கற்றல் எளிது -10


திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

ங்கள் பள்ளிக்குச் செல்பவராக இருந்தால் நோட்டுப்புத்தகங்களை எல்லாம் எங்கே வைப்பீர்கள்? ஸ்கூல் பேக்கில் கொஞ்சம் இருக்கும். வீட்டில் புத்தக அலமாரியில் சில புத்தகங்கள் இருக்கும். பள்ளிக்கு எதை எடுத்துச் செல்வீர்கள்? ஸ்கூல் பேக்கைதான் எடுத்துச் செல்வோம். அன்றைக்கு என்னென்ன பாடம் நடத்துவார்களோ, அந்தப் பாடங்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டும் பேக்கில் எடுத்து செல்வோம். மற்ற புத்தகங்கள் எல்லாம் வீட்டில் புத்தக அலமாரியில் இருக்கும். சரிதானே?

ஸ்கூல் பேக்கை நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். பள்ளி செல்லும்போதோ, டியூசன் செல்லும்போதோ, பள்ளி முடிந்து ஊர் சுத்தும்போதோ கூட ஸ்கூல் பேக்கை முதுகில் மாட்டிக்கொண்டு சுத்துவோம். ஆனால் ஸ்கூல் பேக்கில் குறைந்த புத்தகங்கள் மட்டும் தான் வைக்க முடியும். அதில் கொஞ்சம் இடம்தான் இருக்கும். ஆனால் அலமாரியில் நிறையப் புத்தகங்களை வைத்துக்கொள்ளலாம். உங்கள் அலமாரியில் புத்தகங்கள் மட்டுமின்றி உங்களுக்கு பிடித்த நடிகர்களின் போட்டோக்களை ஒட்டி வைக்கலாம், பென்சில், பேனா என எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அதையெல்லாம் வைக்கலாம். அதற்கு வேண்டியதுபோல அலமாரியிலும் நிறைய இடம் இருக்கும். ஆனால் அலமாரியை நீங்கள் தூக்கிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. அது எங்கே இருக்கிறதோ அங்கேயேதான் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

நிற்க, இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. இரண்டுமே உவமைகள். உங்கள் மூளையும் ஸ்கூல் பேக், அலமாரி போலதான் செயல்படுகிறது. உங்கள் மூளைக்குள்ளேயே ஸ்கூல் பேக்கும் இருக்கிறது, அலமாரியும் இருக்கிறது. இரண்டிலும் தகவல்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன. அவை எப்படிப் பயன்படுகின்றன என்பதைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

இரண்டு வகை நினைவாற்றல்கள்

உங்கள் மூளையில் இரண்டு நினைவாற்றல் அமைப்புகள் இருக்கின்றன. ஒன்று, தற்காலிக நினைவாற்றல் (Working memory), மற்றொன்று நீண்ட கால நினைவாற்றல் (Long Term memory). தற்காலிக நினைவாற்றல் (Working Memory) என்பது உங்கள் ஸ்கூல் பேக்கை போல. சிறிதான அளவை கொண்டது. அதில் அதிகத் தகவல்களைச் சேமித்து வைக்க முடியாது. உங்கள் பேக்கிற்குள் நிறையப் புத்தகங்களை திணித்தால் என்ன ஆகும்? இடம் கொள்ளாது இல்லையா? அதேபோல தற்காலிக நினைவாற்றலில் உங்களால் நிறையத் தகவல்களைச் சேகரித்து வைக்க முடியாது. நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்களோ அது சார்ந்த ஒரு சில தகவல்களை மட்டும்தான் சேகரிக்க முடியும்.

உதாரணமாக உங்கள் தற்காலிக நினைவாற்றல் நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையை மட்டும் நினைவில் வைத்திருக்கும்.படித்து முடித்தவுடன் பெரும்பாலும் அந்தத் தகவல்கள்கள் மறந்துவிடும்.
ஆனால் உங்கள் மூளையின் நீண்ட கால நினைவாற்றலோ (Long Term Memory) புத்தக அலமாரியை போல. அதில் எக்கச்சக்கமான தகவல்களைச் சேகரித்து வைக்க முடியும். நீங்கள் சிறு வயதில் நண்பர்களுடன் விளையாடியது முதல் நேற்றுப் பார்த்த திரைப்படம் வரை ஞாபகம் இருக்கிறது இல்லையா? இது எல்லாமே நீண்டகால நினைவாற்றலில்தான் சேகரித்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. உங்கள் அலமாரியில் நிறையப் புத்தகங்களை அடுக்கி வைத்துவிட்டீர்கள். திடீரென்று உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதுவும் உடனே தேவைப்படுகிறது. என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு புத்தகமாக எடுத்துத் தேட வேண்டும் இல்லையா? அது எங்கே இருக்கிறது என்று தேடி எடுப்பதற்குள் கஷ்டமாகி விடும். அதனால் என்ன செய்வோம்? வேண்டிய புத்தகங்களை மட்டும் எடுத்து ஸ்கூல்பேக்கில் வைத்துக்கொள்வோம்.

அதேபோலதான் உங்கள் நீண்ட கால நினைவாற்றலில் நீங்கள் எப்போதோ செய்ததை, என்றோ படித்ததை எல்லாம் தகவல்களாகச் சேமித்து வைத்திருப்பீர்கள். ஆனால் குறிப்பிட்ட ஒரு தகவல் உங்களுக்குத் தேவை என்றால் உடனே அதைத் தேடி எடுக்க முடியாது. அது எந்த மூலையில் கிடக்கிறது என்றே தெரியாது. அதனால் நாம் தேவைப்படும் சில தகவல்களை மட்டும் நீண்ட கால நினைவாற்றலில் இருந்து எடுத்துத் தற்காலிக நினைவாற்றலுக்கு மாற்றி வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொள்கிறோம்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.