே வெளியில் அமர்ந்து ெகாண்டு மேலாளரைச் சந்திக்க முடிவெடுத்தார் இளைய ஓபராய். காத்திருந்து மேலாளரைச் சந்தித்து, “தங்கள் ஓட்டலில் எனக்கு வேலை ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்டார். ஓபராயின் ஆங்கில உச்சரிப்பைக் கண்ட மேலாளர் அவருக்கு உதவியாளர் பணி ஒன்றைத் தந்தார். மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஓட்டலுக்கு வந்துவிட வேண்டும். நிலக்கரி மற்றும் பொருட்கள் இருப்பைக் கண்காணிப்பது இவரது பணி.
கிடைத்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டார் ஓபராய். ஆம், காலையில் விருந்தினர்களுக்கு சுடு தண்ணீர் போடும் அடுப்புக்குப் பயன்படுத்தும் நிலக்கரியை எரித்துவிட்டு வெளியே போகும் துண்டு நிலக்கரிகளைச் சேமித்து, அதை மீண்டும் பயன்படுத்துமாறு வழி சொன்னார் ஓபராய். இதனால் ஓட்டலுக்கு நிறையப் பணம் மிச்சமானது. கூடவே ஐந்து மணிக்கு சுடுதண்ணீர் தருவதற்காக, நான்கு மணிக்கே ஓட்டலுக்கு வந்து, கேட்ட நேரத்தில் விருந்தினர்களுக்குச் சுடுதண்ணீர் தந்து மகிழ்வித்தார்.
வருகின்ற விருந்தினர்களை அன்போடு உபசரிப்பது, ெபாறுப்போடு அறைகளைக் கண்காணிப்பது, செலவை மிச்சப்படுத்துவது என்று இவரது திறமைகளைக் கண்ட மேலாளர் ஓட்டலை நிர்வகிக்கும் பணியில் ஒரு பகுதியை வழங்கினார். இதன்மூலம் வருகின்ற விருந்தினர்களிடம பேசிடவும், அவர்களைச் சிறப்பாகக் கவனிக்கவும், பழகிடவும் வாய்ப்புப் பெற்றார். இந்த அனுபவங்கள் ஓட்டல் தொழில் பற்றி மேலும் அறிய உதவியது.
முதல் வெற்றிப் படி
செசில் ஓட்டலில் மேலாளராக இருந்த கிளார்க் என்பவர் சிம்லாவில் கார்ல்டன் என்ற ஓட்டலை வழங்கினார். அவரும், அவரது மனைவியும் ஓபராய் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததால் ஓபராயின் உழைப்பை, திறமையைத் தனக்குப் பயன்படுத்த விரும்பினார். எனவே, தான் வாங்கியுள்ள ஓட்டலுக்கு ஒரு பங்குதாரராக வருமாறு அழைத்தார். பணியாளர் என்ற நிலையிலிருந்து உழைப்பை மட்டுமே தரும் பங்குதாரராக இணைவதில் விருப்பம் கொண்டு அந்த ஓட்டலுக்குச் சென்றார் ஓபராய்.
இப்போது அந்த ஓட்டலின் பெயர் அதன் உரிமையாளர் கிளார்க் பெயரைக் கொண்டு ‘கிளார்க் ஓட்டல்’ ஆனது. இங்கே தான் முழு உரிைமயோடு ஓட்டலில் பல மாற்றங்களை ஓபராய் கொண்டு வந்தார். சிறப்பான பார் வசதிகள் உருவாக்கப்பட்டது. காரணம், ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகள் பலர் அடிக்கடி சிம்லா வந்து தங்கினார்கள். அவர்களோடு ஏற்கெனவே செசில் ஓட்டலில் கொண்டிருந்த பழக்க அனுபவத்தையும் கொண்டு ஓட்டலை மேன்மைப்படுத்தினார். ஓட்டலுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்து தரும் பணியை ஓபராயின் மனைவி இர்ஷான் தேவி சிறப்பாகச் செய்தார். இதனால் எப்போதும் ஓட்டல் நிரம்பி வழிந்தது. தங்கும் விடுதியில் ஆட்கள் இருந்த வண்ணமாய் இருந்ததால் இலாபம் பன்மடங்கு அதிகரித்தது. இங்கு, ஓட்டல் நிர்வாகம் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஓபராய் கற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஓட்டல் உரிமையாளர் கிளார்க்கின் மனைவிக்கு உடல்நலம் குன்றியதால் ஓட்டலை விற்று விட்டு இலண்டன் செல்ல கிளார்க் முடிவெடுத்தார். ஆசையாக வாங்கிய, அற்புதமாகச் சென்று கொண்டிருக்கக் கூடிய ஓட்டலை ஓபராயிடம் ஒப்படைப்பதுதான் சாலச்சிறந்தது என்று உணர்ந்து, ஓபராயிடம் செய்தியைச் சொன்னார். ஓபராய்க்கு மலைப்பாக இருந்தது. காரணம், அந்த ஓட்டலை வாங்கும் அளவுக்கு ஓபராயிடம் பணம் இல்லை.
செய்தியைக் கேட்ட ஓபராயின் மனைவி தன் நகைகளை எல்லாம் விற்கச் சொன்னார். சொந்த ஊர் சென்று வட்டிக்குக் கொஞ்சம் பணமும் வாங்கி வரச் சொன்னார். ஒருவழியாக 20,000/- ரூபாய் கொடுத்து முதன்முதலாகச் சொந்த ஓட்டலைப் பெற்றார் ஓபராய். சொந்தச் செலவுகளைச் சுருக்கி, கடன்களை அடைத்ததோடு, வெற்றிகரமாக ஓட்டலை கணவனும், மனைவியும் நடத்தினார்கள். ஓபராய்க்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் கடவுள் கொடுத்த வரமாக அமைந்திருந்தார்கள். இப்படி சிம்லாவில் முதன்முதலாக ஒரு ஓட்டல் அதிபராக உருவெடுத்தார் ஓபராய். 50 ரூபாயில் தொடங்கிய அவரது சிம்லா வாழ்வு, உழைப்பால் ஒரு ஓட்டல் உரிமையாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது.
மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.