விண்ணில் ஒரு நண்பன் -13

இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார்

சில நேரங்களில் நமக்குத் தேவையான இடங்களில் மட்டும் தான் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நமது கண்காணிப்பில் இல்லாத பொழுது தேவையில்லாமல் செயற்கைக்கோளை பயன்படுத்துவதைத் தவிர்த்து அவை தனது கருவிகளை அணைத்து விடும். உதாரணத்திற்குப் புவியின் மீது வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு செயற்கைக்கோள் இந்தியாவை மட்டும் படம் பிடிக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் மீது அந்தச் செயற்கைக்கோள் வரும் பொழுது இந்தியாவின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை எல்லா இடங்களையும் தெளிவாகப் படம் பிடிக்கிறது. பின்னர் இந்திய பகுதிகள் முடிந்துவிட்டால் அதற்குப் பிறகு இருக்கும் நாடுகளைப் படம் பிடித்துப் பயனில்லை. அந்தத் தரவுகள் தேவையில்லை என்பதால் அதன் பிறகு அவை தனது பணியை நிறுத்தி விடலாம். மீண்டும் இந்தியா மீது வரும் போது அந்த வேலையைச் செய்யுமாறு செய்துவிடலாம். ஆனால் இங்கு இந்தியா மீது எவ்வளவு அதிகமான நேரம் அது பார்க்கிறது என்பதை நாம் தரை நிலையங்களில் இருந்து செயற்கைக்கோளுக்குக் கொடுக்க இயலும்.

எப்படி என்றால் ஒரு ரயில் நிலையத்தில் நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது தொடர்வண்டி ரயில் நிலையத்திற்குள் செல்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தத் தொடர்வண்டி நிலையம் என்ன என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அந்தத் தொடர்வண்டி நிலையத்தின் பெயர் பலகையைப் பார்த்து படிக்க ஆசைப்படுகிறீர்கள். உங்கள் தலையைத் திருப்பிப் பெயர் பலகை எங்கே இருக்கிறது என்ற திசையை நோக்கி இருப்பீர்கள். பலகை தெரிய ஆரம்பித்தவுடன் அதை ஊன்றி படிக்க ஆரம்பிப்பீர்கள். தொடர்வண்டி முன்னோக்கி செல்ல செல்ல தலையை அதற்கு எதிர் திசையில் மெல்ல திருப்பிக் கொண்டு உங்கள் கண்களில் பெயர் பலகை இருப்பது போலே நீங்கள் பார்த்துக் கொண்டு அதைப் படித்து முடித்து இருப்பீர்கள்.

நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் தொடர்வண்டி மணிக்கு 50 கிலோமீட்டர் என்ற வேகத்தில் பயணம் செய்தாலும், உங்கள் தலையையும் கண்களையும் மெதுவாகத் திருப்புவதன் மூலம் உங்கள் பார்வை அந்தப் பெயர் பலகையில் படும் வேகம் தோராயமாக மணிக்கு 20 கிலோ மீட்டருக்கு குறைவான வேகம். இவ்வாறாகப் பெயர் பலகை எளிதில் படிக்க முடிகின்றது.

அதேபோன்று புவியைச் சுற்றி வந்து கொண்டிருந்தாலும் இந்தியாவின் மீது இருக்கும் தகவல்கள் மட்டும் நமக்குத் தேவை என்றால் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவி இந்தியாவின் மீது வருவதற்கு முன்பாகவே இந்தியாவைப் பார்ப்பது போல் வைத்துவிடலாம். பின்னர்ச் செயற்கைக்கோள் செல்லும் வேகத்தை விடச் சற்று மெதுவான வேகத்தில் இந்தியாவின் மீது பார்வையைச் செலுத்தும். இப்படியாக அதிகமாக நேரம் தேவையான இடத்தைப் பார்ப்பதால் படம்பிடிக்க வேண்டிய பகுதிகளைப் படம் பிடித்து விடும். நாம் தலையைத் திருப்புவது போல் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவியைத் திருப்புவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

இப்படிப் பிடிக்கப்படும் அனைத்து தரவுகளும் தரை நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. படம் பிடித்தவுடன் தரைநிலையங்களுக்குத் தகவல்களை உடனே கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. செயற்கைக்கோளிலேயே அவற்றைப் பதிவு செய்து தரைநிலையங்கள் எப்பொழுது அவற்றால் தொடர்பு கொள்ள முடிகிறதோ அப்பொழுது அனுப்பினாலும் போதுமானதாக இருக்கும்.

தரை நிலையங்களில் இருந்து செயற்கைக்கோளுக்கு அனுப்பப்படும் செய்திகள் அவை என்ன பணி செய்ய வேண்டும் என்று கட்டளைகளாக இருக்கலாம் அல்லது எந்த உயரத்தில் அவை நிலை நிறுத்தப்பட வேண்டுமோ அதற்குத் தேவையான இயந்திரங்களை இயக்க வேண்டிய செய்திகளாகவும் இருக்கலாம். அல்லது புவியிலிருந்து அனுப்பப்படும் செய்திகளை உள்வாங்கி மீண்டும் அவற்றைப் புவியின் மற்ற பகுதிகளுக்கு அனுப்புவதாகவும் இருக்கலாம் அல்லது செயற்கைக்கோளிலிருந்து கிடைக்கும் தரவுகளைப் பத்திரமாகப் புவிக்குக் கொண்டு வருவதாகவும் இருக்கலாம். முன்பு கூறியது போல் பனிக்கட்டி மிகத் தொலைவில் எடுத்து செல்ல செல்ல கரைகிறது என்று பார்த்தோம்.

செயற்கைக்கோள்கள் புவிக்கு மேலே 1000, 20000, 36000 கிலோமீட்டர் என்று மட்டும் நிலை நிறுத்தப்படுவது இல்லை. அது புவிக்கு வெளியே சூரிய குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகங்களை ஆராய்வதற்காகவும் செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன. உதாரணத்திற்கு நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்படும் விண்கலங்கள், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் விண்கலங்கள், இப்படித் தொலைவு அதிகரித்துக் கொண்டே இருக்கும் பொழுது சாதாரணமாகப் பயன்படுத்தும் தரை நிலையங்களில் உள்ள அலை திரட்டிகள் அலைபரப்பிகளை வைத்துச் செயற்கைக்கோள்களுக்குச் செய்திகள் அனுப்ப இயலாது.

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.