வாழ்த்துக் கட்டுரை

மதுரை.ஆர்.கணேசன்

மனித வாழ்க்கையில் எட்டுஎட்டாக பிரிக்கும் சூட்சமும், கல்வியில் “கணிதத்தின் சூத்திரமும்” கற்றறிந்தால் வாழ்க்ைக எப்போதும், எதையும் சுலபமாக்கிவிடும்!

அப்பேர்பட்ட கணிதத்தை கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த உருளிக்கல் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் கா. வசந்தகுமார் 42, M.Sc., B.E.d., D.T.E.d., கணிதப் பாடம் நடத்தும் போது ஆடி, பாடி கற்பித்து வருகிறார்.

மேலும் தான் உருவாக்கிய அட்டை மற்றும் கட்டையிலான கருவிகள் துணையோடு வகுப்பறையில் பாடம் நடத்தி மாணவர்களுக்கு இன்னும் எளிதாக்கிவிடுகிறார்.!

அத்துடன் கணிதம் சம்பந்தமான பாடல்கள், கருத்துக்கள், புதிர்கள், செயல்பாடுகள் கொண்ட ஒவ்வொரு பத்து நிமிடம் ஓடக்கூடிய வீடியோக்களை QR Code ஆக மாற்றி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு பயிற்சி அளித்திருக்கிறார்.

 “..தமிழர்களின் பாரம்பரியக் கலைகள்..” கற்று கொடுத்து, ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கொரோனா காலத்திலும் கணிதம் சம்பந்தமாக மாணவர்களிடையே தொடர்ந்து இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக கற்பித்துக் கொண்டிருக்கிறார் “..மரக்கன்று..” நடுவதற்கு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.

இவரது கல்விப் பணியினை தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம் என்கிற (TNTP) என்கிற அமைப்பு ஐந்து பாராட்டுச் சான்றிதழ்கள், வழங்கியும் மற்றும் மத்திய அரசின் DIKSHA அமைப்பு மூன்று வீடியோக்களையும் பதிவிட்டுப் பாராட்டியிருக்கிறது.

ஆசிரியர் வசந்தகுமார் கடந்த 22 ஆண்டுகளாக கணிதத் துறையில் மாற்று முயற்சிக்கு கிடைத்த விருதுகள்…, வானமாமலை விருது, Dr.இராதாகிருஷ்ணன் விருது, Best Teacher Award, Best Achiever Award, கல்வி ரத்னா விருது, ஆசிரியர் சிற்பி விருது, ஆளுமை ஆசிரியர் செம்மல் விருது, தமிழறிஞர் அண்ணா விருது, அறிவுச்சுடர் காந்தி விருது, கனவு ஆசிரியர் விருது, அருட்ஜோதி விருது, தமிழ் விஞ்ஞானி விருது, கலாம் அறிவு மாமணி விருது.,

WORLD PEACE AWARD 2020, BEST ACHIEVER AWARD 2020, BEST HUMANITY AWARD 2020, MAN OF EXCELLENCE AWARD 2020, கலாம் கனவு நாயகன் விருது 2020, சர்தார் வல்லபாய் படேல் தேசிய விருது 2020, ஆசிரியர் மாமணி விருது, Best Teacher Award 2020, மேலும் ABJ 2020 VIP இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர விருது, போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

புதுதில்லியில் உள்ள AKS என்ற அமைப்பு GLOBAL TEACHER AWARD 2020 விருதிற்காக உலகின் 107 நாடுகளிருந்து தகுதியான ஆசிரியர்களியிடமிருடந்து விண்ணப்பங்களைப் பெற்று, கடந்த 2019-ஆம் ஆண்டு காலத்தில் கற்பித்தல், துணைக்கருவிகள், பயன்பாடு, வகுப்பறை நிகழ்வுகள், மதிப்பீடு, இணைய வழிக் கற்பித்தல், ஆகியவற்றை ஆய்வு செய்து மூன்று கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தலா 2 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து இவ்விருதினை வழங்குகிறது.

அப்பேர்ப்பட்ட பெருமைமிகு விருதை இந்தியாவில் பெறுகின்ற இரண்டு பேரில் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஆசிரியர்
கா.வசந்தகுமார் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலத்திற்கேற்பத் தன்னை புதுப்பித்து கொள்ளும் கணிதத்தை புதுமையாகவும் புத்துணர்வுவோடும் பயிற்றுவிக்கிற பட்டதாரி ஆசிரியர் கா. வசந்தகுமார்.

“…நான் அரசுப் பள்ளியில் பணிபுரிவதால் கடைநிலை மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே கற்பித்தல் பணியை மேற்கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றத்தின் காரணமாக தற்சமயம் 90% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காணொளிகள் 3 வழிகளில் பயன்படுத்தப்பட்டு முதலில் பள்ளிகளில் DVD மூலம் மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அடுத்து YOU TUBE தளத்தின் மூலம் மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த இணைப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இறுதியாக காணொளிகளை QR Code ஆக மாற்றம் செய்து அவை அனைவருக்கும் கொடுத்து அலைபேசியில் Scan செய்யப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதிகளில் மரங்கள் அதிகமாகவே உள்ளது இருப்பினும் அவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியம், அடுத்த தலைமுறைக்கு மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறேன்.

நான் பணிபுரிவது மலைப்பகுதி. அங்குள்ள மாணவர்களுக்கு பாரம்பரிய கலைகள் பற்றித் தெரியாது. சிலம்பம், கோலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலைகளை சமத்தூர் சமஸ்தான விழாவிற்கு அழைத்துச் சென்று ஆர்வமூட்டினேன். தற்சமயம் அந்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கும் அந்த கலைகளைக் கற்றுக் கொள்ளும் ஆவலைத் தூண்டி வருகின்றனர்.

கணக்குப் பாடத்தை நெட்டுரு செய்யாமல், குறிப்பிட்ட விதியானது எப்படி உருவாகிறது என்பதை உணர்ந்து கற்க வேண்டும். கருத்துகளை நன்கு உணர்ந்து கொள்வதற்கு துணைக்கருவிகள், காகித மடிப்புகள், கணித மன்றம் ஆகியன பெரிதும் உதவுகின்றன.

கணிதத்தில் கடினப் பாடப் பகுதிகளைத் தேர்வு செய்து அதனை எவ்வாறு எளிமையாகக் கற்பிக்கலாம் என்பதைக் காணொளியாக TNTP ல் மற்ற ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வெளியிட்டமைக்கு பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளேன்.

கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று B.com., B.E., இன்ஜினிரியரிங் சார்ந்த படிப்புகளைப் படித்தால் கணித ஆசிரியர், வங்கி மேலாளர், பொதுப் பணி துறை மற்றும் ஆடிட்டர் வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது.

எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மாணவர்களும் எளிமையாகப் புரிந்து கற்றுக்கொள்ள Youtube வலைதளத்தில் காணொளிகளைப் பதிவிட்டு வருகிறேன்.

அறிவு சார்ந்த எல்லா இடங்களிலும் கணிதம் முக்கியப் பங்கு வகிக்கிறது, உலக அளவில் நடைபெறும் அனைத்து அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும், நுணுக்கத்திற்கும், கணிதமே வழி காட்டுதலாகத் திகழ்கிறது.

கணிதத் தொடர்பு மொழியை துல்லியமான வெளிப்பாடு மற்றும் குழப்பமற்ற சூழலில் பயன்படுத்துவது கணிதத்தின் பண்பாகும்,

கணிதக் குறியீடுகள், மொழி செயல்பாடுகள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கணிதம் அர்த்தமுள்ளதாகவும், முறையானதாகவும் அமைகிறது,

பள்ளிக் கணிதத்தில் திறன் மேம்பாட்டை கற்பித்தல் பரந்த நோக்கம் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.

கணிதம் என்பது பொதுவான மொழியாகும். நாம் அன்றாடம் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் ஏதோ ஒரு துறையில் திறமைசாலியாகவோ, அல்லது ஏதேனும் ஒன்றில் திறமையுள் ளவாராகினும் இருப்பார்கள் அத்துடன் கணிதக் கலையானது அனைவரது வாழ்விலும் இணைபிரியாததாக உள்ளது.

கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகும் கூட்டல் – நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல், கழித்தல் – கெட்ட செயல்களை தவிர்த்து விடுவது, பெருக்கல் – நியாயமான முறையில் பணத்தை ஈட்டுவது, வகுத்தல் – காலத்திற்கு ஏற்றாப்போல் நேரத்தை திட்டமிடுவது போன்ற நான்கு தத்துவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் இன்பத்தை அடையலாம்.

ஒருவரின் அடிப்படை அறிவை வெளிப்படுத்துதல், ஊக்கப்படுத்துதல், புரிந்து கொள்ளுதல், மேம்படுத்துதல், ஆகிய திறன்களைக் கொண்டு கணிதக் கல்வியின் பரந்த நோக்கத்தை எளிதில் அடைய முடியும். ஆகவே கணிதம் கற்றுக் கொண்டால் வாழ்க்கை கணகச்சிதமாக அமையும்..! =