மூளை என்னும் முதல்வன்


திரு. A.மோகனராஜூ, சேலம்

யற்கை மனிதனை ஒன்றாகத்தான் படைத்தது, ஆனால் மனிதனோ, நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று இரண்டாகப் பிரித்தான். உலகில் எல்லாப் பொருட்களையும் இரண்டாகப் பிரித்தான், மனதில் எழும் எண்ணங்களையும் இரண்டாகப் பிரித்தான், நேர்மறை, எதிர்மறை எண்ணங்கள் என்று. எல்லாம் ஒன்றாக இருந்த ஒவ்வொன்றையும் இரண்டாகப் பிரித்ததனால் நன்றாக இருந்த இவனுக்கு இன்பத்துடன் துன்பமும் சேர்ந்து இப்போது வந்துவிட்டது. அதனால் இவன் உடலும் மனமும் பாதிப்படைந்துவிட்டது. துன்பத்தை எப்படி விலக்குவது என்று தெரியாமல் இப்போது துடிக்கிறான்.

துன்பம் அதாவது இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்கிறார்கள். எப்படிச் சிரிக்க முடியும்?. அதுவே துன்பமாக இருக்கிறது. துன்பம் வரும்போது சிரிப்பதும், இன்பம் வரும்போது அழுவதும் இயற்கைக்கு முரண் ஆனதுதானே. அதைச்செய்யவும் முடியாதுதானே. சரி துன்பம் வந்துவிட்டது அதற்கு வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்லை, (621)  என்கிறார்.

அறிவியல் புலவர் திருவள்ளுவர் சொல்கிறார். துன்பம் வரும்போது மனம் தளராமல் அதை நகைத்து ஒதுக்குங்கள், துன்பத்தைக் கடப்பதற்கு அதனைவிடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை என்று. அதாவது துன்பம் வரும்போது அதுகண்டு நகைக்கவேண்டும், காரணம் எல்லாம் மாறும்தன்மையது. அடுத்து வருவது துன்பத்திற்கு ஒப்பானதாக இருக்காது. அதன் எதிர் பண்புகொண்ட இன்பம்தான் வருகிறது. இந்த இரண்டும்தான் ஒரு வாழ்வின் இரு பக்கங்களாக இருக்கின்றன. அதனால் அடுத்து நீங்கள் நகைக்கத்தான் அதிகம் வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார் வள்ளுவர்.

மனிதர்கள் ஒருவனைத் துன்பத்தில் தள்ளிவிட்டு அவன் கீழே விழுந்து வலியால் துடிக்கும்போது அதைப்பார்த்து ரசித்துச் சிரிக்கிறார்கள். துன்பம் ஒருவனுக்கு, அதே சமயம் இன்பம் என்ற சிரிப்பு மற்றுமொருவனுக்கும் ஆக இருக்கிறது. இதுதான் உலகம் என்பதை நன்றாகத்தெரிந்த ஒருவனுக்கு துன்பம் எப்போது வந்தாலும் அவனுக்கு சிரிப்பும் கூடவே வரும். ஞானம் பெறுவது என்பது உண்மையை உணர்வதுதான் வேறு ஒன்றுமில்லை. ஒருவன் ஞானமடைந்துவிட்டால் அவனுக்கு இறப்பும்கூட துன்பமில்லை இன்பம்தான்.
அறிஞர்கள் பார்வையில் துன்பம்

கையில் விஷக்கோப்பையை வாங்கிய உடன் தேநீர் கோப்பையை வாங்குவதுபோல மகிழ்ந்து சிரித்தார் தத்துவ மேதை சாக்ரடீஸ், புன்னகையுடன் பருகினார் கொஞ்சமும் பயம் கொள்ளவில்லை. “நீ சற்று நேரத்தில் இறக்கப்போகிறாய்” இது தெரியாமல் சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு அவர் சொன்னார் “இறந்தபின் என்ன நடக்கும் என்று உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது யாருக்கும் தெரியாத ஒன்றிற்காக நான் ஏன் வருத்தப்படவேண்டும்’’ என்று கேட்டார்.

‘‘அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தபோதும்’’ என்று பாடிய பாட்டுப் புலவன் பாரதி காலனைப்பார்த்து ‘‘என் அருகில் வா காலனே உன்னை எட்டி என் காலால் உதைப்பேன்’’ என்று கூறினார். இறப்பு என்றால் எல்லோருக்கும் பயம்தான், ஆனால் யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. நம்மால் முடியாததற்கு நாம் வருதத்தப்பட்டு என்ன பயன் இருக்கிறது.

கலீல் இப்ராகிம் என்ற கவிஞர் ‘‘மரணமே என் ஆத்ம நண்பா என்னருகே வா, நீயும் நானும் ஓரிடம் ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்தலாம்’’ என்று அழைத்தார், எல்லோர் முகத்திலும் மரணபயம் கண்டு சிரித்த எமன் முகத்தில் இந்த கலீல் என்ன செய்யப்போகிறானோ என்று பயம் கொண்டு பார்த்தான்.
வால்ட்டர் ப்ரூனி (114) என்ற ஜப்பானிய அறிஞர் நாம் இறப்பதற்கு அஞ்சக்கூடாது, அது பயனற்றது, காரணம் நாம் இறப்பதற்குத்தான் பிறக்கிறோம் என்று சொல்கிறார்.

பௌதிகத்திற்கு ஒன்றும் இரசாயனத்திற்கு ஒன்றும் என்று இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற அற்புதப்பெண் மேரிகியூரி அம்மையார் சொல்கிறார் ‘‘இந்த உலகத்தில் பயம்கொள்வதற்கு என்று எதுவுமில்லை, புரிந்துகொள்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்று. துன்பம் வந்தால் வருகிறதே என்று வருந்தாமல் அதை எப்படி தவிர்ப்பது அல்லது தாண்டிச்செல்வது என்று பார்ப்பதற்குத்தானே நமக்கு சிந்திக்கும் மூளையை இயற்கை அற்புதமாக கொடுத்திருக்கிறது. நீங்கள் எப்போதெல்லாம் சிந்திக்கின்றீர்களோ அப்போதெல்லாம் உங்கள் மூளையில் டோபோமின் என்ற இன்ப ஹார்மோன் சுரக்கிறது. துன்பம் அதுவாக வரும் உடலிலும் வாழ்விலும் வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்தும் பின் அதுவாகப்போகும் என்றால் நம்பமுடியாத அதிசயங்களைச் நிகழ்த்திக்காட்டும் அற்புதமான மூளையை வைத்துக்கொண்டு நாம் சும்மா இருக்கலாமா?. இயற்கையை எதிர்த்து அடிக்கும் காற்றின் குறுக்கே காற்றாலை (Wind Mill) வைத்து மின்சாரம் எடுப்பதும். ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றின் குறுக்கே அணையைக்கட்டி நீர் மின்சாரம் எடுப்பதும் மனித மூளைதான். துன்பம் வரும்போது சிந்தித்தால் அதை வெற்றிகண்டு மகிழலாம்.

உண்மைச் சம்பவம்

எனக்குத்தெரிந்த உண்மைச்சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன். எங்கள் ஊரில் ஒரு இளைஞர் அரசாங்க வேலையில் இருந்தார். அவருக்கு ஒரு துன்பம் வந்துவிட்டது. அவர் தந்தை இவரை சிறுபிராயத்தில் விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டார். பிள்ளைகள் தத்தித்தடுமாறி கடினமாக உழைத்து முன்னேறினார்கள். தந்தைக்கு மகன் வசதியாக இருப்பது தெரிந்துவிட்டது. இந்த நிலையில் தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதையும், தன் இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இருப்பதையும் மறைத்துவிட்டுப் பொய்யாக நான் வசதியில்லாமல், வாழ மிகவும் சிரமப்படுகிறேன் என்று நீதி மன்றத்தில் மகன் மீது வழக்குத்தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ‘‘உன் தந்தையை ஏன் நீங்கள் வயதான இந்தக் காலத்தில் கவனிக்க மறுக்கின்றீர்கள். அவர் சொல்வதெல்லாம் உண்மைதானே’’ என்று கேட்டார். அதற்கு அவர் மகன் ‘‘அவர் சிறுவயதில் எங்களை விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அவர் இரண்டாவது குடும்பத்துடன் மகிழ்வாகத்தன் இருக்கிறார். முழுவதும் பொய் சொல்கிறார்’’ என்று மகன் சொன்னார். அப்போது அவர் தந்தைக் குறுக்கிட்டு ‘‘இல்லை நீதிபதி அவர்களே எனக்கு கண் தெரியவில்லை, காது கேட்கவில்லை உண்ண உணவு இல்லை, வாழ ஒன்றுமில்லை’’ என்று கூறினார். இளைய மனைவியுடன் உல்லாசமாகச் சுற்றித்திரியும் அப்பா இப்படி பொய் பேசுகிறார் என்று நினைத்து மகன் சிரித்துவிட்டார்.

குடும்ப நீதிபதி ‘‘உங்கள் அப்பாவிற்கு எவ்வளவு பெரியத் துன்பம் இது உங்களுக்குச் சிரிப்பாக இருக்கிறதா?. நீங்கள் உங்கள் அப்பாவை மட்டும் அவமதிக்கவில்லை இந்த நீதிமன்றத்தையும் சேர்த்தே சிரித்து அவமதித்துவிட்டீர்கள். உடனே தீர்ப்புச் சொல்கிறேன் நீங்கள் இந்த மாதம் முதல் உங்கள் அப்பாவிற்கு மாதம் பத்தாயிரம் பணம் கொடுக்க வேண்டும்’’ என்று சொன்னார்.

மகனுக்கு இப்போது உண்மையில் துன்பம் வந்துவிட்டது மகன் அது கண்டு மீண்டும் சிரித்தார். நீதிபதிக்கு மேலும் கோபம் வந்துவிட்டது. மகனின் வழக்கறிஞரைப்பார்த்து ‘‘என்ன உங்கள் கட்சிக்காரர் இப்படி சிரிக்கிறார் நீதி மன்றங்களில் சிரிக்கக் கூடாது என்று நீங்கள் எடுத்துச்சொல்ல வேண்டியதுதானே’’ என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் ஒரு அசட்டுச் சிரிப்புடன் ‘‘இப்படி உண்மைக்குப் புறம்பாக தீர்ப்பளித்தால் என் கட்சிக்காரர் சிரிக்காமல் என்ன செய்வார். ஒரு வாரம் எங்களுக்கு வாய்ப்புக்கொடுங்கள் அவர் தந்தைக்கு இரண்டாவது குடும்பமும் மகனும் மகளும் பள்ளியில் படிக்கிறார்கள். அவர் சொல்வது முழுவதும் பொய் என்று நிரூபிக்கிறோம்’’ என்று, கால அவகாசம் பெற்று அவரின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்தக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து பதிவுச் சாட்சிகளின் நகல்களை எடுத்து வந்து சமர்ப்பித்து அவர் தந்தை பொய்ச் சொன்னார் என்று நிரூத்துக்காட்டி வழக்கில் இருந்து வெளியேறினார்கள்.

மகான் ஓஷோ என்ன சொல்கிறார் என்றால் ‘‘குடிகாரன் சாராயக்கடையில் உண்மைகளைத் தான் எப்போதும் எல்லோருக்கும் சொல்கிறான் யாரும் கேட்பதில்லை நம்புவதுமில்லை, ஆனால் பொய்யை மட்டும்தான் நீதிமன்றங்களில் புனிதப் புத்தகத்தின்மீது சத்தியம் செய்துவிட்டுச் சொல்கிறார்கள் எல்லோரும் நம்புகிறார்கள் தீர்ப்பும் அதன் பேரில்தான் வழங்குகிறார்கள்’’ என்று.

அலிபாபாவின் (CEO – Jagmaa) தலைமை நிர்வாக அதிகாரி ஜாக்மா என்ன சொல்கிறார் என்றால் ‘‘துன்பம் வந்துவிட்டது, வருந்துகிறீர்கள் அழுகின்றீர்கள் மனித இயல்பும் அதுதான். ஆனால், வருந்துவதாலும் அழுவதாலும் ஏதாவது நடக்குமா என்றால் ஒன்றும் நடக்கப்போவதில்லை, ஏதாவது நடக்கும் என்றால் எனக்கு இருக்கும் துன்பத்திற்கு காலையில் இருந்து இரவுவரை அழுதாலும் போதாது அவ்வளவு துன்பம் எனக்கு இருக்கிறது. ஆனால் தினமும் முழுப்பொழுதும் அழுதுகொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. வருந்துவதற்கும் அழுவதற்கும் பதிலாக ஏதாவது சிந்தித்தால், முயற்சி செய்தால் பயனுள்ளதாக இருக்கும்’’ என்று சொல்கிறார்.

அதாவது வலி, பயம், கோபம் அவமானம் இவைகள் அதிகமான உணர்வுகளுடன் மூளையின் உணர்ச்சிப் பகுதி அமிக்டலாவில் உருவாகின்றன. (Amygdala – Emotional Region of the human brain) அப்போது துன்பம் வந்துவிடுகிறது. அப்போது உங்கள் மூச்சைக் கவனித்தால் மூச்சு மெல்ல ஓடுவதை நீங்கள் உணர முடியும். அதனால் வெளிக்காற்று மண்டலத்தில் இருந்து உங்கள் சுவாச மண்டலத்திற்கு குறைவான ஆக்சிஜன் செல்கின்றன. அதிகப்படியான மூளைச்செல்கள் அனைத்திற்கும் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதனால் மூளைச்செல்கள் சுருங்குகின்றன, முழுவீச்சில் வேலை செய்ய மறுக்கின்றன. நீங்கள் சிரிக்கும்போது அதிகமான ஆக்சிஜன் மூளைக்குள் செல்கிறது, மூளை சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது. சிந்திக்கின்றீர்கள் துன்பத்தில் இருந்து வெளியேற வழி பிறக்கிறது.

மூளைச்செல், நியுரானை மூன்றாகப் பிரிக்கலாம் ஒன்று(Dendrites) டென்ரிட்ஸ் என்று சொல்லப்படும் செய்தியை ஏற்கும் பகுதி, பயம் என்ற உணர்வு வருகிறது என்று வைத்துக்கொள்வோம், அதை ஏற்று பகுப்பாய்வு செய்யும் பகுதி (Axon-Processing) அக்க்ஷன் என்ற பகுதிக்கு அனுப்புகிறது. அதை அக்க்ஷன், சினாப்ஸ் (Synapse)என்று சொல்லப்படும் குவளைப் போன்ற பகுதியின் வழியே அடுத்தத் தகுதியான நியுரானுக்கு அதை அனுப்பிவைக்கிறது. அது அனுப்பி வைக்கும் அடுத்த நியுரான் சுருங்கி செயல்படாமல் அழுதுகொண்டிருக்கும் ஒன்றாக அல்லது சுறுசுறுப்பாக இயங்கத்துடிக்கும் சிரிக்கும் நியுரானாகவும் இருக்கலாம். நீங்கள் துன்பம் வந்ததும் சிரிக்கும்போது முழுவீச்சில் இயங்கும் நியுரான் செல்களுக்கு அனுப்பப்படுகிறது. அப்போது நீங்கள் சிந்திக்கின்றீர்கள் அற்புதமாகச் செயல்படுகின்றீர்கள் துன்பத்திற்குச் சரியான வழி காண்கின்றீர்கள். அதைத்தான் நமது பெரியோர்கள் சுருக்கமாகத் ‘துன்பம் வரும்போது சிரிங்க’ என்று சொல்கிறார்கள்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.