வெற்றியோடு விளையாடு! – 26


டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

றைவனுக்கு அடுத்த நிலையில் இருப்பவன் மனிதன். மகத்தான சக்தி கொண்டவன். மனித மனதின் சக்திக்கு காலம் கிடையாது, தூரமும் கிடையாது. முக்காலங்கள் குறித்து முடிவு எடுக்கக் கூடியது. அப்படி மனித மனத்தை உணர்ந்து கொண்டவர்களே மகத்தான சாதனை படைக்கிறார்கள். அவர்களுக்கு வறுமையோ, எதிர்ப்போ சூழ்ச்சிகளோ தடையாக இருந்ததில்லை. அவர்களின் இலக்கு சிகரம் தொடுவது மட்டுமே. அவர்கள் எப்போதும் சிகரத்தை நோக்கிச் சிறகடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அப்படிக் கூட்டிலிருந்து வெளிவந்து, சிறகடித்துப் பழகி சிகரம் தொட்டிருப்பவர் எடப்பாடி
ஆ. அழகேசன் அவர்கள் ஆவார்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தன்னுடைய கடுமையான உழைப்பால் உயர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை?

சேலம் மாவட்டம், எடப்பாடி நகரம், சின்ன மணலி கிராமம் கவுண்டம்பட்டியைச்சேர்ந்தவர் எடப்பாடி
ஆ. அழகேசன். தன்னைச் சுற்றியிருந்த வறுமைதான் சிறுவயதில் இவர் கண்ட காட்சி. ஏழு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் என்று பெரிய குடும்பம். எல்லோரும் சாப்பிட வேண்டும் என்றால் எல்லோரும் உழைக்க வேண்டும். அதனால் வயது வித்தியாசம் பாராமல் வேலை பார்த்தார்கள். சொன்னால் நம்புவது கடினம் ‘மூன்று வயதிலேயே வேலை பார்க்கத் தொடங்கி விட்டேன்’ என்கிறார் எடப்பாடி ஆ. அழகேசன்.

நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்த குடும்பம். பள்ளியில் படிக்கும் போது தலையில் தறி நூல் கண்டுகளுடன் பள்ளிக்குச் செல்வார். பள்ளிக்குப் போகும் வழியில தறிப்பட்டறையில் கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும், திரும்ப வரும்போது தறிப்பட்டறையில் இருந்து துணிக் கட்டுகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். பள்ளிக்கூடம் சென்ற நேரம் போக மீதி நேரம் எல்லாம் தறிப்பட்டறையில் தான் இருப்பார். கிடைக்கும் சிறு இடைவெளியில் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கி விடுவார்.

கல்லூரி சென்று படித்துப் பட்டம் பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால் அன்றைய பொருளாதாரச் சூழலுக்கு அது பெரும் சவாலாக இருந்தது. பல இன்னல்களுக்குப் பிறகு பட்டப் படிப்பில் சேர்ந்தார். படிக்கும்போதே கிடைத்த நேரத்தில் கடுமையாக முயற்சி செய்து தமிழ், ஆங்கிலம், ஆகியவற்றில் தட்டச்சுப் பயிற்சிகளை முடித்தார்.

கல்லூரி வாழ்க்கை முடிந்து உலக வாழ்க்கைத் தொடங்கியது. அதுவும் மிக வசதியாகத் தொடங்கிவிடவில்லை. முதலில் சில இடங்களில் தற்காலிகமாக வேலை செய்தார். பிறகு போட்டித் தேர்வு எழுதி மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர் பிறகு அதை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக அரசு நடத்திய போட்டித் தேர்வுகள் எழுதி இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். பல கட்ட பதவி உயர்வுக்குப் பிறகு சென்னை மோனோ ரயில் திட்ட இயக்குநராக மாவட்ட வருவாய் அலுவலர் பணி நிலையில் இருந்து ஓய்வு பெற்றார்.

வறுமையைக் கடந்தது ஒரு சாதனை என்றால், வளமான இலக்கியம் படைத்தது இன்னொரு சாதனை. ஆம்! சின்ன வயதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வமும் இவர் உள்ளே இருந்தது. கற்பனைக் குதிரைகளை தட்டி விடுபவர்கள் தானே, கற்பனைக்கு எட்டாத சாதனைகளைச் செய்கிறார்கள். அப்படித்தான் எடப்பாடி ஆ. அழகேசன் அவர்களும் எழுத்து உலகில் பரிணமிக்கிறார்.

‘சேலத்தில் இருந்து வெளிவந்த ‘‘முயல்’’ என்ற இதழில் ‘‘பறக்கும் பாம்பு” என்ற என்னுடைய முதல் சிறுகதை வெளியானது, அப்போது எனக்கு வயது பன்னிரண்டு.

இன்று ஒன்பது கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஆறு நாவல்கள், ஒன்பது கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகிவிட்டன’ என்கிறார் மகிழ்ச்சியுடன். மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.