மூளை என்னும் முதல்வன்

திரு.A.மோகனராஜூ,சேலம்

ரு சில நிகழ்வுகள் உங்களை நெகிழ்ந்து போக வைத்துவிடும், அதற்குக் காரணம் உங்கள் மூளை ஒரு அதிர்ச்சியான நிகழ்வில் ஆழமாகச் சிந்திக்கும்போது மென்மையான மூளை நெகிழ்ந்து போய்விடுகிறது. உங்கள் மூளையைப்பற்றி நீங்கள் முழுவதுமாகத் தெரிந்து கொண்டால், அப்படியே உருகிப்போய் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போய்விடுவீர்கள்  அவ்வளவு அதிசயங்கள்  நிறைந்தது  உங்கள் மூளை.

புத்தம் புதுக் கருத்துகளைத் தெரிந்து கொள்ளும்போதும், புதிய பாதையில் பயணிக்கும்போதும், புதிய வேலையைச் செய்யும் போதும் நம் மூளையில் புதிய நியுரான் செல்கள் உருவாகின்றன, மூளையின் விரிவாக்கம் நடைபெறுகிறது.  மரத்தில் கிளைகள் வளர்வது போலவும், அதில் இலைகளுடன் பூக்களும் துளிர்த்துப் பூத்துத் தலை நீட்டி காற்றில் குலுங்குவது போலவும் நறுமணம் வீசுவது போலவுமான நிகழ்வுகள் உங்கள் மூளையில்  நடைபெறுகின்றது.

உலக உயிரினங்களின் வாழ்வில் உணவிற்கும் உடலிற்கும் இடையே தொடர் போராட்டம் நடக்கிறது. உயிர்களுக்குப் பசி எடுக்கும் போதெல்லாம் எடுத்து உண்ண உணவு உடனடியாகக் கிடைப்பதில்லை. எங்கேயோ தேடிக்கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அதேபோல, உலக உயிரினங்களுக்கு உயிருக்கும் வாழ்விற்கும் இடையே தொடர் போராட்டமும்  வாழ்நாள் முழுவதும் நடைபெறுகிறது.  காரணம் ஒரு விலங்கிற்கு மற்றும் ஓர் விலங்கு உணவாக வேண்டியிருக்கிறது. விலங்குகள் எதிரியைக் கண்டதும் அல்லது இக்காட்டான நிலையை உணர்ந்ததும் உடனே போராட்டத்தை முன் நிறுத்திப் போராடுவதில்லை. காரணம் போராட்டத்தின் முடிவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.  அதனால் சமாதானத்தை முன் வைத்து அந்த இடம் விட்டு  நகர்ந்துபோகவே விரும்புகின்றன. அந்தச் சமாதானத்தை முன் நிறுத்தி நகர்ந்து சென்று வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளும் சிந்தனையை மூளையின் நெகிழ்வுத்தன்மை என்று கூறுகிறார்கள்.

அடிபணிதல் அல்லது சமாதானம் என்ற சொல் முதிர்ச்சி பெற்ற மனிதர்களுக்குச் (Matured man) சொந்தமானதாக இருக்கிறது. அலெக்சாண்டர் இளமையும், பேரழகும், கூர்மையான அறிவும் பேராற்றலும் கொண்டவராக வெற்றிகொள்ள முடியாத மாவீரனாக விளங்கினார். அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் போரிட்டபோது உலகின் அனைத்து மன்னர்களும் இவருடன் போரிடவில்லை. சரிபாதி மன்னர்கள்  சமாதானத்தையே விரும்பினார்கள் பணிந்து  போனார்கள். காரணம் நாட்டிற்கு மிகப்பெரும் பொருள் சேதமும் தோல்வியில் மன்னனுடன் பல உயிர்களும் பலியாக வேண்டியிருந்தது.

அதேபோல இறுதியாக இந்தியாவிற்கு வந்த மாவீரன் அலெக்சாந்தர் புருசோத்தமனிடம் இருந்த மிகப்பெரும்  யானைப் படையை நேரில் கண்டு கலக்கமடைந்து போர் புரியாமல் சமாதானம் செய்துகொண்டார். போர் புரிந்திருந்தால் உலக வரலாறு மாற்றி எழுதவும் வாய்ப்பிருக்கிறது. அலெக்சாண்டர் புருசோத்தமருடன் போரிடாமல் நண்பராக்கிக்கொண்டார். 

போர் என்று வந்தால் அதில் வெற்றி என்பது ஒருவருக்குத் தான்,  தோல்வி அடுத்தவருக்கு என்பதை மூளை உணர்ந்து பார்த்து அதற்குத் தகுந்தபடி தன் செயலை மாற்றிக்கொள்ளும். இந்தத் தன்மை மூளையின் முதிர்ச்சியான செயலைக்குறிக்கிறது. மூளை முதிர்ச்சியற்றவர்கள் உடனே போராட்டத்தை முன் வைக்கிகிறார்கள். வரும் விளைவுகளை அவர்கள் மூளை சிந்திப்பதில்லை. மாறாக, கோபத்தில் முழுமூளையும் மூழ்கிவிடுகிறது. அப்படித்தான் சண்டையில் பல மன்னர்கள்  இறந்தும் போயிருக்கிறார்கள்.

தகவமைக்கும் தன்மை

இதைத்தான்  அறிவியல் மாமேதை  டார்வின் அவர்கள் உலக உயிரினங்கள் நடக்கும் சூழலை எதிர்த்துப் போரிடாமல் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையை ‘தகவமைக்கும் தன்மை’ என்று கூறுகிறார்.  தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் உயிரினம் உலகில் நீண்ட காலம் வாழ்கின்றன என்றும் கூறினார். அதைப்பரிணாம வளர்ச்சி என்று அற்புதமாகப் பெயரிட்டு அழைத்தார்.

மனித உடலில் உள்ள அனைத்துச் செல்களும் 34 – வருடங்களுக்குப்பிறகு வளர்ச்சி குறைந்துவிடுகின்றன. அதன்பின் நீண்டநாட்கள் பாதுகாத்து வைப்பது, பழுதுபார்ப்பது, பின் பயன்படுத்துவது என்றபடி வாழ்நாள் நகர்கிறது. அதாவது இளமையில் புதிய செல்கள் உருவாவதுபோல அதிகமாக புதிய செல்கள் வயது முதிரும்போது உருவாவதில்லை.  ஆனால் மிகவும் மென்மையான மூளைச்செல்கள், நியுரான் செல்கள் தொடர்ந்து வளர்கின்றன. காரணம் தொடர்ந்து மாறும் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வது வாழ்நாள் முழுவதும்  நடைபெறுகிறது.

தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்று மேல்ராபின் என்ற அறிஞர் சொல்கிறார். சூழலுக்கு ஏற்ப ஒரு புதிய வழியைக் கண்டுபிடிக்கிறது மூளை. ஏன் என்ற கேள்வியைக் கேட்டால் பதில் கிடைக்கும்வரை மூளை சிந்திக்கிறது. அதனால்தான் சாக்ரடீஸ் ஏன் என்ற கேள்வியை கேட்காமல் மனித வாழ்வு என்பது இல்லை என்று சொன்னார். ஏன் என்று கேட்ட அமெரிக்க ஐரோப்பிய  முன்னேற்றமடைந்த நாட்டு மக்கள் அறிவியலில் சிறந்து முன்னேற்றப்பாதையில் மிக உயரத்தில் மகிழ்வாக வாழ்கிறார்கள்.

உடல் உறுப்புகள் அனைத்தும் உறுதியாகவும் நீண்ட நாட்கள் மாறாமல் உழைக்கும் தன்மையில் இருக்கும்போது மூளைச்செல்கள் மட்டும் மென்மையாகவும் எளிதில் மாற்றம்பெறும் தன்மைக் கொண்டதாகவும் இருக்கிறது என்பதே மூளையின் தனிச்சிறப்பு. மூளைச்செல்கள் மிகமிக மென்மையாக இருப்பது எளிதில் மாற்றங்களை (Quality of adaptability) ஏற்றுக் கொள்வதற்காகத்தான். 

பறவை விலங்குகளுக்கு பிரச்சனை என்றால் உணவு தண்ணீர் இரண்டுதான். ஆனால், மனிதனுக்குப் பிரச்சனை  ஒன்றா,  இரண்டா  என்றால் எண்ணிலடங்காது. சரி பிரச்சனையில்லாத மனிதன் இருக்கிறானா என்றால் அவன் பிறப்பிலிருந்து அவன்  இறக்கும்வரை அவனுக்கு எப்போதும் பிரச்சனைதான். வாழ்வு என்ற ஒன்று  வந்தால் அது பிரச்சனைக்குள் தான் இருக்கிறது. எப்படிப் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பது என்பதுதான் மனித  வாழ்வாக இருக்கிறது. அதனால்தான் மனித மூளை மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டிருக்கிறது.  அதே சமயம், மரத்தின் உயரத்திற்குத் தகுந்தபடி வேர் ஆழமாக வளர்வதுபோல, இவ்வளவு பிரச்சனைகளையும் தீர்க்கத் தகுதியான ஒன்றாக தன்னைத்  தகவமைத்துக்கொள்ள மூளையால் முடிகிறது. இந்தப் பண்பை மூளையின் நெகிழும் தன்மை (Plasticity – the quality of being easily shaped and moulded for more useful life) என்று அழைக்கிறோம்.

ஒரே பாதையில் பல நாள் நடந்துசெல்லும்போது எளிமையாகவும் இனிமையாகவும் பயணிக்கிறோம் அதை  நம் மூளையும் விரும்புகிறது. ஒரு நாள் திடீர் என்று பாதை பழுதடைந்து மூடிவிட்டார்கள் என்றால் பயணத்தை நாம் நிறுத்திவிடுவதில்லை, புதியப்பாதையில் காலெடுத்துவைத்து, செல்லுமிடம் சென்றடைகிறோம் அதற்கு நம் மூளை புதிய வழியில் வாழ்வை நகர்த்திச்செல்ல வழியைக் காட்டுகிறது.

உருவான வலியும் வருத்தமும்  ஒரு நியுரானின்  எண்ணப்பாதையில்  ஓடி வரும்போது அதை வெற்றிகரமாக எதிர் திசையில் திருப்பி அனுப்பி அந்தப்பாதையின் வழியே  புதியப் நியுரான்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மகிழ்வான எண்ணங்களை ஓட விடுவதே  மூளையின் நெகிழும்தன்மை என்பது. 

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.