கற்றல் எளிது -08
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
மக்குக் குழந்தையாக இருந்த சாண்டியாகோ மிகப்பெரிய விஞ்ஞானியானார். தன்னுடைய ஆராய்ச்சிகள் மூலமும் சொந்த அனுபங்களின் வாயிலாகவும் மூளை இயங்கும் விதத்தைக் கண்டறிந்து சொன்னார். தன்னைப்போல இருக்கும் பிறரும் வாழ்க்கையில் பெரிய சாதனைகளைச் செய்ய மூளையை எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும் என்று அவர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவை என்னென்னவென்பதை இப்போது பார்க்கலாம்.
சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்
நமக்கு பள்ளியில் இருந்தே சாக்குப்போக்குகள் சொல்வது பிடிக்கும். புத்தகத்தை எடுத்துப் படி என்றால் உடம்பு சரியில்லை, தூக்கம் வருகிறது, நாளை கண்டிப்பாக படித்துவிடுவேன், புரிய மாட்டேன்கிறது என்று ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்வோம். சாக்குப்போக்குகள் முதலில் நம் மூளையைப் பலவீனப்படுத்திவிடும். நம் மூளை சரியாக வேலை செய்யாமல் மழுங்கிவிடும்.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் பொதுவாகவே சில சாக்குப்போக்கைச் சொல்வார்கள். அதை உண்மை என்றும் நம்பிக்கொண்டிருப்பார்கள். எனக்குப் படிக்க நேரமில்லை என்பது ஒரு சாக்குப்போக்கு. எனக்கு கற்பனைத் திறன் கிடையாது என்பது இன்னொரு சாக்குப்போக்கு. நான் கற்பது எனக்கு பயன் அளிக்காது, எனக்கு சொல்லித்தரும் ஆசிரியர் சரியாக சொல்லித்தரவில்லை என்று பல சாக்குப்போக்குகள் இருக்கின்றன.
உண்மையில் இவையெல்லாம் வெற்றுக் காரணங்கள்தான். நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் பொய்கள். நாம் இந்தப் பொய்யை நிஜம் என நம்பிக்கொண்டிருக்கிறோம். அதனால் நம் மூளையைச் செயல்படவிடாமல் தடுத்து நிறுத்துகிறோம். உண்மையில் இந்தச் சாக்குப்போக்குகளில் இருந்து வெளியே வரலாம்.
முதல் சாக்குப்போக்கு: படிக்க நேரமில்லை.
நீங்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கலாம், அல்லது அலுவலகத்தில் வேலைபார்த்துக்கொண்டே புதிய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் படிக்க நேரமில்லை எனக் கூறுவது உண்மையில்லை. நமக்கு இருக்கும் நேரத்தை நாம் தான் எதில் செலவழிக்கலாம் என முடிவு செய்ய வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் படிப்பதற்கு உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். இதை ஒரு முதலீடு என்று வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். இப்போது உங்களிடம் 1 லட்சம் ரூபாய் இருக்கிறது. அதை வைத்து தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி முதலீடு செய்தால் சில மாதங்களில் 10 லட்சமாக உயரும் எனத் தெரிய வருகிறது. செய்யாமல் இருப்பீர்களா? அதேபோலதான் இதுவும். நாம் அறிவில் முதலீடு செய்கிறோம்.
நாம் பொறுமையாக நேரம் எடுத்துப் பாடத்தை மெதுவாகவும், ஆழமாகவும் கற்கவில்லை என்றால், நம் மூளையில் நரம்பணு இணைப்புகள் உருவாகாது. நாம் கற்றுக்கொள்வதற்கு அது தான் ஒரே வழி. நாம் வேகமாகப் புத்தகத்தை புரட்டி ஒரு பார்வை பார்ப்பதினால் மட்டும் ஒரு கருத்தைப் புரிந்துகொண்டு விட்டோம் என அர்த்தம் இல்லை. அந்தக் கருத்துகள் உங்கள் புத்தகத்தில்தான் இருக்குமே ஒழிய மூளையில் பதிந்திருக்காது. நீங்கள் தினமும் சிறிது நேரம் முழு கவனத்துடனும் படிக்க வேண்டும். பெரிதாக வேண்டாம் முதலில் ஒரு 25 – நிமிடம் போதும். போமோடோரோ டெக்னிக்கைப் பயன்படுத்திப் படியுங்கள். புரியவில்லை என்றால் மீண்டும் படியுங்கள், வீடியோவில் பாருங்கள்.
ஆசிரியரிடம் அல்லது உங்களுக்கு தெரிந்தவரிடம் கேளுங்கள். ஆனால், கற்காமல் அந்தப் பாடத்தை விட்டு நகராதீர்கள். பொமோடோரோ டெக்னிக் உங்களது விலைமதிப்பற்ற நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்த உதவும்.
இரண்டாவது காரணம் – எனக்கு கற்பனை சக்தி இல்லை
ஒரு விஷயத்தைக் கற்பதற்கு கற்பனை சக்தி அவசியம்தான். ஒரு கருத்தை உவமைப்படுத்தி கற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போது உங்களுக்கு கடினமாகத் தோன்றலாம். ஆனால் அதில் உண்மை இல்லை. நீங்கள் சிறுவயதில் இருந்திருக்கும்போது நிறையக் கற்பனை செய்திருப்பீர்கள். நீங்கள் வளர்ந்தவுடன் தான் உங்களுக்கு கற்பனை சக்தி இல்லை எனத் தோன்றியிருக்கும்.
ஆனால் வளர்ந்த பின்னும் கூட நமக்குள் கற்பனை சக்தி இருக்கிறது. இதை வெளிக்கொண்டு வருவதற்கு நீங்கள் உங்களை குழந்தையாக, சிறிய வயதில் இருப்பதை போல நினைத்துக்கொள்ளுங்கள் போதும். உங்கள் கற்பனைக்குத் தடை போடாதீர்கள். உங்கள் கற்பனை முட்டாள் தனமாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள். பிறர் என்ன கூறுவார்கள் என்று வருந்தாதீர்கள். உங்கள் கற்பனை நிஜ உலகில் வேலைக்கு ஆகாது என நினைக்காதீர்கள். பத்து வருடங்களுக்கு முன் ஸ்மார்ட்போன் என்பதை நாம் சிந்தித்திருக்க மாட்டோம். யாரோ ஒரு சிலர் கற்பனையில் உதித்தது இன்று நிஜமாகிவிட்டது. அதேபோல உங்கள் கற்பனைதான் உங்களுக்குள் இருக்கும் சிறந்த சக்தி.
கற்பதற்கு உங்களுக்கு உதவப்போகும் சக்தி. உங்கள் கற்பனைக்குத் தடை போடாதீர்கள். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மட்டும் யோசியுங்கள்.
மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.