சமூகப் பார்வை – 5
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
மத்திய அரசின் வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் கொட்டும் பனியில் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் மற்றும் அதனால் ஏற்பட்ட சில உயிரிழப்புகள் போன்றவற்றிற்கும் கடந்தாண்டு (2020) சோகப்பட்டியலில் இடமுண்டு. எப்போதுமே சபிக்கப்பட்ட ஜன்மங்களாக விவசாயிகள் இருந்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. 2019-20ஆம் ஆண்டில் 10,287 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயத்தில் நஷ்டம் மற்றும் கடன் தொல்லை காரணமாக ஆண்டுக்கு சராசரியாக 10,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது அரசு கணக்கு. ஆனால் உண்மையில் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். விவசாயம் லாபகரமானதாக இல்லாத காரணத்தால் விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். விளை நிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவதால் விவசாயம் செய்யும் பரப்பளவு குறைந்து வருகிறது.
வேளாண் விளைபொருட்களில் 22 வகையான பொருட்களுக்கு மட்டுமே அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கிறது. இந்த விலையும் கிடைப்பதில் சிக்கல். காரணம், அனைத்துப் பொருட்களையும் அரசு கொள்முதல் செய்வதில்லை. எனவே, விவசாயிக்கு வியாபாரிகளிடம்தான் விற்பனை செய்யவேண்டிய கட்டாயமிருக்கிறது. அவர்கள் அரசு தீர்மானித்த விலையைவிட குறைவான விலைக்குத்தான் வாங்குகிறார்கள். 2019-20 ஆண்டு பருத்திக்கான குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ. 56 என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் அரசு பருத்தியை கொள்முதல் செய்யாததால் வியாபாரிகள் கிலோ ரூ. 35.36க்கு மட்டுமே வாங்கினர். மூன்றில் ஒரு விவசாயிக்கு மட்டுமே அரசு நிதி நிறுவனங்களில் விவசாயக் கடன் கிடைக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகள் தனியாரிடமும், வியாபாரிகளிடம் மகசூலை தருவதாகக் கூறி முன்பணமாகவும் பெற்றுத்தான் விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இடுபொருட்களின் விலையும் பருவந்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இடுபொருட்களுக்கான அரசு மானியம் குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய நிலையில்தான் மூன்று வேளாண்மைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம்
வேளாண்மை மசோதாக்களைக் கொண்டுவந்தபோது, அவற்றை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்புமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர் ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் சட்டம் நிறைவேறியது. இந்த சட்டத்துக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டனர். ஆனால், சட்டத்திற்கான ஒப்புதலை ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கினார் குடியரசு தலைவர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து அமைச்சர் மிரத்ஹவுர்பாதல் ராஜினாமா செய்தார். இவர் சிரோன்மணி அகாலிதள கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். “இந்தச் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காக என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்து இதுகுறித்து பேசுங்கள் என்று நான் அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினேன். ஆனால், அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. இத்தகைய நிலையில், போராடும் எனது விவசாய சகோதரர்கள் சகோதரிகளோடு இருப்பது என்று எனது பதவியை ராஜினாமா செய்து விட்டேன்” என்று தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் தான் விவசாயத் துறையில் கொண்டு வரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களையும் அணுக வேண்டியுள்ளது.
வேளாண்மைச் சட்டங்கள்
- அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்போது, அவற்றை ஏற்றுமதி செய்யவும், சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இப்போது வந்துள்ள இந்தச் சட்டத் திருத்தத்தின் படி, விவசாயத்துறைக்கு முதலீடுகளை அதிகரிக்கும் விளை பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. அதோடு இந்த சட்டத்தின் மூலம் அந்நிய முதலீடு விவசாயத் துறைக்குக் கிடைக்கும் என்பதால் விவசாயத் துறைக்கு தேவையான குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீடு கிடைப்பது எளிதாக்கும் என்பது அரசு கணிப்பு.
- விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020. இது விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எங்கும் வர்த்தகம் செய்ய வழி வகுக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.
- விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. அதாவது விவசாய கான்ட்ராக்ட்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும். இதுவரை ஒரு விவசாயி, தான் விளைவித்த விளை பொருளுக்கு தானே குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்க முடியாத நிலை இருந்தது.
உதாரணத்துக்கு ஒரு விவசாயி, ஒரு கிலோ கேரட் 20 ரூபாய் என பொருட்களை மொத்தமாக வாங்க வருபவர்கள் கூடுமிடமான மண்டியில் கொடுத்துவிடுவார். அங்கு வரும் இடைத்தரகர்கள், வாங்கி 50 ரூபாய் லாபம் வைத்து, 70 ரூபாய்க்கு கடைக்காரரிடம் கொடுப்பார்கள். அந்தக் கடைக்காரர் 30 ரூபாய் லாபம் வைத்து, 100 ரூபாய் என விற்பார். நுகர்வோரும் அந்த விலை கொடுத்து வாங்குவார்கள். தற்போது இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒரு விவசாயி, தான் கஷ்டப்பட்டு பயிர் செய்து விளைவித்த பொருளை நேரடியாக கடைக்காரரிடம் விற்க வாய்ப்பு உள்ளது. எங்கு கூடுதல் விலைகிடைக்கிறதோ, அது வெளிமாநிலமாக இருந்தாலும் சரி அங்கு விற்கலாம். இதன் மூலமாக விவசாயியின் கையே ஓங்கி இருக்கும். இடைத் தரகர்கள் முறை நீங்கும்.
நன்மைகள்
“இந்த சட்டங்களால் நன்மைகள் நிறைய..” என்ற வாதமும் இருக்கிறது. இது குறித்து சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகையில், “விதைக்க தொடங்கிய காலத்திலிருந்தே நிறுவனங்கள் விவசாயிகளை தொடர்பு கொள்ள முடியும். விவசாயிகளுக்கு முன்கூட்டியே பயிருக்கு வட்டி இல்லா முன் பணம் கிடைக்கும், நிறுவனம் பெரியதாகவும் திறமையாகவும் இருந்தால், அது மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் வழங்கும். கமிஷன் கொடுக்காமல் விவசாயிகள் எங்கும் பொருட்களை விற்கலாம். நிலம் பறிபோகும் அபாயமும் இல்லை என்கிறார்கள். மேலும், விவசாயிகளிடம் கிலோ பத்து ரூபாய்க்கு காய்கறிகளை வாங்கி இதில் 15 ரூபாய் ஆதாயம் பார்த்து நகர்புற கடைகளுக்கு விற்கும் “ஆதாயதாரர்கள்” தான் விவசாயிகள் பெயரில் போராட்டங்கள் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
பாதிப்பு
இந்தச் சட்டங்களை எதிர்க்கும் விவசாய இயக்கங்களின் தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் கூறும்போது, “திறந்த சந்தை என்ற பெயரிலான சந்தையானது வியாபாரிகள் சிலரின் தன்னிச்சையான செயல்பாட்டுக்கு வந்து விடும். முதலாளிகள், கார்ப்பரேட்கள் இந்த பொருளுக்கு இன்னவிலைதான் கொடுக்க வேண்டுமென தங்களுக்குள் நிர்ணயித்துக் கொள்வார்கள். பின்னர் விவசாயப் பொருட்களுக்கு இவர்கள் வைப்பதுதான் விலை. நாளடையில் மிகப்பெரிய அளவில் கார்ப்பரேட்களின் அடிமைகளாக நமது விவசாயிகள் மாறக்கூடும்.
“அரசைவிட தனியார் அதிக விலை கொடுக்கிறார்களென்றால் அங்கு கொடுத்துவிடலாம். அது விவசாயிகளின் இஷ்டம் அது” என்கிறார்கள் சட்டத்தை ஆதரிப்பவர்கள். ஆனால், “இப்போதும்கூட விவசாயிகள், அவர்கள் உற்பத்திச் செய்யும் பொருளை எங்கும் கொண்டு சென்று விற்கலாம். ஆனால், தாங்கள் விளைவிக்கக்கூடிய பொருள்களை யாராவது வாங்கிக்கொண்டால் போதும் என்ற நிலையில்தான் விவசாயிகள் இருக்கிறார்கள். இரண்டு ஏக்கர் நிலத்தில் வரக்கூடிய 40 நெல் மூட்டைகளை பக்கத்து மாநிலத்துக்குக் கொண்டு சென்றா விற்கமுடியும்? குறைந்த அளவிலான இடத்தில் பயிர்செய்பவர்கள், அருகில் இருக்கக்கூடிய நகரங்களுக்குச் சென்று வியாபாரிகளிடம்தான் கொடுக்கமுடியும்” என்கிறார்கள் சட்டத்துக்கு எதிரானவர்கள்.
“மூன்று சட்டங்களும் வியாபாரிகளுக்காகக் கொண்டுவரப்பட்டதாகத்தான் பார்க்கிறேன். விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம், விதைகள் போன்றவை குறித்து இந்தச் சட்டத்தில் எதுவும் இல்லை. இது விவசாயிகளுக்கான சட்டங்கள் இல்லை” என்கிறார் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன்.
அறுவடை காலகட்டத்தில் உற்பத்தியாகக்கூடிய நெல்லை `கொள்முதல் நிலையங்களில் வாங்க மறுக்கிறார்கள்’ என்று விவசாயிகள் எத்தனை போராட்டங்கள் நடத்துவதைப் பார்த்திருக்கிறோம். ஏன் விவசாயிகள் அப்படிச் செய்கிறார்களென்றால், அவர்கள் சொல்லக்கூடிய விலை கிடைக்க வேண்டும் என்பதால்தான். தனியார் அந்த அளவுக்குக் கொடுக்க மாட்டார்கள். அதுதான் உண்மை நிலவரம். அந்த மாதிரி ஒரு சூழல் வந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டதுதான் குறைந்தபட்ச ஆதார விலையில் அரசே கொள்முதல் செய்வது.
விவசாயிகளுக்கு ஆதாரவிலை என்ற பெயரில் இதுவரை குறைந்த அளவிலான பாதுகாப்பு இருந்தது. அதுவும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடையாது, எல்லா பொருள்களுக்கும் கிடையாது. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து இந்த 3 சட்டங்களிலும் எதுவும் நேரடியாகவோ மறைமுகமாகவே குறிப்பிடவில்லை, போகப்போக குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுத்து அரசுக் கொள்முதல் செய்வதை நிறுத்துவதற்கான முன்னோடிதான் இது என்று வேளாண்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பா?
இந்தச் சட்டங்களை எதிர்கட்சிகள் மட்டும் எதிர்க்கவில்லை. சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் “பாரதிய கிசான் சங்கம்” என்னும் பா.ஜ.க. ஆதரவு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பத்ரி நாராயண் சௌத்ரி அளித்த பேட்டியில், “அடிமட்டத்தில் விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்ற உண்மையை அறியாதவர்களால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இது” என்றார்.
தீர்வு
இந்தச் சட்டங்கள் அனைத்தும் கத்தியை போன்றவை. அதனை பயன்படுத்தும் விதத்தை சார்ந்து அது நன்மை பயக்கிறதா அல்லது தீமை தருகிறதா என அறியமுடியும். அதேபோல, இனிவரும் காலங்களில் சிறு விவசாயிகளும், குறுவிவசாயிகளும், இந்த சட்டங்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகலாம். பெரிய விவசாயிகள் தப்பித்து விடுவார்கள். ஆகவே, இப்போது பிரபலமாகி வரும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களின் கீழ் சிறுகுறு விவசாயிகள் ஒன்றிணைந்து தமக்கான நிறுவனத்தின் மூலம் விவசாயப் பொருட்களை சந்தைகளில் விற்க ஆரம்பித்தால் இந்தச் சட்டங்களின் உதவியுடன் பெரிய அளவில் நன்மை பெறமுடியும்.
“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது” என்றார் காந்தி. “எது வேண்டுமானாலும் காத்திருக்கலாம். விவசாயத்தை தவிர” என்றார் நேரு. “விவசாயத்தை தூக்கி நிறுத்துவதும், விவசாயிகளை பாதுகாப்பதும்தான் எங்கள் ஆட்சியின் குறிக்கோள்” என்று ஆட்சியாளர்கள் கூறுவது வழக்கமானது. ஆனால் எல்லாம் பேச்சளவில் தான் உள்ளது.
இன்று நேற்றல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விவசாயம் சவாலான வாழ்வாதாரமாகதான் இருந்து வந்திருக்கிறது. அதற்காக விவசாயத்தைக் கைவிட்டுவிடக்கூடாது என்ற அர்த்தத்தில் “உழந்தும் உழவே தலை” என்கிறார் திருவள்ளுவர். இன்றைக்கு வரைக்கும் நமது விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆண்டுதோறும் அரசாங்கம் விவசாயிகளுக்கு என ஒதுக்கும் பல ஆயிரம்கோடிகள் இன்னமும் முழுமையாக விவசாயிகளை சென்றடையவில்லை. விவசாயத்திலிருந்து இளைஞர்கள் விலகி நிற்கிறார்கள். விவசாயத்தை அவர்கள் விரும்பி செய்யும் காலம் வரவேண்டும். விவசாயம் லாபகரமான தொழிலாக மாறவேண்டும். மாற்றப்படவேண்டும். =