மூளை என்னும் முதல்வன்
திரு. A.மோகனராஜூ, சேலம்
நாம் ஏன் மூளைக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றால் நம் எண்ணங்களையும் உடலையும் வாழ்க்கையையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தி அற்புதமான வாழ்க்கைப் பாதையில் நம்மை அழைத்துச் செல்வது நமது மூளைதான். அந்த மூளையை நாம் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தாவிட்டால் மனித வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் மூழ்கிப்போகும். அதற்கு ஒரு எல்லையிட்டுச் சொல்ல முடியாது. அதனால் நம் மூளைக்குப் பயிற்சிகொடுத்து ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. அது முடியுமா, முடியாதா என்ற கேள்வி நம் மூளையின் ஒரு பகுதியில் எழுகிறது.
உங்களால் முடியாததை எப்போதும் செய்யாதீர்கள், காரணம் அது உங்களால் முடியாது. ஆனால் முடியக்கூடியதைச் செய்யாமல் விட்டுவிடாதீர்கள்.
அதாவது உங்கள் உடல் உறுப்புகளை மாற்றியமைக்க உங்களால் முடியாது. காரணம் நாம் பிறக்கும்போது எதைகொண்டுவந்தோமோ அதையே வாழ்நாள் முழுவதும் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. கைகள், கால்கள், கண்கள், காதுகள், நிறம், உயரம் எல்லாம் எதையும் மாற்றியமைக்க முடியாது. அது அப்படியேதான் இருக்கும். ஆனால் உங்கள் மூளையை முழுவதுமாக மாற்றியமைக்க முடியும்.
இந்த உலகம் முழுவதும் நன்மையும் தீமையும் இரண்டறக் கலந்துதான் இருக்கும். உண்மையும் பொய்யும் ஒன்றுக்குள் ஒன்றாகவே இருக்கும். நம்மில் நல்லவரும் தீயவரும் சரிநிகராக நிறைந்து இருப்பார்கள். அதில் நாம்தான் நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையில்லாததை ஒதுக்கித்தள்ள வேண்டும். அதற்கு நாம் நம் மூளையைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
அந்த மூளை ஆரோக்கியமும், சிறப்பாக சிந்திக்கும் திறனும் கொண்டிருக்காவிட்டால் தேவையற்றதையே நாம் தேர்வுசெய்பவர்களாகவும், துன்பங்கள் அனைத்தையும் அதிக விலைகொடுத்து வாங்கிக்கொள்பவர்காளாகவும் இருப்போம். சரி இந்தப்பிறவி போகட்டும் அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விடமுடியாது, நமது வாழ்வு ஒரே ஒரு முறைக்கொடுக்கப்படும் வாய்ப்பு. புத்தர், காந்தி, காமராஜர் இவர்களுக்கே மீண்டும் ஒரு வாய்ப்பும் வாழ்வும் கிடைக்காத போது நமக்குக் கிடைக்குமா என்ன?.
இந்த வாழ்விலும்கூட இழந்த எதையும் மீண்டும் பெறமுடியாது. அதற்காகத் தான் நமக்கு பல கோடி ஆண்டுகள் இயற்கையால் சிறப்பாக வடிவமைக்கபட்ட பரிணாம வளர்ச்சியின் அற்புத வடிவம் புத்தம் புது மூளை, நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அறிவியல் அறிஞர்கள் போல முழு மூளையையும் பயன்படுத்தமுடியவில்லை என்றாலும்கூட நமது நல் வாழ்விற்காக கொஞ்சம் பயன்படுத்தலாம் அல்லவா?. கைகள், கால்கள், தலை, முகம், உடலின் எல்லா உறுப்புக்களையும் நன்றாகப் பயன்படுத்தும் நாம் நம் மூளையை ஏன் பயிற்சி கொடுத்துப் பயன்படுத்தக்கூடாது. .
உடல் உறுப்புகளுக்குப் பயிற்சி கொடுக்கும்போது உறுதியும் அழகும் நீண்ட ஆயுளும் பெறுகிறது. மூளைக்குப் பயிற்சி கொடுக்கும்போது புதியச் சிந்தனையும் நேர்த்தியான செயல்பாடும் ஆழமான மகிழ்வும் நமக்குக் கிடைக்கிறது.
ஜார்ஜ் ஆர்.ஆர். மார்டின் (George R.R. Martin) என்ற “கேம் ஆஃப் த்ரோன்” (Game of the Throne) என்ற புத்தகத்தின் ஆசிரியர் சொல்கிறார், ‘‘புத்தகம் மூலம் மூளைக்குப் பயிற்சி கொடுப்பவர் ஆயிரம் வாழ்க்கையை இறப்பதற்குமுன் வாழ்கிறார்”. ‘‘ஒருபோதும் புத்தகம் வாசிக்காதவர் ஒரே ஒருமுறைதான் வாழ்கிறார்’’ என்று, டாக்டர் சுயெஸ் சொல்கிறார். ‘‘பயிற்சி பெற்ற மூளை பல உண்மைகளைத் தெரிந்து கொள்கிறது. அது பல புதிய இடங்களுக்கு அவரை அழைத்துச்செல்கிறது’’ என்று. பயிற்சி பெற்ற மூளை உலகைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள பல வழிமுறைகளை எளிதாக நமக்கு வழங்குகிறது.
எல்லோருக்கும் மூளை இருக்கும் ஆனால் பயிற்சி கொடுத்து பயன்படுத்தும் மூளைதான் பரிசுகளைப் பெற்றுச்செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். அவர்தான் நீண்ட மகிழ்வான அமைதியான வாழ்வை வாழமுடியும்.
மூளை கற்பனையில் கனவில், ஓர் நினைவில் கண்கள் இல்லாமல் பார்க்கிறது, காதுகள் இல்லாமல் கேட்கிறது,
வாயில்லாமல் பேசுகிறது, இறகுகள் இல்லாமல் வானில் உயரப்பறக்கிறது. அப்படி செய்வதால்தான் மூளைப் படைப்பாற்றல் கொண்டுவிளங்குகிறது. கண்கள் இல்லாமல் பார்க்கும் காட்சி யாரும் காணாத அற்புதக் காட்சியாக இருக்க, காதுகள் இல்லாமல் கேட்கும் ஒலி இன்னிசை மழையாக இனிக்க, வாயில்லாமல் பேசும் மொழி இனியத்தேன் மொழியாகச் சுவைக்க, இறகுகள் இல்லாமல் வானில் ஆனந்தமாக மிதக்க நம் மூளைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். விலங்குகளுக்குப் பயிற்சி கொடுத்து சர்க்கஸ் கூடாரத்தில் அழகாக வித்தைக் காட்டுவிக்கிறார்கள். நம் மூளைக்கு பயிற்சி கொடுக்கும்போது அது வியப்பூட்டும் அதிசயங்களை உலகில் நிகழ்த்திக்காட்டுகிறது.
எல்லையில்லாத இன்பமும் மகிழ்வும் வளமும் உங்களுக்குள் இருக்கிறது, நீங்கள் அதை உணரமுடியும், அனுபவிக்க முடியும், அதில் ஆனந்தம் அடையமுடியும்.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.