கற்றல் எளிது -13

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
பள்ளியில் வேதியியல் பாடம் (Chemistry) படித்திருப்பீர்கள். அதை வைத்து ஒரு விளையாட்டு விளையாடுவோமா? வேதியியல் பாடத்தில் ‘வினைத்திறன் தொடர் (Reactivity Series) என்ற வரிசை உண்டு. இதில் உலோகங்களின் பெயர்கள், எளிதாக வெடிக்கக்கூடிய உலோகங்களில் இருந்து, வெடிக்காத உலோகங்கள் வரை வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். என்ன உங்களால் முடியுமா? கீழே உள்ள உலோகங்களின் பெயர்களை வரிசையாக படியுங்கள்.
- Potassium
- Sodium
- Lithium
- Calcium
- Magnesium
- Aluminium
- Zinc
- Iron
- Copper
- Silver
- Gold
என்ன படித்துவிட்டீர்களா? இப்போது அதை நினைவுப்படுத்திப் பாருங்கள். எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள். நினைவுபடுத்த முடிகிறதா எனப் பாருங்கள். என்ன கடினமாக இருக்கிறதா? இதற்கு ஓர்எளிமையான உத்திஇருக்கிறது. ஆங்கிலத்தில் Mnemonic என்று அழைக்கிறார்கள். அதாவது நாம் நினைவு வைத்துக்கொள்ள விரும்பும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் கொண்டு வாக்கியம் ஒன்றை அமைக்க வேண்டும். அப்படியமைக்கும்போது அந்த வாக்கியம் நமக்கு எளிதாக நினைவில் நின்று விடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பிறகு, எப்போதெல்லாம் அந்த வார்த்தைகள் நமக்கு நினைவுக்கு வர வேண்டுமோ அந்த வாக்கியத்தை நினைவுப்படுத்தினால் போதும். அதன் முதல் எழுத்துக்களை வைத்து அந்த வார்த்தைகளையும் நினைவுக்கு கொண்டு வந்துவிடலாம்.
நிமோனிக் உத்தியைப் பயன்படுத்தி மேற்சொன்ன உலோகங்களை நினைவில் நிறுத்த முயற்சிப்போம்.
‘Please Sir, Let’s cancel math and Zoology. Instead Cricket, Swimming, golf!’ என ஒரு வாக்கியத்தை உருவாக்குங்கள். இதைப் படித்துப் பாருங்கள். எளிதாக இருக்கிறதா? தமிழில், ‘தயவு செய்து கணிதமும் உயிரியலும் வேண்டாம் சார். கிரிக்கெட், நீச்சல், கோல்ஃப் வேண்டும்.’ என்பதுதான் அர்த்தம். ஆனால் இதனை Mnemonic
முறையில் பார்த்தால் வேறு அர்த்தம் வரும்.
மேலே உள்ள வாக்கியத்தில் முதல் எழுத்துக்கள் எல்லாவற்றையும் எடுத்து வரிசைப் படுத்துங்கள். இப்போது அந்த உலோக வரிசை உங்கள் நினைவுக்கு வரும்.
Please – Potassium, Sir – Sodium, Lets – Lithium, Cancel – Calcium, Maths – Magnesium, Zoology – Zinc, Instead – Iron, Cricket – Copper, Swimming – Silver, Golf – Gold.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? மேற்சொன்ன வாக்கியம்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. உங்களுக்கு ஏற்றாற்போல், உங்களுக்குப் புரியும் வகையில் எந்த வாக்கியத்தை வேண்டுமானாலும் வசதிக்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ளலாம்.
சிறுவயதில் நாம் கை விரல்களை மடக்கி ஜனவரி, பிப்ரவரி என்று மாதங்களை நினைவில் வைத்துக்கொள்வோம் அல்லவா? கிட்டத்தட்ட அதேபோல.
அடுத்தாக இன்னொரு நினைவாற்றல் உத்தியும் இருக்கிறது. இதனை நினைவு மாளிகை என்கிறார்கள்.
நினைவு மாளிகை (Memory Palace)
ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் படித்திருப்பவர்களுக்கு இந்த மெமரி பேலஸ் டெக்னிக் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் வரும் வில்லன் கதாப்பாத்திரம் கடினமான தகவல்களை(பெயர், வருடங்கள் போன்றவற்றை) நினைவில் வைத்துக்கொள்ள நினைவு மாளிகை உத்தியைப் பயன்படுத்தும். அதையே தான் நாம் கடந்த அத்தியாயத்தில் பார்த்த நினைவாற்றல் சாம்பியன் நெல்சனும் நிஜ வாழ்வில், குறிப்பாக நினைவாற்றல் சார்ந்த போட்டிகளில் பயன்படுத்துகிறார்.
நினைவாற்றல் போட்டிகளில் தரப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பெயர்களையும், எண்களையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அந்த எண்களையும், பெயர்களையும் காட்சிகளாக மட்டும் மாற்றினால் நினைவில் தங்கிவிடாது. அதை வரிசைப் படியும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? அதற்கு தான் இந்த நினைவு மாளிகை டெக்னிக்கை நெல்சன் பயன்படுத்துகிறார். ஆங்கிலத்தில் இதை மெமரி பேலஸ் டெக்னிக் (Memory Palace) என்று அழைக்கிறார்கள்.
இந்த நினைவு மாளிகை உத்தியில் நாம், நமக்கு ஏற்னகவே நன்றாக பழக்கப்பட்ட இடத்தை நினைவில் கொண்டு வர வேண்டும். அதைப் பயன்படுத்தி நாம் நினைக்கும் தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம். புரியவில்லையா?
இந்த நினைவு மாளிகை உத்தி சுமார் 2,500 வருடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண்டைய ரோம எழுத்தாளர் சிசெரோ என்பவர், தான் மேடையில் பேசும் போது தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு இந்த உத்தியைப் பயன்படுத்தியதாக எழுதியிருக்கிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில்கூட இந்த உத்தி நம் மூளை இயக்கத்தை கூராக்கி நமது நினைவாற்றலைப் பல மடங்கு உயர்த்துவதாகத் தெரிய வந்திருக்கிறது.
நினைவு மாளிகை உத்தியை எப்படி பயன்படுத்துவது?
உங்களுக்குத் தெரிந்த ஒரு இடத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அது உங்கள் தெருவாக இருக்கலாம் அல்லது உங்கள் வீடாக இருக்கலாம். நீங்கள் உங்கள் வீட்டை நினைவுக்குக் கொண்டு வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்ததாக நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள விரும்பும் தகவல்களை அந்த வீட்டிற்குள் ஆங்காங்கே வைத்துவிடுங்கள். ஆகிவிட்டதா? இப்போது உங்கள் வீட்டிற்குள் நடந்து செல்வதைப் போல கற்பனை செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிற்குள் நடக்கும்போது எந்த இடத்திற்குச் செல்கிறீர்களோ, அந்த இடத்தில் நீங்கள் வைத்த தகவல் உங்களுக்கு நினைவுக்கு வரும். புரியவில்லையா?
உதாரணமாக இப்போது நாம் மேலே பார்த்த அந்த உலோக வரிசையில் 5 – உலோகங்களை எடுத்துக்கொள்வோம். Calcium, Gold, Potassium, Sodium, Zinc
இப்போது ஒரு வீட்டை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் ஒரு அறை இருக்கிறது. ஒரு சமையலறை ஒருக்கிறது. ஒரு ஹால் இருக்கிறது. அந்த ஹாலில் இரண்டு நாற்காலிகள் எப்போதும் இருக்கும் என வைத்துக்கொள்வோம். இது தான் நம் வீட்டின் அமைப்பு. இப்போது நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய 5 தகவல்களையும் அந்த வீட்டிற்குள் வைத்துவிடுவோம். கால்சியமை அறைக்குள் வைத்து விடுங்கள். தங்கத்தை சமையலறையில் வையுங்கள். பொட்டாசியம் ஹாலில் கீழே கிடக்கிறது. சோடியமும், ஜிங்க்கும் நாற்காலிகளில் இருக்கின்றன. இப்போது அந்த வீட்டிற்குள் நுழைவது போல கற்பனை செய்துகொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.