விண்ணில் ஒரு நண்பன் -13


இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்

செயற்கைக்கோளுக்குச் செய்தி அனுப்புவதிலும் திரும்ப அதைப் பெறுவதிலும் முக்கியப் பங்காற்றுபவை தரை நிலையங்கள். செயற்கைக்கோள் ஏவு வாகனத்தில் பொருத்தப்பட்டுப் பயணத்தைத் தொடங்குவது முதல் செயற்கைக்கோளின் வாழ்நாள் முடிவடையும் வரை அவற்றைத் தொடர்பு கொள்ளத் தரை நிலையங்கள் தேவைப்படுகின்றன.

ஒரு ஏவு வாகனம் தரையில் இருந்து புறப்பட்டவுடன் எவ்வளவு வேகத்தில் செல்கிறது? சரியான பாதையில் செல்கிறதா? என்ற பல தரவுகள் சேகரிக்கப்படும். அவற்றைத் தானியங்கியாக அறிந்துகொண்டு அதற்குத் தக்கவாறு ஏவு வாகனத்தின் பாதை வடிவமைக்கப்படும். ஏவு வாகனம் புறப்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர் உயரம் மட்டுமில்லாமல் தரை வழியாகவும் பல கிலோமீட்டர் கடந்து செல்லும். அப்பொழுது ஏவு வாகனம் செலுத்தப்பட்ட இடத்தில் இருக்கும் தரை நிலையத்தால் தொடர்பு கொள்ள இயலாது. அதனால் அடுத்தத் தரை நிலையம் ஏவு வாகனத்தைத் தொடர்பு கொள்ளும். இப்படியாக ஏவு வாகனம் புறப்பட்டது முதல் அது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வரை உள்ள பாதையில் அதைக் கண்காணிக்கப் பல்வேறு தரை நிலையங்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏவு வாகனத்தைக் கண்காணிக்கக் குறைந்தது ஒரு தரை நிலையம் அல்லது ஒன்றுக்கு அதிகமான தரை நிலையங்களோ கண்டிப்பாகத் தேவை. ஏவு வாகனம் செல்லும் பாதையில், நகரங்கள் எதுவும் இல்லை அல்லது தரைநிலையங்கள் எதுவும் அமைக்கப்பட முடியாது என்ற நிலையும் உருவாகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் தரை நிலையம் நகரும் வடிவில் இருக்கும். அது ஒரு கடல் பரப்பாக இருந்தால் கப்பலில் தரை நிலையம் அமைக்கப்படும். எந்த இடத்தில் தரை நிலையத்துடன் காத்துக் கொண்டிருக்கும் கப்பல் நிறுத்தப்பட்டால் ஏவு வாகனத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என்பது முடிவு செய்யப்பட்டு நிறுத்தப்படுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவின் PSLV-C38 ஏவப்பட்டபோது தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் (NIOT) பணியமர்த்தப்பட்ட சாகர் மஞ்சுஷா கப்பலில் ஆண்டெனா அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தக் கப்பல் வங்காள விரிகுடாவில் ஒரு குறிப்பிட்ட கண்காணிப்பு இடத்தில் நிறுத்தப்பட்டு, வெற்றிகரமாகக் கண்காணித்தது.
இப்படியாக ஏவு வாகனத்தில் பயணப்படும் செயற்கைக்கோள் ஏவு வாகனத்தில் இருந்து பிரிக்கப்பட்டுத் தனது சுற்றுவட்ட பாதையில் விடப்படுகிறது. சுற்றுவட்ட பாதையில் விடப்பட்டவுடன் அது நேரடியாகத் தரை நிலையத்தைத் தொடர்பு கொள்ளும். எந்தவிதமான செயற்கைக்கோள் என்பதைப் பொறுத்து தரை நிலையத்திலிருந்து எந்த விதமான செய்திகள் அனுப்பப்படுகிறது என்பது மாறுபடும்.

உதாரணத்திற்குத் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் என்று வைத்துக் கொள்வோம். பூமியின் ஏதாவது ஒரு இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை உள்வாங்கிப் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் செய்திகளைப் பரப்ப வேண்டிய வேலையை அந்தச் செயற்கைக்கோள்கள் செய்யும். அதனால் செய்திகளை உள்வாங்கித் திரும்ப மற்ற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டிய வேலையை இவை செய்யும். சென்ற அத்தியாயங்களில் பார்த்தது போல் ஒரு செய்தியை அனுப்புவதற்கு அதைக் கொண்டு செல்லக்கூடிய அலைவரிசை ஊடகம் (Carrier waves) பயன்படுத்தப்படும். அந்த ஊடகத்தின் வழியே குறிப்பிட்ட அலைவரிசையில் நாம் அனுப்பும் செய்திகள் கொண்டு செல்லப்பட்டுச் செயற்கைக்கோளை அடையும். பின்னர் அங்கிருந்தும் தரைக்கு வந்து சேரும்.

தரை நிலையங்களைப் புவியின் மேற்பரப்பில் அமைப்பதில் சிக்கல்கள் ஏதும் இருப்பதில்லை. ஆனால் அதே போன்று வலிமை மிகுந்த அலை திரட்டிகளைச் செயற்கைக்கோளில் அமைப்பதில் சிரமங்கள் இருக்கலாம். அதனால் அலைபரப்பிகளும், அலை திரட்டிகளும் செயற்கைக்கோளில் மிகவும் சிறியதாக அமைக்கப்பட்டு இருக்கும். அதே நேரத்தில் தரை நிலையத்தில் அமைக்கப்படும் அலை பரப்பிகள் சற்று பெரிய அளவில் அமைக்கப்படும். விண்ணில் குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் செயற்கைக்கோளிலிருந்து மிகக் குறைந்த அளவு செய்திகள் கிடைக்கப்பெற்றாலும் கூட அவற்றை உள்வாங்கித் தேவையான அளவு பெருக்கம் செய்யப்பட்டுச் செய்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேபோல் செயற்கைக்கோள் மிகத் தொலைவில் இருக்கும் பொழுது அங்கே போதுமான தகவல்களைக் கொண்டு செல்ல மிகப்பெரிய அலை திரட்டிகள் தேவைப்படும். புவிக்கு அருகில் இருக்கும் செயற்கைக்கோளுக்கு அனுப்பப்படும் செய்திகளுக்குப் பயன்படுத்தும் தரை நிலையங்கள் சற்றுச் சிறியதாக இருக்கும். அதே நேரத்தில் புவியிலிருந்து தொலைவில் உதாரணத்திற்கு 36,000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் செயற்கை கோள்களுக்குச் செய்திகளை அனுப்புவதற்குச் சற்று பெரிய அலை திரட்டிகள் தேவைப்படும்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.