சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 15

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

ங்கள் வரம்புகளைக் கடந்து முன்னேறிச் செல்லுங்கள்’’, ‘‘தடைகளைக் கடக்கப் புதுமையைப் பயன்படுத்துங்கள்’’, ‘‘உங்கள் சந்தேகத்தைப் புறந்தள்ள தைரியத்துடன் செயல்படுங்கள்’’, ‘‘நீங்கள் உங்களைப் பற்றி எண்ணியுள்ள தவறான கதாபாத்திரத்தை விட்டு, உண்மையான உங்கள் சுயத்தைக் கண்டறிந்து, அதனைத் தழுவிக் கொள்ளுங்கள்’’, ‘‘வெற்றியை அடையத் தொடர்ந்து கடினமான சவால்களைத் தாங்கிச் செல்லுங்கள்’’, ‘‘புதிய எல்லைகளுக்கு உயர உங்கள் நம்பிக்கையைக் கைக்கொள்ளுங்கள்’’ என்று உலகமெங்கும் சென்று புத்துணர்ச்சியூட்டி வருகின்றார் ஜெசிக்கா காக்ஸ். 2008 – ஆம் ஆண்டு, அக்டோபர் 10 – ஆம் தேதி கால்களால் விமானத்தை இயக்கும் உரிமம் பெற்ற, உலகின் முதல் பெண்மணி தான் ஜெசிக்கா காக்ஸ்.

ஜெசிக்கா காக்ஸ், 1983 – ஆம் ஆண்டு பிப்ரவரி 2 – ஆம் நாள், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பிறந்தவர். பிறந்த போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஒரு குழந்தையின் முதல் இயக்கம் தவழ்தலில் தான் ஆரம்பமாகின்றது. ஆனால், கைகள் இல்லாமல், தவழ முடியாமல் திகழ்ந்த ஜெசிக்காவை எழுந்து நிற்க வைத்தும், நடைபயில வைத்தும் முதல் ஊக்கத்தையும், அன்பையும் குறையின்றித் தந்தார்கள் ஜெசிக்காவின் பெற்றோர், இனெஸ் மற்றும் வில்லியம் காக்ஸ்.

‘‘என் மகளுக்கு இரண்டு கைகள் மட்டும் தான் இல்லை. மற்றபடி அவளுக்கு நடக்கக் கால்கள் உள்ளது. சிந்திக்க மனம் உள்ளது. எனவே அவளைப் பொதுப் பள்ளிக்குத் தான் அனுப்புவேன்; மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன்’’ என்று கூறி, பொதுப் பள்ளிக்கு அனுப்பினார், அவரது தாயார் இனெஸ் காக்ஸ். ஜெசிக்காவின் தாயார் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். பல்வேறு கஷ்டங்களுக்கு இடையில் செவிலியர் பணியை முடித்தவர். தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்குச் சேவை செய்த பெண்மணி. இவரது அன்பு மகளுக்கு இரண்டு கைகளும் இல்லை என்பதை நேர்மறையாக ஏற்றுக்கொண்டு, ஜெசிக்கா காக்ஸை உலகப் புகழ்பெறும் வண்ணம் ஊக்கம் தந்து வளர்த்தவர்.

இளமையில் சாதனை

பள்ளிக்குச் சென்ற ஜெசிக்காவை மற்ற மாணவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஜெசிக்கா கைகளின்றி இருந்ததால் அவரோடு பழகவோ, பேசவோ பிற மாணவர்கள் முன்வரவில்லை. பெரும்பாலும் தனிமையைத்தான் பள்ளியில் அனுபவித்தார் ஜெசிக்கா. ஜெசிக்காவிற்கு பள்ளியில் சில ஆண்டுகள் கழித்து ஒரு நண்பன் கிடைத்தான். அவனையும் மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள். ஜெசிக்காவால் எல்லோரையும் போல இயங்க இயலாத போது, எதற்கு நட்பு? என்று கேள்வி கேட்டு ெஜசிக்காவை ஒதுக்கினார்கள் சக மாணவர்கள். இந்த வலியெல்லாம் ஜெசிக்காவின் மனதில் இருந்தது. ஆனால், தாயின் தூண்டுதல் மற்றும் அன்பால் பள்ளி வாழ்க்கை தொடர்ந்தது.

ஜெசிக்காவுக்குப் பத்து வயது நடந்த போது கராத்தே பயிற்சியின் ஒரு அங்கமான டேக்வோண்டோ விளையாடுவதற்குச் சென்றார். கைகளின்றி பயிற்சி எடுப்பது மாபெரும் சவாலாக அமைந்தது. முயற்சியைக் கைவிடாமல் இருக்க தாயின் ஊக்கம் தொடர்ந்தது. பல நாள் பயிற்சிகளுக்குப் பின்பு டேக்வோண்டோ பயிற்சியில் முன்னேறினார் ஜெசிக்கா. அங்கிருந்த பயிற்சியாளரின் ஊக்கம் அவருக்குத் துணையாக இருந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து டேக்வோண்டோவில் கருப்புப் பட்டம் (Black Belt) வாங்கியது, ஜெசிக்காவின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது.

ஆம், அந்த நாளில் ஜெசிக்கா தன் கைகளில்லாத உடலமைப்பின் நன்மையைப் புரிந்து கொண்டார். அமெரிக்காவின் டேக்வோண்டோ சங்கத்தில் கைகள் இல்லாமல் கருப்பு பெல்ட் வாங்கிய முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றது, அவருக்கு மாபெரும் உத்வேகத்தைக் கொடுத்தது.

டேக்வோண்டோ பயிற்சியில் சேர்ப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அவரை அழைத்துச் சென்ற ஜெசிக்காவின் தாயார், பயிற்சியாளரிடம் ‘‘கைகள் இல்லாத ஜெசிக்காவால் பயிற்சி பெற முடியுமா? சேர்த்துக் கொள்வீர்களா?’’ என்று கேட்டார். அப்போது அங்கிருந்த பயிற்சியாளர் ‘‘டேக்வோண்டோ பயிற்சியில் வெற்றி பெறுவது ஜெசிக்காவின் மனோபாவத்தைப் பொறுத்தது’’ என்று கூறினார். இப்போது பிளாக்பெல்ட் பெற்று முதல் சாதனை படைத்த போது ஜெசிக்காவுக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது நமது மனோபாவம் ‘‘எதையும் சாதிக்க முடியும்’’ என்று இருந்தால் ‘‘அதனைச் செய்து முடிக்க முடியும்’’ என்பதே அந்த உண்மை. எனவே, ஜெசிக்கா தொடர்ந்து வேறு பல திறமைகளை வளர்த்துக் கொள்ள முடிவெடுத்தார்.

இளம் வயதிலிருந்தே தனக்குத் தரப்பட்ட செயற்கைக் கைகளை முற்றிலும் விலக்கிவிட முடிவு செய்தார் ஜெசிக்கா. செயற்கைக் கையில்லாமல், இயற்கைக் கையும் இல்லாமல் கராத்தேயில் சாதித்தது போலச் சாதிக்க விரும்பினார். செயற்கைக் கையைத் தவிர்த்தது பற்றிக் கூறும் போது, ‘‘நம்முடைய இயற்கையான உடல் உறுப்புகளுக்கு இணையாக ஒருபோதும் செயற்கைப் பொருட்கள் வர இயலாது. எனக்குத் தரப்பட்ட செயற்கைக் கையை அணிவதற்கே நான் பல நாட்கள் பயிற்சி பெற்றுக் கொண்டேன். அது மிகவும் வலியைத் தந்ததாகவும் இருந்தது. எனவே ஒரு கட்டத்தில் அதனை முற்றிலும் விலக்கிவிட முடிவு செய்தேன். ஆகையால் என் கால்களைப் பயிற்றுவித்து என் தேவைகளை நிறைவேற்றிட ஆரம்பித்தேன். செயற்கைக் கையைவிட பல மடங்கு என் கால்களின் செயல்பாடு மற்றும் இயக்கம் எனக்கு எளிதாகவும், சுகமாகவும் அமைந்தது’’ என்று ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார் ஜெசிக்கா.

மன உறுதி கொண்ட ஜெசிக்கா காலின் மூலம் தட்டச்சு பயிலச் சென்றார். ஸ்கூபா டைவிங் கற்றுக்கொண்டார். தன் காலின் மூலமாக காரின் கதவைத் திறந்துகொண்டு, காரோட்டவும் கற்றுக்கொண்டார். ஒரு நிமிடத்துக்கு 25 வார்த்தைகளை தட்டச்சு செய்ய முடியும் என்று சாதித்துக் காட்டினார். ஸ்கூபா டைவிங் சென்று அசத்தியதன் மூலம் தனது தன்னம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டார்.

அதேவேளையில், தினமும் தனது கராத்தே பயிற்சியைக் கைவிடவில்லை. தற்காப்புக் கலையான டேக்வோண்டோவில் இரண்டாம் நிலையடைந்து அதற்கான பட்டயம் பெற்றார். மிக்க மகிழ்ச்சி கொண்டார். அரிசோனா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை உளவியல் பட்டம் பெற்றார். கால்களால் காரோட்டுவதற்கு உரிமம் பெற்றுச் சாதித்த போது பலரும் பாராட்டினார்கள். இதற்கிடையில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். ‘‘கைகள் இல்லாமலே அலைச்சறுக்கில் அசத்திவரும் பெண்மணி’’ என்று இவரைப் பற்றிய செய்திகள் உலகம் எங்கும் பரவியது. பாராட்டுகள், வாழ்த்துகள் என்று அன்றாடம் வெற்றிப் பாதையில் பயணித்தார் ஜெசிக்கா.

முதல் விமானி

சாதனைகள் பலவற்றைத் தன் குறிக்கோளாகக் கொண்டு இயங்கிய ஜெசிக்காவுக்கு ‘வானில் பறக்க வேண்டும்’, அதுவும் தானே விமானத்தை இயக்கிப் பறக்க வேண்டும் என்ற ஆவல் உதித்தது. பெற்றோரும் ஊக்கமூட்ட ஒரு தனியார் நிறுவனத்தில் விமானத்தை ஓட்டப் பயிற்சி எடுத்தார். அந்த விமானத்தைத் தன் கால்களாலே இயக்கினார். விமானத்தை ஓட்டுவதில், பரப்புவதில் ஓரளவு சிரமங்களைத் தன் கார் ஓட்டும் அனுபவங்களைக் கொண்டு கற்றுக் கொண்டார். ஆனால், விமானத்தை தரையிறங்கச் செய்வது என்பது ஒரு சவாலான பணியாகவே அவருக்கு இருந்தது. மன உறுதியுடன் அதனையும் முடித்துக் காட்டினார்.

கால்களாலேேய விமானத்தை ஓட்டிக்காட்டிய முதல் உலகப் பெண்மணியாகத் திகழ்ந்த ஜெசிக்காவை ஊடகங்கள் பாராட்டின. ‘‘அமெரிக்க அதிபரும் பாராட்டினார். ஜெசிக்காவின் புகழ் பரவியது. ஜெசிக்கா ஊடகங்கள் முன்பு பலமுறை தான் பயிற்சி செய்த விமானத்தை இயக்கிப் பறந்து, இறக்கிக் காட்டினார். அது பழைய காலத்து விமானம் என்பதால் அவருக்கு ஓரளவு எளிதாக அமைந்தது.

எனவே, புதிய ரக விமானங்களை இயக்கி, அதற்கான உரிமம் பெற ஆசைப்படுவதாகக் கூறினார். அவரது கனவை ஒரு தொழிலதிபர் நனவாக்கிட உதவினார். புதிய ரக விமானம் ஒன்றில் ஜெசிக்காவுக்குப் பயிற்சி தர உதவி செய்தார். ஜெசிக்கா ஆர்வமுடன் கற்றுக்கொண்டு முன்னேறினார்; சாதித்துக் காட்டினார். ஆம், 2008 – ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி லைட்ஸ்கோட்ஸ் விமானத்தை இயக்கும் சான்றிதழைப் பெற்றார். ‘கால்களால் விமானத்தை இயக்கி ஓட்டுநர் உரிமம் பெற்று  முதல் உலகச் சாதனையை நிகழ்த்தினார் ஜெசிக்கா காக்ஸ்.’’

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.