ஐந்துஆறைவிடப்பெரியது 21
திரு.முகில்
வீtட்டுக்குள் புகுந்த பாம்பு. குழந்தைகளைக் காப்பாற்ற பாம்பைக் கடித்துக் கொன்று உயிர்த் தியாகம் செய்த நாய்!’, ‘தனது பழைய எஜமானரைத் தேடி பல மைல் தூரம் ஓடி வந்த நாய். நெகிழ்ச்சியான சம்பவம்!’, ‘சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கடித்துக் குதறிய நாய்!’, ‘எஜமானர் இறந்தது தெரியாமல் அவரது வருகைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த நாய்!’, ‘உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண். உடன் வந்து உயிர்காத்த வளர்ப்பு நாய்!’, ‘எஜமானர் இறந்த துக்கம் தாளாமல், உண்ணாமலேயே இருந்து உயிரை விட்ட நாய்!’, ‘கேரளாவில் வெள்ளம், ஆடுகளைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்கள்!’, ‘தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவ வீரர்களைக் காத்து உயிர்த் தியாகம் செய்த ராணுவ நாய்!’
நாய்களின் பாசத்தை, கருணையை, தியாகத்தை, பேரன்பை, அர்ப்பணிப்பை, நன்றி உணர்வை இப்படிப் பல செய்திகள் தினம் தினம் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஆதி முதலே மனிதனோடு இணைந்து வாழும் உயிரினம். மனிதன் மீது கொண்ட அன்புக்காகவே வாழும் உயிரினம். ‘நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா!’ என்று மனிதர்கள் கொண்டாடும் உயிரினம். அதேசமயம் மனிதனின் இறப்புக்கான காரணத்தில் ‘வெறிநாய்க்கடிக்கும்’ குறிப்பிட்ட பங்கு உண்டு என்பதையும் மறுக்க இயலாது. மனிதனுக்கும் நாய்க்குமான உறவு காலம் காலமாக எப்படி இருந்து வந்திருக்கிறது?
சுமார் முப்பதாயிரம் அல்லது நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதனுக்கும் நாய்க்குமான உறவு உண்டாகியிருக்க வேண்டும். வேட்டையாடித் திரிந்த மனிதன், காட்டில் ஓநாய்களோடு பழக ஆரம்பித்தான். அவையும் மனிதர்கள் வேட்டையாட உதவின. மனிதன், ஓநாய்களை வளர்க்கத் தொடங்கினான். வேட்டையாடி அவற்றுக்கும் உணவு கொடுத்தான். அப்படி மனிதன் வளர்த்த ஓநாய் இனத்திலிருந்தே நாய் இனங்கள் பிறந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் உறுதியாகத் தெரிவிக்கிறார்கள். மனிதன் வளர்த்த முதல் செல்லப்பிராணி நாயாகத்தான் இருக்க வேண்டும்.
ஜெர்மனியின் போன் என்ற மாவட்டத்தில் Oberkassel என்ற பகுதியில், 1914-ம் ஆண்டில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்தன. அப்போது மனிதர்களின் எலும்புக்கூடுகளோடு சேர்த்துப் புதைக்கப்பட்ட நாய்களின் எலும்புக்கூடுகளும் கிடைத்தன. அவை சுமார் 14000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று உறுதி செய்யப்பட்டன. நாய்களுக்கும் மனிதனுக்குமான ‘நீண்ட பந்தத்தை’ அழுத்தமாகச் சொல்லும் வரலாற்று ஆதாரம் இது. புதிய கற்காலக் குகை ஓவியங்களில் மனிதர்களும் நாய்களும் சேர்ந்து வேட்டையாடியிருப்பதைக் காண முடிகிறது.
புராணக் கதைகள் தொடங்கி போர்க் கதைகள் வரை நாய்களின் பங்களிப்பு குறித்து குரைத்துக் கொண்டே இருக்கலாம். செர்பெரெஸ், இது கிரேக்கப் புராணத்தில் வரும் பாதாள உலகின் காவல்கார நாய். மூன்று அல்லது ஐந்து தலைகள் கொண்டது. பாதாள உலகிலிருந்து யாரும் தப்பவோ, புதியவர்கள் உள்நுழையவோ விடாது. இசை கேட்டால் மயங்கி, ஆளைக் கோட்டை விட்டுவிடும் என்பது செர்பெரெஸின் பலவீனம். ஷர்வாரா மற்றும் ஷ்யாமா, இவை இந்து புராணங்களின்படி எமனின் நாய்கள். நான்கு கண்கள் கொண்ட இவை, பாதாள உலகைக் காவல் காக்கின்றன. ரிக் வேதத்தில், அசுரர்களிடமிருந்து இந்திரன் பசுக்களை மீட்க உதவும் பெண் நாயாக ஷ்யாமா குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சிவனின் வடிவமாகவே ‘பைரவா’ கருதப்படுகிறது. சிவன், விஷ்ணு, பிரம்மன் இணைந்த வடிவமான தாத்ரேயரைச் சுற்றி வரும் நான்கு நாய்கள், நான்கு வேதங்களாகவே கூறப்படுகின்றன. கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும், வேட்டை நாயையும், விவசாயப் பண்ணைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர, வீட்டுக் காவலுக்காகவோ, அழகிற்காகவோ நாய்களை வளர்க்கக்கூடாது என்கிறது இஸ்லாம். ‘அவர்கள் குரைக்காத நாய்களைப் போன்றவர்கள். அவர்கள் தூங்குவதை நேசிக்கிறார்கள். அவர்கள் பசித்த நாய்களைப் போன்றவர்கள். அவர்கள் எப்பொழுதும் திருப்தி அடையமாட்டார்கள்’ (ஏசாயா 56:11) – இப்படி பைபிளின் சில வசனங்கள் நாய்களை மதிப்பற்றவையாகக் குறிப்பிடுகின்றன.
கொரிய புராணத்தில் வரும் Bulgae என்பது இருள் உலகத்தைச் சேர்ந்த ஆக்ரோஷமான நாய். சூரியனையும் சந்திரனையும் இது துரத்திச் சென்று விழுங்குதால்தான் கிரகணங்கள் உண்டாகின்றன என்பது கொரியர்களின் நம்பிக்கை. Q’ursha – இது ஜார்ஜியப் புராணக்கதைகளில் வரும் இறக்கைகளும், ஏராளமான சக்திகளும் கொண்ட சூப்பர் ஹீரோ நாய். அமிரானி என்ற நாயகனும் இந்த நாயும் சேர்ந்து செய்யும் சாகசங்கள் ஜார்ஜிய மக்களின் விருப்பத்துக்குரிய கதைகளாக இன்றும் திகழ்கின்றன. Xolotl, அஸ்டெக் பழங்குடியினரின் இறப்புக்கான தெய்வம், நாயின் தலையை உடையது. மெக்ஸிகோவில் அஸ்டெக் பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகளில் நாய்களை மரியாதையுடன் புதைத்ததற்கான பல்வேறு பழமையான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எகிப்திய அரசர்களும் அவர்களது பாதுகாவலுக்காக நாய்களுடனேயே புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
காவியங்களில், ஓவியங்களில்
ஹோமரின் காவியமான ஒடிஸியில் ஓர் அற்புதமான நாய்ப்பாத்திரம் உண்டு. கிரேக்க அரசர் ஒடிஸியஸ் வளர்த்த அர்கஸ் என்ற நாய். டிரோஜன் போருக்காக ஒடிஸியஸ் கிளம்பிச் செல்கிறார். போரின் முடிவில் அவர் திரும்பி வரமாட்டார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். அவரது நாயான அர்கஸைக் கைவிடுகிறார்கள். அர்கஸ், தன் எஜமானருக்காகக் காத்திருக்கிறது. இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒரு பிச்சைக்காரராக வந்து சேருகிறார் ஒடிஸியஸ். யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. வயதாகி, தளர்ந்து கிடக்கும் அர்கஸ் மட்டும் அடையாளம் கண்டு, அன்புடன் கண்ணீர் சிந்துகிறது. தன் சூழல் காரணமாக அர்கஸைத் தவிர்க்கிறார் ஒடிஸியஸ். எஜமானரை மீண்டும் கண்ட மகிழ்ச்சியில் உயிரை விடுகிறது அர்கஸ்.
இந்திய மகாராஜாக்களின் ஓவியங்களில், புகைப்படங்களில், அருகே நாய்களும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். பல்வேறு கருப்பு வெள்ளைப் புகைப்படங்களில் நாய்களும் குடும்ப உறுப்பினராகவே நின்று கொண்டிருப்பதையும் பார்க்கலாம். இறந்து போனவர்களுக்காக நடுகல் நடுவது நம் மரபுகளில் ஒன்று. அப்படி நாய்களுக்காகவும் நடுகல் நட்டியிருக்கிறார்கள். கடப்பா மாவட்டம், லிங்கலா என்ற கிராமத்தில் ஏஜமானர் இறந்த துக்கம் தாளாமல் இறந்துபோன போரகுக்கா என்ற நாய்க்கும், எஜமானரோடு சேர்த்து நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. செங்கம் வட்டம் எடுத்தனூரில் நாய்க்காக, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நடப்பட்ட ஒரு நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகல்லில், நாய் ஒன்று பன்றியைக் கவ்வுவது போலச் செதுக்கப்பட்டுள்ளது. அந்த வேட்டையில் இறந்துபோன தன் நாய்க்காக அந்த எஜமானர் உருவாக்கிய நடுகல்லாக அது இருக்கலாம்.
கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் மற்றும் கன்னி ஆகியவை தமிழ்நாட்டின் நாட்டு நாய்கள். இவை ஆகச்சிறந்த காவலர்கள். வேட்டையாடுவதிலும் வல்லவர்கள். கால்நடைகளைத் திருட வரும் ஆள்களை விரட்டுவதிலும், வேட்டையாட வரும் பிற விலங்குகளைத் தடுப்பதிலும் இந்த நாட்டு நாய்கள் கில்லி. கம்பீரமான தோற்றத்துக்காகவும் இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன. மருது சகோதரர்களின் கோட்டைக்குக் காவல் இருந்த கோம்பை நாய்கள், ஆங்கிலேயர்களை உள்ளே நுழைய விடாமல் கடுமையாகப் போராடின என்று சொல்லப்படுவதுண்டு. சிப்பிப்பாறை நாய்களை, பெண்களுக்குத் திருமணச் சீராக வழங்கும் வழக்கமும் சில பகுதிகளில் இருக்கிறது.
ஐரோப்பிய, அமெரிக்க வகை நாய்களைவிட, இந்திய நாய்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். அவை எவ்விதமான பருவநிலையையும் தாங்கக்கூடியவை. ஆகவே 16 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால், இந்தியர்களிடேயே நாட்டு நாய் இனங்களை வீட்டில் வைத்து வளர்ப்பதில் பெருமளவு தயக்கம் இருக்கிறது. அவற்றைப் பராமரிப்பது கடினம் என்ற எண்ணமும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஆகவே, வெளிநாட்டு இனங்களை விரும்பி வளர்க்கிறார்கள். இதனால் நாட்டு நாய் இனங்களின் எண்ணிக்கை இயல்பாகக் குறைந்து வருகிறது. அவற்றை மீட்டெடுக்க முயலும் தன்னார்வலர்களின் பணிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆம், நாய்களுக்கான சுதேசி இயக்கமும் இங்கே தேவைப்படுகிறது.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.