கற்றல் எளிது -09
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
நம்ம மூளையை ஒரு ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டருடன் ஒப்பிடலாம். ஒரு கம்ப்யூட்டரோ, ஸ்மார்ட்போனோ சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அவ்வப்போது அதன் சாஃப்ட்வேரையோ, ஹார்ட்வேரையோ அப்கிரேட் செய்ய வேண்டும். அதேபோலதான் நம் மூளையும். அதனை நாம் அடிக்கடி அப்கிரேட் செய்தால்தான் சிறப்பாக செயல்படவைக்க முடியும்.
நீங்கள் யோசிப்பது புரிகிறது. இதற்காக நாம் மூளையைக் கழட்டி வேறு புதிய மூளையவா வாங்கி மாட்ட முடியும் எனக் கேட்கிறீர்களா? அதெல்லாம் செய்ய வேண்டாம். நீங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே தினமும் இரவில் உங்கள் மூளையை அப்கிரேட் செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். எப்படித் தெரியுமா?
மூளையில் என்ன நடக்கிறது?
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி குவாங் யாங்க், அவரது குழுவுடன் சேர்ந்து மூளை நரம்பணுக்களைப் பற்றி ஆராய்ந்தார். நாம் கற்கும் போது நம் மூளை எவ்வாறு செயல்படுகிறது? நாம் புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டிருக்கும்போது நம் நரம்பணுக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்தார்.
அந்த ஆராய்ச்சியில் குவாங் யாங்க் கண்டுபிடித்தது மிக முக்கியமான விஷயம்.
மூளையில் உள்ள நரம்பணுக்களில் டென்ட்ரிக் ஸ்பைன் எனும் பாகம் இருப்பதைப் பார்த்தோம். இந்த டென்ட்ரிக் ஸ்பைன்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ளும்போது தான் எண்ணங்கள் உருவாகின்றன. நரம்பணுக்களில் உள்ள டென்ட்ரிக் ஸ்பைன்கள் நன்றாக வளர்ந்து, ஆக்ஸானோடு தொடர்புகொண்டு சினாப்ஸை உருவாக்கினால்தான் நம்மால் சிறப்பாக சிந்திக்க முடியும். அப்போது நம் டென்ட்ரிக் ஸபைன்கள் வளர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நன்றாகத் தூங்க வேண்டும். இதுதான் குவாங் யாங்க் கண்டுபிடித்த உண்மை.
தூக்கத்தின் அற்புதம்
நாம் தூங்கும்போது தான் நம் நரம்பணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வலுவடைகின்றன. நரம்பணுக்கள் மற்றவையோடு இணையும்போது தான் வலுவான மூளை இணைப்பும் உருவாகுகின்றது. மூளை, நாம் தூங்கும்போது நாம் பகலில் படித்த, கற்ற விஷயங்களை ஒத்திகை பார்க்கிறது. இரவு தூக்கத்தில் நம் மூளையை ஆராய்ந்தால் சில நரம்பணுக்களில் மின்பொறி சமிக்ஞைகள் (சினாப்ஸ்) மீண்டும் மீண்டும் பயணிப்பதைப் பார்க்கலாம். இந்தச் செயல்பாடு நமது டென்ட்ரிக் ஸ்பைன்களை இன்னும் பெரிதாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. டென்ட்ரிக் ஸ்பைன்கள் பெரிதாகும்போது சினாப்ஸும் வலுவடைகிறது.
நாம் பகலில் கவனத்துடன் கற்கும்போது புதிய டென்ட்ரிக் ஸ்பைன் மொட்டுகள் உருவாகின்றன. நாம் அதனை நினைவுகூரும்போது (Active Recall) அதிக மொட்டுகள் உருவாகுகின்றன. நாம் தூங்கும்போது அந்த மொட்டுகளில் இருந்து புதிய டென்ட்ரிக் ஸ்பைன்கள் முளைக்கின்றன. இதன்மூலம் நம்மால் சிறப்பாகச் சிந்திக்க முடிகிறது. இப்போது நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையில் புதிய டென்ட்ரிக் ஸ்பைன்களின் மொட்டு உருவாகியிருக்கும்.
இங்கு இன்னொரு விஷயத்தை நாம் பார்த்தாக வேண்டும். டென்ட்ரிக் ஸ்பைன்கள் கொஞ்சம் கில்லாடியானவை. நாம் உண்மையில் படிக்கிறோமா அல்லது பொய்யாக நடிக்கிறோமா என்று அதற்கு தெரியும். நாம் ஒரு புதிய விஷயத்தை கற்கிறோம் என்றால் உண்மையிலேயே முழு கவனத்துடன் அதை கற்கும்போதுதான் டென்ட்ரிக் ஸ்பைன்கள் முளைக்கும். அப்போதுதான் அவை மற்ற நரம்பணுக்களோடு தொடர்புக்கொண்டு சினாப்ஸையும் உருவாக்கும்.
நாம் கவனம் இல்லாமல் வெறும் மேலோட்டமாக படித்துக்கொண்டிருந்தால் டென்ட்ரிக் ஸ்பைன்கள் உருவாகாது. போனில் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டோ, இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொண்டோ படித்தால் வேலைக்கு ஆகாது.
அதேபோல புதிய டென்ட்ரிக் ஸ்பைன்கள் முளைத்தாலோ அல்லது நம் நரம்பணுக்கள் மற்றவையோடு தொடர்புக்கொண்டு சினாப்ஸை உருவாக்கினாலோ அது அப்படியே நிரந்தரமாக இருக்குமா என்றால் இருக்காது. நாம் கற்றதைத் தொடர்ந்து பயிற்சி செய்யவில்லை என்றால் அதுதானாக மறைந்துவிடும். செடி முளைத்துவிட்டது என்பதற்காக தண்ணீர் ஊற்றாமல் விட்டுவிட முடியுமா? நாம் தொடர்ந்து தண்ணீர் ஊற்றினால்தான் அது தொடர்ந்து வளரும். உயிருடன் இருக்கும். அதேபோல நாம் கற்றதை தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் டென்ட்ரிக் ஸ்பைன்கள் வலுவானதாக இருக்கும்.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.