இளைஞர் உலகம்

உறவு

பேராசிரியர்கள் திரு.பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்

ஆளுமையின் அம்சங்களைத் தீர்மானிக்கும் உளப்பாங்குகள் பற்றி பார்த்துவருகிறோம். கடுமுகத்தவர், அழுமுகத்தவர் உளப்பாங்குகளின் பண்புகளைப் பார்த்த நாம் இப்போது சிரிமுகத்தவரின் உளப்பாங்கில் உள்ள பலவீனங்கள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். சிரிமுகத்தவரின் பலவீனங்களில் மேலும் சிலவற்றைப் பற்றிக் காண்போம்.

எளிதாக சோதனையில் வீழ்ந்துவிடுவர்

சோதனை இரண்டு வகைப்படும். இதில் முதல் வகை பரிசோதனை (Test) ஆகும். இது நல்லது. காரணம் பரிசோதனை இல்லாமல் நாம் தகுதிபெறவோ, பதவி உயர்வு பெறவோ இயலாது. ஆனால் இன்னொரு வகை சோதனை உள்ளது. இது நம்மை ஏதாவது ஒன்றில் மாட்ட வைத்து படுபாதாளத்தில் தள்ளக்கூடியது. இது தவறானதைச் செய்யத் தூண்டும் கவர்ச்சி (Temptation) என்பர். இது ஆபத்தானது. எடுத்துக்காட்டாக, சுகர் வியாதி உள்ளவர் லட்டு போன்ற இனிப்பு பதார்த்தங்களை உண்ணக்கூடாது என்று மருத்துவர் கூறியிருப்பார். ஆனால் இந்த இனிப்பு வகைகள் உண்ணும் வாய்ப்பு கிடைக்கும் போது மருத்துவ ஆலோசனையை புறந்தள்ளிவிட்டு, இனிப்பை இஸ்டம் போல் சாப்பிட்டால் அதற்குரிய பலனை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

சிரிமுகத்தவரைப் பொறுத்தமட்டில் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய உளப்பாங்கை உடையவராதலால், மோக உணர்ச்சி சார்ந்த சோதனைகளில் எளிதாக விழக்கூடிய இயல்புடையவர்கள். இது சினிமாத் துறையில் பெரிய பிரச்சனை அல்ல எனத் தோன்றலாம். கண்டதும் காதல் என்ற நிலை திரையுலகத்திற்கு ஒத்துவரலாமே தவிர நிஜ வாழ்க்கையில், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் பயங்கர விளைவுகளை உருவாக்கிவிடும். சமூக உறவிலும் நமக்கு பெரும் பிரச்சனையாகிவிடும். ஏன், நமது உடல்நலத்திற்கும் கேட்டை விளைவிக்கும்.

நிகழ்ச்சி

ஒரு சகோதரி எங்களிடம் மருத்துவச் செலவுக்கு உதவி வேண்டி வந்திருந்தாள். உடலில் அரிப்பு நோய் இருப்பதாகக் கூறினாள். அவளிடம் விசாரித்த போது அவள் தனது சோகக் கதையை சொல்ல நேர்ந்தது.

இவள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஒரு வாலிபனை காதலித்து திருமணம் செய்திருக்கிறாள். இதனால் பெற்றோர் இவள் உறவை துண்டித்துவிட்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. இவரது கணவர் பல்வேறு பெண்களோடு தொடர்பு வைத்திருந்தது திருமணத்திற்கு முன் இவளுக்குத் தெரியவில்லை. இதனால் தான் வாலிபப் பிள்ளைகளுக்கு நாங்கள் “காதலிக்கும்போது அவனது ‘சென்ட் மணம்’தான் தெரியும். கல்யாணம் ஆன பிறகுதான் அவனது ‘வியர்வை நாற்றம்’ தெரியும்” எனக் கூறுவதுண்டு.

ஒருநாள் கணவருக்கு காய்ச்சல் வந்தது. அது சில நாள்கள் நீடித்ததால் மருத்துவ பரிசோதனை செய்த போது அவருக்கு ‘எய்ட்ஸ்’ பால்வினைநோய் இருப்பதாக தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த இந்தச் சகோதரி இரண்டு சிறு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்தாள். பெண்ணின் தாய் இவளிடம், “நீ முன்பு அவனோடு ஓடிப்போனது தவறு. இப்போது செய்வது அதைவிடத் தவறு. அவன் இப்போது ஒரு நோயாளி. மனைவி என்ற முறையில் அவனைப் பராமரிப்பது உனது கடமை” எனக் கூறி கணவனை கவனிக்கும்படி திருப்பி அனுப்பிவிட்டாள்.

சில மாதங்களில் கணவர் இறந்துவிட்டார். ஆனால் கணவரின் எய்ட்ஸ் நோய் இவளைத் தொற்றியிருந்ததை மருத்துவப் பரிசோதனையில் அறிந்துகொண்டாள். இனி தற்கொலைதான் ஒரே வழி எனத் தீர்மானம் செய்தாள். தற்செயலாக சில சமூக ஆர்வலர்கள் இவளது நிலைமையை ேகள்வியுற்று, அவளது தவறை மற்ற வாலிபப் பிள்ளைகள் செய்யாமல் விழிப்புணர்வு நீ கொடுக்க நீ உயிர் வாழத்தான் வேண்டும் என அறிவுரை கூறினார்கள். மேலும் 2 குழந்தைகளுக்காகவும் நீ வாழவேண்டும் என அறிவுறுத்தினார்கள் (நல்ல வேளையாக குழந்தைகளுக்குத் தொற்று வியாதி இல்லை). எனவே தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டாள். சில மருந்துகளை உட்கொண்டு இறப்பைத் தள்ளிப்போட்டாள்.

ஆனால் அவள் எடுத்த மருந்துகள் பயங்கர பக்கவிளைவுகளை ஏற்படுத்தின. அவற்றுள் ஒன்றுதான் இந்த அரிப்பு நோய். ஓயாமல் மருந்தும் மாத்திரையும் எடுத்துக்கொள்ள காசு இல்லாததால் பலரின் உதவியை நாடினாள். நாங்கள் அவ்வப்போது சிறிது உதவினோம். பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு அவள் சென்று தனது கதையை எடுத்துச்சொல்லி இந்த உணர்ச்சி அடிப்படையில் எடுக்கும் முடிவுகள் எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்பது பற்றிய விழிப்புணர்வை இளையோருக்குக் கொடுத்து வந்தாள். சில வருடங்களாக அவளை நாங்கள் சந்திக்கவில்லை. ஆனால் அவளது 2 பிள்ளைகளையும் இவளது பெற்றோர் வளர்ப்பதாகக் கேள்வியுற்றோம்.

மன்மத ராஜாக்களாக உலாவருவது திரைப்படத்திற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில், குறிப்பாக குடும்ப வாழ்வில் இந்த சிரிமுகத்தவர் சுயக்கட்டுப்பாடோடு இல்லாவிட்டால் பெரும் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சமூக வலைதளங்களில், ஏன் அன்றாடப் பத்திரிகைகளில் பல்வேறு பிரபலங்கள் மதுவுக்கும் மாதுக்கும் அடிமைகளாகி, நடத்தும் நாடகங்களை நாம் அறிந்துகொண்டுதானே இருக்கிறோம்? ஐரோப்பிய நாடுகளில் இது சகஜம் என வாதிடலாம். ஆனால் இன்று ஐரோப்பிய நாடுகளில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமிருப்பதைப் பார்க்கிறோம். இதனால் பல இரவு விடுதிகளில் முன்புபோல செல்ல மக்கள் அச்சப்படுவதாக செய்திகள் வருகின்றன.

மனித மனம் பற்றி பிராய்டு

மனதின் பல தூண்டுதல்கள் அல்லது அடுக்குகளைப் பற்றி பேசும் உளவியல் உலகின் தந்தை பிராய்ட் மனதின் ஆழத்தில் ‘இட்’ (Id) என்ற ஒன்றைப் பற்றிக் கூறுகிறார். இந்த ‘இட்’, ‘லிபிடோ’ (Libedo), ‘மார்ட்டிடோ’ (Mortido) என்ற இரண்டையும் உள்ளடக்கியது என்கிறார். இந்த லிபிடோவைத்தான் நாம் ‘சிற்றின்ப வேட்கை’ அல்லது ‘பாலுணர்வு இயல்பூக்கம்’ (Sexual Instinct) என்று கூறுகிறார். இதை அவர் முற்கால பாலுணர்வு இயல்பூக்கம் (Primitive Sexual Instinct) என்கிறார். அதாவது இது நம்மோடு ஒட்டிப் பிறக்கிற ஒன்றாகும் என்கிறார். அடுத்து நமது மனதிலுள்ளது ஈகோ (Ego)வாகும். இந்த ஈகோ நாம் வழக்கமாகக் குறிப்பிடும் ‘அகம்பாவம்’ அல்லது “நீ பெரியவனா, நான் பெரியவனா பார்க்கலாம்” என்ற உயர்வு மனப்பாங்கு அல்ல. உளவியல்படி நமது உடல்கூறு ரீதியான தேவைகளை நிறைவு செய்ய விழையும் நமது அறிவு சார்ந்த ஒன்று.

ஆனால் மனதில் இன்னொரு தூண்டுதல் உண்டு. இதை பிராய்டு ‘சூப்பர் ஈகோ’ (Super Ego) என்கிறார். இதனை தியாகம், ஒழுக்கம், மனச்சான்று போன்ற உயர் பண்புகளின் தூண்டுதலாகப் பார்க்கிறார் பிராய்டு. ‘இட்’ என்ற அடிப்படை பாலுணர்வு இயல்பூக்கத் தூண்டுதல் அறிவியலையும் (Ego), ஒழுக்கவியலையும் (Super Ego) இயல்பாகவே எதிர்த்து நிற்பதாகும். சிரிமுகத்தவருக்கு இதன் இயக்கம் அதிகம் உள்ள நிலையில் இது பற்றிய விழிப்புணர்வு கொண்டு இதை கட்டுப்படுத்தாவிட்டால் ‘இட்’ இவர்களை படுகுழியில் தள்ளிவிடும்.=