பிரபஞ்சம் காப்போம் – 09
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குகிறோம். அதைச் சில ஆண்டுகள் பயன்படுத்தியவுடன், “இதைவிடக் கொஞ்சம் பெருசா இருந்தால் பரவாயில்லை” என மனைவியும், “லேட்டஸ்ட் டி.வி.யில நிறைய ஆப்ஷன் இருக்கு..” என மகனும் நச்சரிக்க, இன்ஸ்டால்மென்டில் புதிய டி.வி. வாங்குகிறோம். நாம் பயன்படுத்திய பழைய தொலைக்காட்சிப் பெட்டியை விலைக்குப் போடுவோம்.
அது என்னவாகும் என்று நாம் சிந்திப்பதில்லை. அதேபோலத் தீபாவளி தோறும் மொபைலை மாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். இப்படி வீணாகும் மின் சாதனங்களும், மின்னணுப் பொருட்களும் எங்கே செல்கின்றன யோசித்திருக்கிறோமா? தற்போதைய டிஜிட்டல் புரட்சியானது அச்சுறுத்தும் மின் கழிவு மாசுபாட்டிற்கு வழிவகுத்துள்ளது,
உபயோகமற்ற மற்றும் நிராகரிக்கப்பட்ட, மின்சாதனப் (Electrical) பொருட்களும், மின்னணுப் (Electronic) பொருட்களும் மின்கழிவுகள் எனப்படுகின்றன. அதாவது கைப்பேசி, கடிகாரம், அவற்றின் பேட்டரி, கணினி, கணினி சார்ந்த துணை உபகரணங்கள், தாமிர வயர்கள், மின்சுற்று (Electric Circuit), எல்.சி.டி. திரை, குளிர்சாதனப் பெட்டி, தொலைகாட்சிப் பெட்டி, சலவை எந்திரம், பாதரச விளக்குகள் மற்றும் எல்லா மின்சார்ந்த பொருட்களும் இந்தப் பட்டியலில் அடங்கும்.
இந்தப் பொருட்களெல்லாம் ஈயம், காட்மியம், பெரிலியம், தாமிரம், வெள்ளீயம், சிலிக்கான், இரும்பு, அலுமினியம், பாதரசம் போன்றவற்றாலும், தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களும் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. நமது அன்றாட வாழ்வில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் கழிவுகளைக் கையாள்வது சுற்றுச்சூழலுக்குச் சவாலாக மாறியுள்ளது. இந்த மின்கழிவுகள் உயிர்க்கொல்லிகள் என்று பலரும் அறிந்ததில்லை.
உலக அளவில்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் தரவுகளின்படி, ஒரு வருடத்தில் சுமார் 5 – கோடி டன் மின்-கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பூமியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் 7 கிலோகிராம்களுக்குச் சமம் என்கிறது. தற்போதைய நிலை தொடர்ந்தால் 2030 – ஆம் ஆண்டு வாக்கில் ஓராண்டுக்கு 7.4 – கோடி டன் அளவிற்கு மின்னணுக் கழிவுகள் சேரும் என ‘‘குளோபல் இ வேஸ்ட் மானிட்டர்’’ என்ற அமைப்புத் தெரிவிக்கிறது.
இந்தியாவில்
மின்கழிவுகளை உருவாக்குவதில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மின்னணுக் கழிவுகள் (இ-கழிவுகள்) உற்பத்தி அதிகரித்துள்ளது. இது 2019-20இல் 1.01 – மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24இல் 1.751 – மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் டோகன் சாஹு டிசம்பர் 16, 2024 அன்று ராஜ்யசபாவில் தெரிவித்தார். இது நாடு முழுவதும் மின்னணு மற்றும் மின் சாதனங்களின் அதிகரித்து வரும் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
2019-20 மற்றும் 2020-21க்கு இடையில் மின்-கழிவு உற்பத்தியில் அதிகமான அதிகரிப்பு காணப்பட்டது, இது கோவிட் தொற்றுநோய்களின் போது வீட்டிலிருந்து வேலை மற்றும் தொலைதூர கற்றல் ஏற்பாடுகளுக்கான தேவை காரணமாக மின்னணு பொருட்கள் நுகர்வும் அதிகரித்தது.
இந்தியாவில் உள்ள 65 – நகரங்கள் மொத்த மின்-கழிவுகளில் 60 – சதவிகிதத்துக்கும் அதிகமாக உற்பத்தி செய்கின்றன. இந்திய அளவில் மின்னணுக் கழிவுகளை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பெங்களூரு நகரில் மட்டும் ஆண்டுக்கு 8,000 – டன் அளவிற்கு மின்னணுக் கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆபத்தான மின் கழிவுகளைக் கையாள இந்தியாவின் முக்கிய நகரங்களில் மறுசுழற்சிக் கூடங்கள் இருந்தாலும்கூட அவை முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற கருத்து உள்ளது.
இன்றைய சவால்கள்
மின்கழிவுகளின் உற்பத்தி, கையாளுதல், மறுசுழற்சி ஆகியவற்றில் இந்தியாவுக்குப் பல சவால்கள் உள்ளன. (1) இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுக் கழிவுகளையும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணுக் கழிவுகளையும் முழுமையாகக் கையாள முடிவதில்லை. (2) மின்கழிவுகளால் ஏற்படும் சூழலியல் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த மேலும் முயற்சிகள் தேவைப்படுகின்றன. (3) மின்னணுக் கழிவுகளின் மேலாண்மை தொடர்பான சட்டங்கள் போதுமானதாக இல்லை. (4) மின்னணுக் கழிவுகளின் மறுசுழற்சி தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. (5) மின்னணுக் கழிவுகளின் மேலாண்மை தொடர்பான முக்கியமான சிக்கல்களைத் தீர்ப்பதில் கார்ப்பரேட்டுகள் தயக்கம் காட்டுகின்றன.
மின்கழிவினால் ஏற்படும் பாதிப்பு
உடல்நலக் கேடுகள் : மின்கழிவிலுள்ள அபாயகரமான இரசாயனங்கள், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கடுமையான உடல்நலக் கேடுகளை விளைவிக்கிறது. இதிலுள்ள ஈயத்தின் வெளிப்பாடு நரம்பியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும், பாதரசத்தின் வெளிப்பாடு சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இக்கழிவுகளை அகற்றும் இடங்களுக்கு அருகில் வசிக்கும் குழந்தைகள் மிகுந்த உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகிறார்கள். இதயம் சார்ந்த நோய்கள், சிறு வயதிலேயே புற்றுநோய் போன்ற நோய்களுக்குக் காரணமாகின்றன. அதுமட்டுமல்லாமல் இது, பிறக்கின்ற எதிர்காலத் தலைமுறைகளின் மரபணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.