மூளை என்னும் முதல்வன்-11


திரு. A.மோகனராஜூ, சேலம்

ரவு எத்தனை இன்பங்களைக் கொடுக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இரவுக்காக ஏங்கும் இதயங்கள் எத்தனை என்று உங்களுக்குத் தெரியாது. இரவு, மனிதனுக்குக் கொடுக்கும் கொடைகள் எல்லையில்லாதது என்பதும் உங்களுக்குத் தெரியாது. அனைத்துக் கொடைகளிலும் அற்புதமானது ஆழ்ந்த உறக்கம் தான். அதற்குமுன் மனிதனின் வாழ்க்கை இரவின் உறவில்தான் பிறக்கிறது. துவக்கம் முதல் பத்து மாதங்கள் இருட்டறையில்தான் வளர்கிறது. அதன்பின் அவன் வாழ்வின் நிம்மதி ஆழ்ந்த உறக்கத்தின் அமைதியில் நனைந்து இனிக்கிறது. காரணம் உறக்கம் ஓர் அற்புதம் என்பதால்தான்.

நீண்ட உறக்கமா அல்லது ஆழமான குறுகிய உறக்கமா எதுவானாலும் சரி நமது மூளை உறக்கத்தை மிகவும் அதிகமாகவே நேசிக்கிறது, நல்ல உறக்கதிற்காகத் தான் நாம் எல்லோரும் காலையில் இருந்து மாலைவரைக் கடினமாக உழைக்கிறோம் என்று ஓர் அறிஞர் கூறுகிறார்.

இருபத்துநான்கு மணி நேர உலக நடவடிக்கைகளைத் தொடர்ந்து பதிவு செய்யும் மூளை தூக்கத்தில்தான் நல் வாழ்விற்குத் தேவையான நல்லது அனைத்தையும் தேர்வு செய்கிறது. அதற்கு இரவு நம் மூளைக்கு மிகப்பெரும் வாய்ப்பைப் பரிசாக அளிக்கிறது.

இரவின் ஆழ்ந்த உறக்கத்தில் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) என்ற மனித மூளையின் ஒரு பகுதி குறுகிய கால நினைவாற்றலை நீண்ட கால நினைவாற்றலாக மாற்றியமைக்கிறது(Short term memory become long term memory). நீண்ட கால நினைவுகளை மூளையின் பிரிபிரண்டல் கோர்டெக்ஸ் (Prefrontal Cortex) என்ற பகுதி இரவில் கனவுகளாக, பகலில் கற்பனைகளாக, கவிதையாக, புத்தம் புதுச் சிந்தனைகளாக வடிவமைத்து மனித மனதில் உலா விடுகிறது.

அந்த எண்ணங்களில் இருந்து வரும் உணர்வுகளை அமிக்டலா (Amygdala) என்ற மூளைப்பகுதி அழகு மிளிரக் கட்டுப்படுத்தி அனைவரும் மகிழும்படி வெளியிடுகிறது. கார்பஸ் கல்லோசம் (Corpus callosum) என்ற இரண்டு மூளை அரைக்கோளங்களையும் இணைக்கும் மூளைப்பகுதி இரு மூளை அரைக்கோளங்களையும் மாற்றி மாற்றி ஊக்கப்படுத்துகிறது. இது அவ்வளவும் உங்கள் மூளையில் ஆழ்ந்த அமைதியான உறக்கத்தில் அற்புதமாக நிகழ்கிறது. இந்த நிகழ்வுகளே ஓர் விலங்கின் மூளையை அற்புதமான மனித மூளையாகச் சிறப்பாக வடிவமைக்கிறது, சிந்தனைக்குட்படுத்துகிறது.

ஒவ்வொரு நாள் ஆழ்ந்த உறக்கத்தின்போதும் நம் மூளையில் இருக்கும் ஹிப்போ ேகம்பஸ் 700 புதிய நியுரான் செல்களை உருவாக்குகிறது, கோடிக்கணக்கான செல்கள் நம் மூளையில் இருந்தாலும் குறிப்பாக இந்தச் செல்கள் கற்றல் திறனை, இரண்டு கால்களில் நடக்கும் திறனை அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை, தூக்கமின்மையை, வயது முதிர்வதைத் தோலின் வறட்சியைக் குறைக்கிறது. உடல் உறவு நேரத்தை அதிகரிக்கிறது. உறக்கம் ஆழ்ந்த அமைதியில் நீண்டு இருக்கும்போது புதுப்புது எண்ணங்கள் சிறப்பாக மனதில் பிறக்க வழிவகுக்கிறது. 95 சதம் டெஸ்ட்டொஸ்ரோன் (Testosterone) என்ற ஆண்மைக்கான ஹார்மோன் இரவு 10, 12 மணியளவில் ஆழ்ந்த உறக்கத்தில் சுரக்கிறது.

இரவு பகல் உறக்கமின்றி மார்டின் கூப்பர், (Martin Cooper), ஜான் லோகி பார்டு,(John Logie Baird) ஃபிலொ டைலொர் ஃபெர்ன்ஸ்வொர்த் Philo Taylor Farnsworth), ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) போன்ற அறிவியல் அறிஞர்கள் கைப்பேசி, கணினி டிவி போன்ற உபகரணங்களைக் கண்டுபிடித்து வடிவமைத்தவர்கள். உலக மக்களின் உறக்கத்தைத் தொலைத்து துன்பத்தில் தத்தளிக்கவிட்டார்கள், மனித இனம் முழுவதும் துவண்டுபோய் தவிக்கவிட்டார்கள்.

இந்த உலகில் 1.78 – பில்லியன் மனிதர்கள் நாள்பட்ட வலியால்(Chronic Pain) அவதிப்படுவதாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள், அது தூக்கம் குறைவினால் ஏற்படும் வலிதான் என்று அறிவியல் அறிஞர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு நாள் சூரியன் மறையும்போதும் இரவு உருவாகிறது, உலகம் இருட்டில் மறைகிறது, எல்லையில்லாத அமைதி உலகில் நிலவுகிறது. நம் எல்லோரின் மூளையும் ஆழ்ந்த ஓய்வில் ஆனந்தம் அடைகிறது. நாம் சேமித்த பணத்தையே செலவிட முடியும். உலக உயிரினங்களில் உன்னதமான உயிர் மனிதன், இவன் இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு பணத்தை தூக்க மருந்திற்குச் செலவிடுகிறான்.

தூக்கம் ஓர் உன்னத மருந்து. அமைதியின் இரவில் செலவில்லாமல் கிடைக்கும் அற்புதம் என்பது தெரியாமல் விழித்துக்கொண்டு அவதிப்படுகிறான், இரவு தினம்தினம் வருகிறது. ஆனால், உறக்கம் மட்டும் வர மறுக்கிறது என்று புலம்புகிறான். விதைப்பதையே அறுவடை செய்யமுடியும், விளைவதையே உண்ண முடியும், பகலில் எப்படி வேண்டுமானாலும் சக்தியை செலவிடலாம். ஆனால் இரவின் உறக்கத்தில்தான் அதைச் சம்பாதிக்க முடியும், இரவின் உறக்கத்தில் சம்பாதித்த சக்தியைத்தான் அடுத்த நாள் நம்மால் செலவிடவும் முடியும்.

அறிவியல் ஆய்வு சொல்கிறது. உலக உயிரினங்கள் அனைத்திற்கும் உறக்கம் இன்றியமையாதது. உறங்க மறுக்கும் உயிரி இறக்க நேரிடுகிறது. ஒரு விலங்கினால் 22 – நாட்களுக்கு உணவில்லாமல் உயிருடன் இருக்கமுடியும். ஆனால் 11 – நாட்கள் உறக்கமில்லாமல் இருக்கும்போது அது இறக்க நேரிடுகிறது. இரவின் மடியில் பிறக்கும் நல்ல உறக்கம்தான் மனிதனின் இறப்பை நூறு வருடங்கள் தள்ளிப்போடுகிறது. ஆக உறக்கம்தான் உயிரினங்களின் வாழ்வாக இருக்கிறது.

உலகில் இருக்கும் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. நாள் இரவும் பகலாகப் பிரிகிறது, வாழ்வு உறவும் பிரிவாக நகர்கிறது, மேலும், உண்மை, பொய், உயரம், குட்டை, வலது, இடது, கருப்பு, வெள்ளை, நல்லது தீயது, பிறப்பு, இறப்பு, என்று எல்லாம் இரண்டாகப் பிரிகிறது. இதில் ஒன்றை எடுக்கும்போது மற்றதும் இல்லாது போகிறது. இரண்டையும் தனித்தனியே பிரிக்க முடியாமல் ஒன்றுக்குள் ஒன்றாகவே இருக்கிறது. இரவு பகலைத் தொடர்கிறது பகல் இரவைத் தொடர்கிறது. இதில் பகலில் உழைப்பும் இரவில் உறக்கமும் (ஓய்வும்) பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

இரவு ஓர் அற்புதம் அதில் உறக்கம் ஓர் ஆனந்தம்.

மனித உடலின் 37 டிரில்லியன் செல்களும் நேரிடையாக ஒளியுடனும், இருட்டுடனும் இணைக்கபட்டு இருக்கிறது. ஒவ்வொரு செல்லும் ஒளியையும் இருட்டையும் உணர்கிறது. பகலில் சூரியன் உதயமாகிறது ஒளி பரவுகிறது, அது உடலில் பட்டு உழைக்கத் தேவையான வைட்டமின் “டி” யைக்கொடுக்கிறது. இரவில் இருட்டு பரவுகிறது அது உடலில் மெலடோனின் (Melatonine) என்ற ஹார்மோனைச் சுரக்கிறது, அது ஆழ்ந்த உறக்கத்தைக் ெகாடுக்கிறது. உறக்கம் அடுத்த நாள் உழைப்பிற்குத் தேவையான உடலைச் சீர்செய்து கொடுக்கிறது. பகலின் சூரிய ஒளியில் ஆட்டம் கொண்டாட்டமும் இரவின் இருட்டில் ஆழ்ந்த அமைதியில் நல் உறக்கமும் ஓய்வும் இயல்பாய் நடக்கிறது.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.